search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    • குரு பகவானுக்கு வியாழக்கிழமை விரதம் இருப்பது விசேஷம்.
    • இன்று விரதம் அனுஷ்டித்தால் திருமண தடைகள் நீங்கும்.

    குரு பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

    கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.

    குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும். மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருளுவார் குரு பகவான். திட்டை குருபகவானை விரதம் இருந்து வியாழக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து தரிசியுங்கள்.

    குருவின் பார்வை நம் மீது பட்டாலே போதும்... குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம். நல்ல படிப்பிருந்தும் வேலை இல்லை என்று வருந்துவோர், அதிக சம்பளம் இல்லையே என்று கலங்குவோர், உரிய வயது வந்தும் திருமணம் இன்னும் கைகூடவில்லையே என்று கண்ணீர் விடுபவர்கள், திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து, தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் குரு பகவானை வணங்கி வழிபடுங்கள். தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

    • 9 செவ்வாய்க்கிழமைகள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
    • கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் படிக்க வேண்டும்.

    ஜாதகத்தில் இந்த செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்கள் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப் பெருமானை செவ்வாய் கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும்.

    செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் தோறும் அதிகாலையில் காலையில் நீராடி முடித்து, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். கோவிலுக்கு சென்று வீடு திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

    மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து முருகனை உளமார வழிபடுவதால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மையான பலன்கள் உண்டாகும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துகள் லாபம் உண்டாகும். கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    • இன்று விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது
    • தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளுக்கு அடுத்த 4-ம் நாள் சதுர்த்தி திதி வரும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப்பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும்.

    'விநாயகர்' என்றால் 'தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்' என்று பொருள். விநாயகர் முழு முதற்கடவுள் ஆவார். கணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வில்லங்கங்கள், இடையூறுகள் ஏதும் ஏற்படாமல் காப்பாற்றுகிறார். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை விநாயகர் பூஜையை முதலில் செய்கிறோம்.

    இன்று விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று பிள்ளையாருக்கு பல வகையான மலர்கள் சூட்டி அழகுப்படுத்தலாம். பலவகைப் பூக்கள் கொண்ட கதம்பம், வெள்ளெருக்கம்பூ, அருகம்புல், மல்லிகைப்பூ, சாமந்திப்பூ என பல வகைப் பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

    அடுத்து... பழங்கள். பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்ய பல வகையான பழங்களை வைத்துக்கொள்ளவேண்டும். பழங்களுக்கு அடுத்ததாக, விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகத்தை, கொழுக்கட்டையை சமைத்து நைவேத்தியமாக வைத்துக்கொள்ளவேண்டும். தேங்காய், வெல்லச்சூரணம் கொண்டு ஒரு கொழுக்கட்டை. இன்னொன்று காரக் கொழுக்கட்டை. உப்புக்கொழுக்கட்டை என்றும் பருப்புக் கொழுக்கட்டை என்றும் சொல்லுவார்கள்.

    இப்போது எல்லாம் தயாராகிவிட்டது. விநாயகர் துதி பாடலாம். கணபதியின் திருநாமங்களைச் சொல்லலாம். விநாயகர் அகவல் படித்து வணங்கலாம்.

    முறையே விரதம் அனுஷ்டித்து, கணபதியை ஆராதித்து வணங்கினால், வாழ்வில் எல்லா வளமும் நலமும் தந்து அருளுவார் ஆனைமுகத்தான்!

    விநாயகர் சதுர்த்தி அல்லது சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு விரதம் இருக்கறதால மனநலம் மேன்மையடையும். உடல் ஆரோக்கியம் வளரும். எல்லா

    வளங்களும் நிறையும். இது விரதம் இருக்கறவங்களுக்கு மட்டுமில்லே. அவங்க குடும்பத்தினருக்கு, அவங்களைச் சார்ந்தவங்களுக்கும்தான்.

    சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும்.

    தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்கள் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள்.

    வேலை தேடி அலைந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    • சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
    • தந்தையின் உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும்.

    ஞாயிறு விரதம் அல்லது "சூரிய விரதம்" இருக்க விரும்புவர்கள் எல்லா காலங்களிலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் "ஐப்பசி" மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற காலை வேளையில் சூரியனை தரிசித்தவாறே, அவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

    பின்பு நவகிரக சந்நிதிக்கு சென்று சூரிய பகவானுக்கு செந்தாமரை பூவை சமர்ப்பித்து, கோதுமை தானியங்கள் சிறிதளவு வைத்து, நெய் தீபங்கள் ஏற்றி, வாசனை மிக்க தூபங்கள் கொளுத்தி, கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து சூரிய பகவானின் காயத்ரி மந்திரங்கள், பீஜ மந்திரங்கள் போன்றவற்றை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் துதித்து வழிபட வேண்டும்.

    இந்த விரதம் இருப்பவர்கள் அந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திடஉணவு சாப்பிடாமல் நோன்பிருந்து மறுநாள் காலையில் சூரிய தரிசனம் செய்த பின்பு, சூரிய பகவானுக்கு வீட்டிலேயே ஒரு செம்பு பாத்திரத்தில் சிறிது நீர் நிவேதனமாக அளித்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையிலிருப்பவர்கள் நீராகாரம், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்தி விரதமிருக்கலாம்.

    சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். தந்தையின் உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரிகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.

    • தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும்.
    • நைவேத்திய பிரசாதங்களை பசித்தோருக்கு தானமாக கொடுத்தால் புண்ணியம் சேரும்.

    5-5-2023 சித்ரா பவுர்ணமி

    சித்திரை மாதத்தில் உச்சம் பெறுபவர், சூரியன். அதேபோல் அந்த மாத பவுர்ணமி அன்று முழு மதியாக திகழ்பவர் சந்திரன். ராஜகிரகங்களான சூரியனும், சந்திரனும் முழு பலத்துடன் இருக்கும் மாதம் என்பதால் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி சிறப்புக்குரியதாக மாறுகிறது. இந்த நாளில் கிரிவலம் வருவது சிறப்பான பலனைப் பெற்றுத் தரும். எமதர்மனின் கணக்காளராகவும், பாவ-புண்ணிய கணக்குகளை பாரபட்சம் இன்றி எழுதும் பணியைச் செய்பவருமான சித்ரகுப்தர் அவதரித்த நாள், இந்த சித்ரா பவுர்ணமி. எனவே இந்நாளில் சித்ரகுப்தரை வழிபாடு செய்வதும் நன்மைகளை வாரி வழங்கும்.

    ஒரு முறை கயிலாயத்தில் இருந்த பார்வதிதேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் உருவத்தை, சித்திரமாக வடித்தாள். அப்போது உலகிற்கு படியளக்கும் பணியைச் செய்துவிட்டு வந்த ஈசனிடம், தான் வரைந்த சித்திரத்தை பார்வதிதேவி காட்டினாள். அந்த ஓவியம், சிவபெருமானை கவர்ந்தது. அப்போது அவருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. விதிமுடிந்த மனித உயிர்களின் உயிரைப் பறித்து, பூமித்தாயின் பாரத்தைக் குறைக்கும் பணியைச் செய்பவர் எமதர்மன்.

    அவர் அதிக வேலைப்பளு காரணமாக, தனக்கு ஒரு உதவியாளரைத் தரும்படி, ஈசனிடம் கேட்டிருந்தார். அதுபற்றிய நினைவு வந்ததும், பார்வதிதேவி வரைந்த ஓவியத்தை கையில் எடுத்து அதில் தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்தினார், ஈசன். உடனே அந்தச் சித்திரம் உயிர்பெற்றது. சிவசக்தியின் அம்சமாக, சித்திரத்தில் இருந்து உயிர்பெற்றதால், 'சித்ரகுப்தன்' என்ற பெயர் வந்தது. 'சித்' என்பது 'மனம்' என்பதையும், 'குப்த' என்பது 'மறைவு' என்பதையும் குறிக்கும். அதாவது மனித மனங்களில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களை கவனித்து, அதற்குத் தகுந்தாற் போல் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் என்பதால் இந்தப் பெயர் வந்தது. சித்ரகுப்தன் பிறக்கும்போதே, தனது கையில் ஏடு மற்றும் எழுத்தாணியோடு பிறந்தவர்.

    விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி?

    சித்திரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து, பழங்கள்- காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ர குப்தனை மனதார வழிபட வேண்டும்.

    சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த 'சித்ரா அன்னம்' எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும், அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது.

    சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டு தோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம்.

    திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து வழிபட வேண்டும்.

    பின்னர் அந்த நைவேத்திய பிரசாதங்களை, பசித்தோருக்கு தானமாக கொடுத்தால், புண்ணியம் சேரும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், முழுமையாக விரதம் மேற்கொண்டு, சித்ரா பவுர்ணமி அன்று இரவு நிலவு பார்த்த பின் உணவருந்த வேண்டும். சித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அதேபோல் அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், சித்ரகுப்தனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சித்ரா பவுர்ணமி அன்று, இந்த ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்து வரலாம். சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    சிதம்பரம் சித்ரகுப்தர்

    'கோவில்' என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோவிலைத் தான் குறிக்கும். அந்த அளவுக்கு மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனிக் கோவில் அமைந்திருப்பது போல, சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் சித்ரகுப்தருக்கு தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது. நடராஜர் ஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கே சிவகாமி அம்பிகைக்கு தனிச் சன்னிதி உள்ளது. இதனை 'சிவகாமக் கோட்டம்' என்று அழைப்பார்கள். இதன் வெளிச்சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் சித்திரகுப்தருக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த சன்னிதியில், சித்ரகுப்தர் அமர்ந்த நிலையில் கையில் எழுத்தாணியுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் சனீஸ்வர பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று, இங்குள்ள சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சித்ரகுப்தர் அவதரித்த தினமாகவும் கருதப்படுகிறது. சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தரை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும். எமதர்மனின் கணக்கராக இருந்து, உலக உயிர்களின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்ரகுப்தர். எனவே அவர் அவதரித்த நாளில் அவரை வழிபடுவதால், நம்முடைய பாவங்கள் குறையும் என்பது நம்பிக்கை. சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சித்ரகுப்தர் சன்னிதியில் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சித்ரகுப்தர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம்.

    • செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகி நிம்மதியாய் வாழ்வீர்கள்.
    • எந்தக் கிழமையில் பிரதோஷம் வரும் போது, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

    மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவபெருமானை வேண்டுவதும் ருத்ரம் உள்ளிட்டவற்றைப் பாராயணம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். அந்த நாளில்,நம்மால் முடிந்த அளவு, பத்துபேருக்கேனும் தயிர்சாதம் வழங்கினால், நமக்கும் நம் குடும்பத்தாரும் நம் சுற்றத்தாருக்கும் பல நல்லதுகளை, சத்விஷயங்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

    இந்த பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும். ஒவ்வொரு கிழமைகளில் பிரதோஷம் வரும். எந்தக் கிழமையில் பிரதோஷம் வரும் போது, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

    ஞாயிறு பிரதோஷம்:

    சூரிய திசை நடப்பவர்கள், ஞாயிறு அன்று வரும் பிரதோஷ நாளில் சிவபெருமானை நினைத்து பிரார்த்தனை செய்தால், சூரிய பகவானின் அருளும் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!

    திங்கள் பிரதோஷம்:

    பிரதோஷத்தில் ஸோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், திங்கள் அன்று வரும் பிரதோஷத்திற்கு சிவ வழிபாடு செய்வது சிறப்பு! இதனால், மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

    செவ்வாய் பிரதோஷம்:

    செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்தன்று சிவநாமம் சொல்லியும் சிவ துதி சொல்லியும் பாராயணம் செய்து வணங்கினால், ருணம் மற்றும் ரணத்தையெல்லாம் நீக்கியருள்வார் சிவபெருமான். இதனால், செவ்வாயால் வரும் கெடுதல்கள் அனைத்தும் நீங்கும்.பித்ரு தோஷம் விலகும். முன்னோர் ஆசி கிடைக்கும்.

    கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது சத்தியம்!

    புதன் பிரதோஷம்:

    புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோஷதன்று, சிவபூஜை செய்வது மகா புண்ணியம். . இதனால், புதனால் வரும் கெடு பலன்கள் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கலைகளில் சிறந்து திகழ்வார்கள்.

    வியாழன் பிரதோஷம்:

    குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், வியாழன் அன்று வரும் பிரதோஷத்திற்குச் சென்று, குருவுக்கு நிகரான சிவனாரை வணங்கவேண்டும். இதனால், கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். குரு பலம் கூடும்!

    வெள்ளி பிரதோஷம்:

    சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோஷத்தன்று, வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து, பாயசம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, வேண்டிக்கொண்டால், உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம்!

    சனி மஹா பிரதோஷம்:

    சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று தென்னாடுடைய சிவனை மனதார வேண்டிக்கொண்டு, தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, பத்துபேருக்கேனும் வழங்கினால், மகா புண்ணியம்.

    ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    இந்தநாளில், சிவனாரை நினைத்து பூஜித்து விளக்கேற்றுங்கள். பத்துபேருக்காவது தயிர்சாதம் வழங்குங்கள். எந்த தீயசக்திகளும் அண்டாது காப்பார் ஈசன். செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகி நிம்மதியாய் வாழ்வீர்கள்!

    • சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும்.
    • நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

    சகல பாவங்களையும் நீக்கி நம்பிக்கை ஒளியை ஏற்ற வல்ல அற்புத தினமே ஏகாதசி விரதம். சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி "காமதா ஏகாதசி" எனப்படுகிறது. இந்த ஏகாதசி அன்று விரதத்தைக் கடைப்பிடித்தால் அது ஏழு ஜன்மப் பாவங்களையும் போக்கிவிடும் என்று கூறுகிறது புராணம்.

    புராணங்களின் படி லலிதன் என்ற கந்தர்வன், ஒரு சாபத்தின் காரணமாக ராட்சஸனாக மாறினான். அவனது மனைவியான லலிதை சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் இந்த காமதா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, பெருமாளின் அருளால் கணவனின் சாபம் நீங்க செய்தாள். நீங்கள் விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது. எனவே மிகுந்த நம்பிக்கையோடு இந்த விரதம் இருப்பவர்களுக்கு நன்மைகள் பல ஏற்படும் என்பது பெரியோர்களின் வாக்காகும்.

    இந்த சித்திரை வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் ஊறவைத்த தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

    சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

    அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    சாஸ்திரப்படி அன்று பகல் இரவு இருவேளையும் தூங்கக் கூடாது. கண்டிப்பாகப் பகலில் தூங்கவே கூடாது. நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தவிப்பவர்களுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கும். குடும்ப பொருளாதார நிலை உயரும்.

    இன்று `ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸனா... ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸனா' என்று 108 முறை உச்சரிப்பது நல்லது. இதன் மூலம் தீமைகள் தீர்ந்து நன்மைகள் அதிகரிக்கும்.

    • கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம்.
    • நம்மைச் சூழ இருக்கும் இன்னல்களிலிருந்து விலக்கிக் காப்பாள்.

    சித்திரை மாதம் தசமி திதி, ஸ்ரீ வாசவி ஜயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கலியுகத்தில் அவதரித்த அன்னை ஆதிபராசக்தியின் அம்சம்.

    கி.பி 11 -ம் நூற்றாண்டு ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வாழ்ந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தம்பதியான குஸ்ம ஸ்ரேஷ்டி - குஸ்மாம்பா தம்பதி நீண்ட நாள்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் புத்திர காமேஷ்டி யாகம் செய்து அன்னையை வேண்டினர். அவர்களின் பக்திக்கு இரங்கிய அன்னை, அவர்களுக்குத் தானே மகளாக வந்து பிறந்தாள். பிறந்த கணத்தில் அன்னை பெற்றோருக்கு நான்கு கரங்களோடு காட்சி கொடுத்து, தான் இறைவடிவம் என்பதை உணர்த்தி அடுத்த கணம் சாதாரண மழலை ஆனாள். தெய்வமே தனக்கு மகளானது கண்டு மகிழ்வுற்று அவளைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தனர்.

    அன்னை அழகிலும் அறிவிலும் செழித்து வளர்ந்தாள். அவள் அழகுகண்டு அவளைப் பெண்கேட்டு அனுப்பினான் விஷ்ணுவர்த்தன் என்னும் மன்னன். ஆனால் கன்னிகா தேவி, தான் காலம் முழுதும் சிவபூஜை செய்யவே விரும்புவதாகவும், யாருக்கும் மனைவியாக இருக்க முடியாது என்றும் சொல்லி மறுத்தாள். அதைக் கேள்விப்பட்ட விஷ்ணுவர்த்தன் அவளையும் அவள் ஊரையும் அழித்துவிடுவதாகப் படையெடுத்துவந்தான். அப்போது ஊரில் உள்ளோர் கூடிப் பேசினர். ஒரு பெண்ணுக்காக ஊரே ஏன் அழிய வேண்டும் என்று 600க்கும் மேற்பட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஊரைவிட்டு வெளியேறிப் போயினர். ஆனால் கன்னிகா தேவியோடு எஞ்சியிருந்த மக்கள் துணை நின்றனர்.

    அன்னை அப்போது தான் யார் என்பதை விளக்கித் தன் முடிவுக்குக் கட்டுப்படுபவர்கள் என்னோடு வானுலுகம் புகலாம் என்றாள். மேலும், 'என்னைத் தெய்வமாக ஏற்ற மக்களுக்குக் கலியுகம் முடியும்வரை தான் துணை நின்று காத்தருள்வேன்' என்று வாக்குக் கொடுத்தாள். அன்னையின் முடிவை ஏற்பதாக 102 கோத்திரத்தினர் உடன்பட்டனர். மற்றவர்களை அன்னை ஆசீர்வதித்து, உலகில் வாழும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை விளக்கினாள். பின்பு அக்னி குண்டம் எழுப்பி அதில் அன்னை இறங்கி மறைந்தாள். அன்னையின் பின் மற்ற 102 கோத்திரத்தில் குழந்தைகள் வயோதிகர்கள் தவிர அனைவரும் அக்னிகுண்டத்தில் இறங்கித் தீத் தீண்டாது மறைந்தனர்.

    அந்தக் கணத்தில் அன்னையை அபகரிக்கப் படையெடுத்துவந்த விஷ்ணுவர்த்தனின் தலை வெடித்துச் சிதறியது. இதைக் கண்ட மன்னனின் படைகள் சிதறி ஓடின. அவன் நாட்டில் பல துர் சகுனங்கள் நிகழ்ந்தன. இதற்கெல்லாம் காரணம் வாசவி அன்னையின் கோபமே என்று உணர்ந்த விஷ்ணுவர்த்தனின் மகனான ராஜராஜ நரேந்திரன் அன்னை வாசவியின் சகோதரனான விருபாட்சனை அணுகி மன்னிப்புக் கோரினான். அன்னைக்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபடுவதாகக் கூறி அவ்வாறே ஒரு கோயிலையும் எழுப்பினான்.

    வணிகர் குலம் முழுமையும் அன்னையைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடத் தொடங்கினர். அன்னை அவதரித்த சித்திரை வளர்பிறை தசமி திதியை அன்னையின் ஜெயந்தி தினமாகச் சிறப்போடு கொண்டாடி வருகின்றனர். அன்னை கன்னிகா பரமேஸ்வரியின் வழிபாடு காலப்போக்கில் நாடெங்கும் பரவியது. தமிழகத்தில் பல்வேறு தலங்களில் அன்னை கன்னிகா பரமேஸ்வரிக்கு ஆலயங்கள் உள்ளன.

    அன்னையை வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும் என்றும் வேண்டும் செல்வம் சேரும் என்பதும் நம்பிக்கை. திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து விரதம் இருந்து 48 நாள்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.

    அன்னையின் மூல மந்திரமான

    ஓம் பாலாரூபிணி வித்மஹே

    பரமேஸ்வரி தீமஹி

    தன்னோ கந்யா ப்ரசோதயாத்

    என்னும் மந்திரத்தைச் சொல்லிவர சகல நன்மைகளும் கைகூடும்.

    கன்னிகா பரமேஸ்வரி அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம். எனவே அன்னையின் ஜெயந்தி தினமான இன்று, வீட்டிலிருக்கும் அம்மன் படத்துக்கு பூ சாத்தி, நீர் மோர், பானகம் ஆகியன செய்து படைத்து வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால் அன்னை மனம் குளிர்ந்து நம்மைச் சூழ இருக்கும் இன்னல்களிலிருந்து விலக்கிக் காப்பாள் என்பது நம்பிக்கை.

    பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • வெற்றிலையின் மீது சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வையுங்கள்.
    • இந்த நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.

    துளசியைக் கொண்டு பூஜை செய்வதும் சிறப்பு. துளசியையே பூஜை செய்வதும் மிகுந்த விசேஷம். துளசியை பூஜிக்கும் முறை மிக மிக எளிமையானது.

    முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பௌர்ணமி அன்றும் இதைச் செய்யலாம்.

    துளசி மாடம் வீட்டில் உள்ளதா? இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்துக் கொள்ளலாம். அதன் முன்பு பெரிய அகல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்கவேண்டும். தொடர்ந்து அவை ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா என்று சொல்லி, மனதார வணங்குங்கள். அத்துடன், 'ஸ்வாகதம்' என்று மூன்று முறை சொல்லுங்கள். .

    அடுத்து, வெற்றிலையின் மீது சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அவருக்கு குங்குமத் திலகமிட்டு செந்நிற மலரால் அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

    அடுத்து, தேங்காய், பழம், தாம்பூலம், பால் பாயசம் நிவேதனத்துக்கு வைத்துக்கொண்டு பூஜையைத் துவங்குங்கள்.

    'ஓம் ஸ்ரீ விஷ்வக்சேனாய நம:' - என்று மூன்று முறை சொல்லி விநாயகருக்கு துளசி தீர்த்தம் விடவேண்டும். தொடர்ந்து... 'ஓம் கஜானனாய நம:' என்று துவங்கி விநாயகரின் திருநாமங்கள் சொல்லி துதித்து, பழம் நிவேதித்து தீபாராதனை காட்டுங்கள்.

    அடுத்ததாக, அன்றைய நாள் குறிப்புடன் சங்கல்பம் செய்துகொள்வது சிறப்பு. பின்னர், கணவன்- மனைவி இருவருமே துளசி பீடத்துக்கு (துளசி மாடம் இருந்தால் அதன் முன்பு) முன்பாக அமர்ந்துகொள்ளுங்கள். அடுத்து இந்த நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.

    ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம:

    ஓம் விஸ்வ பூஜிதாயை நம:

    ஓம் விஷ்ணுப்ரியாயை நம:

    ஓம் தேவ மூலிகாயை நம:

    ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம:

    ஓம் கிருஷ்ண லீலா விநோதின்யை நம:

    ஓம் ஸௌபாக்ய நிலயாயை நம:

    ஓம் விஷ்ணு கேசின்யை நம:

    ஓம் புஷ்பசாராயை நம:

    ஓம் நந்தவன நாயகாயை நம:

    ஓம் விஸ்வ பாவணாயை நம:

    ஓம் யாக பூஜிதாயை நம:

    ஓம் தான ப்ரதாயின்யை நம:

    ஓம் மகாலக்ஷ்மி வாசாயை நம:

    ஓம் சகல மாட கலாலங்கார்யை நம:

    ஓம் ஸ்ரீராமப்ரியாயை நம:

    ஸ்ரீ துளசீ தேவ்யை நமோ நம:

    அர்ச்சனை முடிந்ததும் தூப தீப நிவேதனம் செய்து, கையில் மலர் எடுத்து, மூன்றுமுறை தன்னையே சுற்றிக்கொண்டு இந்த துதியை மூன்று முறை சொல்லுங்கள்.

    ஓம் ப்ருந்தா ப்ருந்தாவனீ

    விஸ்வ பூஜிதா விஸ்வபாவனீ

    புஷ்பஸாரா நந்தனீச

    துளசீ க்ருஷ்ண ஜீவனீ

    ஏகாந்தாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம்

    நாமார்த்த ஸம்யுதம் ய:படேத் தாம்ஸ

    ஸம்பூஜ்ய அஸ்வ மேத பலம் லபேத்!

    இப்போது மலர்களை அர்ப்பணித்துவிட்டு, மீண்டும் கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, மனதில் உங்களுடைய வேண்டுதல்களை நினைத்தபடி ஒரு நிமிடம் தியானித்து,

    ப்ரசீத துளசி தேவி ப்ரசீத ஹரிவல்லபே

    க்ஷீரோத மதநோத்பூதே துளசி த்வாம் நமாம்யஹம்

    என்றபடி துளசிச்செடியின் மேல் மலர்களை போட்டு தீபாராதனை செய்து பிரார்த்தனை செய்யுங்கள். .

    ஓம் ஸ்ரீத்ரிபுராயை வித்மஹே துளசி பத்ராய தீமஹி

    தந்நோ துளசீ ப்ரசோதயாத்

    யந்மூலே சர்வதீர்த்தாநீ யந்மத்யே சர்வதேவதா

    யதக்ரே சர்வ வேதாஸ்ச துளசீம் தாம் நமாம்யஹம்

    கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி

    என்று சொல்லி நமஸ்கரித்து, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.

    பெண்கள் அர்ச்சனை குங்குமத்தை திருமாங்கல்யத்திலும், நெற்றி வகிட்டிலும் இட்டுக்கொள்ளலாம். மேலும், குடும்பத்தோடு சேர்ந்து துளசி ஆராதனை துதிப் பாடலைப் பாடி வழிபடுங்கள்.

    விரதம் இருந்து இந்த பூஜை செய்து வந்தால் உங்கள் குடும்பம் சிறக்கும். தழைக்கும். தாலிபாக்கியம் நிலைக்கும். ஆரோக்கியம் மேம்படும். தீராத நோயெல்லாம் தீரும். தீய சக்திகள் இல்லத்திலும் உடலிலும் உள்ளத்திலும் அண்டாது.

    • நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.
    • கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்.

    காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் விரதம் இருந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல பாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.

    12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை விரதம் இருந்து வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 21 அஷ்டமி நாளில் விரதம் இருந்து பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். காலத்தின் கடவுளான கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.

    தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு.

    பைரவ லட்சார்ச்சனை, ஸ்ரீருத்ர யாகம், ஸ்ரீபைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம். எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்

    "ஓம் கால காலாய வித்மகே

    கால தீத்தாய தீமகீ

    தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"

    என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எனவே, கால பைரவாஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபட்டால், எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சினைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம்.
    • ஊதுபத்தி ஏற்றி பாபாவின் விரத கதையை படிக்கலாம்.

    சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.

    வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதமிருந்து வருகின்றனர். அவ்வாறு விரதம் இருப்பதையும் சாய்பாபா பக்தர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    அதற்கெல்லாம் காரணம்... பல அதிசயங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்து இருப்பது மட்டுமே. சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.

    அவ்வாறு விரதம் இருக்கும்போது 9 வாரங்கள் வியாழக்கிழமையன்று சாய்பாபாவின் நாமத்தை மனதிற்குள் எண்ணி தாங்கள் நினைக்கும் காரியத்தை நினைவுகூர்ந்து தூய எண்ணங்களுடன் வழிபட்டால் கட்டாயம் நிறைவேறும் என்பது ஐதீகம். அவ்வாறு வழிபாட்டில் ஈடுபடும் போது காலையோ அல்லது மாலையோ சாய்பாபாவின் படத்திற்கு முன் அமர்ந்து ஓர் மஞ்சள் துணியை சுத்தமான ஒரு பலகையில் விரித்து வைத்து, அதன் மீது சாய்பாபா படத்தை வைத்து தூய நீரில் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் மற்றும் திலகமிட வேண்டும்.

    பாபாவிற்கு பிடித்த மஞ்சள் நிற மலர்கள் அணிவித்தால் மிகவும் சிறப்பு. பின்னர் ஊதுபத்தி ஏற்றி பாபாவின் விரத கதையையும் படிக்கலாம். பிறகு பூஜை செய்து நைவேத்தியம் அதாவது கற்கண்டு இனிப்பு பழங்கள் என் சாய் பாபாவிற்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபட்டால் எண்ணிய காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால்தான் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பாபாவின் பக்தர்கள் தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும்.
    • குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

    மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி பவுர்ணமி தினத்தன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும். பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.

    குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குலதெய்வ கோவில் இருக்கும்.

    எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். கிராமங்களில் இருந்து வெளியேறி நகர்ப்பகுதிகளில் குடியேறியவர்களுக்கு குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம். அத்தகையவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது.

    உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். எனவே பங்குனி பவுர்ணமி அன்று மறக்காமல் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

    ×