search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று காலை கோலாகலமாக தொடங்கிய அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    • இந்த தேர் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும்.
    • சிவ...சிவ... கோஷம் விண்ணதிர திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூா்த்தி நாயனாா் தேவார திருப்பதிகம் பாடி உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் திருப்பூர் மாவட்டம் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசி லிங்கேஸ்வரா் கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், புறப்பாடு நடைபெற்றது.நேற்று 1-ந்தேதி காலை 5மணிக்கு பூர நட்சத்திரத்தில் அதிர்வேட்டு, மேளதாளம் மற்றும் பஞ்ச கவ்யங்கள் ஒலிக்க பெரிய தேரில் உற்சவர் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரியும், சிறிய தேரில் கருணாம்பிகை அம்மனும் எழுந்தருளினர்.

    பின்னர் ஏராளமான பக்தர்கள் ரதத்தின் மேல் சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை 4மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இன்று 2-ந்தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ ,சிவ பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தில் கோவை சிரவையாதீனம் கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவணமாணிக்க வாசக சுவாமிகள், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. நாளை 3-ந்தேதி காலை 8மணிக்கு வடக்கு ரத வீதியில் இருந்து திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 4ந்தேதி காலை 8மணிக்கு அம்மன் திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நடக்கிறது. மேலும் ஸ்ரீசுப்ரமணியர் (சிறிய தேர்), கரிவரதராஜ பெருமாள் (சப்பரம்), சண்டிகேஸ்வரர் (சிறிய தேர்) வலம் வருதல் நடக்கிறது.

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. 92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும். எனவே தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    தேரோட்டத்தையொட்டி இன்று முதல் 3 நாட்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.தேரோடும் வீதிகளில் திருத்தேரில் அசைந்தாடி வரும் அம்மையப்பரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தேர் திருவிழாவையொட்டி ஆன்மீக சொற்பொழிவு, நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, பக்தி இன்னிசை, கம்பத்தாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×