என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
- புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்.
- புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர்.
புட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழுமலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால்தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.
புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளயபட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது. மகாளயபட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற முடியும். இப்படி தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதை உணர்ந்து, புரட்டாசியில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால் உரிய பலன்களை பெற முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். அன்று தயிர் மட்டும் அருந்தி சிவபூஜை செய்தால் சகல சவுபாக்கியங்களையும் பெற முடியும்.
புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும்.
புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகா லட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா நமக்கு நமஸ்காரம்....'' என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.
புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். அவர் கடலூர் மாவட்டம் மருதூரில் ராமைய்யா&சின்னம்மை தம்பதிக்கு 1823-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21-ந்தேதி மகனாகப் பிறந்தார்.
புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.
கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
- சுபகாரிய தடைகள், குறிப்பாக திருமண தடைகள் நீங்கும்.
- வாழ்க்கையில் எல்லா விதத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் தேய்பிறை திருதியை தினத்தன்று சந்திரோதய கவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். அதன்படி இன்று (புதன்கிழமை) மாலை சந்திரன் உதயமான பின்னர் இரவு 7 மணிக்கு பிறகு சந்திரனின் கிரகணங்கள் விழும் இடத்தில் அம்மனை வணங்க வேண்டும். ஒரு கலசத்தில் தேங்காய், மாவிலை வைத்து அலங்கரித்து, அதிலே அம்பாளை ஆவாகனம் செய்து, அம்பாளின் பக்தி பாடல்களை பாடி தூப தீபங்கள் காட்டி நிவேதனங்கள் செய்து இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.
கவுரியின் பெயரில் பல்வேறு விரத தினங்கள் ஒரு வருடம் முழுக்க கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு கவுரி விரதத்தின் பலனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் மனக் குழப்பங்கள் நீங்கும், தீர்மானங்களை விரைவில் எடுக்கும் சூழ்நிலை ஏற்படும். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். சுபகாரிய தடைகள், குறிப்பாக திருமண தடைகள் நீங்கும்.
மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் அகலும். வாழ்க்கையில் எல்லா விதத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- இப்பூஜையை தம்பதிகளாக செய்வது நல்லது.
- அசூன்ய சயன விரத நாளில் பெருமாள் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அசூன்ய சயன விரதம் மேற்கொள்ள வேண்டிய தினமாகும். 'அசூன்யம்' என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். 'சயனம்' என்றால் படுக்கையில் படுத்தல்.
இந்த விரதம் கடைப்பிடிப்பதன் மூலமாக நிம்மதியான தூக்கமும், நிறைவான வாழ்க்கையும் கிடைக்கும். அசூன்ய சயன விரத நாளில் பெருமாள் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாள் சேவை சாலச் சிறந்தது. இன்று மாலை பூஜை அறையில் விளக்கேற்றி கிருஷ்ணர்-ராதை அல்லது மகாவிஷ்ணு- மகாலட்சுமி படத்தை பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
இப்பூஜையை தம்பதிகளாக செய்வது நல்லது. ரங்கநாத அஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். ஏலக்காய், குங்குமப்பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.
புதிதாக வாங்கப்பட்ட பஞ்சு மெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில், கிருஷ்ணரையும், மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும். அடுத்த நாள் தகுதி உடையோருக்குப் போர்வையுடன் கூடிய படுக்கை தானம் செய்ய வேண்டும். இதனால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.
- கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
- சந்தான பாக்கியத்துக்கும், மகாலட்சுமி கடாட்சத்துக்கும் உகந்த மந்திரங்கள் அடங்கிய ஸ்ரீ லட்சுமி நாராயண இருதயம்.
நம் முன்னோர்கள் பல்வேறு விரதங்களை உருவாக்கிக் கொடுத்து, அதனை மேற்கொள்ளும் வழிகளையும் அறிவுறுத்தியுள்ளனர். அதில் ஒன்றுதான் "சந்தான கோபால விரதம்". இந்த விரதம் புரட்டாசி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் பவுர்ணமி தினத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளால் பகவான் கிருஷ்ணனை வேண்டி மேற்கொள்ளப்படுகிறது. விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
சந்தான கோபால விரதத்தை முழுமையாகப் பின்பற்ற முடியாதவர்கள் பிரத்யேகமாக சில ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும். அத்தகைய தலங்களில் ஒன்றுதான் மேல்வெண்பாக்கம் ஸ்ரீஸ்வதந்த்ர லட்சுமி நாயிகா சமேத ஸ்ரீ யுகநாராயணப் பெருமாள் கோவில்.
சந்தான பாக்கியத்துக்கும், மகாலட்சுமி கடாட்சத்துக்கும் உகந்த மந்திரங்கள் அடங்கிய ஸ்ரீ லட்சுமி நாராயண இருதயம். பகவான் கிருஷ்ணனே திருவாய் மலர்ந்தருளுவ தாக ஸ்ரீமந் நிகழாந்த தேசிகன் அருளிச் செய்த 'யாதவாப்யுதயம்' மகா காவியத்தில் காணப்படும் கோவர்தன கிரி மகாத்மியம், பிரம்மாவின் புத்திரர் சனத்குமாரர் அருளிச் செய்த ஸ்ரீ சந்தான கோபால தோத்திரம் ஆகிய மூன்றும் இத்தலத்தில் பெருமாள் சந்நிதியில் பாராயணம் செய்யப்படுகிறது. இதை கேட்பவர்களுக்கு சந்தான பிராப்தி கிடைப்பது உறுதி என கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள மேல்வெண்பாக்கம் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரத்தை அடுத்து பாலுசெட்டிசந்திரம், தாமல்தாண்டி பனப்பாக்கம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். தொடர்புக்கு- 90031 77722, 93831 45661.
- புரட்டாசி பவுணர்மியன்று சிவபெருமானை காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும்.
- மதியம் வழிபட்டால் முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும்.
- மாலையில் வழிபட்டால் ஏழு பிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழியும்.
கிருச்சமத முனிவரின் மகன் பலி தனது தந்தையின் சொல்படி விநாயகரை பல்லாண்டுகள் கடுமையாக தவம் செய்தான். அவனது தவத்தை மெச்சிய விநாயகர் அவன் வேண்டிக் கொண்டபடி, 'மூவுலகத்தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள்' என்ற வரத்தைக் கொடுத்தார். அது மட்டுமின்றி அவன் நினைக்கும் இடமெல்லாம் சென்று வர இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்களையும் கொடுத்தார். அதனால் அவன் 'திரிபுரன்' எனப்பெயர் பெற்றான். விநாயகர் இந்த வரங்களை பலிக்குக் கொடுத்தபோது ஒரு நிபந்தனையையும் அவனுக்கு அளித்தார்.
அதாவது அவன் ஏதாவது தவறான காரியங்கள் செய்தால் அவனது மூன்று பட்டணங்களும் அழிவதோடு, அவனும் சிவபிரானால் அழிவான் எனவும் கூறினார். விநாயகரின் வரத்தைப் பெற்ற பலி நாட்கள் செல்லச் செல்ல உலகங்களையும் ஆட்டிப் படைத்து தேவர்கள் முதலிய எல்லோருக்கும் பல தொல்லைகளைத் தொடர்ந்து கொடுத்தான். இதற்கு நிவாரணம் பெற தேவர்கள் அனைவரும் சிவபிரானை நாடி வேண்டினார்கள்.
அவர் பலியுடன் போரிட்டு அவரது திரி சூலத்தால் அவனை அழிக்கும்போது அவன் அவரது திருப்பாதங்களைப் பற்றியதால் அவருடன் ஒன்றிப் போனான். பலியை (திரிபுரன்) சிவபிரான் அழித்ததால் அவருக்கு திரிபுராரி எனப் பெயர் வந்தது. சிவனது பலி வதம் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் கிருஷ்ணரது நரகாசுரவதம் போன்றது என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.
வதைபடும் நேரத்தில் வீடு பேறு பெற்றான் பலி. இறையருளால் பலி வீடுபேறு பெற்ற நாள் ஒரு புரட்டாசி பவுர்ணமியாகி தினமாகும்.
எனவே பவுர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு திருவிழா வழிபாடு செய்தாலும் நெய் அல்லது எண்ணெய் திருவிளக்கு ஏற்றினாலும் எக்காலத்திலும் தீவினை அணுகாது நலம் பெறலாம். அன்று விரதமிருந்து, ஆலயம் சென்று வில்வார்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி சிவதரிசனம் பெற்று வருவதோடு, சிவபுராணம், திருவாசகம், தேவாரப் பாடல்களைப் பாடி வீட்டிலும் சிவ பெருமானை தியானித்து வழிபட்டால் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.
புரட்டாசி பவுணர்மியன்று சிவபெருமானை காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும். மதியம் வழிபட்டால் முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும். மாலையில் வழிபட்டால் ஏழு பிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழியும். அது மட்டுமின்றி நாம் விரும்பியன எல்லாம் வந்து சேரும்.
- காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள்.
- ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம்.
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுதல் மற்றும் விரத தினத்தில் செய்யக் கூடியது என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பின்பற்றுவது நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.
பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து விடுங்கள். வீட்டைச் சுத்தம் செய்து கொள்ளவும். காலையில் எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளியுங்கள்.நெற்றியில் பெருமாளுக்கு உகந்த நமம் இட்டுக் கொள்ளவும். வீட்டில் அழகிய கோலம் இடவும். மாவிலை தோரணம் கட்டவும். வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி இருந்தால், அந்த விளக்கில் இருக்கும் எண்ணெய், திரியை எடுத்துவிட்டு, புதிதாக எண்ணெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றவும்.
காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள். எளிமையாக ஒரு இனிப்பை இறைவனுக்கு படைக்க விரும்பினால், பொரிகடலை மற்றும் சர்க்கரை கலந்து சுவாமிக்கு படைக்கலாம்.
அதன் பின்னர், உங்கள் வீட்டில் இருக்கும் சொம்பை நன்றாக சுத்தம் செய்து, காயவைத்து, அதற்கு மூன்று நாமம் இடவும். அதில் சிறிது அரிசி, ஓரிரு நாணயங்களை இடவும். அதை வைத்து பெருமாளிடம் வேண்டவும். பின்னர் அந்த சொம்பை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள நான்கு வீட்டிற்காவது சென்று "கோவிந்தா, கோவிந்தா" என ஒலி எழுப்பு அரிசியை, யாசகம் பெற வேண்டும்.
பின்னர் வீட்டுக்கு வந்து, அந்த அரிசியால், சமைக்கவும். பருப்பு, இரண்டு காய்கறிகள் போட்டு சாம்பார், பொரியல் செய்து படைக்கலாம்.
அதோடு உங்களால் முடிந்தால், அதே சமயம் இனிப்பு உங்கள் வீட்டில் சாப்பிடுவீர்கள் என்றால் கூடுதலாகச் சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம் செய்யலாம்.
சமைத்த உணவுகளை ஒரு வாழை இலையில் படைக்கவும். மதியம், பெருமாளை வழிபட்டு, தீபாராதனை, தூப ஆராதனை காட்டவும். நாம் சமைத்த அனைத்து உணவுகளிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு இலையில் வைத்து, காகத்திற்கு வைக்கவும்.
நாம் சமைத்து வைத்த உணவுகளை, அருகில் குழந்தைகளை அழைத்து விருந்து படைக்கவும். அவர்கள் வாயால் "கோவிந்தா, கோவிந்தா" என்ற நாமம் சொல்ல சொல்லவும்.
அவர்கள் கூறும் "கோவிந்தா" என்ற நாமத்தின் மூலம் பெருமாள் நம் வீட்டிற்கு வந்து அருளுவார். குழந்தைகள் வயிறார விருந்து படைத்து பின்னர், நாம் சாப்பிட வேண்டும்.
வீட்டில் நீங்கள் விருந்து படைக்க முடியாவிட்டால், ஏதேனும் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கலாம். அல்லது ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம். மாலையில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.
- சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள்.
- பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும்.
புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள். புரட்டாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். புரட்டாசி மாதத்தில் நாம் எந்த வழிபாட்டைச் செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதம் வெயிலும் இல்லாத, குளிரும் இல்லாத அற்புதமான மாதம். இந்த மாதத்தில், மனம் ஒரு நிலைப்படுத்தி, அரைமணி நேரம் பூஜையிலும் வழிபாட்டிலும் இருக்க, உள்ளொளி கிடைப்பது நிச்சயம். அதேபோல், மந்திர ஜபங்கள் செய்வதும் ஸ்லோகங்கள் சொல்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம். மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கான மாதம். இந்த மாதம் முழுவதுமே துளசி தீர்த்தம் பருகுவதும் பெருமாளுக்கு துளசிமாலை சார்த்துவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில், பெருமாள் வழிபாடு செய்வது உத்தமம். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில், மகாலக்ஷ்மி வழிபாடு செய்வதும் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்வதும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும்.
அதேபோல், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. மகாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அளப்பரிய நன்மைகளைக் கொடுக்கக் கூடியது.
புரட்டாசி மாதம் நிறைவுறும் தருணத்தில் பிரதோஷம் வருகிறது. இன்று பிரதோஷம். இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்கு, மாலையில் பிரதோஷ வேளையில் சென்று தரிசியுங்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள்.
கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களையெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.
பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.
- மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது.
- நாமும் சிவராத்திரியில் சிவபெருமானை வழிபடுவோம். அருளைப்பெறுவோம்.
மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது.
1. சித்திரை மாதம் :- இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.
2. வைகாசி மாதம் :- வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.
3. ஆனி மாதம் :- வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசானால் வழிபடப்பட்டது.
4. ஆடி மாதம் :- தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.
5. ஆவணி மாதம் :- வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.
6. புரட்டாசி மாதம் :- வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.
7. ஐப்பசி மாதம் :- வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.
8. கார்த்திகை மாதம் :- 2 சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவற்றை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.
9. மார்கழி மாதம் :- வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.
10. தை மாதம் :- வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.
11. மாசி மாதம் :- தேய்பிறை-தேவர்களால் வழிபடப் பட்டது.
12. பங்குனி மாதம் :- வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.
நாமும் சிவராத்திரியில் சிவபெருமானை வழிபடுவோம். அருளைப்பெறுவோம்.
- சக்தியை வழிபடத்தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி.
- இன்று விரதம் இருந்து அன்னையை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் பெருகும்.
விஜயதசமி என்றாலே வெற்றி திருநாள் ஆகும். அசுரனை அழித்த அன்னையின் வெற்றியே அது. அந்த திருநாளில் நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
சிவனை வழிபடத்தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத்தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரதமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோவிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்றும் போற்றப்படுகிறது.
இந்த நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலு வைத்து நிவேதனம் படைத்து வழிபாடு செய்வார்கள். இதில் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொள்வார்கள். அதே போல் அம்மன் கோவில்களிலும் நவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகளும், கொலு பூஜைகளும் நடைபெறும்.
தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருட்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற 3 சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாக தோன்றி மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை, சண்ட முன்டனை வதம் செய்த நன்னாள்தான் விஜயதசமி. அன்று விரதம் இருந்து அன்னையை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.
நவராத்திரியின் 9 நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி 10-ம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே விஜயதசமி என்றும் கூறப்படுகிறது. இந்த நாளில் புதிதாக தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
- விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.
- பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம்.
சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.
சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும், படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.
சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.
எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சச்இவர்ணம் சதுர்புஜம்!
பிரசந்த் வதனம் தீயாயேத்
சர்வ விக்நோப சாந்தயே'
என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.
சரஸ்வதி பூஜையின் போது `துர்க்கா லட்சுமி சரஸ்வதீப்யோ நம' என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று. பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.
பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம். நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.
- புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
- அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால், கூடுதல் பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
நவக்கிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய மாதமாக இருப்பது, புரட்டாசி. புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர், மகாவிஷ்ணு. எனவேதான் புதன் கிரகத்தின் அருளைப் பெற விஷ்ணுவின் வழிபாடு புரட்டாசியில் உகந்ததாக இருக்கிறது. மகாவிஷ்ணு எனப்படும் பெருமாளின் அம்சமாகவே கருதப்படும் புதனுக்குரிய வீடு, கன்னி ராசி.
இந்த ராசியில் சூரியன் அமர்வதும் புரட்டாசி மாதத்தில்தான். எனவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு பஜனைகள் செய்து வழிபடுவது, ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது போன்றவை செய்யப்படுகின்றன. புதன் கிரகத்திற்கு நட்பானவர், சனி பகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள், பெருமாள் வழிபாட்டிற்கு கூடுதல் சிறப்புக்குரியதாக இருக்கிறது.
புரட்டாசி மாதத்தை, எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அது முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலாவது, பெருமாளுக்குரிய பூஜைகளை செய்து வழிபடுவதோடு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென மேலும் ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
- லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
- சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
நவராத்திரியில் வரும் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி பூஜை மிகவும் விசேஷமான பூஜையாகும். மூல நட்சத்திரத்திற்கு முதல் நாள் வரும். தமிழில் கேட்டை நட்சத்திரம் என்று சொல்வார்கள்.
சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும். இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். மகாலட்சுமியை குறித்து சொல்லும் சுலோகங்கள், அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் சொல்லி குங்குமம், புஷ்பம், அட்சதைகளினால் அர்ச்சிக்கலாம்.
மூலநட்சத்திர தீபம்: மூல நட்சத்திர தீபம் என்பது நவராத்திரி பூஜை சமயத்தில் சரஸ்வதி ஆவாகனம் செய்யும் மூலநட்சத்திரத்தன்று ஏற்றும் ஒரு அகண்ட தீபம் ஆகும். இந்த தீபமானது சரஸ்வதி பூஜை வரையிலும் அகண்டமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இதை ஏற்றுவதற்கு நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது. மூலம் நட்சத்திரத்தன்று காலையில் குளித்து புதிய ஆடை அணிந்து கொண்டு சுவாமியின் முன் ஒரு இடத்தைசுத்தம் செய்து செம்மண் கோலம் போட்டு அலங்கரித்து அதன் மேல் ஒரு சிறிய மர பலகை அல்லது தட்டு வைத்து சிறிய அரிசியை பரப்பி அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றி பூக்களைப்போட்டு நமஸ்கரிக்க வேண்டும். பசு நெய் ஸ்ரேஷ்டம் ஆனால் மூன்று நாட்களும் எரிந்து கொண்டிருக்க வேண்டியதினால் அந்த அளவு நெய் கிடைப்பது கஷ்டம். ஆகையால் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம்.
விளக்கு மலையேறாமல் அடிக்கடி எண்ணெய் ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும். இரவில் படுப்பதற்கு முன்பு நிதானமாக திரியின் மேல் பாகத்தை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்ற வேண்டும். திரியைசுத்தம் செய்யும் பொழுது அணையாமல் இருக்க வேறு திரியை ஏற்றி விட்டு சுத்தம் செய்து பிறகு ஏற்ற வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்