search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பூத் கமிட்டிகளுக்கு தலைவர், செயலாளர் நியமனம்
    X

    அ.தி.மு.க. பூத் கமிட்டிகளுக்கு தலைவர், செயலாளர் நியமனம்

    • தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளுக்கு தலைவர், செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
    • பூத் கமிட்டிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சுமார் 1.20 லட்சம் பேர் இடம் பெறுவார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வை தயார்படுத்தும் பணிகளை எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தி வருகிறார்.

    குறிப்பாக அ.தி.மு.க.வின் அடிமட்டத்தை வலுப்படுத்த கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டிகள் வலுவாக்கப்பட்டு வருகிறது.

    தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை தலா 50 வீதம் அ.தி.மு.க. நிர்வாகிகள் பிரித்து உள்ளனர். அந்த 50 நிர்வாகிகளுக்கும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த 50 வாக்காளர்களையும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக வாக்களிக்க செய்ய வேண்டிய பணி பூத் கமிட்டிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பூத் கமிட்டிகளை திறம்பட செயல்படுத்த அ.தி.மு.க. தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு உடனுக்குடன் உத்தரவுகள், வியூகங்களை வகுத்து கொடுப்பதற்கு தலைவர், செயலாளர் பதவிகளை உருவாக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளுக்கு தலைவர், செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இதற்கு முன்பு அ.தி.மு.க. பூத் கமிட்டிகள் அந்தந்த பகுதி ஒன்றிய தலைவர் மூலம் இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. மேலும் ஒன்றிய தலைவர் செயல்பாடுகள் குறைவாக இருக்கும்பட்சத்தில் பூத் கமிட்டிகளும் செயலிழந்து விடுவதாக கருதப்படுகிறது.

    அந்த குறையை நிவர்த்தி செய்யவே ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் தலைவர், செயலாளர் தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து இந்த திட்டத்தை அமல்படுத்த தொடங்கி உள்ளார். இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கும் அவர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

    தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு அ.தி.மு.க. பூத் கமிட்டி பணிகள் விரைவில் வரையறுக்கப்படும் என்று தெரிகிறது. சுமார் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த பூத் கமிட்டிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சுமார் 1.20 லட்சம் பேர் இடம் பெறுவார்கள். இவர்கள் மூலம் வாக்காளர்களை அணுகுவதற்கு அ.தி.மு.க. தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×