search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    • இது ஒரு முக்கியமான பயிற்சியாக உலகமெங்கும் சொல்லப்படுகிறது.
    • கழுத்துத் தசைகளைப் பலப்படுத்துகிறது.

    இந்த ஆசனம் உடலின் அனைத்து பகுதிகளையும் பலப்படுத்துகிறது. 'கும்பக' என்றால் 'கொள்கலன்'. இந்த உடல் என்னும் கொள்கலனில் இரத்தமும் பிராணசக்தியும் ஊற்றுவதற்கான ஆசனம் இது என்று பொருள். இந்த நிலையில் நிற்கும்போது உடல் முழுதும் இரத்தமும், உயிர் சக்தியும் பாய்ச்சப்பட்டு கொள்கலன் நிறைகிறது. மணிக்கட்டு, கைகள், தோள்கள், முதுகு, முதுகுத்தண்டு, இடுப்பு, புட்டம், தொடை, முட்டி, முழங்கால், கணுக்கால், விரல்கள் என உடல் முழுதும் புத்துணர்வு பெறுகிறது. அதாவது நிறைகுடம் ஆகிறது. அதனாலேயே, இது ஒரு முக்கியமான பயிற்சியாக உலகமெங்கும் சொல்லப்படுகிறது.

    பலன்கள்

    வயிற்று பகுதியைப் பலப்படுத்துகிறது. கழுத்துத் தசைகளைப் பலப்படுத்துகிறது. முதுகு வலி குறைய உதவுகிறது. உடலின் சமநிலையை பராமரிக்கிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது.

    செய்முறை

    அதோ முக ஸ்வானாசனா நிலைக்கு வரவும். மூச்சை உள்ளிழுத்தவாறே உங்கள் மேல் உடலை முன்னால் செலுத்தவும். உங்கள் மணிக்கட்டு தோள்களுக்கு நேர் கீழாக இருக்க வேண்டும். தோள்களை விரிக்கவும். கழுத்தை முதுகுத்தண்டுக்கு நேராக வைத்து தரையை பார்க்கவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் உடலை தளர்த்தவும். மணிக்கட்டில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்ப்பது நல்லது.

    • அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதாலும் மாரடைப்பு ஏற்படுகிறது.
    • உடற்பயிற்சியை நம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு மிகவும் வருத்தி செய்யக்கூடாது.

    உடற்பயிற்சி என்ற வார்த்தையை கேட்கும் போதே சிலருக்கு அளவு கடந்த உற்சாகமும், சிலருக்கு சிறிதளவு தயக்கமும் உண்டாகும். ஏனெனில் உடலை மேம்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இயல்பாக இருக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் அதனை அடையும் பொருட்டு சிலர் அதற்கான வழிமுறையை சரியாக பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக உடலில் சிறு காயங்கள் முதல் எலும்பு முறிவு உள்ளிட்ட பெரிய அளவிலான பாதிப்புகளும் உண்டாகின்றன. சில நேரங்களில் இதனால் உயிரிழப்பும் நடந்து வருவது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகவே உள்ளது.

    ஆம்... தற்போது முறையான வழிகாட்டுதல் மற்றும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் தனது உடல் நிலைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சியை எடுத்து கொள்ளாமல் சிலர் உயிரிழப்பை சந்திக்கின்றனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு ஓட்ட பயிற்சியில் ஈடுபட்ட போது பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இது நாட்டின் அனைத்து மக்களிடமும் பேசு பொருளாகியது. மேலும் பெங்களூருவில் உடற்பயிற்சி கூடமே கதியே என்று இருந்தவர்களும், குறுகிய காலத்திலேயே உடற்கட்டை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்று கருதி ஊக்கமருந்துகள், ஊசிகள் மூலம் உடற்கட்டு பெற முயற்சித்தவர்கள் என 8-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

    இதேபோல் சமீபத்தில் கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த ஆணழகன் போட்டிக்கு சென்ற சேலத்தை சேர்ந்த ஹரிகரன் என்ற 21 வயது வாலிபர், பயிற்சி எடுத்த நில நிமிடங்களில் திடீரென மரணம் அடைந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் கட்டுடல் கொண்டுவருவதற்காக 'ஸ்டீராய்டு' ஊசி பயன்படுத்தியதால் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

    உடற்பயிற்சி செய்யும் போது இப்படி உயிரிழப்புகள் நடப்பதற்கு காரணம் என்ன?... தற்போதைய சூழலில் இது தொடர் கதையாகி வருவது ஏன்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்...

    உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளை போலவே உடற்பயிற்சி நிலையமும் கூட. உடற்பயிற்சி செய்த சிலர் இறந்துபோனதால், உடற்பயிற்சி ஆபத்தானது என்று தவறான கருத்து பொதுவாக நிலவுகிறது. இது தவறு. ஸ்கூட்டர் ஓட்டவும், சைக்கிள் ஓட்டவும் கற்றுக்கொள்ளும் போது கீழே விழுந்து சிறு, சிறு அடிபடுவது இயல்புதான். அதற்காக நாம் சைக்கிள், ஸ்கூட்டர் ஓட்டுவதை கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோமா?.

    கிரிக்கெட், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜல்லிக்கட்டு, மாடு பிடித்தல், ஓட்டப்பந்தயம், கபடி போன்ற விளையாட்டுகளைப் போலவே வலிமையான, ஆரோக்கியமான கட்டுமஸ்தான உடலை பெற இளைஞர்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு வருகிறார்கள். இந்தப் பயிற்சியில் ஈடுபடுவது ஆபத்தானது அல்ல. முறையாக படிப்படியாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடலை வருத்திக்கொள்ள கூடாது. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் இடையே தன்னம்பிக்கை வளரும். ஏதாவது நோய்கள் இருந்து உடலை வருத்தி உடற்பயிற்சி மேற்கொள்ள கூடாது. இதுபோன்ற சம்பவங்களால் தான் சிலர் இறந்துள்ளனர். அதற்காக ஒட்டுமொத்தமாக உடற்பயிற்சி செய்வதால் ஆபத்து என பொத்தம் பொதுவாக கூற கூடாது.

    உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக குறைந்த அளவு தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி அவசியம் தேவை. ஆனால் உடற்பயிற்சியை நம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு மிகவும் வருத்தி செய்யக்கூடாது. உடற்பயிற்சி என்பது நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டாலே ஆணழகன் தான்.

    உடற்பயிற்சி செய்கிறவர்கள் மது, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்த கூடாது. அதுபோல் உடற்கட்டை பெற ஊக்கமருந்து மற்றும் ஊசி போடுவது போனற செயல்களில் ஈடுபடக் கூடாது. இதுபோன்ற பழக்கவழக்கங்களாலும், அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதாலும் மாரடைப்பு ஏற்படுகிறது.

    காலை, மாலை தலா அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் போதும். உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வதே உயிருக்கு உலையாகிவிடுகிறது. அதுபோல் குறுகிய காலத்திலேயே உடற்கட்டை பெற சிலர் தவறான வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்கள். இதனால் அவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மேலும் சிலர் இதயகோளாறு பிரச்சினை இருப்பதை தெரியாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் உயிரிழக்க நேரிடும். இதுபோன்றவற்றை தவிர்த்து சரியான முறையை கடைப்பிடித்து உடற்பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

    உடற்பயிற்சியை எவ்வளவு நேரம் மேற்கொள்ள வேண்டும் என்ற முறை உள்ளது. அதன்படி தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இன்று அதிகளவில் இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பயிற்சி பெறுகிறார்கள். அவர்களுக்கு நான் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யக்கூடாது, உடம்புக்கு பாதிப்பு ஏற்படும், காலை அரை மணி நேரம் மாலை அரை மணி நேரம் மட்டும்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கி வருகிறேன். அதுபோல் உடலை கட்டுப்கோப்பாக வைப்பதற்காக மருந்துகளை உட்கொள்வதையும், ஊசிபோடுவதையும் செய்யக்கூடாது. இது உயிருக்கே உலைவைக்கும். எனவே முறையான உடற்பயிற்சி செய்தால் ஆபத்து இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.

    இன்றைய நவநாகரீக உலகில் மனிதனின் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. இதனால் உடற்பயிற்சி அவசியமாகிவிட்டது. தினமும் அரை மணி நேரம் மட்டும் உடற்பயிற்சி செய்தால் போதும். உடல் ஆரோக்கியத்தை காக்கிறேன் என கூறி உடற்பயிற்சி செய்தால் உடலை பாதிக்கும். மேலும் உயிரை பறித்துவிடும். எனவே எளிமையான உடற்பயிற்சி செய்தால் போதும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலை வருத்தி உடற்பயிற்சி செய்தால், நமக்கு தான் பிரச்சினை ஏற்படும் என்றார்.

    இன்றைய தலைமுறை இளைஞர்களில் பெரும்பாலானோர் தங்களது உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொள்கின்றனர். அதில் முறையான பயிற்சி இன்றி ஒருவர் திடீரென உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, அதிகப்படியான எடையை தூக்கினால் உடனே அவருக்கு இதய துடிப்பு அதிகமாகி திடீர் இதய இறப்பு (சடன் ஹார்டியாக் டெத்) ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சிலருக்கு பெமிலியல் ஹைப்பர் கொலஸ்ட்ரால் லிமியா என்ற இதய வால்வுகளில் கொழுப்பு படிதல் இயற்கையாகவே இருக்கும். அந்த சமயங்களில் உடற்பயிற்சி மையங்களுக்கு சென்று அதிக எடையை உடனே தூக்கும்போது அதிகப்படியாக அழுத்தத்தால் ரத்த குழாய் கொழுப்பு அடைப்பானது திடீரென வெடித்து விடும். இதனால் கூட மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உடற்பயிற்சிக்கு செல்லும் முன்பு இதய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
    • இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது.

    வடமொழியில் 'ஊர்த்துவ' என்றால் 'மேல் நோக்கும்', 'உபவிஸ்த' என்றால் 'அமர்ந்த', 'கோணா' என்றால் 'கோணம்' என்றும் பொருளாகும்.

    ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் உடலின் சமநிலையை (balance) மேம்படுத்துகிறது. மனதை ஒருமுகப்படுத்துவதோடு மன அழுத்தத்தைப் போக்கவும் உதவுகிறது.

    பலன்கள்

    வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. முதுகுத்தண்டை வலுப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துவதோடு, இடுப்பின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது. மூட்டுகளைப் பலப்படுத்துகிறது. கால் தசைகளை வலுப்படுத்துகிறது.

    செய்முறை

    விரிப்பில் அமர்ந்து இரு பாதங்களையும் ஒன்றோடு ஒன்று சேருமாறு வைக்கவும். வலது கையால் வலது கால் கட்டை விரலையும் இடது கையால் இடது கால் கட்டை விரலையும் பிடித்துக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே சற்று பின்னால் சாய்ந்து கால்களைத் தரையிலிருந்து உயர்த்தவும்.

    கால் விரலைப் பிடித்தவாறே கால்களை நேராக்கி பக்கவாட்டில் நீட்டவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், கால்களைத் தளர்த்தி ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறைசெய்ய வேண்டும்.

    கால்களை முழுமையாக நீட்ட முடியவில்லை என்றால், முட்டியைச் சற்று மடக்கி பயிலவும். தீவிர முதுகுத்தண்டு கோளாறு, தோள், இடுப்பு, முட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    • கால்களைப் பலப்படுத்துகிறது.
    • மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது.

    இன்று முதல் தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாம் நின்று செய்யும் ஆசனங்களைப் பார்க்கலாம். இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த உட்கட்டாசனம். வடமொழியில் 'அர்த்த' என்றால் 'பாதி' என்றும் 'உத்கடா' என்றால் 'தீவிரமான' மற்றும் 'பலம் பொருந்திய' என்று பொருள். இந்த ஆசன நிலையே கடினமானதும் உடலுக்கு பலம் தரக்கூடியதும் ஆகும். அர்த்த உட்கட்டாசனம் முதுகெலும்பு வழியாக ஆற்றல் பரவுவதை சீர் செய்கிறது. இதனால் உடம்பிலும் மனதிலும் உறுதியும் ஆற்றலும் பெருகுகின்றன.

    அர்த்த உட்கட்டாசனம் மூலாதார மற்றும் சுவாதிட்டான சக்கரத்தைத் தூண்டுகிறது. மூலாதரச் சக்கரம் தூண்டப்படுவதால் மற்ற சக்கரங்களின் செயல்பாடுகளும் வலுவடைகின்றன. படைப்புத்திறனும், சூழல்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் வளர்கின்றன. மனம் ஒருநிலைப்படுகிறது.

    பலன்கள்

    நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது. கால்களைப் பலப்படுத்துகிறது. மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. வயிற்றிலுள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

    மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; மூட்டு வலியைப் போக்குகிறது. மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது. சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.

    செய்முறை

    விரிப்பில் நேராக நிற்கவும். பாதங்களை அருகருகே வைக்கவும். அல்லது அரை அடி இடைவெளி விட்டும் வைக்கலாம். மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். மூச்சை வெளியேற்றவும்.

    மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் வணக்கம் சொல்லும் நிலையில் வைக்கவும். கைகளை தோள்களுக்கு நேராக முன்னால் நீட்டியும் பயிலலாம்.

    கைகளை உயர்த்தும் போது, இடுப்பை கீழ் நோக்கி இறக்கவும். கற்பனையான நாற்காலியில் அமர்வது போல் உடலை இறக்கவும். பாதங்கள் அருகருகே இருந்தால் இரண்டு கால் முட்டிகளும் சேர்ந்தேதான் இருக்க வேண்டும்.

    20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் கைகளைக் கீழே கொண்டு வந்து நேராக நிற்கவும். தொடர் பயிற்சியில் ஒரு நிமிடம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.

    குறைவான இரத்த அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த ஆசனம் பயில்வதைத் தவிர்க்கவும்.

    • நடைப்பயிற்சி என்பது உடலை சீக்கிரம் சோர்வடையச் செய்யாத சிறந்த உடற்பயிற்சியாகும்.
    • காலையில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தாலே சுமார் 400 கலோரிகளை எரித்துவிடலாம்.

    காலையில் எழுந்தவுடன் நினைவுக்கு வருவதும், செய்ய வேண்டிய முதல் வேலையும் நடைப்பயிற்சியாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் நடைப்பயிற்சியை விரும்புவதில்லை. மற்ற உடற்பயிற்சிகளை போல் கூடுதல் முயற்சி மேற்கொள்ளாமலேயே அதிக கலோரிகளை எரிப்பதில் நடைப்பயிற்சிக்கு முக்கிய பங்கு உண்டு. தினமும் அதிகாலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்வது பல்வேறு வகைகளில் பலன் தரும். அவை பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

    உடல் ஆற்றல் அதிகரிக்கும்:

    நடைப்பயிற்சி என்பது உடலை சீக்கிரம் சோர்வடையச் செய்யாத சிறந்த உடற்பயிற்சியாகும். மேலும் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்யும். ஏனென்றால் உடற்பயிற்சியின்போது உடல் தொடர்ச்சியான இயக்கத்தில் இருப்பதால், நிலையான ஆற்றல் தேவைப்படும். எனவே செல்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், ஆற்றல் அளவையும் அதிகரிக்கும். வீட்டிற்குள் 10 நிமிடங்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பது நடைப்பயிற்சி ஆகி விடாது. சரியான நடைப்பயிற்சி என்பது பூங்காவில் அல்லது வீட்டிற்கு வெளியே தெருவில் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் நடந்து செல்வதாகும். தூக்கம் வராமல் இருப்பவர்கள் ஒரு கப் காபி குடிப்பதை விட, படிக்கட்டுகளில் 10 நிமிடம் நடப்பது அதிக ஆற்றலைத் தரும் என்பது ஆய்வில் தெரியவந் துள்ளது.

    மனநிலையை மேம்படுத்தும்:

    தொடர்ந்து வேலை செய்வதும், அதே வழக்கத்தை பின்பற்றுவதும் மனச்சோர்வுக்கு ஆளாக்கும். காலையில் எழுந்ததும் நடப்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மனநிலையையும் மேம்படுத்தும். ஏனென்றால், நடைப்பயிற்சி ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் இயங்க வைக்கும். உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கும். அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உதவும். இது நேர்மறையான மனநிலையை பேணுவதற்கு வழிவகுக்கும்.

    சுயமரியாதையை மேம்படுத்துவது, பதற்றத்தை குறைப்பது, மன அழுத்தத்தை குறைப்பது, மனச்சோர்வை கட்டுப்படுத்துவது, நேர்மறை எண்ணத்தை உருவாக்குவது, மனச்சோர்வின் அறிகுறிகளை போக்குவது, மன நல பிரச்சினைகளை தீர்ப்பது என உடற்பயிற்சிக்கும், மன நலனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் மன நல பிரச்சினைகளை அனுபவிப்பவர்கள் தினமும் காலையில் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும்.

    எடை இழப்புக்கு உதவும்:

    காலையில் நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க உதவும். ஏனெனில் நடைப்பயிற்சி கலோரிகளை குறைக்க உதவுகிறது. காலையில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தாலே சுமார் 400 கலோரிகளை எரித்துவிடலாம்.

    இது நடையின் வேகத்தைப் பொறுத்தது. மேலும் ஒவ்வொரு நபரின் ஆரோக்கியத்தை பொறுத்தும் மாறுபடும். வயிறு வெறுமையாக இருப்பதாலும், ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக உடலில் உள்ள கொழுப்புகளை உடல் கரைப்பதாலும், காலையில் நடைப்பயிற்சி செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

    உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கும்:

    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்க காலை நேர நடைப்பயிற்சி சிறந்தது. இது பல்வேறு வைரஸ் நோய்கள், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து விலகி இருக்க துணை புரியும். சுவாச உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நடத்திய ஆய்வின்படி, தினமும் 30 நிமிடம் நடக்க ஆரம்பித்தால், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை 19 சதவீதம் குறைக்கலாம்.

    உடல் செயல்பாடு:

    காலையில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடற் பயிற்சியின் பெரும்பகுதியை நிறைவு செய்துவிடலாம். காலை வேளையில் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் நோய்கள் வராமல் தடுக்கலாம். இதய பிரச் சினைகள் ஏற்படும் அபாயம் குறையும். வாரத்துக்கு குறைந்தது 300 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது. வாரத்தில் 7 நாட்களில் குறைந்தது 5 நாட்களாவது காலையில் நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

    தசைகளை பலப்படுத்தும்:

    தசைகள் நடைப்பயிற்சி மூலம் பலமடைகின்றன. ஏனெனில் நடைப்பயிற்சி உடலின் அனைத்து முக்கிய தசைகளையும் வேலை செய்ய வைக்கிறது. அதன் மூலம் தசை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நடைப்பயிற்சியின்போது சீரான வேகத்தில் உற்சாகமாக நடக்கலாம். படிக்கட்டுகளில் ஏறலாம் அல்லது சாய்ந்த மேற்பரப்பில் நடந்து பழகலாம்.

    தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்:

    காலையில் நடைப்பயிற்சி செய்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். தேசிய உடலியல் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், காலை நேர நடைப்பயிற்சிக்கு பிறகு இரவில் நன்றாக தூங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொண்டவர்களுக்கும் காலை நேர உடற்பயிற்சி சிறந்த பலனை கொடுத்திருக்கிறது.

    நடைப்பயிற்சிக்கு காலை நேரம்தான் சிறந்தது. ஏனென்றால் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது தசைகள் சோர்வு மற்றும் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகளை அதிகமாக்குகிறது.

    • கால் முட்டியில் தீவிர வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
    • கல்லீரலை பலப்படுத்துகிறது.

    வடமொழியில் 'அஷ்வ' என்றால் 'குதிரை', 'சஞ்சாலன்' என்றால் 'ஒரு செயலில் ஈடுபடத் துவங்குவதற்கான நடவடிக்கை' என்று பொருள். இது குதிரை ஏற்றத்துக்கான தயார்நிலை என்பதால் அஷ்வசஞ்சாலனாசனம் என்று பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Equestrian Pose என்று அழைக்கப்படுகிறது. அஷ்வ சஞ்சாலனாசனம் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்தும் பயின்றும் கொண்டிருந்திருப்பீர்கள், அதாவது சூரிய வணக்கத்தை பயின்று கொண்டிருந்தால். இவ்வாசனம் சூரிய வணக்கத்தின் நான்கு மற்றும் ஒன்பதாவது நிலையில் செய்யப்படுவதாகும்.

    அஷ்டசஞ்சாலனாசனத்தில் சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகத சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனம் உடல் மற்றும் மனதின் நிலையான தன்மையை வளர்க்கிறது.

    பலன்கள்

    முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு இடுப்பையும் பலப்படுத்துகிறது. சீரணத்தை மேம்படுத்துகிறது. கல்லீரலை பலப்படுத்துகிறது

    சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. கால் தசைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது; கால்களை பலப்படுத்துகிறது

    மன அழுத்தத்தைப் போக்குகிறது. மன அமைதியை வளர்க்கிறது

    செய்முறை

    விரிப்பில் நிற்கவும். முன்னால் குனிந்து கால்களுக்கு அருகில் கைகளைத் தரையில் வைக்கவும். உள்ளங்கைகள் அல்லது கைவிரல்களைத் தரையில் வைக்கலாம். மூச்சை வெளியேற்றியவாறு வலது காலைப் பின்னால் கொண்டு செல்லவும். கால் முட்டி முதல் கால் விரல்கள் வரை தரையில் இருக்க வேண்டும். நேராகப் பார்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், ஆரம்ப நிலைக்கு வந்து இடது காலைப் பின்னால் வைத்து பயிலவும்.

    கால் முட்டியில் தீவிர வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். கால் முட்டியில் லேசான வலி உள்ளவர்கள் முட்டிக்கு அடியில் ஒரு விரிப்பை மடித்து வைத்து ஆசனத்தைப் பயிலலாம். நேராகப் பார்ப்பதில் அசவுகரியம் இருந்தால் தலையைக் கீழ் நோக்குமாறு வைக்கவும்.

    • முட்டி வலி, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
    • சிறுநீர் கடுப்பை போக்க உதவுகிறது.

    'பத்ர' என்ற வடமொழி சொல்லுக்கு 'புனிதமான' என்றும் 'கருணையுள்ள' என்றும் பொருள் உண்டு. பத்ராசனம் என்றால் புனிதமான ஆசனம், கருணையான ஆசனம்.

    பத்ராசனம் மூலாதார சக்கரத்தை தூண்டி படைப்பாற்றல் திறனை வளர்க்கிறது. மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர உதவுகிறது. குறிப்பாக, சிறுநீரகம், கர்ப்பப்பை ஆற்றல்களை வளப்படுத்தி மறுஉறுபத்தியை ஊக்குவிக்கிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்ப்பதுடன் ஆண்களின் விந்தணுக்கள் பெருக்கத்தை தூண்டுவதால் இது கருணையுள்ள ஆசனம் என்று கூறப்படுகிறது. மூலாதார சக்கரமே பிற சக்கரங்களின் நலத்துக்கு அடிப்படை.

    பலன்கள்

    மூச்சு கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. சுகப்பிரசவம் ஆக உதவுகிறது.சையாடிக் பிரச்சினைகளை போக்க உதவுகிறது. இடுப்பு பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. சிறுநீரகத்தின் நலத்தை பாதுகாக்கிறது. சிறுநீர் கடுப்பை போக்க உதவுகிறது.

    செய்முறை

    விரிப்பில் அமரவும். இரண்டு கால்களையும் மடித்து பாதங்களை ஒன்று சேர்த்து வைக்கவும். கைகளால் கால் விரல்களை பற்றி மூச்சை வெளியேற்றிக் கொண்டே முன்னால் குனிந்து நெற்றியை தரையில் வைக்கவும். கைகளை தலைக்கு முன்னால் நீட்டி உள்ளங்கைகளை ஒன்றாக வணக்கம் சொல்வது போல் தரையில் வைக்கவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.

    கர்ப்பிணி பெண்கள் நெற்றியை தரையில் வைக்கக் கூடாது. கைகளால் கால்களை பற்றி அமர்ந்தாலே போதுமானது. தீவிர முட்டி வலி, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

    • உத்தித திரிகோணாசனம் கால்களைப் பலப்படுத்தும் அருமையான ஆசனம்.
    • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை இந்த ஆசனம் மேம்படுத்துகிறது.

    நாம் இதுவரை அர்த்த திரிகோணாசனம், திரிகோணாசனம் மற்றும் பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகிய ஆசனங்களைப் பார்த்துள்ளோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உத்தித திரிகோணாசனம். வடமொழியில் 'உத்தித' என்றால் 'நீட்டுதல்' என்று பொருள், அதாவது, இது காலை நன்றாக நீட்டிய நிலையில் செய்யப்படும் திரிகோணாசனம், அதாவது, உத்தித திரிகோணாசனம். இது ஆங்கிலத்தில் Extended Triangle Pose என்று அழைக்கப்படுகிறது.

    உத்தித திரிகோணாசனம் கால்களைப் பலப்படுத்தும் அருமையான ஆசனம். வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளையும் இந்த ஆசனம் மேம்படுத்துகிறது.

    பலன்கள் :

    நுரையீரலைப் பலப்படுத்துகிறது. கழுத்து மற்றும் முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. கழுத்து மற்றும் தோளில் உள்ள இறுக்கத்தைப் போக்குகிறது. தோள்களை விரிக்கிறது. முதுகுவலியைப் போக்குகிறது. இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது; இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது

    சீரணத்தை மேம்படுத்துகிறது. வாயுத் தொல்லையைப் போக்குகிறது. மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் வலியைப் போக்குகிறது. மன அழுத்தைத்தைப் போக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் மூன்று முதல் நான்கு அடி இடைவெளி விட்டு நிற்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். கைகள் தோள்களுக்கு நேராக இருக்க வேண்டும். உள்ளங்கைகள் தரையைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். இடது கால் பாதத்தை சற்று வலது புறமாகத் திருப்பவும். வலது பாதத்தை 90 degree கோணத்தில் வெளிப்புறம் திருப்பவும்.

    மூச்சை வெளியேற்றியவாறே மேல் உடலை வலது பக்கமாக சாய்க்கவும். வலது கையால் வலது கணுக்காலைப் பற்றவும். மாறாக, வலது கையைத் தரையிலும் வைக்கலாம். இடது கையை மேல் நோக்கி உயர்த்தவும். இடது கையை இடது தோளுக்கு நேராக உயர்த்தவும். தலையை இடது கை கட்டை விரலைப் பார்க்கும் வண்ணம் திருப்பவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், நிமிர்ந்து மாற்றுப் பக்கம் செய்யவும். தொடர் பயிற்சியில் நேரத்தை ஒரு நிமிடமாக அதிகரிக்கலாம்.

    தீவிர முதுகுத்தண்டு கோளாறுகள், இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    • தீவிர முதுகு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
    • தொடை நரம்பு (sciatic nerve) நெகிழ்வுத்தன்மை பெறுகிறது.

    வடமொழியில் ஜானு என்றால் 'முட்டி', 'சிரசா' என்றால் 'தலை'. முட்டி தலை ஆசனம் – அதாவது, தலையை கால் முட்டியில் வைப்பது (Head to Knee Pose) ஆகும். வேறு ஒரு வகையில், ஒரு கால் பஸ்சிமோத்தானாசனம் என்றும் கூறலாம். பஸ்சிமோத்தானாசனத்தின் பலன்கள் அனைத்தும் இதற்கும் உண்டு. குறிப்பாக, ஒரு கால் மடக்கி, மற்றொரு காலை நீட்டி குனிந்து முட்டியை தொடும் போது, உடலின் நடுப்பகுதி பக்கவாட்டில் அழுத்தப்படும் போது, சீரண கருவிகள் அனைத்தும் நன்கு இயங்கும். உடலின் சத்துக்களை கிரகித்துக் கொள்ளும் திறன் மேம்படுகிறது. மேலும், கால் நரம்பு இழுக்கப்படுவதால், தொடை நரம்பு (sciatic nerve) இழுக்கப்பட்டு நெகிழ்வுத்தன்மை பெறுகிறது.

    பலன்கள்

    முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது. முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மன அழுத்தத்தை போக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து வலது பாதத்தை இடது தொடையை ஒட்டி வைக்கவும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, கைகளை பக்கவாட்டில் உயர்த்தவும். மெல்ல மூச்சை வெளியேற்றியபடி, குனிந்து கைகளால் இடது கால் பாதத்தை அல்லது விரல்களை பிடிக்கவும். தலையை நீட்டியிருக்கும் இடது காலின் மேல் வைக்கவும். உங்கள் வயிறு உங்கள் இடது தொடையின் மேல் இருக்க வேண்டும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், நிமிர்ந்து வலது காலை நீட்டி இடது காலை மடித்து முன் குனிந்து வலது கால் பாதம் அல்லது விரல்களை பற்றவும்.

    குனிந்து கால் விரல்களை பிடிக்க முடியாதவர்கள், கை எட்டும் இடத்தில் காலை பிடித்து முடிந்த அளவு குனிந்து செய்யவும். கால் முட்டி வலி உள்ளவர்கள் முட்டியின் கீழ் ஏதேனும் விரிப்பை மடித்து வைத்து குனியலாம். கால் முட்டியில் தீவிர வலி, தீவிர முதுகு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

    • இந்த ஆசனம் செய்தால் வயிற்றுப் பகுதியும் முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகின்றன.
    • முதுகு, மணிக்கட்டு, முட்டி, இடுப்பில் தீவிர வலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    வடமொழியில் 'தண்ட' என்ற சொல்லுக்குக் 'கம்பு' என்றும், 'யமன' என்ற சொல்லுக்குச் 'சமாளித்தல்', 'கட்டுப்படுத்துதல்' என்றும் 'பர்மா' என்ற சொல்லுக்கு 'மேசையை தாங்கும் பலகை' என்றும் பொருள். இந்த ஆசனத்தில் உடல் சமநிலையில் கட்டுப்படுத்தப்பட்டு மேசையைப் போல் இருப்பதால் இந்தப் பெயர் பொருத்தமாகிறது.

    தண்டயமன பர்மானாசனத்தில் வயிற்றுப் பகுதியும் முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகின்றன. தொடர்ப்பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மனதின் சமநிலை மேம்படுத்தப்படுகிறது.

    பலன்கள்

    முதுகுப்பகுதியைப் பலப்படுத்துகிறது. முதுகுத்தண்டு மற்றும் இடுப்பை நீட்சியடைய வைக்கிறது. தோள், கைகள் மற்றும் மணிக்கட்டு ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது. கவனத்தைக் கூர்மையாக்குகிறது. நினைவாற்றலை வளர்க்கிறது. மன, உடல் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது. மனச்சோர்வைப் போக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் கை மற்றும் கால்களில் நிற்கவும். உங்கள் மணிக்கட்டு தோள்களுக்கு நேர் கீழேயும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழேயும் இருக்க வேண்டும்.

    இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையே உள்ள தரையைப் பார்க்கவும்.

    உங்கள் வலது கையை தோள் உயரத்துக்கு முன்னே நீட்டவும். அதே நேரத்தில், இடது காலைப் பின்னால் நீட்டவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். பின், இடது கையை முன்னால் நீட்டியும் வலது காலைப் பின்னால் நீட்டியும் 20 வினாடிகள் இருக்கவும்.

    கால் முட்டியில் வலி ஏற்பட்டால், முட்டியின் கீழ் விரிப்பு ஒன்றை மடித்து வைத்துக் கொள்ளவும்.

    தோள், முதுகு, மணிக்கட்டு, இடுப்பு, முட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    • அஷ்டவக்கிராசனம் கையால் உடலைத் தாங்கும் அருமையான ஆசனம்.
    • இவ்வாசனம் உடல் முழுவதிலும் ஆற்றலைப் பெருக்குகிறது.

    வடமொழியில் 'அஷ்ட' என்றால் 'எட்டு' என்றும், 'வக்கிரம்' என்றால் 'முறுக்குதல்' என்றும் பொருள். இவ்வாசனம் அஷ்டவக்கிரர் என்ற முனிவரின் பெயரையொட்டி அஷ்டவக்கிராசனம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Eight Angle Pose என்று அழைக்கப்படுகிறது.

    அஷ்டவக்கிராசனம் கையால் உடலைத் தாங்கும் அருமையான ஆசனம். இவ்வாசனம் உடல் முழுவதிலும் ஆற்றலைப் பெருக்குகிறது. அஷ்டவக்கிராசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுகிறது. பிரபஞ்ச ஆற்றலை கவரும் தன்மை கொண்ட இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயிலும் போது உடலின் சமநிலை அதிகரிக்கிறது.

    பலன்கள்

    உடலை நீட்சியடையச் செய்கிறது. முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. தோள், கைகளை மற்றும் மணிக்கட்டைப் பலப்படுத்துகிறது. முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. வயிற்று உள்உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கவனத்தைக் கூர்மையாக்குகிறது.

    செய்முறை

    விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். கால்களுக்கிடையில் சற்று இடைவெளி விட்டு நிற்கவும். மூச்சை வெளியேற்றியவாறு முன்னால் குனிந்து கைகளை பாதங்களுக்கு அருகில் வைக்கவும். இது உத்தானாசன நிலை. கால் முட்டிகளைச் சற்று மடக்கி, வலது கையை கால்களுக்கு இடையில் நுழைத்து வலது காலின் பின்னால் தரையில் வைக்கவும்.வலது கால் முட்டியை வலது தோள் மீது வைக்கவும்.

    இடது காலை வலது புறமாக நீட்டி இரண்டு கணுக்கால்களையும் பிணைக்கவும். சற்றே இடதுபுறம் சாய்ந்து பாதங்களைத் தரையிலிருந்து உயர்த்தவும்.

    மூச்சை வெளியேற்றியவாறு கைமுட்டிகளை மடக்கவும். மேல் உடலை முன்புறமாகச் சாய்க்கவும். மேல் உடல் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

    கால்களை வலதுபுறமாக நன்றாக நீட்டவும். உங்கள் வலது கையின் மேல்பகுதி இரண்டு தொடைகளுக்கு இடையில் இருக்குமாறு நீட்டவும்.

    ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும். ஆரம்ப நிலைக்கு வந்து கால்களை மாற்றி மீண்டும் செய்யவும்.

    தோள், மணிக்கட்டு, முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் தீவிர வலி உள்ளவர்கள் அஷ்டவக்கிராசனத்தைத் தவிர்க்கவும்.

    • தியானத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள்.
    • தியானத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள்.

    தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் 10 வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.தியானம், மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது. தியானம் மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும். தியானத்தால் கிடைக்கும் நண்மைகள் ஏராளம்.

    தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் மிக எளிதாக பழக முடியும்.

    1. முதல் கட்டதியான முறையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து படித்து உணர்ந்த பின் தியானத்திற்கு உங்களை தயார் செய்து கொள்வது சிறப்பாகும். நாம் வசிக்கின்ற வீட்டில் தியானம் செய்வதற்கு நல்ல வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள்.

    2. தியானத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள். தியானத்தின் இடையில் தடைகள் ஏற்பட்டால் பிறர் மீது கோபம் கொள்ளாதீர்கள். தியானத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள். அதே போல் மகிழ்ச்சியாக முடியுங்கள். தியானம் பழக ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் தடங்கல்கள் நிறைய வந்து உங்களை ஈடுபடவிடாமல் தடுக்கும்.

    3. ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை அளவோடு மற்றும் நேரத்தோடு எடுத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சியும் அவசியம் தேவை.

    4. தியானப்பாதையில் செல்லும்போது அவர்களை வழிநடத்தவும், கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை. தியானப் பாதையில் வெற்றி பெற்ற குருவாக ஒருவர் இருக்கவேண்டும் .

    5. மறதி, சோம்பல், அதீத தூக்கம் ஆகிய மூன்று குறைகளும் தியானத்தின் முக்கிய தடைகளாகும். பதஞ்சலி சந்தேகம் , மனச்சலிப்பு , சோம்பல் , அலட்சியம்,எழுச்சிகள், தவறாக புரிந்துக்கொள்ளுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    6. அமர்வதற்கு உடலுக்கு அச்சுறுத்தல் இல்லாதவாறு மெத்தை அல்லது போர்வையை மடித்து பயன்படுத்தலாம். தியானம் பழகும் இடத்தை அடிக்கடி மாற்ற கூடாது. அமர்வதற்கு பயன்படுத்தும் போர்வைகளையும் மாற்றுதல் கூடாது. முடிந்தால் மனதுக்கு பிடித்த வாசனையுள்ள பத்தியை கொளுத்தி வையுங்கள்.

    7. அது இயற்கையின் விளையாட்டு. ஆதலால் மிகுந்த மன உறுதியுடன் பழகுங்கள். அப்படி ஒருவேளை இடையில் போக வேண்டி இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு தியானத்தை முடித்து விடுங்கள். காலையில் தியானம் செய்ய முடியாவிட்டால் மாலையில் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

    8. ஓசைகள், குப்பைக்கூளங்கள், தீயவர்கள் உடனிருக்கும் சூழல்களில் தியானம் செய்ய மனம் வராதுதான். முடிந்தவரை சூழலை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லையெனில், தியானம் மனதில்தானே நடக்கின்றது என்பதைத் தெளிவாக புரிந்துக்கொண்டு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தியானம் செய்யுங்கள் .

    9. நோய்கள் வந்தால் தியானத்தை நிறுத்துவது கூடாது. எப்படி ஒருவேளை உணவை நாம் எப்போதும் தவிர்க்க நினைப்பதில்லையோ, எந்த ஒரு நிமிடமும் நாம் சுவாசிப்பதை எப்படி நிறுத்துவதில்லையோ அதுபோல தியானமும் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாற வேண்டும். ஆசனம், தியானம், பிராணாயாமம் ஆகியவற்றை தொடர்ந்து செய்யுங்கள் நோய்களைத் தவிருங்கள்.

    10. தியானத்தை விட்டு விட்டு செய்யாதீர்கள். கண்ட நேரத்திலும், கண்ட இடங்களிலும் அதை செய்யாதீர்கள். காலை 4 மணிக்கோ அல்லது 6 மணிக்கோ, மாலை 6 மணிக்கோ அல்லது இரவு 8 மணிக்கோ தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

    மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தியானத்தை முறையாக கடைபிடிக்க வாழ்த்துக்கள்!

    ×