search icon
என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவில் பணத்தை இழந்து விட்டேன்.
    • எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் பெண்ணை பார்த்து நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா (வயது 28). இவர் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். பாலகிருஷ்ணா ஆன்லைன் விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்து வந்தார்.

    இதனால் உறவினர்கள், நண்பர்களிடம் பணத்தை கடன் வாங்கினார். ரங்கா ரெட்டி கலெக்டர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணாவுக்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை பணி முடிந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய நேரத்தில் தன்னுடன் பணியாற்றும் போலீசாரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    பாலகிருஷ்ணா கழிவறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. போலீஸ்காரர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது பாலகிருஷ்ணா தன்னுடைய துப்பாக்கியை தொண்டையில் வைத்து சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தொண்டையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு தலை வழியாக வெளியே வந்து கழிவறையின் மேற்கூரையை தகர்த்து இருந்தது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாலகிருஷ்ணாவின் உடலை மீட்டனர். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் உருக்கமான கடிதம் ஒன்று இருந்தது.

    அதில் தான் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவில் பணத்தை இழந்து விட்டேன். 3 பேரிடம் ரூ 2.80 லட்சம் கடன் வாங்கி திருப்பி தர முடியவில்லை.

    மேலும் எனக்கு திருமணம் செய்து வைக்க எனது பெற்றோர் பெண்ணை பார்த்து நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    என்னால் என்னை திருமணம் செய்து கொள்ளும் பெண் பாதிக்கப்படக்கூடாது. இந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் எழுதி இருந்தார்.

    • பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா துணை முதல் மந்திரி விக்கிரமார்கா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா துணை முதல் மந்திரி மல்லு பாட்டி விக்கிரமார்கா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார்.

    அப்போது பஞ்சாரா ஹில்ஸ்சில் உள்ள அவரது வீட்டில் ரூ.22 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்க நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் இதர பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது சம்பந்தமாக பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இந்த நிலையில் மேற்கு வங்க போலீசார் அங்குள்ள ரெயில் நிலையத்தில் கட்டு கட்டாக பணத்துடன் 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பீகாரை சேர்ந்த ரோஷன் குமார் மற்றும் உதயகுமார் என தெரியவந்தது.

    அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா துணை முதல் மந்திரி விக்கிரமார்கா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். 2 பேரையும் மேற்குவங்க போலீசார், ஆந்திரா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • இளம்பெண் வாலிபரை கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
    • பைக்கில் சென்று காதல் ஜோடியை வீடியோ எடுத்தனர்.

    திருப்பதி:

    ஐதராபாத்தில் உள்ள பழைய நகரமான பஹாடி ஷரீஃப் என்ற இடத்தில் பரபரப்பான சாலையில் காதல் ஜோடி ஒன்று பைக்கில் சென்றனர்.

    இதில் வாலிபர் வினோதமான முறையில் தனது காதலியை மடியில் அமர வைத்துக் கொண்டு பைக்கை ஓட்டிச் சென்றார். அந்த இளம்பெண் வாலிபரை கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருந்தார்.

    பைக்கில் சென்று கொண்டிருந்தபோதே காதல் லீலைகளில் ஈடுபட்டபடி சென்றனர்.

    இதனை கண்ட வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் அவர்களை பார்த்தனர். சில வாகன ஓட்டிகள் அவர்கள் பின்னால் பைக்கில் சென்று காதல் ஜோடியை வீடியோ எடுத்தனர்.

    இந்த வீடியோ தெலுங்கானா மாநிலத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுபோன்ற காதல் ஜோடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் பதிவுகளை வெளியிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து தாமாக முன்வந்து ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சாலையில் பைக் ஓட்டியபடி காதலியை மடியில் அமர வைத்து காதல் லீலைகளில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

    ஐதராபாத் மாநகரப் பகுதியில் பரபரப்பான சாலைகளில் காதல் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் காதல் ஜோடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நடிகை புகார்.
    • இவரது யூடியூப் சேனலை 1 கோடிக்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.

    தெலுங்கானாவின் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், நிர்வாண படங்கள், வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் நடிகை ஒருவர் ஹர்ஷா சாய் மீது புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தன் மீது பொய் புகார்களை சுமத்துவதாகவும், அதை சட்ட ரீதியில் சந்திக்கப்போவதாக ஹர்ஷா சாய் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஏழை மக்களுக்கு பணம், பொருட்கள் உதவி செய்வதை வீடியோவாக எடுத்து யூடியூப் மற்றும் தனது சமூக வலைதள பக்கங்களில் யூடியூபர் ஹர்ஷா சாய் பதிவிட்டு வருகிறார். இவரது யூடியூப் சேனலை 1 கோடிக்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மகேஷ் பாபு வழங்கினார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் ரூ.50 லட்சம் ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக நடிகர் மகேஷ்பாபு வழங்கினார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.

    மேலும், AMB சினிமாஸ் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கப்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார்.
    • ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.

    தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.

    இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.

    தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

    தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் இளம்பெண் சமர்பித்தார்.

    இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், புகார் கொடுத்த பெண் மைனராக இருக்கும் போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, என கணவர் ஜானி மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று அவரது மனைவி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது இளம்பெண் நடன இயக்குநர் பாலியல் புகார் அளித்தார்.
    • ஜன சேனா கட்சியில் இருந்து ஜானி நீக்கப்பட்டார்.

    ஆந்திர மாநில திரைப்பட நடனக் கலைஞராக இருக்கும் இளம்பெண் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.

    புகார் குறித்து விசாரித்த போலீசார் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடன இயக்குநர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடனக் கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்து நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ஃபிலிம் சேம்பரில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் அளித்திருந்தார்.

    இதனையடுத்து தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் ஒரு கமிட்டி அமைத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து நடன இயக்குநர் ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருடனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.
    • சாப்பாடு தாருங்கள் என அலறினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் எல்லா ரெட்டி கூடம் கிராமத்தில் நேற்று வாலிபர் ஒருவர் வீடுகள் மற்றும் அங்குள்ள ஒரு கோவிலை நோட்ட மிட்டபடி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார்.

    அதைப் பார்த்த அந்த ஊர் பொதுமக்கள் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபர் திருட வந்துள்ளார் என்பதை ஊர்ஜிதம் செய்தனர். இதைத் தொடர்ந்து வாலிபரை பிடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். அவரை சிலர் அடித்து உதைத்தனர்.


    அப்போது வாலிபர் கதறி அழுதார். எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்கள். ஆனால் என்னால் பசி தாங்க முடியவில்லை. சாப்பாடு தாருங்கள் என அலறினார். இதை தொடர்ந்து பொதுமக்கள் தாக்குதலை நிறுத்தினர்.

    ஒரு வீட்டில் இருந்து புளியோதரை கொண்டு வந்தனர். கட்டி வைத்திருந்த திருடனை விடுவிக்காமல் அவர்களே ஊட்டி விட்டனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 21) என்பதும், வீடுகளில் திருட வந்ததும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசை கைது செய்தனர்.

    திருட வந்த வாலிபரை கட்டி வைத்து உணவு ஊட்டி விட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனக்கு நேர்ந்த கொடுமையை மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்தார்.
    • ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்கடாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடாபூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.

    கிராமத்தில் மைனர் போல சுற்றித்திரிந்த இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டிற்கு வெளியே அமர்திருந்தார்.

    அங்கு வந்த சிவக்குமார் மூதாட்டி தனிமையில் வசித்து வந்ததை தெரிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து திடீரென மூதாட்டியை வீட்டிற்குள் இழுத்துச் சென்று அறை கதவை பூட்டினார்.

    மூதாட்டி என்று கூட பார்க்காமல் இரவு முழுவதும் அறையில் அடைத்து வைத்து மூதாட்டியை பலாத்காரம் செய்தார்.

    காலையில் தனக்கு நேர்ந்த கொடுமையை மூதாட்டி கிராம மக்களிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்கடாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கிராமத்தில் உள்ள 6 பெண்களை சிவக்குமார் ஏற்கனவே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது மூதாட்டி என்று கூட பார்க்காமல் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

    இப்படியே விட்டால் இன்னும் பல கொடுமைகளை செய்வார். அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன.
    • லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நகர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ஏராளமான விநாயகர் சிலைகள் பரிதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

    33-வது வார்டு காந்திநகர் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 பெரிய லட்டுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டன. இந்த லட்டுகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த ஏலத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஷேக் லத்தீப் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விநாயகர் லட்டுக்களை அவர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

    கடைசியில் 2 லட்டுகளையும் ரூ.20,016 மற்றும் 11,016-க்கு லத்தீப் குடும்பத்தினர் ஏலம் எடுத்தனர். லட்டு கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் உற்சாகமடைந்தனர்.

    விநாயகர் சிலை வைத்த விழா குழுவினர் லத்தீப் குடும்பத்தினரிடம் லட்டுக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த விநாயகர் லட்டு ஏலம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கண்டெய்னர் விடுதி உருவாகி வரும் நிலையில், தெலுங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடம் உருவாகியுள்ளது.
    • மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து அதே இடத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கண்டெய்னர் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

    தற்போது பல இடங்களிலும் தற்காலிக கண்டெய்னர் கட்டிடங்கள் பெருகி வருகிறது. விலை குறைவாகவும் எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடதிக்ரு கொண்டு செல்ல கூடியதாகவும் இருப்பதால் பலர் இந்த கண்டெய்னர் கட்டிடங்களை உருவாக்கி வருகின்றனர்.

    கண்டெய்னர் விடுதி, உணவகங்கள் உருவாகி வரும் நிலையில், தெலுங்கானாவில் முதல் கண்டெய்னர் பள்ளிக்கூடம் உருவாகியுள்ளது.

    முலுகு மாவட்டத்தில் உள்ள கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பள்ளிக் கட்டடம் கட்ட வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து அதே இடத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கண்டெய்னர் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடிசை பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். அப்பகுதியில் மழை பெய்தால் குழந்தைகள் படிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் அப்பகுதியில் புதிய பள்ளி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    புதிய பள்ளிக் கட்டிடம் கட்ட வனத்துறையினர் அனுமதி கிடைக்காததால் புதுமையாக யோசித்து கண்டெய்னர் பள்ளிக்கூடத்தை மாவட்ட ஆட்சியர் உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே முலுகு மாவட்டத்தில் போச்சாபூர் கிராமத்தில் மருத்துவமனை வேண்டும் என்ற பழங்குடி மக்களின் கோரிக்கைக்கு இணங்க கண்டெய்னர் மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கட்டிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பழங்குடி மக்களின் துன்பங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
    • தனித்தனியாக சீருடைகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் திருநங்கைகள் பல்வேறு பணிகளில் பணியாமத்தப்படுவார்கள் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் மாநகர பகுதியில் போக்குவரத்து சீரமைக்க திருநங்கைகள் படை உருவாக்க ப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

    இதற்காக தனி தனியாக சீருடைகளும் வடிவமைக்க பட்டு வருகின்றன. திருநங்கை படையில் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    திருநங்கை படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

    அதற்கு பிறகு ஐதராபாத் மாநகர பகுதியில் திருநங்கை படையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    ×