search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் அதிபர் மீது பொய் வழக்கு?- ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி. விசாரணை
    X

    தொழில் அதிபர் மீது பொய் வழக்கு?- ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி. விசாரணை

    • வீடியோ பதிவில் சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்து சிலர் மனுதாரரின் கம்பெனி வளாகத்திற்குள் வருகின்றனர்.
    • காஞ்சிபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு வழக்கை முழுவதுமாக, தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் பிரபு. தொழில் அதிபரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் மீது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்தனர். அதாவது, மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள என்னுடைய கம்பெனி வளாகத்தை சோதனை செய்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட 4 கார்களை சோதனை செய்தபோது, அதில் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அந்த கார்களையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆரில்) போலீசார் கூறியுள்ளனர்.

    இது வேண்டுமென்றே என் மீது போடப்பட்ட பொய் வழக்காகும். போலீசார் என் கம்பெனி வளாகத்திற்குள் வந்து கார்களை பறிமுதல் செய்யும் வீடியோ பதிவு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சி.முனுசாமி ஆஜராகி வீடியோ பதிவை நீதிபதியிடம் போட்டு காண்பித்தார்.

    அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கிற்கு போலீஸ் தரப்பின் விளக்கத்தை அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ பதிவை பார்க்கும்போது இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க விரும்பவில்லை.

    இந்த வீடியோ பதிவில் சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்து சிலர் மனுதாரரின் கம்பெனி வளாகத்திற்குள் வருகின்றனர். எந்தவித சோதனைகளும் மேற்கொள்ளவில்லை. மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்யவில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக 4 கார்களை மட்டும் எடுத்து செல்கின்றனர்.

    எனவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு உத்தரவு விடுகிறேன். காஞ்சிபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீஸ் சூப்பிரண்டு இந்த வழக்கை முழுவதுமாக, தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    வீடியோ பதிவுகளை பெற வேண்டும். விசாரணையில் மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது, வேண்டுமென்றே பதிவு செய்யப்பட்டது என்று தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை 3 மாதத்திற்குள் முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதால் மனுதாரர் மீது பதிவான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கேள்வி எழவில்லை. இந்த மனுவை முடித்து வைக்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×