search icon
என் மலர்tooltip icon
    • விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • இதில் உயிர் பிழைத்த 65 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிர் பிழைத்த 65 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.சி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்காக அனைத்து நடிகர்களும் கள்ள சாராயத்தை ஆதரிக்கிறார்கள் என்பது இல்லை என்று நடிகர் சார்லி தெரிவித்துள்ளார்.


    சார்லி

    இது குறித்து அவர் பேசியதாவது, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்காக அனைத்து நடிகர்களும் கள்ள சாராயத்தை ஆதரிக்கிறார்கள் என்பது இல்லை. எது தன்னை இழக்க செய்யுமோ அதை செய்யக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நடிகர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கள்ள சாராயம் என்பது தவறு அப்படி நான் கூறுவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் சாராயம் என்பதே தவறு மது அருந்துவது முற்றிலும் தவறு என்ற கொள்கையுடையவன் நான். முழுக்க முழுக்க தன்னை இழக்க செய்யும் எந்த ஒரு போதை பழக்கத்தையும் மக்கள் பின்பற்றக் கூடாது" என்று கூறினார்.

    • மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கள்ள சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்துள்ளனர். 


    வைரமுத்து

    இந்த கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து 'ஒன்றிய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துவிடலாம்' என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "சாராயம்

    ஒரு திரவத் தீ

    கல்லீரல் சுட்டுத்தின்னும்

    காட்டேரி

    நாம் விரும்புவது

    கள்ளச் சாராயமற்ற

    தமிழ்நாட்டை அல்ல;

    சாராயமற்ற தமிழ்நாட்டை

    மாநில அரசு

    கடுமை காட்டினால்

    கள்ளச் சாராயத்தை

    ஒழித்துவிடலாம்

    ஒன்றிய அரசு

    ஒன்றிவந்தால்

    சாராயத்தையே ஒழித்துவிடலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
    • இப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார்.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா 

    தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.


    புஷ்பா -2

    இந்நிலையில், 'புஷ்பா-தி ரூல்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் ஃபகத் பாசில் புஷ்பா முதல் பாகத்தில் பன்வர் சிங் ஷெகாவத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
    • இப்படம் வருகிற 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


    இப்படம் வருகிற 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தைப் பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசியதாவது, யாதும் ஊரே என்பது நம்முடைய தமிழ் இலக்கியத்தில் முதல் வரி. இன்று உலகத்தில் ஐக்கிய நாட்டு சபையில் 'யாதும் ஊரே' என்று தான் போடப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தமிழுக்குரிய பெருமையை தமிழ் இலக்கியத்திற்குரிய பெருமையை அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த மகிழ்ச்சியிலேயே படத்தை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.


    விஜய் சேதுபதியும் படக்குழுவினரும் நல்ல முயற்சி எடுத்திருக்கிறார்கள். இந்திய நாட்டில் உள்ள சமூகங்கள் மாறிக் கிடக்கிறது. இன்று இலங்கையில் உள்ள பிரச்சினையை தமிழ் நாட்டில் பேசுகிறார்கள். அதுபோல் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினையை வெளி உலகத்தில் பேசுகிறார்கள். இப்படி பிரண்டு கிடக்கும் ஒரு சமூகத்தை ஒரு இசையிலோ அல்லது கருத்தால் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கிய படம் என்ற முறையில் இப்படத்தை பாராட்டுகிறேன் என்று பேசினார்.

    • பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா.
    • இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் ஆவார்.

    இந்திய திரையுலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் சாலையில் பைக்கில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த அமிதாப் பச்சன், "பைக் ஒன்றில் பின்னால் அமர்ந்தபடி அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதன் தலைப்பில், சவாரி கொடுத்ததற்காக நன்றி நண்பரே... உங்களை யாரென தெரியாது. ஆனால், தீர்க்க முடியாத போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து, நீங்கள் என்னை பணி செய்யும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு, விரைவாக கொண்டு சென்று விட்டு விட்டீர்கள். தொப்பி போட்ட, ஷார்ட்ஸ் அணிந்த மற்றும் மஞ்சள் வண்ண டி-சர்ட்டின் உரிமையாளருக்கு எனது நன்றிகள் என பதிவிட்டிருந்தார்.


    பைக்கில் பயணம் செய்த அமிதாப் பச்சன்

    இந்த பதிவை வைரலாக்கிய நெட்டிசன்கள் வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என பதிவிட்டிருந்தனர். இந்த பதிவுக்கு பதிலாக, போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என மும்பை போலீசார் தெரிவித்திருந்தனர்.


    பைக்கில் பயணம் செய்த அனுஷ்கா ஷர்மா

    இந்நிலையில், அமிதாப் பச்சனைத் தொடர்ந்து நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பாதுகாவலருடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகை அனுஷ்கா ஷர்மாவின் பாதுகாவலருக்கு சாலை விதி மிறீயதாக கூறி 10,500 ரூபாய் மும்பை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பான ரசீது மும்பை காவல் துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு, "அபராதம் செலுத்தப்பட்டுவிட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'.
    • இப்படம் ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    வீரன் போஸ்டர்

    சமீபத்தில் 'வீரன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டாய்' பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'வீரன்' திரைப்படத்தின் டிரைலர் வருகிற 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


    • இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'குட் நைட்'.
    • இப்படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.



    இதில் நடிகர் மணிகண்டன் பேசியதாவது, இயக்குனரை சந்தித்து கதை கேட்டபோது, அவர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. இவர் கதையை புரிந்து கொண்டிருக்கும் விதமும், அதனை தெளிவாக எடுத்துரைக்கும் பாணியும் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியது. இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் சிலர், மணிகண்டனை வைத்து படமெடுக்கிறீர்களே..? தேவையா? என அச்சுறுத்திருக்கிறார்கள். அதற்கு அவர் இந்தக் கதை மீதும் மணிகண்டன் மீதும் இந்தப் பட குழுவினர் மீதும் நம்பிக்கை இருக்கிறது என பதிலளித்திருக்கிறார்.



    எனக்கே என் மீது இத்தகைய நம்பிக்கை இல்லாதபோது, என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நட்புடனும், உரிமையுடனும் பழகினர். அந்த அனுபவம் மறக்க இயலாது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகு தான், இது ஒரு திரைப்படம் என்றே பலரும் ஏற்றுக் கொண்டனர். அவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இன்றைய வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்'' என்று பேசினார்.

    • கடந்த 2014-ம் ஆண்டு சுபாஷ்கரன் அல்லிராஜா சென்னையில் லைகா பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
    • லைகா பட நிறுவன அலுவலகங்களில் நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு சுபாஷ்கரன் அல்லிராஜா சென்னையில் லைகா பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதலில் அவர் நடிகர் விஜய் நடித்த "கத்தி" படத்தை தயாரித்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்களை தயாரித்து வருகிறார். எந்திரன், கோலமாவு கோகிலா, 2.0, தர்பார் படங்கள் தயாரிப்பு மூலம் லைகா நிறுவனம் மிகப் பெரிய லாபத்தை ஈட்டியது.

    கடந்த ஆண்டு வெளியான "பொன்னியின் செல்வன்" படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரித்து இருந்தது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தையும் இந்த நிறுவனமே தயாரித்து வெளியிட்டது. பொன்னியின் செல்வன் படம் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

    இதையடுத்து சினிமா படங்கள் தயாரிப்பதற்கு இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று முதலீடு செய்து இருப்பதாக கூறப்பட்டது. அந்த பண பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருந்தனர். அப்போது லைகா பட நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகளில் உரிய கணக்கு இல்லை என்று அதிகாரிகள் கருதியதாக கூறப்படுகிறது.

    லைகா பட நிறுவன அலுவலகங்களில் நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தி.நகர், அடையார், காரப்பாக்கம் உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் 10 அதிகாரிகள் குழு சோதனையை மேற்கொண்டது. பட தயாரிப்புக்கு செலவிட்ட தொகை, முதலீடு செய்த தொகை போன்றவை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    லைகா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்கி வரும் லைகா பட நிறுவனம் இதுவரை இந்தியாவில் சுமார் 20 படங்களை தயாரித்து உள்ளது. அடுத்து கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை தயாரித்து வருகிறது. இது தொடர்பாக முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டதால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு உள்ளது. சோதனை நடை பெற்ற 8 இடங்களில் இருந்த லைகா பட நிறுவன ஊழியர்களிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. சோதனை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    எஸ்கே21

    இராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 55 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


    அதாவது, தற்போது ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருப்பதால் அது தொடர்பான பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதுகாப்பு, அதிகாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'போர் தொழில்'.
    • இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    போர் தொழில் போஸ்டர்

    அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் கவுதம் மேனன், வெங்கட் பிரபு, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

     'போர் தொழில்' திரைப்படம் வருகிற ஜுன் 9-ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்காக சிம்பு தற்காப்பு கலை பயின்று வருவதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது புதிய படத்துக்கான கதைகள் தேர்வில் அதிக கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' மற்றும் ஒபலி என் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான 'பத்து தல' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    எஸ்.டி.ஆர்.48

    இதையடுத்து 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். 'எஸ்.டி.ஆர். 48' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.


    சிம்பு

    இந்த படத்திற்காக நடிகர் சிம்பு தாய்லாந்தில் தற்காப்பு கலை பயின்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், 'எஸ்.டி.ஆர். 48' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இப்படத்தின் லொக்கேஷன் தேடுதலில் மும்முரமாக இறங்கியுள்ளதாகவும் சில வாரங்களில் லொகேஷன் முடிவாகிவிடும் என்றும் ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'
    • இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.


    சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'கறிகொழம்பு வாசம்' பாடல் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    ×