search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைபர் குற்றங்களில் ஈடுபட வெளிநாடுகளுக்கு பட்டதாரிகளை அனுப்பிய கும்பல் கைது
    X

    சைபர் குற்றங்களில் ஈடுபட வெளிநாடுகளுக்கு பட்டதாரிகளை அனுப்பிய கும்பல் கைது

    • 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • விரைவில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் அருண் (24), ஓட்டல் மேனேஜ்மெண்ட் பட்டதாரி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லாவோஸ் நாட்டில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கிருந்த ஒரு கும்பல் அவரை அடைத்து வைத்து சைபர் குற்றத்தில் ஈடுபடும் நிறுவனத்தில் வேலையில் சேரும் படி வற்புறுத்தி உள்ளனர். பின்னர் அருண் தூதரகம் வழியாக சொந்த ஊர் திரும்பினார். இது குறித்து தம்மம்பட்டி போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 1.65 லட்சம் வாங்கி கொண்டு மோசடி செய்த தஞ்சையை சேர்ந்த சையது, சென்னை பெரம்பூரை சேர்ந்த அப்துல் காதர் ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் முழுவதும் ஏராளமானவர்களை வெளிநாடுகளுக்கு இது போல அனுப்பி வைத்துதும், இதில் ஏஜெண்டுகள் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளிடியானது, அதன் விவரம் வருமாறு-

    தமிழ்நாடு முழுவதும் வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை இந்த ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டு பேசி அவர்கள் விரும்பும் வேலை அதிக சம்பளத்தில் இருப்பதாக கூறி தாய்லாந்து, லாவோஸ் நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை தனித்தனி அறைகளில் தங்க வைத்து அவர்கள் விரும்பும் நிறுவனங்களுக்கு நேர்முகததேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்த நிறுவனங்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடும் சட்ட விரோத நிறுவனங்கள் ஆகும். சரளமாக ஆங்கிலம் பேசும் இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் நபர்களோடு பேச செய்து அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் மோசடி வேலையில் ஈடுபட செய்கின்றனர்.

    இப்படி மோசடி வேலைகளுக்கு தான் ஆட்களை அனுப்புகிறோம் என்று இங்குள்ள ஏஜெண்டுகளுக்கு தெரியும். அதற்காக அதிகப்படியான கமிஷன் தொகையை வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பெற்று வந்துள்ளனர். ஆத்தூர் பகுதியை சேர்ந்த அருணுடன் லாவோஸ் நாட்டிற்கு 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 5 இளைஞர்களை சைபர் கிரைம் குற்ற செயலில் ஈடுபடும் வேலையை செய்ய சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.

    அதற்கான கம்பெனிகள் என பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த வேலை தெரியாது என்று சொன்னவர்களிடம் ரூ. 5 முதல் 10 லட்சம் வரை தந்தால் தான் உங்கள் நாட்டிற்கு அனுப்பி வைப்போம் என்று அந்த கும்பல் மிரட்டி உள்ளது. அதன் பிறகே தூதரக அதிகாரிகள் உதவியுடன் மோசடி கும்பலிடம் இருந்து மீண்டு அருண் உள்பட 5 இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.

    இந்த நிலையில் தான் பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் ஓரிரு நாளில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விரைவில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உள்ளனர்.

    சி.பி.ஐ.டி. போலீசார் முழுமையாக விசாரித்து ஆன்லைன் சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு கும்பலையும் அவர்களுக்கு தேவையான ஆட்களை இங்கிருந்து அனுப்பி வைத்த ஏஜெண்டுகளையும் கைது செய்தால் மேலும் பலர் சிக்குவார்கள் என்பதும், அவர்கள் மூலம் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×