என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
- பவுர்ணமியில் விரதம் இருந்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம்.
- 16 பேறுகளும் நம்மை வந்தடையும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு .
ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. இந்த நாளில் நிலா தன் முழு பிரகாசத்துடன் பரிணமிக்கிறது. இதனால் வானத்தில் எழும் நேர்மறை அதிர்வலைகள் பூமியையும் தொடும். பவுர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். பவுர்ணமி தினத்தில் அம்பிகை வழிபாடு உகந்தது. இந்த நாளில் செய்யப்படும் பூஜையால் அம்பிகையின் பரிபூரணமான அருளைப் பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. பவுர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதால் கூடுதல் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.
வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்பிகை ஆலயங்களில் நடைபெறும் அபிஷேகம், அன்னதானம், சிறப்பு பூஜைகள், விளக்கு பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள வேண்டும். வீடுகளில் அவரவர் குலதெய்வ வழிபாட்டிற்கு பிறகு குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சித்து வழிபாடு செய்யலாம். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறலாம். இதனால் ஆயுள் பலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம், தனலாபம் கல்வியில் மேன்மை என நினைத்தவரம் கிடைக்கச் செய்வாள்.
அதே போல் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்ட வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டு வீடுகளில் சத்ய நாராயண பூஜைகளும் செய்வதுண்டு. இந்த பூஜை செய்வதால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். 16 பேறுகளும் நம்மை வந்தடையும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு . பூஜைகள் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்யலாம் என்ற போதிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரவல்லது. எல்லா பவுர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை என்ற போதிலும் நம் வினைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப குறிப்பிட்ட தினத்தில் வழிபாடு செய்து வர வாழ்வில் மேன்மை அடையலாம்.
சித்ரா பவுர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்.
வைகாசி பவுர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றினால் திருமணம் கைகூடும்.
ஆனி பவுர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
ஆடி பவுர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் அதிகரிக்கும்
ஆவணி பவுர்ணமியில் விளக்கேற்றினால் செல்வம் பெருகும்.
புரட்டாசி பவுர்ணமியில் விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிறையும்.
ஐப்பசி பவுர்ணமியில் விளக்கேற்றினால் பசிப் பிணிகள் நீங்கும்.
கார்த்திகை பவுர்ணமியில் விளக்கேற்றினால் புகழ் ஓங்கும்.
மார்கழி பவுர்ணமியில் விளக்கேற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தை பவுர்ணமியில் விளக்கேற்றினால் நன்மைகள் அதிகரிக்கும்.
மாசி பவுர்ணமியில் விளக்கேற்றினால் துன்பங்கள் விலகும்.
பங்குனி பவுர்ணமியில் விளக்கேற்றினால் தர்மம் செய்த பலன் கிட்டும்.
இன்றைய தினம் நமது இல்லங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்வோம். இல்லங்களை தெய்வங்கள் குடிகொள்ளும் ஆலயமாக்குவோம். அனைத்து வளங்களும் கிடைக்கப்பெற்று வாழ்வில் வளம் பெறுவோம்.
- நமசிவாயம் சொல்லி சிவனாரை வணங்குங்கள்.
- சனிப் பிரதோஷம், நம் வாழ்க்கையில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும்
சனிப் பிரதோஷம் சர்வ பாவ விமோசனம் என்பார்கள். பிரதோஷம் எந்த நாளில் வந்தாலும் விசேஷம்தான். குறிப்பாக சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், இன்னும் சிறப்பானது, வலிமை மிக்கது. அதனால்தான் சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளும் சனி பிரதோஷ நாளில், சிவாலயம் செல்லுங்கள். சிவ தரிசனம் செய்யுங்கள். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார தரிசியுங்கள். நம் பாவமெல்லாம் பறந்தோடும்.
பிரதோஷம் என்பதும் பிரதோஷத்தின் போது சிவ வழிபாடு செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும். ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு பலன்கள் இருக்கின்றன. திங்கட்கிழமை வருகிற பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். சோமன் என்றால் சந்திரன். சோம என்றால் திங்கள். சந்திரனுக்கு இன்னொரு பெயர் திங்கள். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கும் ஈசனை, திங்கட்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் பூஜை செய்து வணங்கினால், மோட்ச கதி அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முக்தி நிச்சயம் என்கிறார்கள்.
குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம். எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ர பாராயணம் செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறார்கள் பக்தர்கள்.
மூன்றாவதாக, அதேசமயம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுவது சனிப் பிரதோஷம். சனி பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்பார்கள். சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளில், விரதம் இருந்து சிவ தரிசனம் செய்வது அனைத்துப் பாவங்களையும் போக்கக்கூடியது. சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்று சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இன்று, சனிக்கிழமை, பிரதோஷம். சனி பிரதோஷம் சகல பாவங்களையும் நிவர்த்தி செய்யக் கூடிய பிரதோஷம் என்பது நாம் அறிந்ததே. அற்புதமான இந்தநாளில், மாலை வேளையில், பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபாடு செய்யுங்கள். நமசிவாயம் சொல்லி சிவனாரை வணங்குங்கள். ருத்ரம் ஜபித்து, சிவனாருக்கு வில்வம் வழங்குங்கள். நந்திதேவருக்கு வில்வமும் அருகம்புல்லும் வழங்குங்கள்.
சனிப் பிரதோஷம், நம் வாழ்க்கையில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும்!
- துர்கை என்றால் 'துக்கங்களையெல்லாம் போக்குபவள்' என்று பொருள்.
- ராகுகால வேளையில், துர்கையை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.
உலகுக்கே சக்தியாகத் திகழ்பவள் ஸ்ரீபார்வதி தேவி. சக்தி தெய்வங்களுக்கெல்லாம் தலைவி என்று உமையவளைப் புகழ்கிறது புராணம். மற்ற எல்லாப் பெண் தெய்வங்களும் பார்வதி தேவியின் அம்சம், வடிவம், அவதாரம் என்றே புராணங்கள் விவரிக்கின்றன.
பார்வதிதேவியின் முக்கியமான வடிவங்களில் துர்காதேவியும் ஒருத்தி என்றும் பார்வதி தேவிக்கு இணையான சக்தியைக் கொண்டவள் என்றும் தேவி மகாத்மியம் விவரிக்கிறது. துர்கை என்றால் 'துக்கங்களையெல்லாம் போக்குபவள்' என்றும் 'எவராலும் வெல்லமுடியாதவள்' என்றும் பல அர்த்தங்கள் உள்ளன.
சக்தி மிக்க தேவியரில் துர்கா தேவியும் துர்காதேவி வழிபாடும் மிக மிக உன்னதமானவை. எல்லா நாளிலும் எந்த நேரத்திலும் துர்கையை வணங்கலாம். எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில் துர்கைக்கு சிலை வடிக்கப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம் என்றாலும் ராகுகால வேளையில் துர்கையை வழிபடுவது இன்னும் பலமும் பலனும் தரும்.
துர்கை உக்கிர தெய்வம்தான். தீமைகளை அழிக்கவும் துர்குணங்களை நாசம் செய்யவும் துர்குணம் கொண்டவர்களை அழித்தொழிக்கவும் பிறப்பெடுத்தவள் துர்கை. அதனால்தான் ராகுகால வேளையில், துர்கையை வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் துர்கை விரத வழிபாட்டுக்கு உகந்தவை. இந்த நாட்களில் அம்மன் விரத வழிபாடும் அம்பிகை விரத வழிபாடுமே முக்கியத்துவம் கொண்டவைதான் என்றபோதும் விரதம் இருந்து துர்கையை இந்தநாட்களில் அவசியம் வழிபட்டு வந்தால், கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதிகூட இணைந்துவிடுவார்கள் என்பது ஐதீகம்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை. அதேபோல, வெள்ளிக்கிழமையில் ராகுகாலம் என்பது காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. இந்த நேரங்களில், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று துர்காதேவிக்கு செந்நிற மலர்கள் சார்த்தி வழிபடலாம். எலுமிச்சையில் தீபமேற்றி நம் பிரார்த்தனைகளைத் தெரிவிக்கலாம். துர்கையின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, நம்முடைய கோரிக்கைகளை அவளிடம் சமர்ப்பிக்கலாம்.
துர்கை காயத்ரி மந்திரம் :
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமரி தீமஹி
தந்நோ துர்கிப் ப்ரசோதயாத்
எனும் மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வரலாம். அல்லது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவசியம் சொல்லி, துர்கையை தரிசிக்கலாம்.
செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில், துர்கை சந்நிதிக்கு முன்னே அமர்ந்துகொண்டு, இந்த மந்திரத்தைச் சொல்லி, எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால், நம் வாழ்வில் இதுவரை இருந்த துன்பங்கள் அனைத்தும் காணாமல் போகும். தடைகளையெல்லாம் தகர்த்தருளுவாள் தேவி. விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.
- மகாவிஷ்ணு படம் வைத்து பூஜை செய்து வணங்க வேண்டும்.
- ஏகாதசிகளில் உபவாசம் இருந்து ஸ்ரீ மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.
மாதம் இரண்டுமுறை வீதம் ஒரு வருடத்தில் சுமார் 24 ஏகாதசிகள் வந்தாலும் கூட அவைகளில் ஸ்ரீ விஷ்ணு படுத்துக் கொள்ளும் சயன (ஆஷாட) ஏகாதசி ஒன்று. மற்றொன்று ஸ்ரீ மகாவிஷ்ணு திரும்பிப்படுக்கும் பரிவர்த்தன ஏகாதசி. மூன்றாவது ஸ்ரீ மகாவிஷ்ணு எழுந்து கொள்ளும் உத்தான ஏகாதசி என்னும் மூன்று ஏகாதசிகளும் மிக முக்கியமானவை.
கடவுள் விஷ்ணு, திருப்பாற்கடலில் ஆதிசேஷனின் மீது படுத்திருப்பதாக இந்துக்களால் நம்பப்படுகிறது. எனவே இந்த நாள் "தேவசயன ஏகாதசி" ("கடவுள்-உறங்கும் பதினொன்றாவது நாள்") அல்லது ஹரி-சயன ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. விஷ்ணு, சயன ஏகாதசியில் தூங்கி, பிரபோதினி ஏகாதசி அன்று விழித்தெழுகிறார் என்று நம்பப்படுகிறது. இதனால் இந்த காலம் சாதுர்மாதம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், மழைக்காலத்துடன் ஒத்துப்போகிறது. சயன ஏகாதசி என்பது சாதுர்மாதத்தின் ஆரம்பமாகும். இந்த நாளில் விஷ்ணுவைப் பிரியப்படுத்த பக்தர்கள் சாதுர்மாத விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள்.
சயன ஏகாதசி அன்று உண்ணாவிரதம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து தானியங்கள், பீன்ஸ், வெங்காயம், சில மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட சில காய்கறிகளை அன்று உண்ணாமல் விலகி இருக்க வேண்டும்.
இந்த மூன்று ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்து ஸ்ரீ மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும். இதனால் அனைத்து பாவங்களும் விலகும். ஆனி அமாவாசைக்குப்பிறகு வரும் சயன ஏகாதசியான இன்று பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில், பஞ்சுமெத்தையில் ஸ்ரீமகாலட்சுமியுடன் கூடிய ஸ்ரீ மகாவிஷ்ணு படம் வைத்து பூஜை செய்து வணங்க வேண்டும்.
- ஒவ்வொரு காலடியும் முன் ஜென்மங்களில் நாம் செய்த பாபங்களை விலக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
- இன்று ஆரம்பித்து கார்த்திகை மாத உத்தான ஏகாதசி வரை (23.11.23) இந்த பிரதட்சணத்தைச் செய்யலாம்.
தெய்வ வழிபாட்டில் மிக சுலபமான வழி பிரதட்சணம் செய்வது ஆகும். இதையே வலம் வருதல், சுற்றி வருதல், என்றும் கூறுவார்கள்.
ஆலயங்களில் நாம் பிரதட்சணம் செய்யும் பொழுது நாம் வைக்கும் ஒவ்வொரு காலடியும் முன் ஜென்மங்களில் நாம் செய்த பாபங்களை விலக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த பிரதட்சணத்தையே ஒரு விரதமாகச் செய்யலாம்.
அதாவது ஆனி மாத துவாதசி (ஸ்ரீ விஷ்ணு சயனிக்கும் ஏகாதசி தினமான) இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து ஸ்ரீ விஷ்ணு விழித்தெழுந்திருக்கும் கார்த்திகை மாத உத்தான ஏகாதசி வரை 23.11.23 (வியாழக்கிழமை) வரை உள்ள காலங்களில் இந்த பிரதட்சணத்தைச் செய்யலாம். ஆலயங்களில் காலை, மாலை வேளைகளில் பிரதட்சணம் செய்யலாம். அரச மரத்தையும் துளசியையும் காலையில்தான் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
கோவிலுக்கு சென்று கருவறையில் உள்ள கடவுளை வணங்கிய பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி வருவது வழக்கம்.
எல்லோரும் 3 முறை தானே சுற்றுகின்றனர். நாமும் 3 முறை சுற்றினால் போதும் என்று நினைத்துச் சுற்றி வருதல் கூடாது. கோவில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் என்ற முழு விவரத்தை சரியாக நாம் தெரிந்து கொண்டு சுற்றி வருவது அவசியம்.
சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும் என்பது வாஸ்தவம் தான். ஆனால் நாம் சிவன் கோவிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு. அதனால் நமக்கு இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கக் கூடும். எப்படி எல்லாம் பிரதட்சணம் செய்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
சிவாலயங்களில், கோவிலினுள் இருக்கும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு (நவகிரகங்களை தவிர), ஆலயத்தின் முன் இருக்கும் கொடிமரத்தின் அருகில் நின்று மூன்று முறை சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். கோவிலின் மற்ற சன்னதிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கக் கூடாது.
அதன் பின்னர் வெளிப் பிரகாரத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி வலம் வரும் போது கொடிமரத்தையும் சேர்த்து வலம் வருவது அவசியம்.
அடி பிரதட்சணம் செய்பவர்கள் பொறுமையாக பிரதட்சணம் செய்ய வேண்டும். பூமியை, அதாவது நிலத்தைப் பார்த்த படி, சிவ நாமத்தை நினைத்த படி செய்ய வேண்டும். பூமி அதிர நடக்கக் கூடாது.
கோவிலின் உட்பிரகாரத்தில் பிரதட்சணம் செய்வதை விட, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பிரதட்சணம் செய்யும் போது அதிக பலன்கள் கிடைக்கும். கோவிலுக்கு வெளியே செருப்பு கழட்டிட்டு போறதுக்கு உண்மையான காரணம் இது தான். வெளிப்புறப் பிரகாரத்தில் கொடி மரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்வது மிக அவசியம். கடைசியாக நவகிரக சன்னதியில் வணங்கி சிவனின் அருளோடு வீடு திரும்பலாம்.
ஆலயங்களை மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் வலம் வரலாம். கோவிலை வேகமாக எண்ணிக்கை கணக்கிற்காக வலம் வருதல் பயனற்றது. நிதானமாக பேசாமல் இறை உணர்வுடன் வலம் வருதல் வேண்டும்.
கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகாரத்தை வேகமாக வலம் வருவார்கள். இது மிகவும் தவறானது. கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகாரத்தை வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும் அல்லது அவசரமாக வெளியே கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோவிலை வலம் வருவார்கள்.
ஒரு நிறைமாத கர்ப்பிணி, எவ்வாறு நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோவிலை வலம் வரக்கூடாது. குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள் என ஜாதி மதப்பாகுபாடு இன்றி இந்த பிரதட்சண விரதத்தைச்செய்யலாம். ஒரு லட்சம் தடவை பிரதட்சணம் செய்தல் மிக உத்தமம். இயலாதவர்கள் அதில் நான்கில் ஒரு பகுதி 25 ஆயிரம் அல்லது பத்தாயிரம் அல்லது ஓர் ஆயிரம் பிரதட்சணமாவது இந்த நான்கு மாதங்களில் செய்வது மிகுந்த பலனை வாரி வழங்கும். இந்த விரதத்தை வேத வியாசர் தர்மபுத்ரருக்கு கூறியதாக புராணம் கூறுகிறது.
இந்த பிரதட்சணத்தை அருகில் உள்ள கோவிலில் ஸ்ரீ மகா விஷ்ணு, சிவன், அம்மன் ஆஞ்சநேயர் முதலான தெய்வங்களுக்கும் மற்றும் அரசமரம், துளசிச்செடி, பசுமாடு, முதலியவைகளுக்கும் செய்யலாம்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பிரதட்சணத்தைக் கணக்கிட்டு இந்த நான்கு மாதங்களில் ஒரு லட்சம் அல்லது 10 ஆயிரம் அல்லது ஒரு ஆயிரமாவது பிரதட்சணம் செய்யலாம். இந்த பிரதட்சண விரதத்தால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களில் இருந்து நம்மை விடுவித்து, நமது வாழ்க்கையின் லட்சியத்தை அடைய முடியும்.
- மகாவிஷ்ணுவையும் மகாலக்ஷ்மியையும் பூஜிப்பார்கள்.
- வீட்டில், காலையும் மாலையும் விளக்கேற்றுவார்கள்.
புதன் கிழமை பெருமாளுக்கு உரிய, அவரை விரதம் இருந்து வணங்கி வழிபடுவதற்கு உரிய அருமையான நாள்.
புதன் கிழமைகளில், மகாவிஷ்ணுவை விரதம் மேற்கொண்டு பிரார்த்திப்பார்கள் பக்தர்கள். காலை முதலே விரதமிருப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்ட திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வேண்டுவார்கள். மகாவிஷ்ணுவையும் மகாலக்ஷ்மியையும் பூஜிப்பார்கள். லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி பூஜை செய்வார்கள்.
பரந்தாமனின் நாமாவளியைச் சொல்லி, துளசி மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்வார்கள். அப்போது பெருமாளுக்கு உகந்த புளியோதரை அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவார்கள். இயலுமெனில், அன்றைய நாளில், நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம்.
இன்று புதன்கிழமை பெருமாளுக்கு உரிய நன்னாள். எனவே, ஸ்ரீரங்கம் பெருமாள், திருமலை திருப்பதி வேங்கடவன், ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி உள்ளிட்ட பல தலங்களின் பெருமாளை மனதால் நினைத்து, வீட்டில் விளக்கேற்றுங்கள்.
காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். துளசி சார்த்துங்கள். முக்கியமாக, துளசி தீர்த்தம் பருகுவது நம் ஆத்மாவை சுத்தம் பண்ணி, பாவங்களைப் போக்கி அருளக்கூடியது. மற்றபடி, வயதானவர்களும் குழந்தைகளும் மாத்திரைகள் உட்கொள்பவர்களும் பெருமாளை நினைத்து தெரிந்த ஸ்லோகங்களை, மந்திரங்களை, விஷ்ணு சகஸ்ர நாமங்களைப் பாராயணம் செய்தாலே போதுமானது.
ஆனி மாத புதன்கிழமையான இன்று மகாவிஷ்ணுவை விரதம் இருந்து மனதார சேவிப்போம். மகாலக்ஷ்மித் தாயாரை வணங்குவோம். தடைப்பட்ட மங்கல காரியங்களை நடத்தி அருள்வார்கள். இல்லத்தில் தம்பதி ஒற்றுமையை பலப்படுத்துவார்கள்.
- ஆனி மாதம் அற்புதமான மாதம்.
- ஆனி மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விசேஷமானவை.
ஆனி மாதம் அற்புதமான மாதம். இந்த மாதத்தில்தான் நடராஜ பெருமானுக்கு ஆனித் திருமஞ்சனம் விமரிசையாக நடைபெற்றது. நடராஜ பெருமானுக்கு நடைபெறும் ஆறு அபிஷேகங்களில், இந்த நாளில் நடைபெறும் அபிஷேகமும் ஒன்று.
அதேபோல், ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் வருடந்தோறும் ஆனி மாதத்தில் நடைபெறும். ரங்கநாதர் கோயிலில், ஜேஷ்டாபிஷேக வைபவமும் விமரிசையாக நடைபெற்றது.
காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில், ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டத்துடன் நடைபெறும். இந்தத் தேரோட்டத்தையொட்டி தினந்தோறும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். காலையும் மாலையும் அம்பாளுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகளும் அலங்காரங்களும் நடைபெறும். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு விமரிசையாக நடந்தேறும்.
ஆனி மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மிகுந்த விசேஷமானவை. இந்தநாளில், விரதம் இருந்து அம்பாள் வழிபாடு செய்வதும் முருகக் கடவுளை வணங்குவதும் நல்ல நல்ல சத்விஷயங்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
இன்று செவ்வாய்க்கிழமை (27.6.2020). இன்று விரதம் இருந்து சக்தியையும் சக்தி மைந்தன் கந்தப்பெருமானையும் வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள்.
இந்த ஆனி செவ்வாயில், முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுங்கள். வீட்டில் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். முடிந்தால் எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். இல்லத்தை சுபிட்சமாக்கித் தருவார் வெற்றிவேலவன். மனதில் குழப்பங்கள் நீங்கும். தெளிவுடன் திகழ்வீர்கள்.
- திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வாகும்.
- நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும்.
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனித் திருமஞ்சன விழா மிகவும் பிரபலமானதாகும். நடராஜப் பெருமான் வருடத்தில் ஆனி - மார்கழி மாதத்தில் மட்டுமே வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆனி உத்திரமே, ஆடல் வல்லானுக்கான விழாவாக ஆனித் திருமஞ்சனம் என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த ஆனி மாதம் பல சிறப்புகளை தன்னுள் அடக்கியுள்ளது.
அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்தாலும், ஆனியில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், இந்த வெப்ப அலையில் தாக்கத்திலிருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பிதற்காக, ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என இன்னும் பல 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு ஆனித் திருமஞ்சனம் செய்கின்றனர்.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம், காலைப் பகுதி மாசி மாதம், உச்சிக் காலம் சித்திரை மாதம், மாலைப் பகுதி ஆனி மாதம், இரவுப் பகுதி ஆவணி மாதம், அர்த்த சாமம் புரட்டாசி மாதம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. சந்தியா காலங்களான ஆனி - மார்கழியே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதங்களாகக் கொள்ளப்படுகின்றன.
சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களையும் உணர்த்துகிறது. வலது கையில் உள்ள உடுக்கை படைத்தலையும், உயர்த்திய வலது கரம் காத்தலையும், இடது கரம் அழித்தலையும், ஊன்றிய பாதம் மறைத்தலையும், மற்றொரு தூக்கிய நிலையில் உள்ள கால் அருளலையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனி உத்திர நாளில்தான் சிவபெருமான், நமக்கெல்லாம் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் உபதேசம் செய்தார். இந்த ஆனித் திருமஞ்சன நாளின் வைகறைப் பொழுதில் உபதேசக் காட்சி விழா நடத்தப்படுகிறது.
இன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நடராஜரை வழிபாடு செய்தால் விருப்பங்கள் நிறைவேறும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை மட்டும் உண்டும் உபவாசம் இருக்கலாம். விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள்.
தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் கூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.
விரதம் இருந்து நடராஜப் பெருமான் ஆனித் திருமஞ்சன தரிசனம் கண்டால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும், தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைப்பதாகவும், கன்னியருக்கு நல்ல இடத்தில் திருமணம் அமைவதாகவும் நம்பப்படுகிறது.
- சூரியனுக்கு உகந்த தினம் ஞாயிறு.
- சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
நாளை பானு சப்தமி தினம் என்பதால் தவறாமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டிய நாள். சூரியனை வழிபட்டால் நோய்கள் நீங்குவதோடு முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும்.
சூரியனுக்கு உகந்த தினம் ஞாயிறு. அதுவும் ஆவணி ஞாயிறுக்கிழமையும் சப்தமி திதியும் ஒன்றாக வரும் நாள் பானு சப்தமி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது.
ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் ஒன்று சேர்ந்து வரும் நாள்தான் பானு சப்தமி எனப்படும். இந்த நாள் சூரிய கிரகண நாளுக்குத் துல்லியமானது. இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் முடிந்த பிறகு செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது. இந்த தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல், தானம் செய்தல் ஆகியவை பல்வேறு நலன்களைக் கொண்டு வரும். அதாவது நாளை நாம் விரதம் இருந்து செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் பலனைக் காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக பலனை தரக் கூடியவை.
நாளை காலையில் புண்ணிய நதிகளில் குளித்து சூரியனை வணங்கி, காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தானம் செய்வதும், தாமிரம் என்னும் செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். மேலும் கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் உண்டாகும். நாளை விரதம் இருந்து வழிபாடு செய்தால் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.
ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருக்க வேண்டும். ஆவணி ஞாயிறன்று சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும். சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் புகழ் கூடும்.
பானுசப்தமியில் சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும். வெள்ளெருக்கு செடியில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி புதுமணத் தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து கோதுமையால் செய்த பண்டங்களை நைவேத்தியம் செய்து விரதம் மேற்கொள்வது சிறப்பு. ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்து சூரியனை வழிபட்டால் எதிரிகளை எளிதில் வெல்ல முடியும். ஞாயிறுக்கிழமை அதிகாலை எழுந்து சூரியனை வழிபட்டால் புகழ் கூடும். உடல் ஆரோக்கியம் நலமடையும்.
- அல்லல்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பாள் தேவி.
- வராஹி தேவியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம்.
ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி, அன்னை வராஹி விரத வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே ஸித்திக்கும் என்கிறது பிரமாண்ட புராணம்.
வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என்னும் இந்த நான்கு நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும். ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வராஹி அம்மன்.
வராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். கிராமங்கள் தோறும் அனைத்துக் கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டுமுறை இருக்கும். காரணம் சப்த மாதர்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அருள்பவர்கள் என்பது நம்பிக்கை. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு இந்த நாள்களில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்கும அலங்காரம் எனத் தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.
வராஹியை விரதம் இருந்து வழிபட உகந்த திதி பஞ்சமி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை என இருகாலங்களிலும் வராஹியை வழிபட வேண்டும் என்றாலும் ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வராஹிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், `ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ' என்று ஒரு வரி வரும். ஆஷாட மாத பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் பிரியமுடன் ஏற்பவள் அன்னை என்பது இதன் பொருள். நவராத்திரியில் பஞ்சமி திதி நடு நாயகமான தினம். அதனாலேயே அவளுக்குப் பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமம் உண்டு. அதற்குப் பஞ்சமி திதிக்கு உரியவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள்கொள்ளலாம்.
வராஹி தேவிக்கு தானியக் கோலமிட்டு வழிபடுவது சிறப்பு. வீட்டில் பஞ்சமி அன்று பூஜை அறையில் விளக்கேற்றி சிறு கோலமிட்டு அதை தானியங்கள் கொண்டு அலங்கரித்து அன்னை வராஹியை விரதம் இருந்து வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
வராஹியை வழிபடுபவர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.
துன்பம் தீர்க்கும் துவாதச நாமங்கள்
பிரமாண்ட புராணம் வராஹி தேவியின் மகிமைகளை விளக்குகிறது. பண்டாசுர வதத்துக்கு லலிதாம்பிகை புறப்படும்போது தேவி வராஹியும் தன் கிரி சக்கரத்தில் எழுந்தருளினாள். அப்போது சுற்றியிருந்த தேவதைகள் வராஹியை துவாதச நாமங்கள் சொல்லித் துதித்தனர். துவாதசம் என்றால் பன்னிரண்டு. இந்தப் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லித் துதித்து அன்னையை வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரமாண்டபுராணம்.
1. பஞ்சமி,
2. தண்டநாதா,
3. சங்கேதா,
4. சமயேஸ்வரி,
5 சமய சங்கேதா,
6. வராஹி,
7. போத்ரினி,
8. சிவா,
9. வார்த்தாளி,
10. மகா சேனா,
11. ஆக்ஞா சக்ரேஸ்வரி,
12. அரிக்ஞை என்பன அந்த நாமங்கள்.
இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி அன்றும் அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வராஹி. அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீவராஹிதேவிக்கு சில நிவேதனங்கள் விசேஷம். பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர்சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் இவை அனைத்தும் அன்னைக்குப் பிரியமானவை. இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, இயன்றால் இவையனைத்தையுமோ படைத்து, மற்றவர்களுக்கும் விநியோகித்து வராஹியை வழிபட்டால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.
ஆஷாட நவராத்திரி காலத்தில்.... விரதம் இருந்து பஞ்சமி திதியில் உக்கிரமான பெண் தெய்வங்களை தரிசிப்பதும், வழிபடுவதும், எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடும். காரியத்தடைகளையெல்லாம் நீக்கி அருளுவாள் தேவி என்று சாக்த உபாஸகர்கள் போற்றுகின்றனர்.
இன்று 23.6.2020 பஞ்சமி திதி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து அனைவரும் வீட்டில் விளக்கேற்றி அன்னைக்குப் பிரியமான பன்னிரு நாமங்களைச் சொல்லி வராஹி தேவியை வழிபடுவோம். உக்கிர பெண் தெய்வங்களையும் தரிசித்து வேண்டுவோம்.
வராஹி தேவியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம். வீட்டில் இருந்தபடியே வராஹிதேவியின் காயத்ரியையும் மூலமந்திரத்தையும் 108 முறை ஜபித்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம். நம்மைப் பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாம் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் என்று மனமார வேண்டிக்கொள்வோம்.
ஸ்ரீமகாவராஹியை வணங்குபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
- ஷீரடி சாயிபாபாவை நினைத்துக் கொள்ளுங்கள்.
- மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
மகான் என்பவர் குருவின் அம்சம். குரு என்பவர் ஞானி. ஞானி என்பவர், நம்மைக் கடைத்தேற்றி. அருள் வழங்குபவர். ஷீரடி சாயிபாபா, ஒரு ஞானியாக, குருவாக, ஞான குருவாக, மகானாக... பேசும் தெய்வமாக இருந்து இன்றைக்கும் நமக்கு அருளிக்கொண்டிருக்கிறார்.
என்னுடைய அன்புக்கு உரிய குழந்தைகளே. இந்த வாழ்க்கை அற்பமானது என்று எண்ணிவிடாதீர்கள். மிக மிக அரிதானது இந்த வாழ்க்கை. இந்த வாழ்க்கைப் பயணத்தை நாம் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவேண்டும். அந்தப் பயணத்துக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையானது, உண்மையில் நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல.
உங்கள் வாழ்க்கையும் உங்களுக்கான பாதையும் அந்த வாழ்க்கைப் பயணத்துக்கான செயல்களும் நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல. நீங்கள் செயலாற்றுவது அல்ல. இவை அனைத்துமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது.
அப்படி தீர்மானிக்கப்பட்ட வழியில்தான் நீங்கள் நடந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களின் வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டது என்பதைப் புரிந்து உணர்ந்துகொண்டால், உங்கள் வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதில் உங்களுக்குத் தெளிவு கிடைத்துவிடும்.
இதில் உங்களுக்குத் தெளிவு வந்துவிட்டால், உங்களுடைய வாழ்க்கை உன்னதமானது என்பதையும் புரிந்துகொள்வீர்கள். ஆனால் பலரும் புரிந்து கொள்வதே இல்லை. சக்தியின் உன்னதங்களைத் தெரிந்துகொள்வதே இல்லை.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட உங்களின் வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் ஏற்படலாம். நிறை குறைகள் ஏற்படலாம். கஷ்ட நஷ்டங்கள் இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால், 'இந்த உலகம் யுத்தகளம் போல் இருக்கிறது' என்று நீங்கள் நினைக்கலாம் .'நம் வாழ்க்கையே யுத்தமாகியிருக்கிறது' என்று வேதனைப்படலாம்.
கவலையே படாதீர்கள். உங்களையும் உங்களின் வாழ்க்கையையும் என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படுகிற எல்லாக் கவலைகளையும் நான் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் பயணத்தை நான் இலகுவாக்கித் தருகிறேன்'' என்கிறார் சாயிபாபா.
''உன்னுடைய தகப்பனாக நானிருக்கிறேன். எதற்கும் துக்கப்படாதே. எதைக் கண்டும் பயப்படாதே. என் திருநாமத்தை யாரெல்லாம் சொல்கிறீர்களோ... அங்கே அவர்களுக்கு அருகில் நான் வந்துவிடுவேன்'' என்பது சாயிபாபா வாக்கு.
உங்கள் அனைவரையும் ஒரு அம்மாவாக, அப்பாவாக இருந்து காப்பேன்.என் இதயத்தைக் கருவறையாக்கி அதில் உங்களை வைத்து அரவணைப்பேன்'' எனும் சாயிபாபாவின் சத்திய வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். 'சாயிராம்' என்று அவரின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே இருங்கள்.
பகவான் சாயிபாபா உங்களைக் காப்பார்!
- ஆனி மாதம் ஆண்டாளுக்கும் உரிய அற்புத மாதம்.
- நடராஜ பெருமானை வணங்குவதற்கு உரிய அருமையான மாதம்.
ஆனி மாதம் பிறந்துவிட்டது. ஆனி மாதம் என்பது சைவ, வைணவ பாகுபாடுகள் இல்லாமல், எல்லாப் பெண் தெய்வங்களையும் கொண்டாடுகிற அற்புதமான மாதம். பெண் தெய்வங்கள் அனைத்துமே சக்தியின் அம்சம். சக்தி என்பவள் பராசக்தி. அவளே அத்தனை தெய்வங்களுக்கும் சக்தியையும் சாந்நித்தியத்தையும் வழங்கக் கூடியவள்.
அவளை வணங்க வணங்க, நம்மைச் சுற்றியுள்ள துர்தேவதைகள் விலகிவிடுவார்கள். நல்ல சக்திகள் நம்மைச் சூழ்ந்து அரணெனக் காத்தருளும் என்பது ஐதீகம்.
ஆனி மாதம் ஆண்டாளுக்கும் உரிய அற்புத மாதம். நடராஜ பெருமானை வணங்குவதற்கு உரிய அருமையான மாதம். இந்த மாதத்தில், விரதம் இருந்து நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லி, வீட்டில் விளக்கேற்றி பாராயணம் செய்வது சத்விஷயங்களை நமக்குத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஆனி மாத செவ்வாய், சாந்தமான தெய்வங்களையும் உக்கிரமான தெய்வங்களையும் விரதம் இருந்து வழிபடுவதற்கு உரிய நன்னாள். இன்றைய ஆனிச் செவ்வாயில், விரதம் இருந்து துர்கையை வழிபடுவது ரொம்பவே விசேஷம்.
செவ்வாய்க்கிழமை கிழமையில் விரதம் இருந்து ராகுகால வேளையில், துர்கையை மனதார நினைத்து, எலுமிச்சை தீபம் ஏற்றுவோம். துஷ்ட சக்திகளில் இருந்து விடுபடுவோம். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து அருள்புரிவாள் துர்காதேவி.
ஆனிச்செவ்வாயில், விரதம் இருந்து துர்காதேவி, பிரத்தியங்கிரா தேவி உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி வழிபடுவோம். வாராஹி, காளிகாம்பாள், முப்பிடாதி, செல்லியம்மன் உள்ளிட்ட கிராம தெய்வங்களை மனதார வேண்டுவோம். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும்.
கிராம தெய்வங்களையும் எல்லை தெய்வங்களையும் வீட்டில் இருந்தபடியே வழிபடுவோம். எலுமிச்சை தீபமேற்றி வேண்டிக்கொள்வோம். இன்னல்கள் அனைத்தும் விலகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்