search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி கோவிலில் 3 நாட்களுக்கு பிறகு மூலவர் சன்னதி திறப்பு: பக்தர்கள் பரவசம்
    X

    பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.

    பழனி கோவிலில் 3 நாட்களுக்கு பிறகு மூலவர் சன்னதி திறப்பு: பக்தர்கள் பரவசம்

    • 29-ம்தேதி தைப்பூசத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது.
    • இன்று மாலை சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது..

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18-ந் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. இதனையடுத்து மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதனையடுத்து மூலவர் சன்னதி மூடப்பட்டு கலசங்களில் ஆஹாகனம் செய்யப்பட்ட முருகன் யாகசாலை பூஜையில் ராஜஅலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதனையடுத்து பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியாமல் யாகசாலையில் எழுந்தருளிய முருகப்பெருமானை மட்டும் தரிசனம் செய்து சென்றனர். இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 5.40 மணிக்கு மூலவர் சன்னதி திறக்கப்பட்டது.

    இதனையடுத்து விநாகயகர் பூஜையுடன் தொடங்கி மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின் மூலவருக்கு தங்கத்தால் புதிய வேல் சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ராஜகோபுரம், தங்ககோபுரம், கைலாசநாதர், மலைக்கொழுந்து அம்மன், மலைக்கொழுந்து சிவன், போகர் சன்னதி, சண்முகர் சன்னதி, பள்ளியறை, சின்னக்குமாரர் ஆகிய 9 சன்னதிகளுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவரை தரிசனம் செய்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பழனியில் விடுதியில் தங்கி காத்திருந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்துக்கு குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப்கார் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை பழனி மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் தைப்பூசத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி நடந்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

    Next Story
    ×