search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    • விரதங்களில் வருதினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது.
    • ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம்.

    வைகாசி மாதம் தேய்பிறையில் வருகிற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்ற பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி பாக்கியத்தைத் தரக்கூடியது.

    ஏகாதசி விரதத்தை மாந்தாதாவும், தந்து மாறனும் அனுசரித்து மேல் உலகம் அடைந்தார்கள். பிரம்ம தேவனின் 5-வது தலையைக் கொய்த சிவபெருமானே வருதினி ஏகாதசி விரதம் இருந்து பாவவிமோசனம் பெற்றார் என்கிறது ஏகாதசி புராணம்.

    வித்யா தானப் பலனை அளிக்கக்கூடியது வருதினி ஏகாதசி விரதம் அன்று செய்யும் சிறிய தானமும் ஆயிரம் மடங்கு பலன்களை அளிக்கும்.

    வருதினி ஏகாதசி விரதத்தின் மகிமைகளை பகவான் கிருஷ்ணனே பார்த்தனுக்குச் சொல்வதுபோல ஏகாதசி புராணம் விவரிக்கிறது. அதில் கிருஷ்ணன்,

    விரதங்களில் வருதினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம். வருதினி ஏகாதசியோ பாவங்களைத் தீர்ப்பதோடு சகல செல்வ வளங்களையும் மேற்கொள்பவர்களுக்கு அருளும். இஷ்வாகு குலத்தில் பிறந்த தந்துமாரா என்னும் மன்னன் சிவபெருமானால் சபிக்கப் பெற்றான். அவன் பின்னாளில் தன் தவற்றை உணர்ந்து வருத்தினி ஏகாதசி விரதம் இருந்து வழிபட அவன் சாபம் நீங்கி நன்னிலை அடைந்தான்.

    இந்த விரதம் துன்பப்படும் இல்லத்தரசிகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டிய விரதம். வீட்டில் தொடர்ந்து தொல்லைகளை அனுபவித்துவரும் பெண்கள் இந்த வருதினி ஏகாதசி அன்று விரதமிருந்தாலோ, பெருமாளை அன்றைய தினம் மனதால் நினைத்து வழிபட்டாலோ விரைவில் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் சேரும்" என்கிறார் கிருஷ்ணபரமாத்மா.

    ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் செய்யலாம்.

    • புத்திர பாக்கியத்தை அருள்பவர் குருதான்.
    • குருஹோரை எனப்படுவது எல்லாக் காரியங்களும் ஏற்றது.

    குணமிகு வியாழகுரு பகவானே!

    மணமுடன் வாழ மகிழ்வுட னருள்வாய்!

    பிரகஸ்பதி வியாழப் பரதகுருநேசா!

    கிரக தோஷமின்றிக் காத்தருள் வாயே!

    உலகெங்கும் இறையருள் மலர்ந்திருப்பினும் இறைவன் சிறப்புடன் குடியிருப்பது நமது தென்னாடாகும் என்பது மாணிக்கவாசகர் அருள்வாக்கு. சிவபெருமானின் பல வடிவங்களில் குருவடிவம் தட்சிணா மூர்த்தியாகும். தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்தியை தொழுபவர்களுக்கு எமபயத்தைப் போக்கி ஞானத்தை வழங்குகிறார்.

    ஆகமவிதிப்படி குருபகவான் நவக்கிரக பீடத்தில் சூரியனுக்கு நேர் எதிராக கிழக்கு நோக்கி பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளார். குரு திசை 16 வருடம். தனுசு மீனராசிக்கதிபதி. நிலம், புகழ், கீர்த்தி, வாக்கு வன்மை வேண்டுவோர் தட்சிணாமூர்த்தியை அல்லது குருவைப் பூஜித்தாலும், மஞ்சள் நிற வஸ்திரம் தானம் செய்தாலும் தங்கம், புஷ்பராகம் இவைகளை அணிந்தாலும், கடலை தானம் செய்தாலும், குருவார விரதமிருந்தாலும், தட்சிணாமூர்த்தி தோத்திர பாராயணம், குருத்தல வழிபாடு செய்தாலும், குரு தோஷம் நிவர்த்தியாகும்.

    பலன்கள்: தன்னை வழிபடுவோர்க்கு பிறரை வணங்காத உயர் பதவியும், திருமணம், நீதி, மனமகிழ்ச்சி, புத்திர பேறு, செல்வம், நன்மதிப்பு, சுகவாழ்க்கை ஆகியவற்றைக் கொடுக்க வல்லவர். கிரக தோஷங்களைக் களைபவர். கோடி நன்மை தருபவர்.

    வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து முல்லை மலர்கள் அணிவித்து குருவை வணங்க நம்மிடம் இருக்கும் படிவங்கள் மெல்ல மெல்ல விலகும்.

    சுகமான வாழ்வு வாழ செல்வம் அவசியம். அந்தச் செல்வத்தை அருள்பவரே குருதான். எனவே குருவைத் தனகாரகன் எனக்கூறுவர்.

    உலகில் பிறந்த அனைவரும் குழந்தை பாக்கியத்தை விரும்புவார்கள். புத்திர பாக்கியத்தை அருள்பவர் குருதான். எனவே குருவைப் புத்திரகாரகன் என்று கூறுவர்.

    கால புருஷன் ஜாதகத்தில் ஒன்பதாம் படிவமாகிய பாக்யஸ் தானத்திற்கு ஆதிபத்தியம் பெறுவதால் பாக்கியத்தை அருள் பவரே குரு என்ற கருத்து நிலவி வருகிறது.

    இது ஒரு ஆண் கிரகம். இரத்தம், பித்தப்பை, இரத்தக் குழாய்கள், இடுப்புக்கும், முழங்கால்களுக்கும் இடைப்பட்ட தொடைகள் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெறுகிறார்.

    உயர்தரக்கல்வி, சட்டம், நீதிமன்றம் நீதிபதி, வங்கிகள் கஜானா ஆகியவற்றிற்கும் காரகத்துவம் பெறுகிறார் குரு. அயல் நாட்டுச் சம்பந்தமான காரியங்களுக்கும் காரகத்துவம் வகிக்கிறார். ஏனெனில் 9, 12 படிவங்கள் அயல் நாட்டுடன் சம்பந்தப்பட்டவை. கால புருஷன் ஜாதகப்படி 9, 12க்குரியவர் குரு பகவான்.

    குருஹோரை எனப்படுவது எல்லாக் காரியங்களும் ஏற்றது. இந்த ஹோரையின் போது எந்த வேலையையும் துவக்கலாம். சிபாரிசு, பண உதவி, வேலை விஷயம் தொழில் ஆரம்பம் போன்ற எந்தக்காரியத்திற்கும் இந்த ஹோரை பொருத்தமானது.

    விஞ்ஞானத்தில் வியாழன்:

    சூரியக் குடும்பத்திலேயே இதுதான் பெரியதொரு கிரகம் ஆகும். சூரியனிலிருந்து இது 778 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளது. (484 மில்லியன் மைல்கள்) இது தன்னைத் தானே ஒரு தடவை சுற்றிவர 9 மணி 50 நிமிட நேரமும், சூரியனை ஒரு தடவை சுற்றி வர 11.8 வருடங்களும் எடுத்துக் கொள்கிறது. பூமியை விட இது 317 பங்கு கனமானது. சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ளதால் வியாழன் கிரகம் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது.

    • ‘அன்ன தோஷம்’ என்பது ஒரு வகையான தோஷமாகும்.
    • இந்த நாளில் விரதம் அனுஷ்டித்தால் அன்ன தோஷம் நீங்கும்.

    'அன்ன தோஷம்' என்பது ஒரு வகையான தோஷமாகும். 'பசி' என்று கேட்கும் ஒருவருக்கு, உணவளிக்காமல் விரட்டியவர்களை இந்த தோஷம் பிடிக்கும்.

    குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பவர்கள், உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களை சாப்பிடவிடாமல் விரட்டியடிப்பவர்கள், கைவசம் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்கள், ஒழுங்காகப் பிண்டம் கொடுக்காதவர்கள், சிறு குழந்தைகளை பார்க்க வைத்து தான் மட்டும் சாப்பிடுபவர்கள் ஆகியோரை இந்த அன்ன தோஷம் பாதிக்கும்.

    இந்த தோஷம் உள்ளவர்களின் வீட்டில், எவ்வளவு உழைத்தாலும் செல்வம் நிலைக்காது. அவர்கள் வெள்ளிதோறும் விரதமிருந்து அன்னபூரணியை வழிபட்டு வருவதுடன், இயன்றவரை அன்னதானங்களும் செய்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும். மனக்குறை அகலும்.

    • எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர்.
    • வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான்.

    படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

    இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். அவருக்கு தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை.

    எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது. பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது. கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.

    சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீபைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான்.

    ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீபைரவரை விரதம் இருந்து வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

    பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்து உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் வெண்பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

    மரண பயத்தை போக்குபவர். எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர். தமிழ்நாட்டில் சீர்காழி அருள்மிகு சட்டைநாதர் கோவில், உஜ்ஜயினி, தக்கோலம், காட்மாண்டு, திருமீயச்சூர், வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் சுயம்புபைரவர் ஆகிய தலங்களில் காலபைரவர் வழிபாடு சிறப்பாக நடக்கிறது.

    வழிபாட்டு முறை:-

    பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாய் மான் தோலில் அமர்ந்து தினம் 1008 வீதம் உரு ஜெபித்து பூஜிக்க வேண்டும்.

    சுண்டல், வடை, பாயாசம், சர்க்கரைப்பொங்கல், மது, மாமிசம் நிவேதனம் செய்ய வேண்டும். ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். அகந்தை பொய், அக்கிரம அநியாயக்காரர்களை அழித்து நீதியை நிலைநாட்டும் குறிக்கோளோடு வடிவம் எடுத்தவர்.

    செய்வினை, சூனிய கோளாறுகள், பேய், பிசாசு, முனி, காட்டேரி போன்ற பாதிப்பிலிருந்து நீங்க யந்திரத்தை 108 உரு ஜெய பூஜை செய்து கையில் தாயத்தாக அணிந்து கொள்ளலாம். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும்.

    • சிவன் வழிபாட்டுக்கும் சோமவாரம் விரதம் இருப்பது மிக நல்லது.
    • சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் ஏழு ஜென்ம பாவங்களும் தீரும்.

    இந்துக்களின் கடவுள் வழிபாடு ஆன்மிகத்தை மட்டுமல்லாமல், அறிவியலையும் அடிப்படையாக கொண்டு வழிபாட்டு முறையைக் கொண்டது.

    திங்கட்கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள். அம்பிகை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், சந்திரனை வழிபடவும் திங்கட்கிழமை உகந்த நாள். கூடவே திங்கட்கிழமையை சோமவாரம் என்கிறோம். சிவன் வழிபாட்டுக்கும் சோமவாரம் விரதம் இருப்பது மிக நல்லது.

    சிவன் எப்படி சோமன் ஆனார் தெரியுமா? சோமன் என்று பெயர் சிவனுக்கு உரியது. சந்திரனை முடிசூடிக் கொண்டவர் சிவன். அப்படி சந்திரனை முடிசூடிக் கொண்ட சிவன், சேலத்தில் உள்ள ஶ்ரீ காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் இருக்கிறார். சர்வலோக நாயகி சமேத சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர். இந்த பெயர் உலகத்தில் எந்த சிவனுக்கும் கிடையாது. இந்த ஆசிரமத்தில் உள்ள சர்வ தோஷ நிவர்த்திஸ்வரர் பீடத்தில் 12 ராசிகளை அமைத்து அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இவர் எமதர்மரின் திசையான தெற்கு திசையை நோக்கி வீற்றிருக்கிறார். இந்த சிவனை வழிபட்டால் எமபயம் நீங்கும். இதய சம்பந்தபட்ட நோய் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் விரைவில் குணமடைவார்கள். அதனால் அன்று சிவனை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி சகல செல்வங்கள் கிடைக்கும் திருமணம் விரைவில் நடைபெறும். வழங்குகளில் வெற்றி, வியாபாரம் அபிவிருத்தி அடைவார்கள்.

    சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் ஏழு ஜென்ம பாவங்களும் தீரும். 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும், 1000 பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும். கோடி தானம் செய்த பலன் கிடைக்கும். காசியில் குடியேறி வாழ்ந்த பலன் கிடைக்கும். பாடசாலைகள் அமைத்த பலன் கிடைக்கும்.வேள்விகள் செய்த பலன் கிடைக்கும். ஸ்வர்ண (தங்கம்) தானம் செய்த பலன் கிடைக்கும்.வில்வார்ச்சனை செய்வதால் கோடி புண்ணியம் கிடைக்கும்.வில்வார்ச்சனை செய்வதால் சிவலோகத்தை அடையும்.

    திங்களன்று ஆகாரம் ஏதுமின்றி உபவாசம் இருந்து சர்வ தோஷ நிவர்த்தீஷ்வரரை கிரிவலம் வந்தால் நீங்கள் மனதில் எண்ணிய காரியம் நிச்சயம் நிறைவேறும்.

    • விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.
    • விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

    ஆனி மாதம் தெய்வ வழிபாடு, விரதங்கள், பூஜைகள் மேற்கொள்வதற்கு ஒரு சிறந்த மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் ஆனி பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் ஆனி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினம் இந்த ஆனி சங்கடஹர சதுர்த்தி. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.

    ஆனி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வசமிக்க பூக்கள், அபிஷேக பொருட்கள் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

    ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் போக மிக காலமாக திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்கல் போன்ற முயற்சிகளில் தடைகள் நீங்கி, வெற்றிகள் உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும் ஆனி மாதம் மிதுன ராசியில் பிறப்பதால் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.

    • சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம்.
    • சாய்பாபா படத்திற்கு மஞ்சள் நிற மலர்கள் அணிவித்தால் மிகவும் சிறப்பு.

    வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதமிருந்து வருகின்றனர். அவ்வாறு விரதம் இருப்பதையும் சாய்பாபா பக்தர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    அதற்கெல்லாம் காரணம்... பல அதிசயங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்து இருப்பது மட்டுமே. சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.

    அவ்வாறு விரதம் இருக்கும்போது 9 வாரங்கள் வியாழக்கிழமையன்று சாய்பாபாவின் நாமத்தை மனதிற்குள் எண்ணி தாங்கள் நினைக்கும் காரியத்தை நினைவுகூர்ந்து தூய எண்ணங்களுடன் வழிபட்டால் கட்டாயம் நிறைவேறும் என்பது ஐதீகம். அவ்வாறு வழிபாட்டில் ஈடுபடும் போது காலையோ அல்லது மாலையோ சாய்பாபாவின் படத்திற்கு முன் அமர்ந்து ஓர் மஞ்சள் துணியை சுத்தமான ஒரு பலகையில் விரித்து வைத்து, அதன் மீது சாய்பாபா படத்தை வைத்து தூய நீரில் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் மற்றும் திலகமிட வேண்டும்.

    பாபாவிற்கு பிடித்த மஞ்சள் நிற மலர்கள் அணிவித்தால் மிகவும் சிறப்பு. பின்னர் ஊதுபத்தி ஏற்றி பாபாவின் விரத கதையையும் படிக்கலாம். பிறகு பூஜை செய்து நைவேத்தியம் அதாவது கற்கண்டு இனிப்பு பழங்கள் என் சாய்பாபாவிற்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபட்டால் எண்ணிய காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால்தான் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பாபாவின் பக்தர்கள் தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அன்னபூரணி தேவியை வேண்டி விரதமிருந்து பூஜித்து வந்தால் நிச்சயமாக துன்பங்கள் தீரும்.
    • அன்னபூரணி விரதம் கடைப்டிப்பவர் வீட்டில் என்றும் பஞ்சமே ஏற்படாது.

    விரதங்களில் மிக முக்கியமான விரதம் அன்னபூரணி விரதமாகும். அன்னபூரணி தேவியை முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் எதற்கும் பஞ்சம் ஏற்படாது.

    குடும்பத்தில் பட்டினி, பசி, நோய், வறுமை, தரித்திரம் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். அன்னபூரணி தேவியை வேண்டி விரதமிருந்து பூஜித்து வந்தால் நிச்சயமாக துன்பங்கள் தீரும்.

    ஒரு மனிதனின் அடிப்படை தேவை உணவாகும். உணவு உண்டால் தான் ஒருவர் உயிர் வாழ முடியும். அப்படிப்பட்ட அன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணியை பூஜை செய்து வழிபட்டால் பல்வேறு நன்மைகள் நடைபெறும்.

    அன்னபூரணி தேவியை விரதமிருந்து வழிபடக்கூடிய இந்த பூஜையை ஒவ்வொரு மாதமும் வளர்பிறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு வாய்ந்தாதகும். இந்த பூஜையை திருமணமான பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தால் மிகவும் சிறப்பான பலன்கள் ஏற்படும்.

    கும்பத்தில் என்றும் ஏழ்மை நிலை ஏற்படாமல் வாழ்வில் எல்லா செல்வங்களும் கிடைக்கப்பெரும். அன்னபூரணி விரதம் கடைப்டிப்பவர் வீட்டில் என்றும் பஞ்சமே ஏற்படாது.

    * அன்னபூரணி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து உள்ளத்தூய்மையுடன் தங்கள் பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.

    * ஒரு மணப்பலகையின் மீது வெள்ளை துணியை போட்டு அதன் மீது ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து அதில் அரிசி தானியங்கள் வைக்க வேண்டும்.

    * பிறகு அக்கிண்ணத்தில் வைக்கும் அளவிற்கு சிறிய அளவிலான அன்னபூரணி சிலையை வைக்க வேண்டும்.

    * அன்னபூரணிக்கு வாசனை மலர்கள், பழங்கள் மற்றும் இனிப்புகள் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் காட்ட வேண்டும் வேண்டும்.

    * பச்சரிசியினால் மாக்கோலமிட வேண்டும்.

    * பூஜையை தொடங்கும் முன்பு விநாயகருக்குரிய மந்திரங்கள் ஓதி, பிறகு அன்னபூரணி தேவிக்குரிய மந்திரங்கள், துதிகள் போன்றவற்றை துதித்து, தேவியின் சிலைக்கு ஆரத்தி காண்பித்து வழிபட வேண்டும்.

    * இந்த பூஜையை செய்து முடிக்கும் வரை உணவு உண்ணாமல் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.

    * முதலில் விநாயக பெருமானை வணங்கி விட்டு,பிறகு அன்னபூரணியை வணங்க வேண்டும்.

    * அன்னபூரணிக்கு பிடித்த உணவு பாயாசம்.எந்தவிதமான பாயாசமாகவும் இருக்கலாம். உலர் பழவகை, வாழைப்பழம்,கற்கண்டு வைத்து வழிபடலாம்.

    * அன்னபூரணி விரதத்தில் வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வைத்து வழிபட வேண்டும்..

    * கைநிறைய மலர்களை அள்ளி எடுத்து அம்பிகையின் பாதங்களில் சமர்ப்பித்து நமஸ்கரிக்க வேண்டும்.

    * நாமும் அன்னபூரணி விரதம் இருந்து அன்னையை பிராத்தித்து வேண்டிய வரத்தை பெறுவோம்.

    • மாலை வேளையில் வானில் தோன்றும் சந்திரனை தரிசனம் செய்வது மிகவும் சிறந்தது.
    • இன்று தானம் செய்வது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும்.

    வைகாசி பௌர்ணமி தினம் வருடம் முழுவதும் வரும் மற்ற பௌர்ணமி தினங்களை காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக இருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வைகாசி பௌர்ணமி தினமான இன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும்.

    மாலை வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த வைகாசி பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்ளலாம்.

    மற்ற எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. எனவே புண்ணியம் மிகுந்த இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள், குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும்.

    • வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனிரெண்டைக் கொண்டவன் வடிவேலன்.
    • முருகன் திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும்.

    ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்ரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது.

    வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனிரெண்டைக் கொண்டவன் வடிவேலன். எனவே அவனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.

    பகை விலகும். பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்று தினம், குடை, மோர், பாகனம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜையறையில் முருகப் பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்து வித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான சுந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும். ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பதற்கிணங்க, மயிலில் பறந்து வந்து மால்மருகன் வரம் தருவான்.

    • விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.
    • சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம்.

    வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்ற விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    விநாயகர் பூஜை முடிந்தபின் முருகப் பெருமானுக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சித்து தீபம் காட்டி வழிபட வேண்டும். மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி ஆகியவைகளைப் படிக்க வேண்டும்.

    வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார். அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார். விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.

    சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம். எனவேதான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம்.

    விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும். பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.

    • ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
    • இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

    வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

    பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

    விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை ஏழ்மையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

    பலன்கள்

    குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகும். மேலும் எதிர்பார்க்காத சிறந்த வாழ்க்கை உண்டாகும் என்பது நம்பிக்கை.

    ×