என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அசாம்
- சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது.
- சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் பட்சத்தில் மகாராஷ்டிரத்தில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும்.
கவுகாத்தி:
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த மேல்சபை தேர்தலில் பா.ஜனதா 3 இடத்தை பிடித்தது. கூடுதலாக ஒரு இடத்தை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த மகாராஷ்டிர எம்.எல்.சி. தேர்தலிலும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு போட்டனர். பா.ஜனதாவின் 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தோல்வி அடைந்தார். மொத்தம் உள்ள 10 இடங்களில் சிவசேனா கூட்டணி, பா.ஜனதா தலா 5 இடங்களில் வெற்றி பெற்றன. பா.ஜனதாவுக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைத்தது.
மேல்சபை எம்.பி. தேர்தலை போல எம்.எல்.சி. தேர்தலிலும் திடீர் திருப்பம் ஏற்பட்டதால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி கோஷ்டி உருவானது. அவருடைய தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் இருந்து பா.ஜனதா ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு சென்றனர். அங்குள்ள சொகுசு ஓட்டலில் அவர்கள் தங்கி இருந்தனர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களான பட்னாவிஸ் நாராயணரானே ஆகியோர் ஏக்நாத் ஷிண்டே தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானது.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் ஆகியோர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்று தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தெரிவித்துள்ளன.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை உத்தவ் தாக்கரே சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குஜராத்தில் இருந்து இன்று அதிகாலை அசாம் மாநிலம் கவுகாத்தி சென்றனர். அங்கும் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.
மும்பையில் இருந்து சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்ததால் அவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
சிவசேனாவின் இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அசாம் பா.ஜனதா தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். முதல்-மந்திரி ஹேமந்த் பிஸ்வாசும் அவர்களை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனக்கு 46 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதில் 40 பேர் சிவசேனாவை சேர்ந்தவர்கள். 6 பேர் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள்.
இதுதொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-
சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 46 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது. நான் பால்தாக்கரேயின் சிவசேனாவை விட்டு செல்ல மாட்டேன். நாங்கள் இந்துத்துவாவை நம்ப கூடியவர்கள். சிவசேனாவை ஒருபோதும் இரண்டாக உடைக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் சிவசேனாவுக்கு 55 உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரசுக்கு 53 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 உறுப்பினர்களும் உள்ளனர். சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் 12 பேர் அரசுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசின் ஆதரவு 164 உள்ளது.
எதிர்கட்சியான பா.ஜனதாவுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் 15 பேர் ஆதரவாக உள்ளனர். இதனால் பா.ஜனதா கூட்டணி பலம் 121 ஆக உள்ளது. மஜ்லிஸ் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
பெரும்பான்மைக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தற்போது சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் பெரும்பான்மை இழந்து ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் சிவசேனாவின் முயற்சி தொடர்ந்து தோல்வி அடைந்தது. இதனால் பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர சட்டசபையை கலைக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மகாராஷ்டிர சட்டசபை கலைக்கப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று பிற்பகல் மகாராஷ்டிர மந்திரி சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் பட்சத்தில் மகாராஷ்டிரத்தில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும். சிவசேனா அதிருப்தி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
- அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
- மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்து செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கவுகாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அசாம், மேகாலயா மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
தொடர்மழை காரணமாக அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதையுண்டும் அசாமில் இதுவரை 82 பேர் பலியாகி உள்ளனர். இதனை மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் பலியாகி உள்ளனர். தர்ராங், நாகோன், கச்சார், திப்ரூகர், ஹோஜாய், ஹைலகண்டி போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.
மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 2.31 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்து செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இதுபோல தேசிய விலங்குகள் பூங்காவிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள விலங்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அசாம் வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை டெலிபோனில் அழைத்து நிலவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் அசாமில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.
- வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து 4,500 உள்ளூர்வாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
- பிரம்மபுத்திரா ஆற்றில் 9 பேர் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கினர்.
கவுகாத்தி:
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டள்ள அசாம் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் ராணுவ வீரர்கள் 4வது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கியிருந்த நோயாளிகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 4500 உள்ளூர்வாசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண முகாம்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கச்சார் மாவட்டத்தில் உள்ள போராகாய் தேயிலைத் தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் அசாம் முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே திப்ருகரின் ரோமோரியாவில் பிரம்மபுத்திரா ஆற்றில் 9 பேர் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கினர். 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
- வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 1.56 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் 32 மாவட்டங்களில் மொத்தம் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெள்ள பாதிப்புகள் குறித்து மாநில முதல் மந்திரியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் பிரதமர் மோடி கவலை.
- அசாம் மாநில முதல்வர் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 28 மாவட்டங்களில் 18.95 லட்சம் பேர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரழிவில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அழைத்து மாநிலத்தின் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை 6 மணிக்கு என்னை தொடர்புக் கொண்டு அசாமில் வெள்ள நிலவரம் குறித்து விசாரித்தார். இந்த இயற்கை பேரிடரால் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். அப்போது, பிரதமர் மோடி மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். அவரது உறுதியளிக்கும் பெருந்தன்மையால் தாழ்மையடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அசாமில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
- அசாம் மாநிலத்தை போல மேகாலயா மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.
கவுகாத்தி:
அசாம், மேகாலயா மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக மாநிலம் முழுவதும் 2930-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஹோஜாய், நல்பாரி, பஜாலி, துப்ரி, கம்ரூப், கோக்ராஜார், சோனித்பூர் மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பகலாடியா, புத்திமாரி, ஜியா பரலி, கோபிலி, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி ஓடுகிறது. பல இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்து விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது.
இதன் காரணமாக பயிர் நிலங்கள் சேதம் அடைந்துள்ளது. சுமார் 43 ஆயிரத்து 398 ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அசாமில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் இடிந்தும், மரம் முறிந்து விழுந்தும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தில் மட்டும் மழைக்கு இதுவரை 54 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 7 பேர் இறந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தை போல மேகாலயா மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இங்குள்ள மயிஸ்னராம் பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1003.6 மி.மீட்டர் மழை பெய்தது.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இவர்களை ரப்பர் படகுகள் மூலம் முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.
- அசாமில் 25 மாவட்டங்கள் வெள்ளம் நில சரிவுகளால் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளன.
- 11.09 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாள் மூடும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகளை நடத்த விதிவிலக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு கம்ரூப் மாவட்ட பேரிடர் மேலாண் கழகத்தின் துணை ஆணையாளர் மற்றும் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உயிரிழந்த 4 தொழிலாளர்கள அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள்.
- அடுத்த மூன்று நாட்களுக்கு அசாம் மற்றும் மேகாலயாவில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள போரகான் அருகே நிசார்பூரில் கனமழையால் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் 4 பேர் நிலச்சரிவால் ஏற்பட்ட இடியாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர குழுவினர் சடலங்களை மீட்டுள்ளனர். உயிரிழந்த 4 பேரும் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் என்றும், கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் பின்னர் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை உதவி ஆணையர் நந்தினி காகதி கூறியதாவது:-
வீட்டில் நான்கு கூலித்தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மண் சரிவு வீட்டிற்குள் புகுந்தது. இதில் தொழிலாளர்கள் 4 பேரும் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து உள்ளூர் வாசிகளிடம் இருந்து தகவல் தெரியவந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டன. இதில் மூன்று பேர் துப்ரிசையச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் கோக்ரஜாரைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு அசாம் மற்றும் மேகாலயாவில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மக்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்