search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் 2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்-வானிலை மையம்
    X

    தமிழகத்தில் 2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்-வானிலை மையம்

    • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
    • தென்மேற்கு காற்று குறைந்ததன் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உஷ்ணம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

    கோடைகாலம் போல் வெயில் மீண்டும் வறுத்தெடுத்து வருவதால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அதிக பட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 செல்சியஸ் அளவுக்கு இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்றும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வெப்பநிலை உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது,

    மேற்கு வங்காளம் கடலோர பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படுகிறது.

    தென்மேற்கு காற்று குறைந்ததன் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. இன்னும் ஒருசில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    Next Story
    ×