search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ஓய்வூதிய திட்டம் கோரி சென்னை ஆசிரியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்- பேச்சுவார்த்தை தோல்வியின் எதிரொலி
    X

    பழைய ஓய்வூதிய திட்டம் கோரி சென்னை ஆசிரியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்- பேச்சுவார்த்தை தோல்வியின் எதிரொலி

    • நேரம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோது எங்களுக்கு செய்து தருவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைத் தான் நிறைவேற்றி தர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை முதல்கட்ட பேச்சு வார்த்தையை நேற்று முன்தினம் நடத்தியதைத் தொடர்ந்து, 2-ம் கட்டக் கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குனர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டி.என்.எஸ்.ஜாக்டோ) சார்பில் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

    அதே நேரம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து டி.என்.எஸ்.இ ஜாக்டோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோது எங்களுக்கு செய்து தருவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைத் தான் நிறைவேற்றி தர வேண்டுமென வலியுறுத்துகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நேரடி கவனம் செலுத்த வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கவே போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    பள்ளிக் கல்வித் துறையுடன் தற்போது நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டி.பி.ஐ) வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை)ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×