search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    • பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம்.
    • திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்தால் சந்திர தோஷம் நீங்கும்.

    தசாவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்றாகும். இந்த அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்ததால் தான் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கேரளாவில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் ஆகும். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி.

    27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் 'திரு' என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஒப்பிலியப்பன் பெருமாள் மார்கண்டேயன் மகளாக இருக்கும் பூமாதேவியை மணந்து கொள்ள பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான்.

    அவரை மணம் முடிந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் அன்று தான். எனவே ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில்களில் திருவோண நட்சத்திரம் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். மிக எளிதாக வீட்டிலேயே கடைபிடிக்கக் கூடிய திருவோண விரதத்தை ஏதாவது ஒரு நாளில் கடைபிடித்தால் கூட அவர்களுக்கு பெருமாளின் அருளும், சந்திர தோஷமும் விலகும் என்பது நியதி.

    தோஷங்களில் சந்திர தோஷமும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மனநிலையில் சீரற்ற தன்மை இருக்கும். தான் செய்வது சரியா? தவறா? என்கிற பதற்றம் நீடிக்கும். ஏதாவது ஒரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரம் உறுதியாக கூறுகிறது. அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

    திருவோண விரதம் எப்படி இருப்பது?

    மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.

    • கோமதியன்னையின் கருணையும் கடாக்ஷமும் சொல்லில் அடக்கமுடியாதது.
    • ஆடி பெளர்ணமிக்கு முன்னதாக ஆடித்தபசு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    சைவமும் வைஷ்ணவமும் கைகோர்த்துக் காட்சி தரும் திருத்தலம் சங்கரன் கோவில். இங்கே சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் இணைந்து, ஒரே உடலெனக் கொண்டு காட்சி தருகின்றனர். சிவனாரும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வரராக எப்படிக் காட்சி தருகிறார்களோ... அதேபோல், சிவனாரும் பெருமாளும், ஹரியும் ஹரனுமாகக் காட்சி தரும் ஒப்பற்ற திருத்தலம்.

    இந்தக் காட்சியை தரிசிக்க வேண்டி, கடும் தவம் புரிந்தாள் உமையவள். ஊசி முனையில் ஒற்றைக்காலில் நின்றபடி கடும் தவம் இருந்தாள். அவளின் தபஸ் செய்யும் காட்சியே சங்கரன் கோவிலின் இன்னொரு அற்புதமானது. இந்தத் தலத்தில், தவக்கோலத்தில் கோமதியம்மன் காட்சி தருகிறாள். அவளின் தவத்துக்கு இணங்கி, சங்கரநாராயணர் கோலத்தைக் காட்டினர் என்கிறது ஸ்தல புராணம். மேலும் மகா யோகினி சக்தி பீடம் எனப் போற்றுகிறது புராணம்.

    கோமதியன்னையின் கருணையும் கடாக்ஷமும் சொல்லில் அடக்கமுடியாதது. அதனால்தான் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில், பெண் குழந்தை பிறந்தால், கோமதி என்றே பெயர் சூட்டினார்கள். இன்றைக்கும் அந்த வழக்கம் இருந்து வருகிறது.

    தவம் புரிந்த கோமதியன்னைக்கு, ஆடி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், உத்திராட நட்சத்திர நாளில்தான் சிவனாரும் பெருமாளும் சங்கரநாராயணராகக் காட்சி தந்தருளினர். அதனால்தான் ஒவ்வொரு ஆடி பெளர்ணமிக்கு முன்னதாக, ஆடித்தபசு விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சங்கரன்கோவிலில் பத்து நாள் விழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    இன்றைய தினம் கோமதியன்னை, தபசுக் கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு நடைபெற்றது. தவக்கோலத்தில் இருந்து சங்கரநாராயணரை தரிசித்த கோமதி அன்னையின் தவக்கோலத்தை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்வர்..

    விரதம் இருந்து கோமதியன்னையின் ஆடித்தபசு விழாவில் கலந்துகொண்டு, கோமதி அன்னையையும் சங்கரநாராயணரையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், வாழ்வில் எல்லா யோகமும் கைகூடி வரும். சகல ஐஸ்வர்யங்களும் தேடி வரும் என்பது ஐதீகம்.

    • ராகு காலத்தில் விரதம் இருந்து செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்பு மிக்கது.
    • துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது.

    சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் 1 மணி நேரம் ராகுவும், 1 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுபகாரியங்களைத் தவிர்க்க சொன்னார்கள்.

    அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை விரதம் இருந்து வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.

    ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1 மணி நேரமாகும். ராகு காலத்தில் விரதம் இருந்து செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்பு மிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குவதே காரணம்.

    மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோ‌ஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோ‌ஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன் தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.

    செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத்தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சனைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

    வெள்ளிக்கிழமை விரதம் இருந்து ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

    • நாளைய ஏகாதசி விரதத்தின் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது.
    • நாளை வயதானவர்களுக்கு தானங்கள் செய்வது நல்லது.

    ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்துக்கும் ஒரு பலன் உண்டு. அந்த வகையில் நாளை (திங்கட்கிழமை) ஏகாதசி விரதம் குழந்தை பாக்கியம் தரும் மகத்துவம் உள்ளதாகும். இதன் பின்னணியில் புராண நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது.

    நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு பணக்காரர் தனது குறையை முனிவர் ஒருவரிடம் தெரிவித்து, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்' என்று கேட்டாராம். அதற்கு அந்த முனிவர், 'கடந்த ஜென்மத்தில் தாகத்தோடு வந்த பசுவையும், கன்றையும் நீ அடித்து விரட்டிவிட்டாய். அதனால்தான் குழந்தை பாக்கியம் இல்லை. இந்தமாத வளர்பிறை ஏகாதசியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்' என்றார்.

    அதன்படி அந்த பணக்காரர் ஏகாதசி விரதம் கடை பிடித்து குழந்தை பாக்கியத்தை பெற்றார். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் நாளை ஏகாதசி விரதத்தை கடைபிடித்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும். நாளை இந்த விரதத்தை மேம்படுத்த வயதானவர்களுக்கு தானங்கள் செய்வது நல்லது.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் இன்று கலிய நாயனார் குருபூஜை. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவரது குருபூஜை நடத்தப்படுகிறது.

    • சப்த கன்னிகளை ஆடி மாதத்தில் வணங்கும்போது தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும்.
    • சிவன் கோவில்களிலும் சப்த கன்னிகளுக்கு தனி இடம் உண்டு.

    கன்னி தெய்வ வழிபாட்டின் மகத்துவத்தை புராண வரலாறுகள் சப்த கன்னிகள் வழிபாட்டின் வாயிலாகவும் நமக்கு உணர்த்துகிறது. பூலோக வாசிகளின் கவலைகளை தீர்க்கவே அவதரித்தவர்கள் சப்த கன்னிகள்.

    சந்தோஷம் நிலைக்கச் செய்யும் இவர்கள் பராசக்தியின் அம்சங்களாக, அவளிடமிருந்து தோன்றியவர்கள். இந்த சப்த கன்னிகள் என்னும் ஏழு பேரின் தோற்றத்தை புராண வரலாறுகள் இரண்டு சம்பவங்களாக கூறுகிறது. புராண வரலாற்றில் இருவேறு விதங்களில் சப்த கன்னிகளின் தோற்றம் பற்றி விவரித்துள்ளனர்.

    முதல் வரலாறாக மனித கருவில் பிறக்காத வலிமையற்ற பெண்களால் தங்கள் மரணம் நிகழவேண்டுமென்ற வரம் பெற்ற அசுரர்களின் ஆணவத்தை அழிக்க பராசக்தியின் சொரூபமாக உருவாக்கப்பட்டவர்கள் சப்த கன்னிகள். இரண்டாவது வரலாறாக, அந்தகாசுரன் எனும் அசுரனுடன் சிவபெருமான் போரிட்டார். காயம்பட்ட அந்தகாசுரனின் உடலில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தில் இருந்து அவன் பெற்ற வரத்தின்படி பல்லாயிரக்கணக்கான அசுரர்கள் தோன்றினர்.

    அவர்களை அழிக்கும் பொருட்டு சிவன் தன் வாய் அக்னியில் இருந்து யோகேஸ்வரி எனும் சக்தியையும் வெளிப்படுத்தினார். யோகேஸ்வரி மகேஸ்வரியை உருவாக்கினாள். அந்த மகேஸ்வரிக்குத் துணையாக பிரம்மா பிரம்மியையும், விஷ்ணு வைஷ்ணவியையும் இந்திரன் இந்திராணியையும், முருகன் கவுமாரியையும், வராகமூர்த்தி வராகியையும், எமன் சாமுண்டியையும் தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. மகேஸ்வரி, பிராம்மி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகை களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

    மகேஸ்வரி: பரமேஸ்வரனின் அம்சமானவள். இவள் சிவனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டவள். சாந்த சொருபிணி- கோபம் மற்றும் உடலின் பித்தத்தை நீக்கி சுகம் தருபவள்.

    பிரம்மி: சரஸ்வதியின் அம்சமாக பிரம்மனிடம் இருந்து தோன்றியவள். இவள் கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற வைப்பவள். சிந்தித்து செயல்படும் மூளையின் திறனை அதிகரித்து வெற்றியைத் தருபவள். தோல் நோய் இருப்பவர்கள் இவளை வழிபட்டால் நல்ல குணம் தெரியும்.

    கவுமாரி: முருகனின் அம்சமான இவள் சஷ்டி என்றும், தேவசேனா என்றும் அழைக்கப்படுபவள். குழந்தைப் பேறு அருள்பவள். செவ்வாய் தோஷம் அகலவும், வீடு, மனை வாங்க விற்க எற்படும் பிரச்சினைகளுக்கு இவளை வழிபடலாம். உடல், உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் அகலும்.

    வைஷ்ணவி: நாராயணி எனப்படும் இவள் திருமாலின் அம்சம். திருமாலின் வடிவில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருபவள். வறுமையை விரட்டுவதில் வல்லவள்.

    வராகி: சிவன், விஷ்ணு, சக்தி ஆகிய மூவரின் அம்சமும் கொண்ட இவள், வராக மூர்த்தியின் அம்சமாக தோன்றியவள். பெரும் வலிமையை பெற்றவள். கண்ணுக்குத் தெரியாத எதிரியையும் துவம்சம் செய்யக்கூடியவள். இவளை வழிபட தடைகள் மற்றும் துன்பங்கள் அகலும். திருமணத்தடை அகலும்.

    இந்திராணி: மகாலட்சுமியை போன்ற அழகானவள். செல்வச் செழிப்பை தரும் இவளை வழிபட கடன் பிரச்சினைகள் தீரும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழந்த வேலையை திரும்ப பெறலாம். அல்லது புதிய வேலை கிடைக்கும்.

    சாமுண்டி: வீரத்திற்கு அதிபதியான இவளை மனதில் நினைத்து வணங்கினாலே யானை பலம் கிட்டும்.தீய சக்திகள் அண்டாது. நரம்பு தொடர்பான பிரச்சினைகள் அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

    கன்னி வழிபாடு நடத்தும் வழக்கம் இல்லாத குடும்பத்தினர் அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட உருவெடுத்த சப்த கன்னிகளை ஆடி மாதத்தில் வணங்கும்போது காலத்தால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலும் சப்த கன்னிகளுக்கு தனி இடம் உண்டு.

    • பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வர்.
    • லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தி ஆகும்.

    வெள்ளிக்கிழமை 5.8.2022 ஆடி 20

    மகா விஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமி வரங்களை அள்ளித் தருவதால் 'வரலட்சுமி' என அழைக்கப்படுகிறார். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாளாகும்.

    மகாலட்சுமி தேவியை வழிபட்டு வேண்டிய வரம் பெறும் சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும். இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் கடைபிடிக்கலாம். வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது கடைபிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமணத் தடை இருக்காது. திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும். சில குடும்பத்தில் வரலட்சுமி பூஜை செய்யும் வழக்கம் கிடையாது. அவர்கள் பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள் வீட்டிற்கு சென்று பூஜை செய்யலாம்.

    விரதத்துக்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து பசு மாட்டின் கோமியம் தெளித்து மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில், பலகையை போட்டு, அதன் மீது மாக்கோலம் போட வேண்டும். மகாலட்சுயின் படம் வைத்து கோலத்திற்கு நடுவில் நெல் பரப்பி தட்டு வைத்து அதன் மீது கலசம் வைத்து, பட்டுப்பாவாடை, நகைகள் போட்டு மஞ்சள், குங்குமம் வைத்து, பூச் சூட்டி, கும்பத்தை அலங்காரம் செய்து கட்டி, கோலமிட்டு மகாலட்சுமிக்கு வரவேற்புக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து கலசத்தில் ஆவாகனம் செய்ய வேண்டும்.

    மறுநாள் வெள்ளிக்கிழமை நோன்பு நாளில் நோன்பு சரடை கும்பத்தோடு வைத்து, பஞ்சமுக நெய் விளக்கு ஏற்றி கும்பத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம், அன்னம் நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற உணவுப் பொருட்கள் படைக்க வேண்டும். வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.

    வரலட்சுமியிடம் வேண்டிய வரத்தை கேட்டு வரலட்சுமியின் ஸ்தோத்திரங்களை கூறி, தூப தீப ஆராதனை களைச் செய்து வர லட்சுமி தாயை வழிபாடு செய்ய வேண்டும்.பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும்.

    பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வர். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமண தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வயது முதிர்ந்த சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் அதிகம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் இடமும், 8-ம் அதிபதியும் 8-ல் நின்ற கிரகமுமே ஆயுள், மாங்கல்ய பலத்தை தீர்மானிக்கும். 8-ம் அதிபதி சுப கிரக சம்பந்தத்துடன் வலுப்பெற்று விட்டால் அந்தப் பெண் தன் கணவனுடன் தீர்க்க சுமங்கலியாக தனது சொந்த பந்தங்களுடன் நீண்ட நெடுங்காலம் வாழ்வார்.

    அத்துடன் செவ்வாயும், சுக்கிரனும் பலம் பெற்றால் லட்சுமி கடாட்சம் நிறைந்த தீர்க்க சுமங்கலியாவார். இத்தகைய அம்சம் நிறைந்த சுமங்கலிகளிடம் வரலட்சுமி நோன்பு அன்று ஆசி பெற்றால் எத்தகைய திருமணத்தடையும் அகலும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும். அதனால் பூஜைக்கு வயதான சுமங்கலிப் பெண்களை அழைத்து உணவு கொடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்து ஆசி பெறுவது மிகச் சிறப்பு. மறுநாள் புனர் பூஜை செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

    இந்த பூஜையை தொடர்ந்து ஆண்டு தோறும் செய்து வந்தால் லட்சுமி இல்லம் தேடி வருவாள். ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கும். வருடம் முழுவதும் வசந்த காலமாகும். லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தி ஆகும்.

    • ஆடி மாத சப்தமி தினத்தை ஸ்ரீசீதளா சப்தமி என்று அழைப்பார்கள்.
    • அம்மனின் பல உருவங்களில் சீதளாதேவி என்னும் வடிவமும் ஒன்று.

    சீதளா என்றால் குளுமை என்று பொருள். வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படும் வெக்கை நோய்களான காலரா சின்னம்மை பெரியம்மை போன்றவற்றை தன்னுடைய குளீர்ச்சியினால் போக்கிவிடும் தெய்வமாக சீதளாதேவியை கொண்டாடுகிறார்கள்.

    இவளுக்கு வாகனமாக கழுதையும் கையில் ஆயுதமாக துடப்பமும் தரப்பட்டிருக்கின்றன. உடலை பாதிக்கும் நோய்க்கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்தி பூரண ஆரோக்கியம் அளிப்பவள் என்பதற்கான குறியீடு துடைப்பம்.

    கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. மற்றவர்களின் சுமையை தனதாகக் கருதி அதற்காக யார் மனமுவந்து உதவுகிறார்களோ அவர்களை விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனமே உணர்த்துகிறது.

    ஆந்திரா தமிழ் நாடு கர்னாடகா கேரளா போன்ற தென்னிந்திய மானிலங்களில் கொண்டாடப்படும் மாரியம்மன் வழிபாடே வட மானிலங்களில் சீதளாஷ்டமி என்ர பெயரில் கொண்டாடப்படுகிறது.

    ஆடி மாத சப்தமி தினத்தை ஸ்ரீசீதளா சப்தமி என்று அழைப்பார்கள். இன்று (வியாழக்கிழமை) சீதளா சப்தமி தினமாகும். இந்த தினம் நோய்களை தீர்க்க செய்யும் அற்புதமான தினமாகும்.

    அம்மனின் பல உருவங்களில் சீதளாதேவி என்னும் வடிவமும் ஒன்று. அதாவது ஒரு சமயம் தேவர்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுக்க முடிவு செய்தனர். அசுர குருவான சுக்ராச்சாரியாரின் உதவியால் தீய சக்தியை ஏவினர். இதனால் கடுமையான வெப்பம் காரணமாக உடலில் கொப்பளங்களுடனும், கடும் ஜூரத்துடனும், உடல் வலியுடனும் தேவர்கள் சிரமப்பட்டார்கள்.

    தேவர்களின் துயர் துடைக்க சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடம் இருந்தும், கங்கையிடம் இருந்தும் பேரொளி ஒன்று அம்மனாக தோன்றியது. அந்த அம்மனே சீதளா தேவி என்று அழைக்கப்படுகிறாள். இன்று சீதளா தேவியை பூஜை செய்து மாம்பழமும், வெள்ளரிக்காயும், தயிர் சாதமும் நிவேதனம் செய்து அவற்றை தானம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் தானம் மட்டுமாவது செய்யலாம்.

    இதனால் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் நோய்கள் உடனே விலகும். குறிப்பாக அதிக வெப்பத்தால் ஏற்படும் கட்டிகள், அம்மை நோய் முதலான நோய்கள் விலகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    • ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும்.
    • இன்று புனித நதிகளுக்கு சீர் செய்து வணங்குவது சிறப்பு.

    ஆடி 18 (3.8.2022)

    ஆடிப் பெருக்கு எனும் ஆடி பதினெட்டு விழா மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், எந்த திதியில் வந்தாலும் செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

    இயற்கை சக்திகளில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் தரப்படும் கிரகம் சந்திரன். கால புருஷனுக்கு நான்காம் வீடான கடக ராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். காலச்சக்கரத்தின் நான்காவது ராசி அதிபதி சந்திரனுக்கு சொத்து, சுகம், வண்டி, வாகனங்கள் முதலியவற்றை தருகின்ற அதிகாரம் உண்டு. சந்திரன் மனோகாரகன் அதாவது மனதை ஆள்பவன்.

    சந்திரன் சுப கிரகங்களுடன் சேரும் போது யோக மாகவும், அதுவே ராகு-கேது, சனி போன்ற கிரகங்களுடன் சேரும் போதும் அவயோக தோஷமாகவும் மாறுகிறது. சந்திரன் தரும் யோகங்கள் ஒருவரை வாழ்க்கையில் உச்சத்தை அடைய வைக்கும்.

    வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு சந்திரனால் யோகம் இருந்தால் அந்த குழந்தையின் ஜாதகத்தால் அந்த குடும்பம் செல்வ வளத்துடன் கூடிய கோடீஸ்வரர் குடும்பமாக மாறிவிடும். அந்தளவுக்கு யோகத்தை வழங்ககூடிய அமைப்பு சந்திரனுக்கு உண்டு. சந்திரனால் பாதிக்கப்பட்டால் வறுமை தண்ணீரில் கண்டம், திருமணதடை, தோல்விகள், மனநிலை பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

    கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும். எனவே கால புருஷ 5-ம் அதிபதி சூரியன் கால புருஷ 4-ம் அதிபதி சந்திரன் வீட்டில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் தென் மேற்குப் பருவ மழை பெய்து காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதைத்தான் 'ஆடிப்பெருக்கு' என்று கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். அனைத்து நதிகளும் நீர் நிரம்பி காணப்படும்.

    பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். நெல், கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இன்று புனித நதிகளுக்கு சீர் செய்து வணங்குவது சிறப்பு.

    நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். இன்று சப்த கன்னிகளை வழிபட்டால் திருமண தடை அகலும்.

    நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் ஆடிப்பெருக்கு பூஜையை நதிக்கரை மட்டுமில்லாமல் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு சேர்த்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். திருவிளக்கேற்றி அந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைக்க வேண்டும்.

    ஒரு அம்மன் படத்துக்கு உதிரிப் பூக்கள் தூவி தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய நதிகள், அகத்தியர் ஆகியோரை மனதார நினைத்து வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    செம்பிலுள்ள நீரை கால் மிதி படாத இடத்திலோ அல்லது செடி, கொடியிலோ ஊற்றி விட வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

    ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள், சந்திர தசை புக்தி நடப்பவர்கள், சந்திரனுக்கு சனி, ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். வீடு வாகன யோகம் சித்திக்கும்.

    • இன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
    • கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

    அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியான அன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு தீங்கி ழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் விரதம் இருந்து வழிபட சிறந்த நாள் நாக/கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர்.

    பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். சனி, வியாழக்கிழமை, பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திர நாட்களில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும்.

    விபத்து, நோய் நீக்கும், மருத்துவராகவும், பட்சிகளின் ராஜாவாக திகழும் கருட பகவானுக்கு கருட ஜயந்தி, கருட பஞ்சமி அன்று கருட ஹோமம் செய்வது நலம் தரும். கருட பஞ்சமியன்று விரதமிருந்து கருட வழிபாடு செய்ய தீர்க்க முடியாத கோர்ட்டு, கேஸ் பிரச்சினை, சட்ட நெருக்கடி, கடன் தொல்லை, உயிர்கொல்லி நோயான கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம். பலன் இரட்டிப்பாகும்.

    • உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம்.
    • ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கும்.

    அம்மனுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள். உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இது ஸ்ரீஆண்டாள் பிறந்தாள். பூரம் சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரன் களத்திரக்காரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர்.

    ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். அத்துடன் சுக்கிரன் இன்பம், அன்பு, பாசம், காதல் சுக, போகம், அழகு, ஆடம்பர வாழ்க்கை என அனைத்து லவுகீக இன்பங்களையும் வழங்குபவர்.

    இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் என்பதால் ஒருவர் ஜாதக கட்டத்தில் சுக்ரன் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றால் தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

    சுக்கிரன் வலுவிழந்தால் அல்லது பாவிகள் தொடர்பு இருந்தால் திருமணம் தடைபடும். சுக போகங்கள் குறைவுபடும். அழகு மங்கும். ஆடம்பர பொருட்கள் சேர்க்கை இருக்காது. பொருள் வரவில் தடை, தாமதம் இருக்கும்.

    ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமை குறைந்தவர்கள் ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

    அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்துர் செல்ல முடியாத இளம் கன்னிப் பெண்கள் வீட்டில் ஆண்டாள் படம் வைத்து மனதை ஒருநிலைப்படுத்தி திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடினால் திருமணத் தடை அகலும். மனம் விரும்பிய மணாளனை அடையலாம்.

    அன்று அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    • கலாச்சார மாற்றத்தால் குடும்பத்தில் கன்னியாக இறந்த கன்னிகைகளை வழிபட தவறி விட்டனர்.
    • கன்னி வழிபாடு பல குடும்பத்திற்கு தெரியவும் செய்யாது

    பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்று தொட்டே இருந்து வருகிறது. ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் பிறந்த பெண் குழந்தைகளை மகாலட்சுமியின் அம்சமாகவேபாவிக்கிறார்கள். பூமியில் பிறந்தவர்கள் இறந்தால் அவர்களை தெய்வத்திற்கு சமமாக பாவிப்பது நமது மரபு. அதுவும்வீட்டில் பிறந்த ஒரு பருவப்பெண் மணம் முடிக்காமல் கன்னியாகஇறந்தால் அவளை கன்னி சக்தியாக வழிபடும் பண்பாடு நமது மரபில் இருந்து வருகிறது.

    இறந்த கன்னிப் பெண்கள் தமது குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் சக்தி படைத்தவர்கள்.

    ஒரு பருவப் பெண் கன்னி கழிந்தால் மட்டுமே முழுமையான பெண்ணாகிறாள்.பண்டைய காலத்தில் பால்ய விவாகம் (குழந்தை திருமணம்) மிகுதியாக இருந்தது. மருத்துவ வசதிகள் குறைவாக இருந்த காரணத்தால்நோய் தாக்கம் அல்லது இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணத்தால் கணவன் இறந்தால் தன் வாழ்நாள் முழுவதும் கன்னி கழியாமல் , மறு திருமணமும் செய்யாமல் தன் புகுந்த வீட்டில் அல்லது பிறந்த வீட்டு உறுப்பினர்களுக்கு சேவை செய்தே தங்கள் வாழ்நாளை கழித்தனர்.பல குடும்பங்களில் திருமணமாகாமல் கன்னியாகவே இருந்து உடன் பிறந்தவர்களின் குழந்தைகளையும் வளர்த்து இருக் கிறார்கள்.

    பழங்காலத்தில் ராஜ குடும்பத்தினர், ஜமீன்கள் போன்ற பலர் அழகிய பருவ வயது பெண்களை தார்மீகமற்ற முறையில் கன்னிகைகளை கைப்பாவைகளாக பயன்படுத்தி வந்தார்கள். இது பற்றிய பல்வேறுபுராண சம்பவம் மற்றும் கதைகளை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். பல கன்னிப் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையையும் , பாரம்பரிய குடும்ப கவுரவத்தை காக்கவும்தாங்களே தங்களை மாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

    இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு சில குடும்பங்களில் பருவம் அடைந்த பருவப் பெண்கள் காதலித்தால் குடும்ப கவுரவத்தை காக்க பருவமடைந்த கன்னியை உடன் பிறந்தவர்கள் அல்லது பெற்றோர்கள் கொலையும் செய்து இருக்கிறார்கள். இந்தக் கன்னிகள்தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள். கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள். இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விட்டவர்கள்.

    மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு இது போன்ற பல காரணங்கள் உண்டு. தன் கன்னித்தன்மை வேறு குடும்பத்து ஆணுக்கு கொடுத்து மனித குலத்தை விருத்தி அடையச் செய்யும் பெண்கள் மகாசக்திகள் தான். பெண்களால் மட்டுமே ஒருவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். கணவனுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது தன் பிறந்த வீட்டு சீதனத்தை கொடுத்து குடும்ப கவுரவத்தை காக்கிறார்கள். பல பெண்கள் கருக்கலைப்பில் தங்கள் உயிரையும் இழந்து இருக்கிறார்கள்.

    தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிய உருவாக்கப்பட்ட ஸ்கேன் என்ற கருவி பல பெண் குழந்தைகளை தாயின் கருவறையிலேயேகல்லறையாகச் செய்து பெண்களின் விகிதாசாரத்தை குறைத்துவிட்டது. தாயின் கருவறையில் இறந்த பல பெண் குழந்தைகளின் சாபம் தான் குழந்தையின்மை மற்றும் திருமணத்தடைக்கு பிரதானமான காரணம்.

    நாட்டில் பெண்களை விட ஆண்களே அதிகமாக இருப்பதால் தான் திருமணம் என்ற அத்தியாயமே இல்லாமல்பல ஆண்கள் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல கலாச்சார மாற்றத்தால் குடும்பத்தில் கன்னியாக இறந்த கன்னிகைகளை வழிபட தவறி விட்டனர். இல்லையில்லைமறந்தே விட்டனர். இப்படி ஒரு கன்னி வழிபாடு பல குடும்பத்திற்கு தெரியவும் செய்யாது. பெற்றோர்கள் செய்து வந்த பூஜையை குடும்பத்து ஆண் வாரிசுகள் தொடர வேண்டும். காலச் சூழல் காரணமாக வழிபாட்டை மறந்து வாழ்ந்த பல குடும்பங்கள் வீழ்ந்து போய் வாழ்ந்த சுவடே இல்லாமல் இருக்கிறார்கள்.

    • இன்று அங்காள அம்மனை வழிபட உகந்த நாள்.
    • திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

    ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையான இன்று, அங்காள அம்மனுக்கு உகந்தது. காளி தேவியின் அம்சமான அங்காள அம்மனை விரதம் இருந்து பூஜை செய்து வணங்கி வந்தால், புத்திக்கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும், வீரமும் அதிகரிக்கும்.

    சுய ஜாதகத்தில் சுக்கிரன், சனி சேர்க்கையால் உள்ள இடர்பாடுகள் தீரும். தவறான காதல் பிரச்சினையில் சிக்கி மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு மீண்டு வரக் கூடிய சந்தர்ப்பம் அமையும்.

    திருமணத்திற்கு பிறகு தவறான நட்பில் இருப்பவர்கள் திருந்தி வாழக் கூடிய மாற்றங்கள் உண்டாகும்.

    திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

    ×