search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    இங்கலாந்தில் திடீர் மழையால் உலகக்கோப்பை போட்டிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதால் சில அணிகள் நெருக்குடிக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
    மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இதுவரை 15 ஆட்டங்கள் முடிந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் மிகவும் முக்கியமான தொடரில் மழையால் போட்டி பாதிக்கப்படுவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. 2 ஆட்டங்கள் இதுவரை மழையால் கைவிடப்பட்டுள்ளது.

    கடந்த 7-ந்தேதி பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பிரிஸ்டோல் மைதானத்தில் மோத வேண்டிய ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது. தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் சவுத்தாம்ப்டனில் நேற்று மோதிய ஆட்டம் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.



    மழையால் ஆட்டம் ரத்து செய்யப்படும்போது இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படுகிறது. முன்னணி அணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

    தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே 3 ஆட்டத்தில் தோற்றுவிட்டது. வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்று 2 புள்ளியை பெறும் ஆர்வத்தில் இருந்தது. மழையால் 1 புள்ளி மட்டுமே கிடைத்தது. இது அந்த அணியை பாதித்து இருந்தது.

    இதேபோல் பலவீனமான தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது வெற்றி பெறும் வேட்கையில் வெஸ்ட்இண்டீஸ் இருந்தது. 1 புள்ளி மட்டுமே கிடைத்ததால் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இதற்கிடையே இங்கிலாந்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேலும் சில ஆட்டங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இன்று பிரிஸ்டோல் மைதானத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம். 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



    இதேபோல ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் சவுத்தாம்ப்டனில் மோத உள்ள ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட இருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் வருகிற 13-ந்தேதி நாட்டிங்காமில் மோதுகின்றன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட 70 சதவீத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஹர்திக் பாண்டியாவிற்கு முழு சுதந்திரம் கொடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 9-ந்தேதி) நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 117 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 316 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது.

    4-வது வீரராக களம் இறக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 27 பந்தில் 48 ரன்கள் விளாசினார். இந்திய அணி 352 ரன்கள் குவிப்பதற்கு இவரது அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

    வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியா உடனான போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 4-வது வரிசையில் ஹர்திக் பாண்டியாவை களமிறக்கியது வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. ஏனென்றால் அந்த இடத்தில் பாண்டியாவை களமிறக்க வேண்டும் என்பது பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகம் எடுத்த முடிவாகும்.


    பாண்டியா களத்திற்கு வந்த உடன் தனது இயல்பான ஆக்ரோசம் மிகுந்த ஆட்டத்தினை ஆட என்னிடம் அனுமதி கேட்டார். அந்த சூழ்நிலையில் நாங்கள் 220 ரன்கள்தான் (37 ஒவர்) எடுத்திருந்தோம். ஒருவேளை தனது ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது பாண்டியா ‘அவுட்’ ஆனாலும் அடுத்து களமிறங்கும் டோனி போன்ற வீரர்கள் நிலமையை கட்டுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

    ஆகையால் பாண்டியா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதி அளித்தேன். அதன் விளைவாக பாண்டியா 48 ரன்கள் (27 பந்துகள்) விளாசினார். பின்னர் வந்த டோனியும் அதிரடியாக ஆடி 27 ரன்கள் (14 பந்துகள்) எடுத்தார். டோனி மற்றும் பாண்டியா போன்ற வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகக்கோப்பையில் இந்திய அணி இரண்டு வெற்றிகள் (தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா) பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் வரும் 13-ந்தேதி( வியாழக்கிழமை) நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ள 18-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
    இந்திய அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடும் இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் இடம் பெற்றிருந்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். நாளை மறுநாள் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் நிலையில் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டது. காயம் குறித்து பரிசோதித்த இந்திய அணி மருத்துவ குழு 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

    இதனையடுத்து தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ஆப்கானிஸ்தான் வீரர் மொகமது ஷாசாத் முழு உடல் தகுதியோடு இருப்பதாகவும் தனக்கு எதிராக சதி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த ஷாஜத், ஜூன் 1 மற்றும் ஜூன் 4 தேதிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார்.

    ஆனால், ஜூன் 8 அன்று நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக  "முழங்கால் காயம்" காரணமாக அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார் என ஆப்கானிஸ்தான் நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில் "நான் விளையாடுவதற்கு போதுமான உடல் தகுதியுடன் இருக்கிறேன்,  என்னை ஏன் தகுதியற்றவர் என அறிவித்தனர் என்று எனக்குத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் நிர்வாகம் எனக்கு எதிராக சதி செய்கின்றது என ஷாசாத் தெரிவித்து உள்ளார்.

    அணியின் மேலாளர், மருத்துவர் மற்றும் கேப்டன் ஆகியோர்க்கு மட்டுமே எனக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்போவதாக அறிந்திருந்தனர். பயிற்சியாளருக்கு கூட பிறகு தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது. என "32 வயதான ஷாசாத், காபூலில் இருந்து PTI இடம் கூறினார்.

    நியூசிலாந்தின் விளையாட்டுக்காக "எனது பயிற்சியை நான் முடித்துவிட்டு எனது தொலைபேசியை நான் பார்த்த பிறகு தான் முழங்கால் காயம் காரணமாக உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்பது எனக்கு தெரியும் என அவர் தெரிவித்து உள்ளார்.

     இது குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி அசாதுல்லா கான் கூறியதாவது,

    ஷாசாத் உண்மையில் உடல் தகுதியற்றவர் எனவே தான் அவருக்கு வாய்ப்பு  வழங்க முடியவில்லை. இது குறித்த முழு விவர அறிக்கையை ஐசிசியிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்தார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் 15-வது லீக் ஆட்டமான தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு உள்ளது.
    தென்ஆப்பிரிக்கா தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனை அடுத்து இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய நிலையில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 6 ரன்களிலும் அதனையடுத்து மார்க்கம் 5 ரன்களிலும் அவுட் ஆனதால் 7.3 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி 29 ரன்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து நிண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது என நடுவர்கள் அறிவித்தனர்.  எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டி ரத்தானதால் தென் ஆப்பிரிக்கா தனது முதல் புள்ளியை பெற்று உள்ளது. ஏற்கனவே இதே தொடரில் இலங்கை-பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து நடைபெறும் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    லண்டன் ஓவல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பல்வேறு சாதனைகளுக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 316 ரன்னில் ஆல்அவுட் ஆகி 36 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் பல்வேறு சாதனைகளுக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்தியா.

    1. உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா சேஸிங்கில் 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்தித்திருந்தது. அதன்பின் தொடர்ச்சியாக 19 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு தற்போது இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    2. இந்தியா 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. அதன்பின் தற்போது வீழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பை வரலாற்றில் இந்த வெற்றியோடு நான்குமுறை ஆஸ்திரேலியாவை சாய்த்துள்ளது.



    3. ஆஸ்திரேலியா தொடர்ந்து 11 ஒருநாள் போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருந்தது. அதற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    4. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் எதிரணி வீரர்கள் சதம் கண்ட கடைசி ஐந்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றிவாகை சூடி சதத்தை பயனற்றதாக்கியுள்ளது. அதை தவான் மாற்றி காட்டியுள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் 15-வது லீக்கில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் இன்று மதியம் 3 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய நிலையில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லிவிஸ், அந்த்ரே ரஸல் ஆகியோரை இடம் பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக ரோச் மற்றும் டேரன் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளனர்.
    உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் லண்டன் ஓவலில் நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் கோதாவில் இறங்கியது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஷிகர் தவானும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். களத்தில் காலூன்றி தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்காக இருவரும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைப்பிடித்தனர். முதல் 7 ஓவர்களில் இந்தியா 22 ரன்களே எடுத்தது. அதன் பிறகு நாதன் கவுல்டர்-நிலேயின் ஓவரில் ஷிகர் தவான் 3 பவுண்டரியை விரட்டியடித்து ரன்வேட்டையை ஆரம்பித்து வைத்தார். ஏதுவான பந்துகளை அவ்வப்போது எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்ட இவர்கள் 19-வது ஓவரில் 100 ரன்களை எட்ட வைத்தனர். உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த முதல் இந்திய ஜோடி என்ற மகிமையை பெற்ற இவர்கள் அணியின் ஸ்கோர் 127 ரன்களாக (22.3 ஓவர்) உயர்ந்த போது பிரிந்தனர். ரோகித் சர்மா 57 ரன்னில் (70 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி ஆட வந்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய ஷிகர் தவான் 17-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

    அணி மிரட்டலான ஸ்கோரை நோக்கி பயணிக்க வித்திட்ட ஷிகர் தவான் தனது பங்குக்கு 117 ரன்கள் (109 பந்து, 16 பவுண்டரி) விளாசிய நிலையில், மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா களம் புகுந்தார். சந்தித்த முதல் பந்திலேயே பாண்ட்யா வெளியேறி இருக்க வேண்டியது. கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஹர்திக் பாண்ட்யா, ஆஸ்திரேலிய பவுலர்கள் மேக்ஸ்வெல், ஜம்பா, கம்மின்ஸ் உள்ளிட்டோரின் பந்து வீச்சில் சிக்சர் அடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.



    இதற்கு மத்தியில் விராட் கோலி 50-வது அரைசதத்தை எட்டினார். 45.4 ஓவர்களில் இந்தியா 300 ரன்களை தாண்டியது. இதற்கு அடுத்த பந்தில் ஹர்திக் பாண்ட்யா 48 ரன்களில் (27 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.

    அவருக்கு பிறகு மூத்த வீரர் டோனி இறங்கினார். டோனியும் சில அபாரமான ஷாட்டுகளை தெறிக்கவிட்டு, மேலும் வலுவூட்டினார். டோனியும் (27 ரன், 14 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), விராட் கோலியும் (82 ரன், 77 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தனர்.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் நமது வீரர்கள் 116 ரன்கள் சேகரித்து மலைக்க வைத்தனர். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஓரளவு கைகொடுத்தாலும் ஆஸ்திரேலியாவின் பீல்டிங் வியப்புக்குரிய வகையில் இருந்தது. இல்லாவிட்டால் இந்தியாவின் ஸ்கோர் இன்னும் அதிகரித்து இருக்கும்.

    அடுத்து களம் கண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முதல் 9 ஓவர்களில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிரடியை தொடங்கிய சமயத்தில்ஆரோன் பிஞ்ச் (36 ரன்) ரன்-அவுட் ஆனார். அதன் பிறகு சீரான இடைவெளியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தன. வார்னர் 56 ரன்னிலும் (84 பந்து, 5 பவுண்டரி), ஸ்டீவன் சுமித் 69 ரன்னிலும் (70 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர். ரன்தேவை அதிகரித்து கொண்டே போனதால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் போல் தோன்றிய போது, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டியதால் வெற்றி தாமதம் ஆனது. 50 ஓவர் முழுமையாக ஆடிய ஆஸ்திரேலியா 316 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அலெக்ஸ் கேரி 55 ரன்களுடன் (35 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.

    ஆஸ்திரேலிய அணி கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது. அவர்களின் வீறுநடைக்கு இந்தியா இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்த இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஆஸ்திரேலியாவுக்கு முதல் தோல்வியாகும். ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
    தவான் சதமடிக்க விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அரைசதம் விளாச ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தவான் மற்றும் ரோகித் சர்மா தொடக்கத்தில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டனர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 11.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 19 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. தவான் சிறப்பாக விளையாடி 53 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.



    அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 61 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி 22.3 ஓவரில் 127 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. ரோகித் சர்மா 70 பந்தில் 57 ரன்கள் (3 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்த நிலையில் நாதன் கவுல்டர் நைல் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. தவான் 95 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 109 பந்தில் 117 ரன்கள் (16 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 37 ஓவரில் 220 ரன்கள் சேர்த்திருந்தது.

    ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், 4-வது வீரராக ஹர்திக் பாண்டியா களம் இறக்கபட்டார். அவர் அதிரடியாக விளையாடி 27 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 48 ரன்கள் குவித்தார். இதற்கிடையே விராட் கோலி 55 பந்தில் 3 பவுண்டரியுடன் தனது 50-வது அரைசதத்தை பதிவு செய்தார்.

    கோலி, ஹர்திக் பாண்டியா ஆட்டத்தால் இந்தியா 45.4 ஓவரில் 300 ரன்னைக் கடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா உலகக்கோப்பையில் முதன்முறையாக 300 ரன்னைக் கடந்து சாதனைப் படைத்தது. பாண்டியா ஆட்டமிழந்ததும் எம்எஸ் டோனி களமிறங்கினார்.



    டோனி அதிரடியாக விளையாடி 14 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ரன்கள் விளாசினார். விராட் கோலி 77 பந்தில் 82 ரன்கள் சேர்த்து கடைசி பந்துக்கு முந்தைய பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் லோகேஷ் ராகுல் பவுண்டரி அடிக்க இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

    பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஐசிசி தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், கங்குலிக்கு அடுத்த இடத்தை தவான் பிடித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். லண்டன் ஓவல் மைதானத்தில் இது அவருக்கு 3-வது சதமாகும்.

    ஐசிசி தொடரில் (சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக்கோப்பை) எப்போதுமே தவான் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த சதம் மூலம் ஐசிசி தொடரில் 6 சதங்கள் விளாசியுள்ளார். இதன்மூலம் ஐசிசி தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங், சங்ககராவுடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர், கங்குலி தலா 7 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளனர்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் குவித்துள்ள இந்தியா, 350 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தவான் மற்றும் ரோகித் சர்மா தொடக்கத்தில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டனர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 11.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 19 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. தவான் சிறப்பாக விளையாடி 53 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.



    அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 61 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் சேர்த்துள்ளது. இருவரும சிறப்பாக விளையாடி வருவதால் இந்தியா 350 ரன்களை தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது.
    லண்டன் ஓவலில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்டப்பட்டது.

    இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    இந்தியா:

    ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார் அல்லது குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

    ஆஸ்திரேலியா அணி விவரம்:

    டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.
    ×