search icon
என் மலர்tooltip icon

    அசாம்

    • பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுகாத்தி:

    அசாமின் சில்சார் பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் ராஜ்தீப் ராய். இவரது வீட்டில் வீட்டில் கச்சார் மாவட்டத்தின் பலோங் காட் பகுதியை சேர்ந்த பெண் வேலை செய்து வருகிறார். இதற்காக ராஜ்தீப் ராய் எம்.பி.யின் வீட்டில் ஒரு பகுதியில் அந்த பெண், தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் 10 வயது மகன் நேற்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினான். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் வீடியோ கேம் விளையாட அவனது தாய் மொபைல் போன் கொடுக்காததால் தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பக்கவாட்டு சுவற்றில் பேட்மிண்டன் பிரபலங்கள் படங்கள்
    • வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர இருக்கைகள் அமைப்பு

    பொதுவாக மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதி வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படும். சில இடங்களில் பூங்கா உருவாக்கி, பயன்படுத்தப்படும். ஆனால், அசாமில் உள்ள ஒரு இடத்தில் தொழில் அதிபர் ஒருவரால் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதி அழகிய பேட்மிண்டன் மைதானமாக உருவாகியுள்ளது.

    அசாம் மாநிலம் ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள நா-அலி (Na-Ali) ரெயில்வே பாலம் செல்கிறது. ரெயில்வே பாலத்திற்கு கீழ் நீளமான இடம் காலியாக இருந்தது. இந்த இடத்தை பேட்மிண்டன் மைதானமாக மாற்றினால் என்ன? என அந்த பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.பி. அகர்வாலாவிற்கு தோன்றியது.

    இதுகுறித்து ஜோர்ஹாட் மாவட்ட பேட்மிண்டன் நிர்வாகத்தை அணுக, அவர்களும் அனுமதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து அகல்வாலா அந்த இடத்த அழகிய பேட்மிண்டன் மைதானமாக மாற்றினார். சுவற்றின் இரு புறங்களிலும், பேட்மிண்டன் பிரபலங்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

    வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நுழைவுத் தேர்வு மிகவும் குறைவாக நிர்ணயிக்க இருப்பதால், பேட்மிண்டன் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.

    இந்த மைதானத்தை ஜோர்ஹாட் பேட்மிண்டன் சங்கம் பராமரிக்கும் என அசாம் மாநில பேட்மிண்டன் சங்க செயலாளர் திகான்டா புர்காகோஹைன் தெரிவித்துள்ளார்.

    தொழில் அதிபர் அகர்வாலா, தனது தந்தையின் நினைவாக இந்த மைதானத்தை கட்டி கொடுத்துள்ளார். கடந்த 16-ந்தேதி இந்த மைதானத்தை அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மான தொடங்கி வைத்தார். விரைவில் இந்த மைதான நடைமுறை பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

    • நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
    • அசாம் மாநிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

    அசாம் மாநிலத்தின் மேற்கு கர்பி அங்லாங்கில் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருந்ததால் இதுவரை எங்கும் சேதம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். மக்கள் நீண்ட நேரம் பீதியில் இருந்தனர்.

    இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் விழித்து இருந்தனர். அசாம் மாநிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அசாம் மட்டுமல்லாமல் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் அடுக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருகின்றன. இந்த நிலநடுக்கங்கள் குறைந்த அளவில் பதிவாவதால் உயிர்சேதம் மற்றும் இதர பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.
    • உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் முதல்வரை முழுமையாக ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது.

    மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி நிலவாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவரும், எம்.பியுமான கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் மாநிலத்தின் சாமானிய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டது.

    எனவே, இரு சமூகத்திற்கும் இடையில் நல்லிணக்கத்தைப் பற்றி பேசாதபோது எப்படி அமைதி மற்றும் சகஜநிலை ஏற்படும்.

    மாநில முதல்வர் பிரேன் சிங்கின் செயல்பாட்டால் மெய்டீஸ் மற்றும் குகிஸ் ஆகிய இரு சமூகமும் மகிழ்ச்சியடையவில்லை.

    உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் முதல்வரை முழுமையாக ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது. அமைதிக் குழுக்களில் முதல்வர் இருப்பதுதான் அமைதி பேச்சுவார்த்தை தோல்விக்கு வழிவகுத்தது.

    பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டை தவறாக வழிநடத்துகிறார். இதனால், நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் 60,000 பேரின் நல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வு இல்லாமலும், 6000 ஆயுதங்கள் மீட்கப்படும் வரையிலும் அமைதி திரும்பாது" என்றார்.

    • அரசியல் கட்சி தலைவர்கள்தான் மோடியை விமர்சனம் செய்கிறார்கள்
    • வடகிழக்கு மாநிலங்களில் 2014-க்குப் பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது

    மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் இரண்டு பெண்கள் தொடர்பான வீடியோ வைரல் ஆனதால், மணிப்பூர் விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரும் வகையில் முக்கியத்துவம் பெற்றது.

    இந்த நிலையில் அரசியல்வாதிகள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால், மணிப்பூரில் உள்ளவர்கள் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மீது குறை கூறவில்லை என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மத்திய அரசால் இப்படி நடக்கிறது என்று யாரும் கூறவில்லை. முன்பெல்லாம் என்ன நடந்தாலும் பழி டெல்லிக்கு வந்திருக்கும். இப்போது இது எங்கள் மோதல். இதற்கும் டெல்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும்.

    இந்த மோதல் மே மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல பகுதியில் இருந்து பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் மோடியை விமர்சனம் செய்கிறாரக்ள். ஆனால், மணிப்பூரில் இருந்து யாரும் பிரதமர் மோடியை குறைகூறவில்லை.

    2014-ல் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மெதுவான வளர்ச்சி இருந்தது. இணைப்பு அடிப்படையில் தற்போது திடீரென பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.'' என்றார்.

    காங்கிரஸ் கட்சியில் 20 வருடங்களுக்கு மேல் இருந்த ஹிமாந்த பிஸ்வா 2015-ல் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிஜபூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • கொடூர கொலையை விசாரிக்க மாநில சிஐடி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தில் லாக்டவுனில் மலர்ந்த காதல், மூன்று பேர் கொலையில் முடிந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அசாம் மாநிலம் கவுஹாத்தி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நஜிபூர் ரஹ்மான் போரா (25). மெக்கானிக்கல் இன்ஜினியரான இவருக்கும் கோலகாத் மாவட்டத்தை சேர்ந்த சங்கமித்ரா கோஷ் என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா லாக்டவுனில் இருந்த சமயம் அது. இருவரும் நேரில் சந்தித்தது இல்லை என்றாலும் இருவரது உறவு நட்பாக இருந்து பின்னர் காதலாக மாறியுள்ளது.

    இந்நிலையில், இருவரும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தாவிற்கு தப்பிச் சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துக் கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சங்கமித்ராவின் பெற்றோர் சஞ்ஜீவ் கோஷ் மற்றும் ஜூனு கோஷ் சங்கமித்ராவை நஜிபூரிடம் இருந்து பிரித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

    பின்னர் 2021ம் ஆண்டு, சஞ்ஜீவ் கோஷ் மற்றும் ஜூனு கோஷ் ஆகியோர் சங்கமித்ரா மீது திருட்டு குற்றச்சாட்டை சுமத்தி போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சங்கமித்ராவை கைது செய்தனர். ஒரு மாதம் நீதிமன்ற காவலில் இருந்த சங்கமித்ரா பின்னர் ஜாமினில் வெளியே வந்து பெற்றோர் வீட்டிற்கே திரும்பினார்.

    இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் நஜிபூரும், சங்கமித்ராவும் வீட்டைவிட்டு தப்பி இம்முறை சென்னையில் தஞ்சம் புகுந்தனர். இங்கு இருவரும் 5 மாதங்கள் தங்கி இருந்த நிலையில், ஆகஸ்டு மாதம் கோலகாத் மாவட்டத்திற்கே இருவரும் திரும்பினர். அப்போது, சங்கமித்ரா கர்பிணியாக இருந்தார். நஜிபூர் வீட்டில் தங்கி இருந்த நிலையில், சங்கமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    நான்கு மாதங்கள் கழித்து நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால், சங்கமித்ரா தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும், தன்னை அடித்து துன்புறுத்துவதாக நஜிபூர் மீது சங்கமித்ரா போலீசில் புகார் தெரிவித்தார்.

    கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட நஜீபூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 28 நாட்களுக்கு பிறகு நஜிபூர் ஜாமினில் வெளியே வந்ததை அடுத்து, தனது குழந்தையை பார்ப்பதற்காக சங்கமித்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    ஆனால், சங்கமித்ரா குழந்தையை சந்திக்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து, ஏப்ரல் 29ம் தேதி அன்று நஜிபூரை அடித்து துன்புறுத்தியதாக அவரது சகோதரர், சங்கமித்ரா மற்றும் சங்கமித்ராவின் பெற்றோர் மீது போலீசில் புகார் தெரிவத்தார்.

    இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இருதரப்பினரிடையே பிரச்சினை முற்றியது. இதில், ஆத்திரமடைந்த நஜிபூர் சங்கமித்ரா, மற்றும் அவரது பெற்றோர் சஞ்ஜீவ் கோஷ், ஜூனு கோஷ் என மூன்று பேரையும் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர், குழந்தையை தூக்கிக் கொண்டு சென்ற நிஜபூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    மூன்று பேரை கொலை செய்த நிலையில், நிஜபூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொடூர கொலையை விசாரிக்க மாநில சிஐடி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    • ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தை காட்டிலும் குறைவாகத்தான் மணிப்பூரில் நடந்துள்ளது
    • ஒட்டுமொத்த மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது

    மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    இந்த வீடியோ சம்பவம் குறித்து முன்னதாகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த வீடியோ பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே இதில் ஒரு அரசியல் விஷயம் உள்ளடங்கியுள்ளது.

    வீடியோ தேதியை பொருட்படுத்தாமல் இந்த சம்பவம் கட்டாயம் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால் ஒட்டு மொத்த மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது.

    மணிப்பூரில் நடந்தது வருத்தமான சம்பவம்தான். ஆனால் இது தினந்தோறும் மணிப்பூரில் நடப்பதுபோல் ஒரு எண்ணம் கொடுக்கப்படுகிறது.

    மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு எதிராக மணிப்பூரை எடுத்துக் கொண்டால், மணிப்பூரில் மிகவும் குறைவான சம்பவங்கள்தான் நடைபெற்று உள்ளது.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் வன்முறையாக மாறி 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது
    • அசாம் முதல்வர் டுவிட்டர பக்கத்தில் இந்தியா வார்த்தையை நீக்கியுள்ளார்

    கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ள எதிர்க்கட்சிகள், கூட்டணிக்கு I.N.D.I.A. (இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி) பெயர் வைத்துள்ளனர்.

    எதிர்க்கட்சிகள் கூட்டணியை இந்தியா என்று அழைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் என்றாலே இந்தியா...!!! இந்தியா என்றாலே எதிர்க்கட்சிகள் கூட்டணி...!!! என சூழ்நிலை தோன்றுகிறது. இதுகுறித்து விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, டுவிட்டரின் முகப்பு பக்கத்தில் இருந்து INDIA என்ற வார்த்தை நீக்கிவிட்டார். அதற்குப் பதிலாக BHARAT என்ற வார்த்தை பயன்படுத்தியுள்ளார். பா.ஜனதாவினர் எப்போதுமே பாரத் என்ற வார்த்தையை உபயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அசாம் மாநில முதல்வர் என்பதை தற்போது பாரத்தின் அசாம் மாநில முதல்வர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், நமது நாகரிக மோதல் இந்தியாவையும், பாரத்தையும் மையமாக கொண்டது. பிரிட்டீஷ் இந்தியா என பெயர் வைத்தது. காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபடவேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போரிட்டார்கள். நாம் அதற்காக தொடர்ந்து போராடுவோம்'' என்றார்.

    பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு டிஜிட்டல் இந்தியா, மேன் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா என பெயரிட்டுள்ளார். அவருக்கு தங்களுடைய பரிந்துரைகளை தெரிவிக்குமாறு, ஹிமாந்தா பிஸ்மா சர்மாவுக்கு காங்கிரஸ் பதில் கூறியுள்ளது.

    • குழந்தைகளை பற்றிய அதிகப்படியான தகவல்களை வெளியிடுவது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
    • காவல் துறையின் பதிவிற்கு பயனர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் அசாம் போலீசார் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட சில குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து ஒரு பதிவை செய்துள்ளனர்.

    அதில், உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சமூக ஊடகங்களில் உங்கள் குழந்தையை பற்றி நீங்கள் என்ன பகிர்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பற்றிய அதிகப்படியான தகவல்களை வெளியிடுவது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இந்த பதிவு டுவிட்டரில் வைரலாகிய நிலையில், காவல் துறையின் பதிவிற்கு பயனர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • சோனாபூரில் தேசிய நெடுஞ்சாலை 37-ல் சென்ற லாரியை மடக்கி போலீசார் சோதனையிட்டனர்.
    • உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரி டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள சோனாபூர் பகுதியில் எண்ணெய் டேங்கரில் இருந்து ஏராளமான கால்நடைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    குவஹாத்தி கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சோனாபூரில் தேசிய நெடுஞ்சாலை 37-ல் சென்ற லாரியை மடக்கி போலீசார் சோதனையிட்டனர். அப்போது 25 பசுக்கள் மற்றும் 11 இறந்த கால்நடைகளை லாரியில் இருந்து போலீசார் மீட்டனர். உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரி டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • மருத்துவ பரிசோதனையில் அம்மாணவி கற்பழித்துகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • கிராம மக்கள் போலீஸ்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அசாம் மாநிலம் கவுகாத்தி காம்ரூப் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.சம்பவத்தன்று இவர் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியில் சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அந்த மாணவி அங்குள்ள ஒரு ஆற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. மருத்துவ பரிசோதனையில் அம்மாணவி கற்பழித்துகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கிராம மக்கள் போலீஸ்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தநிலையில் போலீஸ் விசாரணையில் மாணவியை கற்பழித்து கொன்று உடலை ஆற்றில் வீசியது ஆட்டோ டிரைவர் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அசாம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • வாகனத்தில் இருந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கவுகாத்தி:

    அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அசாம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது, 50 சோப்பு பெட்டிகள் இருந்தது.

    அதில் 700 கிராம் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது. வாகனத்தில் இருந்த 3 வாலிபர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் போதைப்பொருளை குவஹாத்தியில் இருந்து துப்ரிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.11 கோடி ஆகும். ஏற்கனவே கடந்த 25-ந் தேதி 2.2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×