search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    யோகாசனம் மூலமாக நரைமுடி பிரச்சினைக்கு தீர்வு காணலாம்...
    X

    யோகாசனம் மூலமாக நரைமுடி பிரச்சினைக்கு தீர்வு காணலாம்...

    • இளம் தலைமுறையினர் பலருக்கு இளநரை பிரச்சினை உண்டாகிறது.
    • நரைமுடி வருவதற்கு முக்கிய காரணமான மனஅழுத்தம், யோகா செய்வதால் குறையும்.

    ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மரபணு காரணமாக இளம் தலைமுறையினர் பலருக்கு இளநரை பிரச்சினை உண்டாகிறது. இதற்கு ரசாயனங்கள் கலந்த வண்ணங்கள் பூசுவது, மூலிகைகள் கலந்த எண்ணெய் பயன்படுத்துவது போன்றவை மட்டுமே வழி அல்ல. யோகாசனம் மூலமாகவும் நரைமுடி பிரச்சினைக்கு தீர்வு காணலாம். நரைமுடி வருவதற்கு முக்கிய காரணமான மனஅழுத்தம், யோகா செய்வதால் குறையும். தலைமுடியின் வேர்ப்பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முடி உதிர்தல் நின்று, அடர்த்தி அதிகரிக்கும். இதற்கு உதவும் யோகாசனங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    1. உஷ்ட்ராசனம்: யோகா விரிப்பில் முழங்காலில் நின்று, பின்பக்கமாக லேசாக முதுகை வளைத்து, இரண்டு கைகளினாலும் இரண்டு குதிகால்களைப் பிடிக்க வேண்டும். முகம் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உச்சந்தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து நரைமுடி மற்றும் முடி உதிர்வு குறையும். இந்த ஆசனம் தொடர்ந்து செய்வதால் தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சினைகளையும் குறைக்கலாம்.

    2. அதோ முக ஸ்வானாசனம்: பாதங்களும், உள்ளங்கைகளும் தரையில் படுமாறு மேஜை போன்ற வடிவில் நிற்க வேண்டும். பின்னர், மார்புப்பகுதியை முழங்காலை நோக்கி தள்ளியவாறு, இடுப்பை மேல் நோக்கி உயர்த்தி மலை போல வளைந்து நிற்க வேண்டும். முகம் கால்களை பார்த்தவாறு கீழ்நோக்கி இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை தினமும் சில நிமிடங்கள் செய்து வந்தால் நரைமுடி மறைந்து இயற்கையான கருமை நிறத்தை பெறமுடியும்.

    3. பவன முக்தாசனம்: முதுகுப்பகுதி தரையில் படுமாறு படுத்து, கால்களை மடக்கி தலையைத் தூக்கி, கைகளால் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, நெற்றி முழங்காலை தொடுமாறு செய்யவேண்டும். இந்த நிலையில் தாடைப் பகுதி மார்பை நோக்கி இருக்க வேண்டும். வயிற்றுப்பகுதியில் அழுத்தம் ஏற்படுவதால் குடலியக்கம் சீராகும். நரை நீங்கும்.

    4. திரிகோணாசனம்: இரண்டு கால்களையும் விரித்து, நிமிர்ந்து நின்று கைகளை பக்கவாட்டில் விரித்து உள்ளங்கை பூமியை பார்த்தவாறு வைக்கவேண்டும். பின்னர் உடலை வலது புறமாக வளைத்து வலது கை, வலது கால் அருகில் இருக்குமாறும், இடது கை மேல் நோக்கி இருக்குமாறும் நிற்க வேண்டும். இதேபோல் இடது புறமும் செய்ய வேண்டும்.

    5. ஹலாசனம்: முதுகுப்பகுதி தரையில் படுமாறு நிமிர்ந்து படுத்து இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உடலையொட்டி வைக்க வேண்டும். பின்னர் கால்களை மெதுவாக மேலே உயர்த்தி தலைக்கு பின்னால் கொண்டுபோய், கால் விரல்கள் தரையை தொடுமாறு வளைக்க வேண்டும். அனைத்து ஆசனங்களையும் மருத்துவரின் ஆலோசனையுடன், சிறிது நேரம் இடைவெளி விட்டு செய்ய வேண்டும். தினமும் இவற்றை சீராகக் கடைப்பிடித்தால் எதிர்பார்த்த பலனைப் பெற முடியும்.

    Next Story
    ×