search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு: மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    3 புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு: மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

    • அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை.
    • ஜூலை 23-ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு.

    சென்னை:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சட்டங்களை அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரி, தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    அவர் தனது மனுவில், நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஒன்பது மாநிலங்களிலும், இரு யூனியன் பிரதேசங்களிலும் மட்டும் தான் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில், 43.63 சதவீதம் மக்கள் மட்டுமே இந்தியை தாய் மாொழியாகக் கொண்டவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளில் சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்தியில் பெயரிடப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மூன்று சட்டங்களும் ஆங்கிலத்தில் தான் நிறைவேற்றப்பட்டன எனவும், சட்டங்களின் பெயர்கள் கூட ஆங்கில எழுத்துக்களில் தான் இடம் பெற்றுள்ளன என்றும் விளக்கினார்.

    மேலும், இந்த சட்டங்கள், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை எனவும், எவரின் அடிப்படை உரிமையும் இதனால் பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

    சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது பாராளுமன்றத்தின் விருப்பம் எனவும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் விளக்கமளித்தார்.

    இதையடுத்து, மனுவுக்கு ஜூலை 23-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×