search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரக்கு போட்டுக்கொண்டு சரக்கு வாகனங்களை நிறுத்தி 3 இளம்பெண்கள் அலப்பறை- சமாளிக்க முடியாமல் போலீசார் திணறல்
    X

    சரக்கு போட்டுக்கொண்டு சரக்கு வாகனங்களை நிறுத்தி 3 இளம்பெண்கள் அலப்பறை- சமாளிக்க முடியாமல் போலீசார் திணறல்

    • உள்ளே வந்த ஒரு வாலிபர் வடிவேல் பாணியில் ‘பெண்ணின் கையை பிடிச்சு இழுத்திட்டானா...? யாருடா அது? என்று சவுண்டுவிட்டார்.
    • போலீசார் சுமார் அரைமணிநேர களேபரத்துக்கு பிறகு 3 பேரையும் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம்... எப்படியோ எந்த பிரச்சினையும் இல்லாமல் இன்றைய பொழுது ஓடிவிட்டது என்ற நினைப்போடு காவல் பணிக்கு சென்றிருந்த போலீசார் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்ததும் அணிந்திருந்த தொப்பியை கழற்றி மேஜை மீது வைத்தபடி அப்பாடா... என்று அவரவர் இருக்கைகளில் அமர்ந்தார்கள்.

    தங்கள் மேல் அதிகாரிகள் மற்றும் சக போலீசாரின் களைப்பை உணர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் சார் டீ வாங்கிவர சொல்லட்டுமா? என்றதும் வேணாம்பா, இனி வீட்டுக்கு போக வேண்டியதுதானே. இரவு ரோந்து பணியில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவரத்தை கேட்டுக் கொண்டு இருந்தபோது, வெளியே இருந்து ஒரு சிலர் பதட்டத்துடன் ஓடி வந்தார்கள்.

    சார்... சார்.... வாலாஜா சாலையில் சிலர் வம்பிழுத்து ரகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். பஸ்களை மறித்து வைத்திருக்கிறார்கள். வாகனங்கள் செல்ல முடியவில்லை என்றதும், ஆரம்பிச்சுட்டானுங்களா... நிம்மதியாக ஒரு நாளும் இருக்க விட மாட்டாங்களெ... என்ற படி கழற்றி வைத்த தொப்பிகளை எடுத்து மீண்டும் தலையில் மாட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடினார்கள்.

    அங்கு சுடிதாரில் 3 இளம்பெண்கள் இருந்தனர். ஒருவர் நடுரோட்டில் சாவகாசமாக அமர்ந்து இருந்தார். மற்ற 2 பெண்களும் பஸ்சுக்கு அடியில் படுத்துக்கொண்டனர். பஸ், வாகனங்கள் அனைத்தும் நடுவழியில் நின்றது. போலீசாரை பார்த்ததும் ரோட்டில் அமர்ந்து இருந்த பெண் திடுதிப்பென்று எழுந்து ஓடும் போது கால்கள் தடுமாறியதை பார்த்ததும் ஓ... சங்கதி இதுதானா என்று போலீசார் தலையில் அடித்துக்கொண்டனர்.

    ஓடி சென்ற அந்த பெண் அங்கு நின்றிருந்த வாகனங்களுக்கு முன்பு சென்று ம்கூம்ம்... எந்த வாகனமும் நகரக்கூடாது என்று மறித்துக்கொண்டிருந்தார். ஏம்மா... என்னதான் உங்கள் பிரச்சினை? என்று விசாரிக்க நினைத்த போலீசார் 3 பெண்களும் புல் மூடில் இருப்பதை தெரிந்து கொண்டனர்.

    அங்கிருந்த பெண் போலீசார் அந்த பெண்களை இழுத்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களைவிட அந்த போதையிலும் அந்த பெண்கள் திடகாத்திரமாக இருந்தார்கள். உள்ளே ஏற்றி இருந்த சரக்கு செய்த வேலை. சரக்கு வாகனத்தை அவர்கள் பற்றிக் கொண்டதால் பெண்ணை பெண் போலீசாரால் அப்புறப்படுத்த முடியவில்லை.

    உடனே அங்கிருந்த ஆண் போலீஸ் ஓடிவந்து அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்தார். அவ்வளவு தான் ஒரு பெண்ணின் கையை பிடித்து ஒரு ஆண் இழுக்கலாமா? என்று உரிமை போராட்டத்தில் இறங்கிவிட்டார்.

    நடுரோட்டில் ஏதாவது பிரச்சினைகள் நடந்தால் வழிபோக்கர்களும் உள்ளே நுழைந்து ஏதாவது செய்வார்கள். அப்படித்தான் உள்ளே வந்த ஒரு வாலிபர் வடிவேல் பாணியில் 'பெண்ணின் கையை பிடிச்சு இழுத்திட்டானா...? யாருடா அது? என்று சவுண்டுவிட்டார்.

    அவ்வளவு தான்... ஏற்கனவே டென்ஷனில் இருந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த வாலிபரின் கன்னத்தில் பளார் என்று ஒன்று விட்டதும் 'அம்மா... என்று வடிவேல் பாணியிலேயே கன்னத்தை தடவியபடி அங்கிருந்து நகர்ந்தார்.

    செய்வதறியாமல் தவித்த போலீசார் சுமார் அரைமணிநேர களேபரத்துக்கு பிறகு 3 பேரையும் வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    3 பேரும் எந்த பதிலும் சொல்லும் நிலையில் அப்போது இல்லை. போதை தலைக் கேறி தன்னிலை மறந்தவர்களாக இருந்தார்கள். இனி என்ன செய்வது என்று அவர்களின் போதை தெளியும் வரை போலீசாரும் கண்விழித்து காத்திருந்தார்கள்.

    இன்று அதிகாலையில் ஓரளவு போதை தெளிந்த நிலையில் அவர்களிடம் விசாரித்த போது 3 பேரும் கண்ணகி நகரை சேர்ந்த கண்ணகிகள் என்பது தெரியவந்தது. திருவல்லிக்கேணியில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்களிடம் வரவேற்பு பெண்களுக்கான பணிகளுக்காக வந்திருக்கிறார்கள். பணி முடிந்ததும் தங்கள் சீருடைகளை கலைந்துவிட்டு நாகரீக உடைக்கு மாறி இருக்கிறார்கள்.

    அதன்பிறகு தான் கொஞ்சம் சுதி ஏற்றிக் கொள்ளுவோம் என்ற முடிவுக்கு வந்து சரக்கு போட்டிருக்கிறார்கள். விவரங்களை உணர்ந்து கொண்ட போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துவிட்டு பெற்றோர்களை வரவழைத்து புத்திமதி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

    குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பார்கள். அதேபோல் என்ன தான் புத்திமதி சொன்னாலும் இவர்கள் காதில் ஏறுமா என்பது சந்தேகமே.

    போலீசாரின் பிரம்பு அந்த பெண்களின் கால்களில் பட்டையான தழும்பை உருவாக்கி இருந்தால் கொஞ்சம் யோசிப்பார்கள். இதில் எந்த உரிமை மீறலும் இல்லை. அவர்களை திருத்துவதற்கான வழிதான் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

    Next Story
    ×