search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் சடலமாக கிடந்தார்- சீருடையில் பள்ளிக்கு சென்றவர் கொலையா?
    X

    10-ம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் சடலமாக கிடந்தார்- சீருடையில் பள்ளிக்கு சென்றவர் கொலையா?

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
    • பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தாம்பரம்:

    சென்னை ஆலந்தூரை அடுத்த உள்ளகரத்தில் வசித்து வருபவர் கார்த்திக். இவரது மகள் வேதிகா.

    இவர் நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி வேதிகா வீட்டில் இருந்து வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வேதிகாவின் பெற்றோர் அப்பகுதி முழுவதும் அவரை தேடிப் பார்த்தனர்.

    தோழிகள் வீடுகளிலும் தேடினர். ஆனால் மாணவி வேதிகாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து தந்தை கார்த்திக் மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நங்கநல்லூர் பர்மா காலனி தலைக்கனஞ்சேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் வேதிகா பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து பல்லாவரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி உடலை மீட்டனர். வேதிகாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சீருடையில் பள்ளிக்கு சென்ற மாணவி வேதிகா கல்குவாரி குட்டையில் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டிருப்பது அவரது பெற்றோர் மற்றும் சக மாணவிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவி வேதிகா எப்படி இறந்தார் என்பது தெரிய வில்லை. அவரை யாராவது கொலை செய்து கல் குவாரி குட்டையில் வீசினார்களா? என்கிற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவி வேதிகாவை பெற்றோர் நன்றாக படிக்கச் சொல்லி கண்டித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீட்டில் இருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்ற மாணவி வேதிகா எந்த வழியாக சென்றார் என்பதை கண்டுபிடித்து அவர் சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகே மாணவி எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×