search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவித்துள்ளது.
    இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் உடன் பந்து வீச்சை தொடங்கியது ஆப்கானிஸ்தான். முதலில் இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடியது. வின்ஸ் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. பேர்ஸ்டோவ் 99 பந்தில் 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 29.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். மோர்கன் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்தின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 36 பந்தில் அரைசதம் அடித்த மோர்கன், 57 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய ஜோ ரூட் 54 பந்தில் அரைசதம் அடித்து சதத்தை நோக்கிச் சென்றார்.



    இருவருடைய ஆட்டத்தை வைத்து பார்க்கும்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 400 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 47-வது ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 82 பந்தில் 88 ரன்களும், மோர்கன் 71 பந்தில் 4 பவுண்டரி, 17 சிக்சருடன் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    மோர்கன் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 47 ஓவரில் 359 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 9 பந்தில் 31 ரன்கள் விளாச இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது.




    இங்கிலாந்து 11.2 ஓவரில் 50 ரன்னையும், 19.3 ஓவரில் 100 ரன்னையும், 26.4 ஓவரில் 150 ரன்னையும், 35.1 ஓவரில் 200 ரன்னையும், 39.3 ஓவரில் 250 ரன்னையும், 43.5 ஓவரில் 300 ரன்னையும், 46.2 ஓவரில் 350 ரன்னையும் கடந்தது.

    பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
    டான்டனில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேச அணி.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது. ஷகிப் அல்-ஹசன் சதம் அடித்து அசத்தினார்.

    உலக கோப்பை கிரிக்கெட்

    10 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இதில் டவுன்டானில் நேற்று நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி, வங்காளதேசத்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச அணியின் கேப்டன் மோர்தசா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

    3-வது ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் பவுண்டரியை அடித்தது. 13 பந்துகளை சந்தித்த அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ரன் எதுவும் எடுக்காமல் 4-வது ஓவரில் முகமது சைபுதீன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

    இதனை அடுத்து விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், இவின் லீவிஸ்சுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 24.3 ஓவர்களில் 122 ரன்னை எட்டிய போது இவின் லீவிஸ் (70 ரன்கள், 67 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஷகிப் அல்-ஹசன் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் சபீர் ரகுமானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் (25 ரன்) ஷகிப் அல்-ஹசன் பந்து வீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    இதைத்தொடர்ந்து ஹெட்மயர், ஷாய் ஹோப்புடன் ஜோடி நேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் 75 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். ஹெட்மயர் அதிரடியாக ஆடினார். முகமது சைபுதீன் வீசிய ஒரு ஓவரில் ஹெட்மயர் 2 சிக்சர் தூக்கி அசத்தினார். மொசாடெக் ஹூசைன் வீசிய ஒரு ஓவரில் ஹெட்மயர் பெரிய சிக்சர் விளாசினார். அது 104 மீட்டர் தூரம் சென்றது. 25 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஹெட்மயர் (50 ரன், 26 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன்) அந்த ஓவரிலேயே முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் தமிம் இக்பாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

    அடுத்து வந்த ரஸ்செல் ரன் எதுவும் எடுக்காமல் முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஜாசன் ஹோல்டர் வேகமாக மட்டையை சுழற்றினார். அவர் மோர்தசா பந்து வீச்சில் 105 மீட்டர் தூரத்துக்கு ஒரு சிக்சர் தூக்கி பிரமிக்க வைத்தார். அடித்து ஆடிய ஜாசன் ஹோல்டர் (33 ரன்கள், 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) முகமது சைபுதீன் பந்து வீச்சில் மக்முதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

    இதனை அடுத்து நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் (96 ரன்கள், 121 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் லிட்டான் தாஸ்சிடம் கேட்ச் கொடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். கடைசி பந்தில் டேரன் பிராவோ (19 ரன்) முகமது சைபுதீன் பந்து வீச்சில் போல்டு ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. நடப்பு உலக கோப்பை போட்டி தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணி 300 ரன்களை தாண்டுவது இதுவே முதல்முறையாகும். ஒஷானே தாமஸ் 6 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். வங்காளதேச அணி தரப்பில் முகமது சைபுதீன், முஸ்தாபிஜூர் ரகுமான் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல்-ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட தமிம் இக்பால், சவுமியா சர்கார் இணை தொடக்கம் முதலே அடித்து ஆடியது. வெஸ்ட்இண்டீஸ் அணியின் ஷாட் பிட்ச் பந்து வீச்சை வங்காளதேச வீரர்கள் அச்சமின்றி விளாசினார்கள். இதனால் ரன் வேகமாக உயர்ந்தது. 8.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 52 ரன்னாக இருந்த போது சவுமியா சர்கார் (29 ரன், 23 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) ரஸ்செல் பந்து வீச்சில் கெய்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ஷகிப் அல்-ஹசனும் அடித்து ஆடினார். 13.5 ஓவர்களில் வங்காளதேச அணி 100 ரன்னை எட்டியது. அணியின் ஸ்கோர் 121 ரன்னாக உயர்ந்த போது தமிம் இக்பால் (48 ரன், 53 பந்துகளில் 6 பவுண்டரியுடன்) ஷெல்டன் காட்ரெலால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் 1 ரன்னில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்.

    இதனை அடுத்து லிட்டான் தாஸ், ஷகிப் அல்-ஹசனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணையும் வேகமாக ரன் திரட்டியது. 29 ஓவர்களில் அந்த அணி 200 ரன்னை கடந்தது. இருவரும் அபாரமாக அடித்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ஷகிப் அல்-ஹசன் 83 பந்துகளில் சதம் அடித்தார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 9-வது சதம் இதுவாகும். 41.3 ஓவர்களில் வங்காளதேச அணி 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷகிப் அல்-ஹசன் 99 பந்துகளில் 16 பவுண்டரியுடன் 124 ரன்னும், லிட்டான் தாஸ் 69 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 94 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    உலக கோப்பை போட்டியில் வங்காளதேச அணி, வெஸ்ட்இண்டீசை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் உலக கோப்பை கிரிக்கெட்டில் 2-வது அதிகபட்ச சேசிங் இதுவாகும். இந்த வகையில் 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி 329 ரன்களை விரட்டி பிடித்ததே சாதனையாக உள்ளது.

    காயத்தால் அவதிப்பட்டு வரும் இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பீல்டிங் செய்யும்போது தொடைப்பகுதியில் (Hamstring) காயம் ஏற்பட்டது. இதனால் 8-வது ஓவரில் வெளியேறிய ராய் அதன்பின் பீல்டிங் செய்வதற்கும், பேட்டிங் செய்வதற்கும் வரவில்லை.

    அவருக்கு நேற்றுமுன்தினம் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொடைப்பகுதியில் தசைநார் கிழிந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் நாளை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும், வெள்ளிக்கிழமை நடைபெறும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை காயத்தின் தன்மை கிரோடு-1 ஆக இருந்தால் பிரச்சனை இல்லை. 2 அல்லது அதற்கு மேல் இருந்தால் நீண்ட நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். ஜேசன் ராய்க்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் அல்லது மொயீன் அலி ஆகியோரின் ஒருவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
    உலகக்கோப்பை 23-வது லீக் ஆட்டத்தில் வங்காள தேச அணியின் வெற்றிக்கு 322 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேச அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 23-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல், லிவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் வங்காள தேச அணி மிகவும் சிறப்பாக பந்து வீசியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க பேட்ஸ்மேன்கள் திணறினர். கிறிஸ் கெய்ல் 13 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    அடுத்து லிவிஸ் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. அதன்பின் சிறப்பாக விளையாட ஆரம்பித்தது. லிவிஸ் 67 பந்தில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 25 ரன்னிலும், அந்த்ரே ரஸல் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    ஹெட்மையர் 26 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் சரிந்தாலும் மறுமுனையில் ஷாய் ஹோப் சதத்தை நெருங்கினார். ஆனால், 121 பந்தில் 96 ரன்கள் எடுத்த நிலையில் சதம் அடிக்கும் வாய்பை கோட்டைவிட்டார்.


    அந்த்ரே ரஸல்

    ஜேசன் ஹோல்டர் 15 பந்தில் 33 ரன்களும், டேரன் பிராவோ 15 பந்தில் 19 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. வங்காள தேச அணியில் முகமது சாய்புதின் 10 ஓவரில் 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். முஷ்டாபிஜூர் ரஹ்மான் 9 ஓவரில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 322 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேச அணி பேட்டிங் செய்து வருகிறது.
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல் பூரிப்படைந்துள்ளார்.
    மான்செஸ்டரில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி 78 பந்தில் 57 ரன்கள் சேர்த்தார். ரோகித் சர்மாவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 23.5 ஓவரில் 136 சேர்த்தார். இந்தியாவின் ரன்குவிப்புக்கு இவர்கள் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

    நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக என்னுடைய முதல் சர்வதேச போட்டி இதுவாகும். அற்புதமான முதல் வாய்ப்பு எனக்கு உலகக்கோப்பையில் கிடைத்துள்ளது. ஆகவே, அணி வீரர்கள் உங்களுக்கு நம்பிக்கை அளித்து வாய்ப்பு கிடைத்து நாட்டிற்காக சிறப்பாக விளையாடும்போது இதைவிட பெரியதாக ஏதும் கேட்க முடியாது’’ என்றார்.
    உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2003-ம் ஆண்டு சச்சின் தெண்டுல்கரும், 2019-ம் ஆண்டு ரோகித் சர்மாவும் அடித்த ஒரே மாதிரியான சிக்சர் வைரலாகி வருகிறது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதில் ஆட்டநாயகனாக ஹிட்மேன் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். அவர் 113 பந்துகளை சந்தித்து 140 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இந்த ஆட்டத்தின்போது ஹசன் அலி வீசிய பந்தை ரோகித் சர்மா சிக்சர் அடித்தார். ரோகித் சர்மா ஷாட், 2003-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சோயிப் அக்தர் ஓவரில் சச்சின் தெண்டுல்கர் அடித்தது போன்றே இருந்தது.



    இரண்டு பேர் அடித்த அந்த ஷாட் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. 2003 ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 98 ரன்கள் எடுத்த சச்சின் தெண்டுல்கர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இருவரும் அடித்த அந்த சிக்சரை ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


    பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா, பாகிஸ்தான் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நறுக்கென பதில் அளித்துள்ளார்.
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மாவின் (140 ரன்) அதிரடி ஆட்டத்தால் 336 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கனே சேர்த்தது.

    டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 140 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    போட்டி முடிந்த பின்னர் இந்திய துணைக் கேப்டனான ரோகித் சர்மா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாகிஸ்தான் பத்திரிகையாளர் ரோகித் சர்மாவிடம், ‘‘நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். இதற்காக நான் உங்களை பாராட்டுகிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறது.

    பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனத்திற்குள்ளாக வருகிறார்கள். அவர்கள் விமர்சனத்தில் இருந்து வெளியே வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நீங்கள் ஆலோசனை கூறுவதாக இருந்தால், அது என்னவாக இருக்கும்?’’ என்று கேட்டார்.

    அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா ‘‘நான் எப்போதாவது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரானால், இந்த கேள்விக்கு பதில் அளிக்கிறேன்’’ என்று நறுக்கென கூறினார்.
    பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஐபிஎல் தான் காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

    உலகக்கோப்பைத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின இப்போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி  89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்கவைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7வது முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி.

    இந்நிலையில் பாகிஸ்தான்  அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி இந்த வெற்றி குறித்து கூறுகையில், ‘இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் திறன் அதிகமாகியுள்ளது. தகுதியான வெற்றியைப் பெற்றுள்ள பிசிசிஐக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் ஐபிஎல் தான்.   ஐபிஎல் இளம் வீரர்களைக் கண்டறிவதோடு நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடவும் கற்றுக்கொடுத்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணிக்கெதிராக 23 வருட சச்சின், சித்து சாதனையை ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஜோடி நேற்றைய போட்டியின்போது முறியடித்தது.

    உலகக்கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது. மேலும் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 100 சதவீதம் வெற்றியை தொடர்கிறது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 113 பந்தில் 140 ரன்னும் (14 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 65 பந்தில் 77 ரன்னும் (7 பவுண்டரி), லோகேஷ் ராகுல் 78 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா - ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது. இதற்கு முன்பாக 1996-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின்- சித்து ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 23 வருடங்களுக்கு பிறகு ரோகித், ராகுல் ஜோடி முறியடித்துள்ளது.

    பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 287 ரன்கள் எடுத்திருந்தது. இதில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.



    மான்செஸ்டர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 336 ரன் குவித்து 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியாவுக்கு எதிராக எந்தவித எதிர்தாக்குதலும் இல்லாமல் சரணடைந்ததால் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுவை சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.
    மான்செஸ்டர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது.

    இதைத்தொடர்ந்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. கடின இலக்கை அடைய முடியாமல் போராடிய பாகிஸ்தானின் ஆட்டம் மழையால் தடைபட்டு, பின்னர் விளையாடி டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பராஸ் அகமது மைதானத்தில் கீப்பிங் செய்தபடியே, கொட்டாவி விட்டு கொண்டிருந்தார். அவரது அனிச்சையான இந்தச்செயலை நெட்டிசன்கள் தற்போது சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.

    இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இம்ரான்கான் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார். கடைசி பந்து வரை போராடும்படியும், டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யுமாறும் அவர் கேட்டு இருந்தார்.

    ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது இம்ரான் கானின் அறிவுரையை நிராகரித்தார். டாஸ் வென்ற அவர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையும் விமர்சித்து உள்ளனர். இந்நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் மூளையில்லாத கேப்டன் என சர்பராஸ் அகமது மீது சாடியுள்ளார்.

    இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘முதலில் பீல்டிங் தேர்ந்தெடுத்ததன் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய தவறு செய்தது. பாகிஸ்தான் 260-280 ரன்கள் எடுத்திருந்தாலும், பந்து வீச்சின் மூலம் இந்தியாவை கட்டுப்படுத்தியிருக்கலாம்.



    சர்பராஸ் அகமது எப்படி மூளையில்லாதவர் போன்று செயல்பட்டார் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் அணியால் சிறப்பாக சேஸிங் செய்ய முடியாது என்பதை அவர் எப்படி மறந்தார்?. நம்முடைய பலமே பந்து வீச்சுதான் என்பது தெரியும். இதுதான் முக்கியமானது. சர்பராஸ் அகமது டாஸ் வென்றபோதே பாகிஸ்தான் பாதியளவு வெற்றி பெற்றது. ஆனால், இந்த போட்டியை தோற்றகடிக்க அவர் கடினமான முயற்சி செய்துவிட்டார்.

    இந்த போட்டி 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் கண்ணாடிப்படம் போன்றது. அன்றைய தினம் இந்தியா செய்த அனைத்து தவறுகளையும் பாகிஸ்தான் செய்தது’’ என்றார்.
    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. மைதானத்துக்கு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    நேற்றைய ஆட்டத்தில் கோலி நடுவர் அவுட் கொடுப்பதற்கு முன்பே வெளியேறினார். ஆனால் டெலிவிசன் ரீபிளேயில் பந்து மட்டையில் படாமல் இருந்தது தெளிவாக இருந்தது தவறாக கணித்து கோலி வெளியேறினார்.

    கோலியின் இந்த செயலை பார்த்து அவருக்கு அமைதிக்கான நோபால் பரிசு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலை தளங்களில் தெரிவித்து உள்ளனர்.
    டான்டனில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் வங்காள தேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேச அணிகள் மோதும் உலகக்கோப்பையின் 23-வது லீக் ஆட்டம் டான்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
    ×