search icon
என் மலர்tooltip icon

    உலக கோப்பைச்செய்திகள்

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. நியூசிலாந்து-இலங்கை, ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    கார்டிப்:

    இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று (சனிக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கார்டிப்பில் அரங்கேறும் 3-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.

    1996-ம் ஆண்டு சாம்பியனான இலங்கை அணி கருணாரத்னே தலைமையில் களம் காணுகிறது. சமீப காலங்களில் இலங்கை அணியின் செயல்பாடு சிறப்பாக அமையவில்லை. அந்த அணி தனது கடைசி 9 ஒரு நாள் போட்டியில் 8-ல் தோல்வியை சந்தித்தது. உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வி கண்டது. இளம் வீரர்களை அதிகம் கொண்ட இலங்கை அணி ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இருப்பினும் கூட்டாக சிறப்பாக செயல்பட்டால் அந்த அணியால் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆற்றல் உண்டு.

    கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நல்ல நிலையில் உள்ளது. பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் ஆகியோரும் பவுலிங்கில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, மிட்செல் சான்ட்னெர் ஆகியோரும் சிறந்த நிலையில் இருக்கிறார்கள். உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசிடம் வீழ்ந்தது. காயத்தால் அவதிப்பட்டு வரும் டாம் லாதம் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது.

    ரன் குவிப்புக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த இலங்கை அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும். இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.



    இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் பிளன்டெல், காலின் டி கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சோதி.

    இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), திரிமன்னே, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, இசுரு உதனா, மலிங்கா, சுரங்கா லக்மல், ஜெப்ரே வாண்டர்சே.

    பிரிஸ்டலில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, கத்து குட்டி அணியான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் வருகைக்கு பிறகு வலுவான நிலையை எட்டி இருக்கும் ஆஸ்திரேலிய அணி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து, இலங்கையை சாய்த்தது. தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் டேவிட் வார்னர் உடல் தகுதியை எட்டினால் தான் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.

    ஆப்கானிஸ்தான் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஆஸ்திரேலிய அணியினருக்கு எந்த அளவுக்கு குடைச்சல் கொடுப்பார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியே வெற்றியை சுவைக்கும் என்பதே எல்லோருடைய கணிப்பாகும்.

    இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்புகிறது.

    இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா அல்லது ஷான் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் கவுல்டர் நிலே, நாதன் லயன் அல்லது ஆடம் ஜம்பா.

    ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜஜாய், முகமது ஷாசத், நூர் அலி ஜட்ரன், ஹஸ்மத்துல்லா ஷகிடி, அஸ்ஹார் ஆப்கன், குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், தவ்லத் ஜட்ரன், முகமது நபி, ரஷித் கான், அப்தாப் ஆலம்.
    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 105 ரன்களில் சுருட்டியது.
    நாட்டிங்காம்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் ஹோல்டரின் இந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    துவக்க வீரர் இமாம் உல் ஹக் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பகார் ஜமான்-பாபர் ஆசம் இருவரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த ஜோடியை ரஸல் பிரித்தார். பகார் ஜமான் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபாபர் ஆசமும் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.


    ஹாரிஸ் சோகைல் (8), சர்பிராஸ் அகமது (8), இமாத் வாசிம் (1), சதாப் கான் (0), ஹசன் அலி (1) என அடுத்தடுத்து அவுட் ஆகினர். சரிவில் இருந்து மீட்டெடுக்க கடுமையாகப் போராடிய முகமது ஹபீஸ் 16 ரன்களும், வகாப் ரியாஸ் 18 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால், 21.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 105 ரன்களில் சுருண்டது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் 4 விக்கெட்டுகளும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ரஸல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது.
    நாட்டிங்காம்:

    ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30 தொடங்கி ஜூலை 14ந்தேதி வரை 11 இடங்களில் நடைபெறுகிறது. 

    இன்று நாட்டிங்காமில்  நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. 



    நிதானமாக விளையாடிய துவக்க வீரர் இமாம் உல் ஹக் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பக்கார் ஜமான், பாபர் ஆசம் இணைந்தனர்.

    இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் வருமாறு:

    மேற்கிந்திய தீவுகள்

    கிறிஸ் கெயில், சாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), டேரன் பிராவோ, சிம்ரோன் ஹெட் மயர், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வெயிட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ்

    பாகிஸ்தான்

    இமாம் உல் ஹக், ஃபகார் ஜமான், பாபர் ஆசம், ஹாரிஸ் சோஹைல், முகமது ஹபீஸ், சர்பராஸ் அஹ்மத் (கேப்டன்), இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமீர்.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
    நாட்டிங்காம்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது.

    பாகிஸ்தான் அணி தான் கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது. அத்துடன் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

    1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் கணிக்க முடியாத ஒரு அணியாகும். தனக்குரிய நாளில் அந்த அணி எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை படைத்தது. பாபர் அசாம், பஹார் ஜமான், இமாம் உல்-ஹக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது அமிர், ஷதப் கான், ஆசிப் அலி ஆகியோர் சரியான பங்களிப்பை அளிப்பார்கள் எனலாம்.



    1970-களில் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட்இண்டீஸ் அணி சமீப காலங்களில் சரிவை சந்தித்தது. அயர்லாந்தில் நடந்த 3 நாடுகள் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி, வங்காளதேச அணியிடம் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. ஆனால் கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல், இவின் லீவிஸ் ஆகியோர் அணிக்கு திரும்பிய பிறகு வெஸ்ட்இண்டீஸ் புதிய எழுச்சி கண்டு இருப்பதை உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 421 ரன்கள் குவித்ததுடன் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களும், ஆல்-ரவுண்டர்களும் அதிகம் இருக்கிறார்கள். அந்த அணியின் பந்து வீச்சு பக்க பலமாக அமைந்து விட்டால் அந்த அணி வலுவான அணிக்கும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை தொடங்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இன்றைய ஆட்டத்துக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அல்லது முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாத் வாசிம் அல்லது சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதப்கான், முகமது அமிர், ஹசன் அலி, ஷகீன் அப்ரிடி.

    வெஸ்ட்இண்டீஸ் : கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், டேரன் பிராவோ, ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், ஆஷ்லே நர்ஸ், கெமார் ரோச், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ் அல்லது ஷனோன் கேப்ரியல்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 
    ×