search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    • சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.
    • மொச்சைப் பயறை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவேண்டும்.

    ஒருவர் வாழ்க்கையில் அனைத்து சுக சௌக்கியங்களும் பெற்று, மகிழ்ச்சியாக வாழவேண்டும் எனில், அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலிமை பெற்றிருப்பது அவசியம். குறிப்பாக ஒருவரின் திருமண வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் வலிமைப் பெற்றிருக்க வேண்டும். சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்றிருந்தாலும் செவ்வாயுடன் கன்னியில் சேர்ந்திருந்தாலும் சுக்கிரனின் வலிமை குன்றிவிடும்.

    மேலும், சுக்கிரன் லக்னத்துக்கு 8-ம் வீட்டில் இருப்பதும் சுக்கிர தோஷமாகும். அந்த 8-ம் வீடு சுக்கிரனின் ஆட்சி வீடுகளாகிய ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளாகவோ, உச்ச வீடான மீன ராசியாகவோ இருந்தால், சுக்கிரனால் தோஷம் ஏற்படாது. சுக்கிரன் 7-ம் வீட்டில் இருப்பதும் 3, 6, 12 ஆகிய இடங்கள் ஒன்றில் மறைவு பெற்றிருப்பதும் தோஷத்தை ஏற்படுத்தும்.

    ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டிருந்தால், வாழ்க்கையில் பல சுகங்களை அனுபவிப்பதில் தடைகள் ஏற்படும். திருமணம் நடைபெறுவது தாமதமாவதுடன், இல்லற வாழ்க்கையிலும் பல பிரச்னைகள் ஏற்படக்கூடும். சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, வெண் தாமரை மலரால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.

    மொச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வீட்டுப் பூஜையறையில் மகாலட்சுமி திருவுருவப் படத்தை அலங்கரித்து வைத்து, நெய் தீபம் ஏற்றி, மகாலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாராயணம் செய்து, பால் பாயாசம் நைவேத்தியம் செய்யலாம்.

    பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில், கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். தினமும் இரவு மொச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் மொச்சை ஊறிய தண்ணீரை அத்தி மரத்துக்கு ஊற்றிவிட்டு, மொச்சைப் பயறை பசுவுக்கு உண்ணக் கொடுக்கவேண்டும். வீட்டில் மரம் வளர்க்க வசதியில்லாதவர்கள், அருகிலுள்ள கோயிலில் வளர்க்கச் செய்யலாம். இதன் மூலம் மிகக் கடுமையான சுக்கிர தோஷங்களிலிருந்தும் விடுபடலாம்.

    • சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீரும்.
    • தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு.

    மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர்.

    விரதம் கடைபிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணைசெய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவ ராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும். அதன் முழு விபரத்தை இங்கே பார்க்கலாம்.

    1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது.

    2. வைகாசி மாதம் :- வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவானால் வழிபடப்பட்டது.

    3. ஆனி மாதம் :- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.

    4. ஆடி மாதம் :- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.

    5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.

    6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

    7. ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.

    8. கார்த்திகை மாதம் :- இரண்டு சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

    9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.

    10. தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

    11. மாசி மாதம் :- தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.

    12. பங்குனி மாதம் :- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.

    மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், சிவ நாமங்களை சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைப்பார் சிவபெருமான்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சனிப்பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு
    • எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை தரிசனம் செய்யலாம் என பார்க்கலாம்.

    சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவபெருமான், ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காக்க நீலகண்டனாக காட்சி அளித்த சமயத்தில், தேவர்கள் சிவனை வழிபட்டனர். அவர்களுக்கு நந்தியின் இரு நம்புகளுக்கு இடையே சிவன் காட்சி தந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது. அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களை நீக்கக் கூடிய வழிபாட்டையே பிரதோஷம் என்கிறோம்.

    ஒரு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஒரு வருடம் முழுவதும் சிவாலயத்திற்கு சென்று வழிபட்ட பலனை பெற்று விடலாம். ஒரு சனிப்பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஐந்து ஆண்டுகள் சிவாலயத்தில் தரிசித்த பலனை பெற்று விடலாம் என்பார்கள். நாளை சனிக்கிழமை (15.7.23) சனி மகா பிரதோஷம் வருகிறது. திங்கள் கிழமையில் வருவது சோமவார பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வருவது சனி மகா பிரதோஷம் என்றும் சிறப்பு பெறுகின்றன. இதே போன்று ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பு, தனி பலன் உண்டு.

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். சனி மகாபிரதோஷம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இன்றைய தினம் 12 ராசிக்காரர்களும் சிவ தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை தரிசனம் செய்யலாம் என பார்க்கலாம்.

    சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு. சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில் கலந்து கொண்டு, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சனி பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும். கடன் சுமை அகலும், மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

    நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும். எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.

    நெருப்பு ராசிகள்:

    12 ராசிகளில் நீர் ராசிகள், நில ராசிகள், நெருப்பு ராசிகள், காற்று ராசிகள் என நான்கு விதமாக பிரித்துள்ளனர். மேஷம்,சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நெருப்பு தத்துவத்தை தன்னுள்ளே கொண்டுள்ளன. இந்த ராசிக்காரர்கள் பிரதோஷ நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் வர நினைத்த காரியங்கள் நிறைவேறும். திருவண்ணாமலை செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பழங்கள் வாங்கித்தர பாவங்கள் விலகும்.

    நில ராசிகள்:

    பஞ்ச பூத தத்துவத்தில் நில தத்துவத்தை உணர்த்தும் ராசிகள் ரிஷபம், கன்னி, மகரம். இந்த ராசிக்காரர்கள் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், இந்த ஆலயத்தில் பிருத்வி லிங்கத்தை பிரதோஷ தினத்தில் வழிபட நன்மைகள் நடைபெறும். அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர தோஷங்களும் பாவங்களும் விலகும்.

    காற்று ராசிகள்:

    மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் காற்று ராசிக்காரர்கள். காளகஸ்தியில் உள்ள திருக்காளத்தி நாதரை பிரதோஷ காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வழிபட புண்ணிய பலன்கள் கிடைக்கும். காளத்தீஸ்வரர் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று பாலபிஷேகம் செய்து வணங்கினால் நோய் நொடிகள் தீரும்.

    நீர் ராசிகள்:

    கடகம் , விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் பஞ்சபூத தத்துவத்தில் நீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். திருச்சி அருகே திருஆனைக்காவில் எழுந்தருளி இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்தான் நீர்தலம். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் பிரதோஷ காலத்தில் திருவானைக்கால் ஜலகண்டேஸ்வரரை தரிசிக்க வறுமை நீங்கி செல்வம் பெருகும். அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று அபிஷேகத்திற்கு பன்னீர் வாங்கித்தர செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.

    ஆகாய தலம்:

    ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள நடராஜரை வழிபட வேண்டும். பஞ்ச பூத தலங்களில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். 27 நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் வகையில் 27 தீபங்களை ஏற்றி வழிபடலாம். பஞ்சலிங்கங்களையும், தொடர்ந்து ஐந்து பிரதோஷ தினத்தில் வந்து வழிபடுவது சிறப்பு. சனி மகா பிரதோஷ நாளில் சிவ ஆலய தரிசனம் செய்வது ஆயிரம் ஆண்டுகள் சிவனை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது.
    • ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.

    ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருப்பதுதான் ஏகாதசி. அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.

    ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், அந்தந்த ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.

    * சித்திரை மாத வளர்பிறையில் ஏகாதசி, 'காமதா ஏகாதசி' என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி 'பாப மோகினி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.

    * வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி, 'மோகினி ஏகாதசி' என்றும், தேய்பிறை ஏகாதசி 'வருதித் ஏகாதசி' என்றும் கூறப்படுகின்றன. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்த பலனைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

    * ஆனி மாத வளர்பிறை ஏகாதசி 'நிர்ஜலா ஏகாதசி' என்றும், தேய்பிறை ஏகாதசி 'அபரா ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் விரதம் மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

    * ஆடி மாத வளர்பிறை ஏகாதசி 'சயனி' என்றும், தேய்பிறை ஏகாதசி 'யோகினி' என்றும் பெயர்பெற்றுள்ளன. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.

    * ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி - 'புத்ரஜா'; தேய்பிறை ஏகாதசி - 'காமிகா'. இந்த தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.

    * புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, 'பத்மநாபா'; மற்றும் தேய்பிறை ஏகாதசி 'அஜா' ஆகும். இந்நாட்களில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.

    * ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா'; தேய்பிறை ஏகாதசி 'இந்திரா'. இந்த ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

    * கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, 'பிரபோதின' எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலன் உண்டு. தேய்பிறை ஏகாதசியான, 'ரமா' தினத்தில் இறைவனுக்கு பழங்களை நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.

    * மார்கழி மாத ஏகாதசி 'வைகுண்ட ஏகாதசி' என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இது மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி 'உத்பத்தி' ஏகாதசி எனப்படுகிறது. பரமபதம் கிடைக்கச் செய்யும் அற்புத நாட்கள் இவை.

    * தை மாத வளர்பிறை ஏகாதசி 'புத்ரதா' என்றும், தேய்பிறை ஏகாதசி 'சுபலா' என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

    * மாசி மாத வளர்பிறை ஏகாதசி 'ஜெயா' என்றும், தேய்பிறை ஏகாதசி 'ஷட்திலா' என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்கள் முக்தியடைய வழி செய்வார்கள்.

    * பங்குனி தேய்பிறை ஏகாதசி 'விஜயா' எனப்படும். இந்த நாளில் ஏழு வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். வளர்பிறை ஏகாதசி 'ஆமலகி' எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.

    * ஒரு ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி 'கமலா ஏகாதசி' எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.

    • ஆனி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷமாகும்.
    • எதிரிகள் தொல்லை விலகத் துர்க்கை அம்மன் ஆசி வழங்குவார்.

    தமிழ் மாதங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வங்களுக்குச் சிறப்புக்குரிய மாதங்களாகக் கருதப்படுகிறது. அதில் ஆனி மாதமும் மற்றும் ஆடி மாதமும் அம்மனுக்குரிய சிறப்பு மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என ஆன்மீகம் கூறுகிறது.

    ஆனி மாதம் பிறந்து விட்டாலே அது அம்மனுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது. ஆனி மாதம் என்பது வைணவம் மற்றும் சைவம் பாகுபாடுகள் இல்லாமல் எல்லா பெண் தெய்வங்களையும் கொண்டாடக் கூடிய சிறப்பு மாதமாகும். இந்த மாதத்தில் பராசக்தியாக விளங்கக்கூடிய அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

    பராசக்தியை வழிபாடு செய்யும்பொழுது நம்மைச் சுற்றியுள்ள துர்தேவதைகள் விலகி விடுவார்கள் என ஆன்மீகம் கூறுகிறது. அதேபோல் நடராஜரை வணங்கக்கூடிய சிறப்பு மாதமாக இந்த ஆனி மாதம் கருதப்படுகிறது.

    இறைவனை வணங்குவதற்குத் தனிப்பட்ட ஸ்லோகங்கள் எதுவும் கிடையாது. மனதார நினைத்துக் கொண்டு மனதில் தோன்றக்கூடிய வேண்டுதல்களை வைத்து இறைவனை வழிபட்டாலே அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.

    ஆனி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷமாகும். சாந்தமான தெய்வங்கள் முதல் உக்கிரமான தெய்வங்கள் வரை அனைத்து தெய்வங்களையும் விரதம் இருந்து வழிபடுவதற்கு உரியத் தினமாக இந்த செவ்வாய்க்கிழமை விளங்குகிறது.

    அதேசமயம் துர்க்கை அம்மனை வேண்டி செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும். செவ்வாய்க்கிழமை என்று விரதம் இருந்து ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை மனதார நினைத்து எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்று வழிபட்டால் துஷ்ட சக்திகள் இருந்து விடுபடலாம் என கூறப்படுகிறது.

    எதிரிகள் தொல்லை விலகத் துர்க்கை அம்மன் ஆசி வழங்குவார் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த ஆனி செவ்வாய் திருநாளில் பராசக்தியின் அவதாரமாக விளங்கக்கூடிய அனைத்து அம்மனையும் மனதார நினைத்து வழிபட்டு விரதம் இருந்தால் மங்கள காரியங்கள் உண்டாகும் எனும் கூறப்படுகிறது.

    அதேசமயம் கிராமத்தில் இருக்கக்கூடிய தெய்வங்களையும், எல்லையைக் காக்கக்கூடிய தெய்வங்களையும் வீட்டில் இருந்தபடியே வழிபட்டால் இன்னல்கள் விலகும் எனக் கூறப்படுகிறது.

    • அஷ்டமி திதி என்பது பைரவருக்கு உகந்தநாள்.
    • நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள்.

    அஷ்டமி என்பதே பைரவருக்கு உகந்த நாள்தான். அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு மிக மிகச் சிறப்புக்கு உரிய தினம்.

    கலியுகத்தில், காலபைரவரே கண்கண்ட தெய்வம் என்று சொல்லுவார்கள். விரதம் இருந்து காலபைரவரை வழிபட்டால், நம் கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பார். கடன் அனைத்தையும் தீர்க்க வழிகிடைக்கும். எதிர்ப்புகள் யாவும் தவிடுபொடியாகும்.

    சிவாலயங்களில், பிராகாரத்தைச் சுற்றி வரும் போது, காலபைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமி, பைரவருக்கு உகந்த நாள். இந்த நாளில், காலையிலும் மாலையிலும் பைரவருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    தேய்பிறை அஷ்டமியில், பைரவருக்கு உரிய நன்னாளில், விரதம் இருந்து அவரை வணங்கிட மனதில் இருக்கிற தேவையற்ற பயமெல்லாம் விலகிவிடும். இந்தநாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்!

    பைரவர் என்பவரை மகா வலிமை கொண்டவர் என்றும் தீயசக்திகளையும் தீயவர்களையும் துவம்சம் செய்வார் என்றும் அநீதியை அழித்தொழித்து தர்மத்தை நிலைநாட்டுவார்.

    பைரவரை தொடர்ந்து வணங்கிவந்தால், மனக்கிலேசம் விலகும் என்றும் மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் விலகும் என்றும் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

    மேலும் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும்; எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதேபோல், இந்த நாளில் பைரவருக்கு வடைமாலை சார்த்தியும் வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள். தேய்பிறை அஷ்டமி நாளில், செவ்வரளி மாலை சார்த்தி, மிளகு அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். கடன் தொல்லையில் இருந்து காலபைரவர், மீளச்செய்வார். கவலைகள் அனைத்தும் பறந்தோடும் என்கின்றனர் பக்தர்கள்.

    இன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, பிராகாரத்தில் உள்ள காலபைரவரைத் தரிசியுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். மிளகு அல்லது தயிர்சாதம் நைவேத்தியமாக வழங்குங்கள். வெண்பொங்கல் நைவேத்தியமும் சிறப்பு. முடிந்தால், நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள். கடன் பிரச்சினை தீரும். கவலைகள் பறந்தோடும். தோஷங்கள் விலகும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். எதிரிகள் பலமிழப்பார்கள். தீயசக்திகளையும் துர்குணங்களையும் விலக்கி அருளுவார் பைரவர். முக்கியமாக தெருநாய்களுக்கு உணவளிப்போம். பிஸ்கட்டாவது கொடுப்போம்.

    முக்கியமாக, ராகுகால வேளையில் பைரவரை வணங்கி வழிபடுவது இன்னும் கூடுதல் பலத்தையும் பலன்களையும் வழங்கும்.

    • வாராஹி அம்மனை 16 முறை பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று.
    • சமயபுரம் மாரியம்மனை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.

    * மதுரை மீனாட்சி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். திருமணத்தடை உள்ளவர்களுக்கு, தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.

    * காஞ்சி காமாட்சி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் வீட்டில் தீராத கஷ்டங்கள் கூட விரைவாக ஒரு தீர்வுக்கு வந்துவிடும்.

    * இருக்கன்குடி மாரியம்மனை விரதம் இருந்து வழிபட்டால் உடல் உபாதைகள் தீரும். குறிப்பாக வயிற்று வலி, கை, கால் வலி, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது.

    * அமாவாசை, பவுர்ணமி தினங்களில் விரதம் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் புனிதநீரில் நீராடி பின்பு அம்மனை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.

    * வெக்காளி அம்மனை விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனை மனதார நினைத்து வேண்டிக்கொண்டால் நல்ல பலன் உண்டு.

    * வாராஹி அம்மனை விரதம் இருந்து பஞ்சமி திதியில் விரலி மஞ்சள் மாலை அணிவித்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். வாராஹி அம்மனை 16 முறை பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று.

    • எள் தீபமேற்றுங்கள்.
    • வாழ்வில் மேன்மையைத் தருவார் சனீஸ்வரர்.

    சனி பகவானின் அருளையும் கருணையையும் பெற, சனிக்கிழமைகளில், தவறாமல் சனீஸ்வரரைத் தரிசித்து, எள் தீபமேற்றுங்கள். ஊனமுற்றோருக்கு உதவுங்கள். நான்கு பேருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நம் காரியங்கள் அனைத்தையும் வீரியமாக்கித் தந்தருள்வார் சனீஸ்வரர்!

    சனியின் பார்வை நேரிடையாக நம் மீது பட்டுவிடக் கூடாது என்பார்கள். ஆயிரம்தான் கோவில்கோவிலாகச் சென்று சனி பகவானைத் தரிசித்து வழிபட்டாலும் உண்மையாகவும் மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமலும் வாழ்ந்தால், எந்த தோஷத்தில் இருந்தும் தப்பிக்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

    ஆனாலும் சனி பகவானை சனிக்கிழமைகளில் எள் தீபமேற்றி வழிபடுவதும் பிரார்த்தனை செய்து கொள்வதும் கூடுதல் பலன்களை வழங்கும். அவரின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஐதீகம்!

    சூரிய பகவானின் மைந்தன் சனி பகவான். அம்மா சாயாதேவி. சாயாதேவியை, நிஷூபா, ப்ருத்வி என்ற பெயர்களிலும் அழைக்கிறது புராணம்.

    திருப்பாற்கடலில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நாராயணன் காட்சி கொடுக்க, அவரின் நாபிக்கமலத்தில் இருந்து அவதரித்தார் பிரம்மா. பிறகு பிரம்மா, படைப்புத் தொழிலை ஏற்றார். சத்தியலோகத்தில் இருந்தபடி தன் படைப்புத் தொழிலைச் செய்து வந்தார். தன் பேராற்றலால், மரீசி, ஆங்கிரஸ, அத்திரி, புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் எனும் ஞானவான்களை, தபஸ்விகளைத் தோன்றச் செய்தார் பிரம்மா! இவர்கள் சப்தரிஷிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.

    மேலும் பிரம்மா தக்ஷப் பிரஜாபதி எனும் மகரிஷியை உலக நலனுக்காகச் சிருஷ்டித்து அருளினார்.

    மரீசி மகரிஷி, சம்பூதி என்பவளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காசியப முனிவர் பிறந்தார். இந்த முனிவர், தக்ஷபிரஜாபதியின் மகள் அதிதியை மணந்தார்.

    பிறகு, காசியப முனிவர் தம்பதிக்கு நிறைய குழந்தைகள் பிறந்தனர் என்கிறது புராணம். இவர்கள் காசியப புத்திரர்கள் என்றே பெருமையுடன் அழைக்கப்பட்டார்கள். அத்யந்த தேஜஸ் பொருந்திய இவர்கள், துவாதச ஆதித்யர்கள் எனும் திருநாமத்துடன் போற்றப்பட்டனர். இவர்களில் மூத்தவர்... சூரிய பகவான்!

    சூரிய பகவான், தேஜஸ் கொண்டவர். ஒளி மிகுந்தவர். அந்த ஒளியைக் கொண்டு, உலகுக்கே வெளிச்சம் பாய்ச்சுபவர். சொர்ண ரூபம் என்று வர்ணிக்கிறது புராணம். ஆரோக்கியத்தையும் கீர்த்தியையும் ஐஸ்வரியங்களையும் அள்ளி வழங்கக் கூடிய வள்ளல். அதனால்தான் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம்!

    உத்தராயன காலத்தில் புறப்படுகிறார். தட்சிணாயனத்தின் போது ஜோதிஷ்கம் எனும் சிகரத்தை அடைந்து அங்கே எழுந்தருள்கிறார்.

    சூரிய பகவானுக்கும் சுவர்ச்சலா தேவிக்கும் திருமணம் நடக்க, அவர்களுக்கு சிராத்த தேவனும் யமதர்மராஜனும் மகன்களாகவும் யமுனை மகளாகவும் பிறந்தனர். இவர்களில் யமுனையும் யமனும் இரட்டைப் பிறவிகள் என்றும் சொல்லுவார்கள்.

    ஒருகட்டத்தில், சூரிய பகவானின் உக்கிர கிரணங்களைத் தாங்கும் சக்தியானது மனைவி சுவர்ச்சலாதேவிக்கு குறைந்துகொண்டே வந்தது.

    இதையடுத்து சுவர்ச்சலாதேவி, வனத்துக்குச் சென்று, கடும் தவம் புரிந்தாள். ஆனால் இதையெல்லாம் சூரியனாரிடம் சொல்லக் கூட சக்தியற்று இருந்தாள்.

    அப்போது ஒரு முடிவுக்கு வந்தாள். தன்னைப் போலவே பேரெழில் கொண்ட ஒரு பெண்ணை உருவாக்கினாள். கிட்டத்தட்ட நிழல் போல் தோன்றிய அந்தப் பெண், சுவர்ச்சலாதேவியைக் கண்டு வியந்தாள். மலைத்தாள். என் சாயலில் நீ இருக்கிறாய் அல்லவா. ஆகவே உனக்கு சாயா என்று பெயர் சூட்டுகிறேன் என்றாள் நான் வனத்தில் தவமிருந்து வரும் வரைக்கும், நீ நானாக இருப்பாயாக என்றாள்.

    ஏதேனும் ஒரு நெருக்கடிச் சூழல் வந்தால், உண்மையைச் சொல்லுவேன் என்றாள் சாயாதேவி. அதன்பிறகு சுவர்ச்சலாதேவி தந்தை வீட்டுக்குச் சென்றாள். அவரிடம் விஷயத்தைச் சொல்ல, தந்தை கோபம் கொண்டார்.

    'எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறாய். கணவனை விட்டு இப்படிப் பிரியலாமா. உன்னுடைய இடத்தை இன்னொருத்திக்குத் தரலாமா' என்று பொரிந்து தள்ளினார்.

    மனம் வெறுத்துப் போனாள் சுவர்ச்சலாதேவி. தன்னை எவரும் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்று குதிரை உருவெடுத்தாள்.

    அங்கே... சூரியதேவனுடன் வாழத் தொடங்கினாள் சாயாதேவி. சுவர்ச்சலாவின் குழந்தைகளிடம் பிரியமும் அன்பும் கொண்டு வளர்த்தாள். சூரியனாருக்கும் சாயாவுக்கும் தபதீ என்று மகளும் ஸ்ருதச்ரவஸூ, ஸ்ருதகர்மா என இரண்டு மகன்களும் பிறந்தார்கள்.

    இந்த ஸ்ருதகர்மாதான், பின்னாளில் சனீஸ்வரன், சனைச்சரன் என்றெல்லாம் போற்றப்பட்டார்!

    தனக்கென குழந்தைகள் வந்ததும் மாறிப்போனாள் சாயா. இதனால் சுவர்ச்சலாவுக்குப் பிறந்த எமதர்மன் உள்ளிட்டோரிடம் கொஞ்சம் மெத்தனமாகவே நடந்துகொண்டாள். இதனால் எமதர்மன் ரொம்பவே வருத்தப்பட்டார். அந்த வருத்தம் நாளடைவில் கோபமாக மாறியது.

    அப்பாவிடம் இதையெல்லாம் சொல்லி முறையிட்டார். சொல்லும்போது கண்கலங்கிப் போனார் எமதர்மன். 'தர்மத்தின் படி நடந்து வரும் உன்னிடமே இப்படி பாரபட்சம் காட்டுகிறாளா' என்று அதிர்ந்து போனார் தந்தை.

    மனைவி மீது கடும் கோபம் கொண்டார். அவளை அழைத்து விசாரித்தார். ஆனால் சாயாதேவி பதிலேதும் சொல்லாமல் மெளனமாகவே இருந்தாள். இதில் இன்னும் ஆத்திரமடைந்த சூரிய பகவான், அவளை சிகையைப் பிடித்து இழுத்தார். அதுவரை மெளனமாக இருந்தவள், சுவர்ச்சலாதேவிக்குச் சொன்னது போல், இப்போது சொல்லும் தருணம் வந்துவிட்டதாக உணர்ந்தாள். நடந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிவித்தாள்.

    தவறு சாயாதேவியிடம் இல்லை என உணர்ந்த சூரியனார், அவளை மன்னித்தார். அதேவேளையில், சுவர்ச்சலாதேவி இருக்குமிடத்தை தன் ஞானதிருஷ்டியால் கண்டறிந்தார். அங்கே சென்று, அவளையும் ஏற்றுக் கொண்டார்.

    அதையடுத்த தருணத்தில்... சூரியனாருக்கும் சுவர்ச்சலாதேவிக்கும் இன்னொரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை... அஸ்வினிதேவர். தேவலோக வைத்தியர்கள் எனும் பெயர் பெற்றுத் திகழ்ந்தார். இதையடுத்து ரைவதன் எனும் மகனும் பிறந்தான்.

    அழைத்துக்கொண்டு, தமது லோகத்திற்குத் திரும்பினார். சாயா தேவியையும் ஏற்றுக் கொண்டு இரண்டுபேருடனும் பத்மாசனத்தில் எழுந்தருளினார்.

    பெருமை மிகுந்த சனீஸ்வரரின் சரிதத்தை உணர்ந்து, அவரை வணங்கி, சனிக்கிரக பாதிப்பில் இருந்து விலகுவோம். சனீஸ்வரரின் பேரருளைப் பெற்று, இனிதே வாழ்வோம்!

    சனிக்கிழமை நாளில், விரதம் இருந்து சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபடுங்கள். எல்லா நலமும் வளமும் தந்து, வாழ்வில் மேன்மையைத் தருவார் சனீஸ்வரர்.

    • மாங்கல்யம் காப்பாள் மகாலக்ஷ்மி.
    • நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்வாள்.

    வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நாள். விரதம் இருந்து சக்தியை வணங்க வேண்டிய அற்புதமான நாள். அதனால்தான் வெள்ளிக்கிழமையை, மங்கலகரமான செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டு அம்பிகையைக் கொண்டாடுகிறோம்.

    அம்பிகை எப்போதுமே கருணை கொண்டவள். வீட்டின் கடாக்ஷத்துக்கு காரணகர்த்தாவாகத் திகழ்பவள். இல்லத்தில் பீடையையும் தரித்திரத்தையும் விரட்டியடிப்பவள். சுபிட்சத்தையும் அமைதியையும் ஆனந்தத்தையும் இல்லத்தில் நிறையச் செய்பவள். அதனால்தான், வெள்ளிக்கிழமைகளில், வீடு சுத்தம் செய்கிறோம். முதல்நாளே, பூஜையறைப் பொருட்களை, விளக்குகளை சுத்தப்படுத்தி வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு தயார்படுத்திக் கொள்கிறோம்.

    பெண்கள், மற்றநாட்களைவிட வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக் குளிப்பார்கள். பூஜையறையில் விளக்கேற்றுவார்கள். தெரிந்த ஸ்லோகம், ஸ்தோத்திரங்களைச் செய்து வழிபடுவார்கள். கோவில்களுக்குச் சென்று, காலை 10.30 முதல் 12 மணி வரையிலான ராகுகால வேளையில், சக்தியின் இன்னொரு அம்சமாகத் திகழும் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவார்கள்.

    வெள்ளிக்கிழமையில், வீடு சுத்தமாக இருந்து, மனதும் சுத்தமாக இருந்தால், அங்கே மகாலக்ஷ்மி நம் வீட்டுக்கு வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

    மகாலக்ஷ்மியின் அருள் இருந்தால், சுக்கிர பகவானின் அருளும் யோகமும் கிடைக்கப் பெறலாம். வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர யோகத்தைத் தரும் மகாலக்ஷ்மியை விரதம் இருந்து வணங்கினால், குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை மேலோங்கும். தரித்திரம் நீங்கி இல்லத்தில் சுபிட்சம் நிலவும். தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். கடன் தொல்லையில் இருந்தும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும் விடுபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    வெள்ளிக்கிழமை என்றில்லாமல், தினமும் மகாலக்ஷ்மியின் மூல மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.

    வீட்டில் விளக்கேற்றுங்கள். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் சூட்டி அலங்காரம் செய்யுங்கள்.

    ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

    மஹாலக்ஷ்மி ஏய்யேஹி

    ஏய்யேஹி சர்வ

    ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

    எனும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.

    இதேபோல்,

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே

    கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத

    ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம;

    என்கிற மந்திரத்தைச் சொல்லுங்கள்.

    அம்பாள் படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். கோலமிடுங்கள். நெய் தீபமேற்றுங்கள்.

    அம்பாள் படத்துக்கு முன்னே, கண்கள் மூடி அமர்ந்து, இந்த மந்திரங்களைச் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 16 முறை சொல்லலாம். 108 முறையும் சொல்லலாம். அப்போது குங்குமம் கொண்டும் அர்ச்சிக்கலாம். இன்னும் விசேஷம். மாங்கல்ய பலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

    சுமங்கலிகளுக்கு ஜாக்கெட் துணி, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கலாம்.

    தொடர்ந்து, மகாலக்ஷ்மியை வணங்கி வந்தால், சுபிட்சம் நிலவும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்வாள். அருளுவாள். மாங்கல்யம் தருவாள். மாங்கல்யம் காப்பாள் மகாலக்ஷ்மி.

    • வெற்றியைத் தந்தருள்வார் விநாயகர்.
    • விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம்.

    சங்கடஹர சதுர்த்தியில், பிள்ளையாரை வழிபடுங்கள். அவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்குங்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருள்வார் விநாயகர்.

    மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாள் வரும். இது விநாயகரை விரதம் இருந்து வழிபாடு செய்ய அற்புதமான நாள். மாதாமாதம் வருகிற சிவராத்திரி, சிவ வழிபாட்டுக்கு உரியது என்பது போல், சஷ்டியானது முருகப்பெருமானின் வழிபாட்டுக்கு உகந்தது என்று கொண்டாடுவது போல், ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை தரிசித்து வழிபடுவது போல், சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.

    இந்தநாளில், விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம். மாலையில், அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஆனைமுகனைத் தரிசியுங்கள். நலம் அனைத்தும் வழங்கி அருள்வார் ஆனைமுகத்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இன்றைய சங்கடஹர சதுர்த்தி நன்னாளில் (6.7.23) வியாழக்கிழமையில், விநாயகருக்கு கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் காரியம் அனைத்தையும் வெற்றியாக்கித் தந்தருள்வார் விநாயகப் பெருமான்.

    எடுத்தகாரியம் அனைத்திலும் துணையாக இருந்து அருள்பாலிப்பார். வெற்றியைத் தந்தருள்வார் விநாயகர்.

    • சாப்பிடாமல் இறைவனை எண்ணி இருப்பது தான் விரதம் என்று பெயர்.
    • முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும்.

    பெரும்பாலும் குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர். ஆனால் அப்படி இல்லை பல்வேறு செல்வங்களை அள்ளித்தர வல்ல முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.

    குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற 16 சம்பத்துகளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம்.

    நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச்செய்வார்.

    சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

    பெரும்பாலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள் திருச்செந்தூரில் கோவிலிலேயே தங்கி விரதம் மேற்கொள்வது வழக்கம். இவர்கள் தினமும் காலையில் கடலில் குளித்து, பின்னர் அங்குள்ள நாழி கிணற்றிலும் குளித்து முருகப்பெருமானை தரிசித்து விரதத்தை தொடங்க வேண்டும். நெய் விளக்கேற்றி வழிபடலாம் கோவிலில் சென்று விரதம் இருக்க முடியாதவர்கள், வீட்டிலேயே விரதம் இருக்கலாம்.

    சாப்பிடாமல் இறைவனை எண்ணி இருப்பது தான் விரதம் என்று பெயர். அப்படி சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் கோவிலில் கொடுக்கப்படும் பால், பழம் சாப்பிடலாம். தேன், திணைமாவு என கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடலாம். காலை மற்றும் மாலையில் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும்.

    வீட்டின் அருகில் முருகன் கோவில் இல்லை அல்லது வெளிநாட்டில் இருக்கின்றீர்கள் என்றால் வீட்டிலேயே முருகனின் புகைப்படம், சிலையை வைத்து நெய் விளக்கு ஏற்றி வணங்கி விரதத்தை மேற்கொள்ளலாம்.

    • இன்று திருமலை மடத்தில் சாதுர்மாஸ்ய தீட்சை சங்கல்பம் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
    • பெரிய ஜீயர் சுவாமி புஷ்கரணிக்கும், வராகசாமி கோவிலுக்கும் செல்கிறார்.

    திருமலையில் உள்ள மடத்தில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகள் இணைந்து சாதுர்மாஸ்ய விரதத்தைத் இன்று (3-ந்தேதி) தொடங்குகிறார்கள். ஆனிமாத சுக்லபட்ச ஏகாதசி அன்று யோக நித்திரைக்கு செல்லும் மகா விஷ்ணு கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி அன்று விழி திறப்பதாக ஐதீகம்.

    அவர், யோக நித்திரைக்கு செல்லும் புண்ணிய மாதங்களான சிராவணம், பாத்ரபதம், ஆஸ்வயுஜம், கார்த்திகை ஆகிய மாதங்கள் 'சாதுர்மாஸ்யம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த முக்கிய மாதங்களில் அதிகாலை எழுந்து ஆச்சாரியர்கள், துறவிகள், ஆன்மிகவாதிகள் புனித நீராடி விட்டு யாகம், தவம், அனுஷ்டானங்கள் உள்ளிட்டவற்றை உலக நன்மைக்காக செய்வார்கள். அதன்படி வைணவ ஆச்சாரியார் வழிவந்த பரம்பரையைச் சேர்ந்த திருமலை மடத்தின் ஜீயர்கள் சாதுர்மாஸ்ய விரதத்தை இன்று தொடங்குகிறார்கள். இன்று திருமலை மடத்தில் சாதுர்மாஸ்ய தீட்சை சங்கல்பம் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

    பேடி ஆஞ்சநேயர் கோவிலை அடுத்துள்ள ஜீயர் மடத்தில் சீடர்களுடன் பெரிய ஜீயர் சுவாமி புஷ்கரணிக்கும், வராகசாமி கோவிலுக்கும் செல்கிறார். அதன் பிறகு ஏழுமலையான் கோவில் மகா துவாரத்தை அடைந்ததும் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர், கோவில் அதிகாரிகள் முறைப்படி வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

    கோவிலில் மூலவர் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்ததும், ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பெரிய ஜீயருக்கு மேல்சாட் வஸ்திரமும், சின்ன ஜீயருக்கு நூல்சாட் வஸ்திரமும் அளிக்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    ×