search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வரும் 31-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அக்.30 முதல் நவ.3-ந்தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நவ.2 கல்லறை நாள், நவ.3 ஞாயிறு என மொத்தம் 5 நாட்கள் தீபாவளியை முன்னிட்டு புதுவையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் 31-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அக்.30 முதல் நவ.3-ந்தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை விடும் நிலையில் புதுவை விடுதலை நாள் உள்ளிட்ட 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நவ.2 கல்லறை நாள், நவ.3 ஞாயிறு என மொத்தம் 5 நாட்கள் தீபாவளியை முன்னிட்டு புதுவையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவ.1-ந்தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்.31-ந்தேதி தீபாவளி பண்டிகை, நவ.1 வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளதால் சனி, ஞாயிறு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    • போட்டியில் பங்குபெறுவோர் பெயர் மற்றும் பள்ளியின் முகவரி தவறாமல் குறிப்பிட வேண்டும்.
    • தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரமும்,2-வது பரிசு ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் இனக்கொல்லு காவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 'எழுதுவதின் மகிழ்ச்சி: நவீன யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த போட்டியில் அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம்.

    தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 14-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    உள்நாட்டு கடிதப்பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் எழுதுவோர் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுதி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர், பெறாதவர் என்ற வயதிற்கான சான்று கடிதத்தில் குறிப்பிட வேண்டும். போட்டியில் பங்குபெறுவோர் பெயர் மற்றும் பள்ளியின் முகவரி தவறாமல் குறிப்பிட வேண்டும்.

    போட்டியில் தமிழக வட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரமும்,2-வது பரிசு ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று அதிகாலை 4 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புதுச்சேரி:

    புதுவையில் பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது.

    ஏற்கனவே காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

    ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. லேசான மழை மட்டும் பெய்தது. காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திராவுக்கு நகர்ந்தது.

    இதையடுத்து மீண்டும் புதுவையில் வெயில் அடித்தது. ஆனால் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது.

    பகல் பொழுது முழுவதும் இதே நிலை நீடித்தது. அவ்வப்போது லேசான சாரல் பெய்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

    சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அதிகாலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரியளவில் பாதிப்பு இல்லை. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்தார்.

    அதே நேரத்தில் 7 மணிக்கு மேல் மழை படிப்படியாக குறைந்தது. இருப்பினும் வானம் மேக மூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலை தொடர்கிறது.

    • தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை அக்டோபர் 21-ம் தேதி ரேஷனில் வழங்கப்படும்.
    • மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களைச் சந்தித்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அக்டோபர் 21-ம் தேதி புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும்.

    தொடர்ந்து ரேஷனில் மாதா மாதம் இலவச அரிசி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் ஏற்கனவே அறிவித்தபடி, மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது மாதம் ரூ.2000 உதவித் தொகை பெறுபவர்கள் இனி, ரூ.3,000 உதவித் தொகை பெறுவார்கள். அதேபோல் ரூ.2500, ரூ.2700, ரூ.3500, ரூ.3800 உதவித் தொகை பெறுவோர் இனி கூடுதலாக ரூ.1000 சேர்த்து பெறுவர்.

    உயர்த்தப்பட்ட உதவித்தொகையின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.24.5 கோடி கூடுதலாக செலவாகும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் 21,329 பயனாளிகள் பயன்பெறுவர்.

    இந்த உயர்த்தப்பட்ட உதவித்தொகை அக்டோபர் 2024-ம் தேதி முன் தேதியிட்டு நவம்பர் மாதம் முதல் சேர்த்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.
    • துணை கலெக்டர் ஜான்சன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மணிகண்டன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த மோசடியில் ஈடுபட்டதாக நில புரோக்கர் சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த நில மோசடியில் காரைக்கால் துணை கலெக்டர் ஜான்சனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.

    இதைத்தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை கடந்த 10-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் பார்வதீஸ்வரர் கோவில் மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார்.

    இதைத் தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை சஸ்பெண்டு செய்து கவர்னர் கைலாஷ் நாதன் உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணை கலெக்டர் ஜான்சனிடம், அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் அதிகாரிகள் வழங்கினர்.

    • வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • இன்று புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது.

    இதனையொட்டி வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பட்டதாரி ஆசிரியர்கள் 288 பேர் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர்.
    • ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், பால சேவிகா பணியாளர்கள் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட 288 பேர் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

    மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்த படியும், மழை கோட்டு அணிந்த படியும் அவர்கள் முதலமைச்சர் வீட்டு முன்பு காத்திருந்தனர்.

    அப்போது அப்பா பைத்தியசாமி கோவிலில் முதலமைச்சர் பூஜை செய்து கொண்டிருந்தார். கோவிலுக்கு சென்ற ஆசிரியர்கள் முதலமைச்சரை சந்தித்து நாங்கள் 5 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்று அவர்களிடம் முதலமைச்சர் கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    இதுபற்றி தகவலறிந்து வந்த கோரிமேடு போலீசார் போராட்டம் நடத்த வந்த ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பினர்.

    மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்த வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
    • மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சான் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி கோவில் இடம் மோசடியில் கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின் இறுதியில் வழக்கு பதிவு செய்து காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதற்கிடையே, காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி.ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி ஆகியோரை போலீசார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கு சீனிவாச ராவ் லஞ்சம் பெறுவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
    • மாசுகட்டுப்பாடு அதிகாரி சீனிவாச ராவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறையில் அறிவியல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சீனிவாச ராவ்.

    தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கு சீனிவாச ராவ் லஞ்சம் பெறுவதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் பேரில் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புதுவை அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதனையடுத்து மாசுகட்டுப்பாடு அதிகாரி சீனிவாச ராவ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.

    இது தொடர்பாக சி.பி.ஐ. ஊழல் தடுப்புபிரிவு போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி லிங்கா ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தேவையான அனுமதி வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அறிவியல் அதிகாரி சீனிவாச ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் தனியார் நிறுவன இயக்குநர் ஒருவர் மீதும் கோவையைச் சேர்ந்த ஒருவர் மீதும் புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 5 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் கடலோர தூய்மை பணி நடந்தது.
    • தூய்மை பணியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் இணைந்து குப்பைகளை அகற்றினார்.

    புதுச்சேரி:

    சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்திய கடலோர காவல் படை சார்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் கடலோர தூய்மை பணி நடந்தது.

    தூய்மை பணியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் இணைந்து குப்பைகளை அகற்றினார்.

    அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., அரசு செயலர்கள் பத்மா ஜெய்ஸ்வால், ஜெயந்தகுமார் ரே, டி.ஜி.பி. அஜித்குமார் சிங்ளா, இந்திய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் எஸ். எஸ். தசிலா, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் உயர்த்தப் பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின் துறை தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இன்று இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடந்தது.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    போராட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலன், தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தின் போது அந்த வழியே வந்த அரசு பஸ்களை வழிமறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பஸ்களை மறித்து சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

    மறியல் போராட்டத்தின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய இந்தியா கூட்டணி கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் கடலூர், விழுப்புரம் சாலையில் பரபரப்பு நிலவியது.

    இதேபோல வில்லியனூர், சேதராப்பட்டு, பாகூர் உட்பட பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ×