என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சென்னை
- கடந்த 3 தினங்களாக தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
- நாளை, நாளை மறுநாள் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி மெல்ல நகர்ந்தபடி உள்ளது.
இந்த புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. கடந்த 3 தினங்களாக தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுவடைந்ததால் நேற்று சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து மேலும் மேற்கு திசைக்கு வந்துள்ளது.
இன்று (புதன்கிழமை) காலை நிலவரப்படி அந்த புதிய காற்றழுத்தம் வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் இருந்து வடமேற்கு பகுதி நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நெருங்க நெருங்க உள் மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெள்ளிக்கிழமை காலை பரவலாக லேசானது முதல் கனமழை வரை பெய்யும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் தற்போது இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை. அது தற்போதைய நிலையில் கரையை நெருங்கி கடக்கும். பிறகு வலு குறையும் என்று தெரிய வந்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாவிட்டாலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பொழிவு தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, நாளை மறுநாள் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில மாவட்டங்களில் 16-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்று இரவு சில இடங்களில் லேசான மழை பெய்தது. மிக கனமழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் சில இடங்களில் மட்டும் சிறிது நேரம் கனமழை பெய்தது. இன்று காலை முதல் சென்னையில் மேக மூட்டம் காணப்படுகிறது.
அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் இதே நிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
இன்று (புதன்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையும், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
- 16-ந்தேதி கார்த்திகை மாதம் பிறக்கிறது.
- 41 நாட்கள் விரதம் இருப்பது அவசியம்.
சென்னை:
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிவது வழக்கம்.
41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
கார்த்திகை பிறக்க இருப்பதால் இனி 60 நாட்கள் தமிழகத்தில் சரண கோஷம் ஒலிக்க உள்ளது.
வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. இதையொட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தயாராகி வருகின்றனர்.
பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொள்வார்கள்.
இந்த முறை கார்த்திகை முதல் தேதியில் கரிநாள் என்பதால் ஐயப்ப பக்தர்கள் இடையே அன்று மாலை அணிவதா? வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஆன்மீக பெரியவர்கள், குருசாமிகள் அன்று மாலை அணிவதில் தவறு இல்லை என்று கூறியுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய தயாராகி வருகிறார்கள்.
கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவித்தால் நல்ல நேரம் பார்க்க தேவையில்லை. பிற நாட்களில் மாலை அணிவிக்கும் போது நல்ல நேரம் பார்த்து மாலை அணிவிக்க வேண்டும்.
இதுபோல பல விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக ஒரு பாய் வாங்கி அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாலை அணிந்த காலத்தில் அனைவரிடமும் மரியாதையாக, சாந்தமாக பேச வேண்டும் என்ற மற்றொரு நியதி உண்டு.
பார்க்கும் அனைவரையும் ஐயப்பனின் ரூபமாக பார்க்க வேண்டும் என்பதால் தான் மனைவியை கூட "சாமி" என்று அழைக்க வேண்டும்.
மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் இருப்பது அவசியம். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம்.
பக்தர்கள் தங்களுடைய தாய், தந்தை, குருசாமி யார் ஒருவர் மூலமும் மாலையை அணிந்து கொள்ளலாம். குருசாமி இல்லாதோர் கோவிலில் சுவாமி சன்னதியில் மாலையை வைத்து பூஜித்து அர்ச்சகர் மூலமாக மாலையை அணியலாம்.
மாலை அணிவதற்கு பக்தர்கள் ருத்திராட்ச மணி மாலை, துளசி மாலைகளை பயன்படுத்துவது சிறந்தது. மாலை அணிந்த பக்தர்கள் செருப்பு அணிதல் கூடாது. கருப்பு, நீலம், பச்சை அல்லது காவி நிறத்தில் வேட்டிகள் அணிதல் வேண்டும்.
மாலை அணியும் பக்தர்கள் முக்கியமாக கோப தாபங்களையும், விரோத மனப்போக்கையும் தவிர்ப்பது அவசியம். அக்கம்பக்கத்தினருடன் விரோதம் கூடாது. மாலையை எக்காரணம் கொண்டு கழற்றுதல் கூடாது.
விரத நாட்களில் புகைப்பழக்கம், குடிப்பழக்கம், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பலர் மாலையை கழற்றி வைத்து விட்டு மது அருந்திவிட்டு குளித்து விட்டு மீண்டும் மாலை அணிந்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணம்.
காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவும், மாலையில் சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகும் நீராடி கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ ஐயப்பனை மனதார வேண்டி சரணங்கள் கூறி வணங்குதல் வேண்டும்.
பிரம்மச்சரிய விரதத்தை முறையாக முழுமையாக கடைபிடித்தல் வேண்டும். அசைவம் உண்ண கூடாது. சபரிமலை யாத்திரை செல்லும் முன் பக்தர்கள் வீடுகளில் பூஜைகள் நடத்தி எளியோருக்கு அன்னதானம் செய்தல் சிறப்பை தரும்.
முதன் முறையாக மாலை அணியும் கன்னி சாமிகள் மாலை அணியவும் , சபரிமலை செல்லவும் காத்திருகின்றனர். கன்னிசாமிகள் குருசாமி இன்றி மாலை அணியக்கூடாது. ஏனென்றால் அப்போதுதான் அவர் ஐயப்பனுக்கு என்னென்ன விரத முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்து கூறுவார்.
- நிலையில்லா மனிதராக உள்ள எடப்பாடி பழனிசாமி குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
- 2026 தேர்தலில் 200 என்பது நிச்சயம். 234 என்பது லட்சியம்.
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
சூரியனார் கோவில் ஆதீன மடத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து நாளைக்குள் முடிவு செய்யப்படும். சூரியனார் கோவில் ஆதீன மடத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
யாரால் முதலமைச்சர் ஆனாரோ அவரையே எதிர்த்து பேசக்கூடியவர். நிலையில்லா மனிதராக உள்ள எடப்பாடி பழனிசாமி குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
அரசியல் களத்தில் திமுக பலமாக இருக்கிறது. 2026 தேர்தலில் 200 என்பது நிச்சயம். 234 என்பது லட்சியம்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு சில சாலையை அகலப்படுத்துவதற்குண்டான திட்டங்களை வகுத்து இருக்கிறோம். இது குறித்த ஆய்வு வருகிற 15-ந்தேதி துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் வடசென்னை திட்டத்திலே அதிக முக்கியத்துவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார் என்று கூறினார்.
- எக்காரணம் கொண்டும் யாரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடக் கூடாது.
- எதிர்தரப்பினர் தரம் தாழ்ந்து பேசினாலும் அவர்களுடன் நம் கட்சியினர் மல்லுக்கட்ட கூடாது.
சென்னை:
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு, செயற்குழுக் கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து கட்சியின் வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் கட்சி தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதைத் தொடர்ந்து பூத் கமிட்டி மற்றும் வாக்காளர் சேர்த்தல், திருத்தல் முகாமில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் விஜய் அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருக்கிறார்.
மேலும் கட்சி வளர்ச்சிக்காக அடுத்தடுத்து அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் விவாத பொருளாக இருந்து வருகிறது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 'விஜய்' அரசியல் பயணம் பற்றி கடுமையாக சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் கடந்த 8-ந்தேதி சீமான் பிறந்த நாளையொட்டி அவருக்கு விஜய் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜய் ஆலோசனையின் பேரில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விவாதங்களில் பங்கேற்போர் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். எக்காரணம் கொண்டும் யாரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடக் கூடாது. எதிர்தரப்பினர் தரம் தாழ்ந்து பேசினாலும் அவர்களுடன் நம் கட்சியினர் மல்லுக்கட்ட கூடாது. நெறியாளர்களிடம் எடுத்துரைத்து நமது விவாதங்களை புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்த வேண்டும்.
விவாதங்களில் பங்கேற்க செல்பவர்கள் பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தரவுகளின் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும். தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்யக் கூடாது.
பேசுபவர்கள் பேசிவிட்டு போகட்டும். மற்றக் கட்சி நிர்வாகிகளை எக்காரணம் கொண்டும் மரியாதை குறைவாக பேசக்கூடாது. கட்சி கொள்கை, கொடி விளக்கம், கட்சியின் பெயர் காரணங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை உள்வாங்கி கருத்தியல் வாயிலாக விவாதித்து மிளிர செய்ய வேண்டும். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு புஸ்சி ஆனந்த் பேசினார்.
கட்சி தலைவர் விஜய் வலியுறுத்தலின் பேரில் நிர்வாகிகளுக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,280 சரிந்துள்ளது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதற்கேற்றாற்போல், கடந்த மாதம் 31-ந் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்து 640 வரை சென்றது. அதன் தொடர்ச்சியாகவும் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது.
ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை பெரும்பாலும் இறங்குமுகத்தில் இருப்பதையே பார்க்க முடிகிறது. அதிலும் கடந்த 6-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதன் எதிரொலியாக அதற்கு மறுநாள் (7-ந் தேதி) சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
கடந்த மாதம் 31-ந் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், விலை குறைந்ததால் கடந்த 7-ந் தேதி ரூ.58 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
கடந்த 8-ந் தேதி சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, மீண்டும் ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. அதனைத்தொடர்ந்து விலை குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை குறைந்தே காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 85-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,280 சரிந்துள்ளது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த மாதம் 15-ந் தேதிக்கு பிறகு மீண்டும் நேற்று ரூ.57 ஆயிரத்துக்கு கீழ் வந்து இருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,680
11-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,760
10-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200
09-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200
08-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-11-2024- ஒரு கிராம் ரூ. 100
11-11-2024- ஒரு கிராம் ரூ. 102
10-11-2024- ஒரு கிராம் ரூ. 103
09-11-2024- ஒரு கிராம் ரூ. 103
08-11-2024- ஒரு கிராம் ரூ. 103
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு பிறகு, பங்குச்சந்தைகள், 'கிரிப்டோ கரன்சி' உச்சத்தில் இருக்கிறது. அதேபோல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.
எனவே அதன் விலை குறைந்து வருவதாகவும், எப்போது விலை ஏறும் என்பதை கணிக்க முடியாத நிலை இருப்பதாகவும் மெட்ராஸ் வைரம், தங்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் கோல்டுகுரு சாந்தகுமார் தெரிவித்தார்.
- எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதால் இந்த வந்தே பாரத் ரெயிலில் டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது.
சென்னை:
தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் - மைசூரூ, சென்ட்ரல் - கோவை, எழும்பூர் - நெல்லை, சென்ட்ரல் - விஜயவாடா, கோவை - பெங்களூர், எழும்பூர் - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு, மைசூரூ - சென்ட்ரல் என 8 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
இதில், எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரெயில் இந்தியாவின் 28-வது வந்தே பாரத் ரெயிலாகும். தமிழகத்தின் 3-வது வந்தே பாரத் ரெயிலாகும். இந்த வந்தே பாரத் ரெயில் சேவை, தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றைடைகிறது. 8 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 530 பேர் பயணிக்க முடியும். 5 சாதாரண சேர்கார் பெட்டிகள், ஒரு எக்சிகியூட்டிவ் சேர்கார் பெட்டி மற்றும் 2 பக்கமும் டிரைவர் கார் பெட்டிகள் கொண்டதாக இவை உள்ளது.
பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதால் இந்த வந்தே பாரத் ரெயிலில் டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது. காத்திருப்போர் எண்ணிக்கை 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. எனவே, எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 8-ல் இருந்து 16 ஆக உயர்த்த மத்திய ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதத்துக்கு ரெயில்வே வாரியத்திடம் இன்னும் ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை.
ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும். இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் கூடுதாக பயணம் செய்ய முடியும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சாக்குபோக்கு கூறும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது.
- தி.மு.க. அரசின் இந்தச் செயல் அறநெறி மீறி மக்களை கொடுமைப்படுத்துவதற்குச் சமம்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை முன்கூட்டியே கணக்கிட்டு, பணியாளர்களை விரைந்து தேர்ந்தெடுக்கும் வகையில் மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியத்தை தனியாக அமைத்து பொதுமக்களின் உயிரைக் காத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். ஆனால், கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுவிடுமே என்பதற்காக, நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி, மருத்துவத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இயலவில்லை என்று சாக்குபோக்கு கூறும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது.
தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. தி.மு.க. அரசின் இந்தச் செயல் அறநெறி மீறி மக்களை கொடுமைப்படுத்துவதற்குச் சமம். நிதியை காரணம் காட்டி, மக்களுக்கு நீதி வழங்க மறுக்கிறது என்பதே தி.மு.க. அரசின் மீது மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் ஈடுபட்டிருந்த வேளாண் மாணவியை பாம்பு கடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கல்வி கற்க வேண்டிய மாணவ, மாணவியரை இத்தகைய கடுமையான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்படூர் கிராமத்தில் வேளாண் நிலம், பயிர் குறித்த அனைத்து விவரங்களையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் ஈடுபட்டிருந்த வேளாண் மாணவி சங்கரியை பாம்பு கடித்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் நம்மியந்தல் கிராமத்தில் இந்த பணியில் ஈடுபட்ட குருராமலட்சுமி என்ற மாணவி விஷபூச்சி கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவிகளின் இந்த நிலைக்கு பொறுப்பற்ற திமுக அரசு தான் காரணம்.
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்ட நான், ''செப்பனிடப்படாத பகுதிகளில் பணியாற்றும் மாணவ, மாணவிகளை பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் கடித்து அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். பாதுகாப்பற்ற தனித்த பகுதிகளில் பணியாற்றும் போது மாணவ, மாணவியருக்கு சமூகவிரோதிகளால் பாதிப்பு ஏற்படலாம். இதற்கெல்லாம் அரசு பொறுப்பேற்குமா?
கல்வி கற்க வேண்டிய மாணவ, மாணவியரை இத்தகைய கடுமையான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், அதைப் பொருட்படுத்தாத திமுக அரசு, மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி இந்தப் பணியில் ஈடுபடுத்தியதால் தான் சர்வேயின் முதல் நாளிலேயே பாம்பு கடித்தும், விஷப்பூச்சி கடித்தும் இரு மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. திறனற்ற தமிழக அரசு அதன் தோல்விகளை மறைப்பதற்காக மாணவ, மாணவிகளை பலி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய திமுக அரசின் பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.
மாணவி சங்கரி, குருராமலட்சுமி ஆகியோருக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். மாணவிகளுக்கு தரமான மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து வேளாண் மாணவ, மாணவியரை உடனடியாக விடுவித்து வருவாய்த்துறை அல்லது தனியார் அமைப்பைக் கொண்டு இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.
- டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.
இதன் தொடர்ச்சியாக இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு இழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் வருகிற 16-ந் தேதி வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறுகையில்,
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும், டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்றும் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரியில் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடலூர் உள்பட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவிழக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, வேலூர், ஈரோடு, நாமக்கல், கரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி மற்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர், அரியலூர், கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
- வரலாற்றை விடாமுயற்சியின் மூலம் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை:
செந்தில்குமார் எழுதிய 'பாஞ்சாலங்குறிச்சி போர்கள்' புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி, பாரதத்தின் சுதந்திர இயக்கத்தின் உண்மையான வரலாற்றை விடாமுயற்சியின் மூலம் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் காலனித்துவ ஆட்சியை நிலைநிறுத்தும் முயற்சியில், ஆங்கிலேயர்கள் நமது நம்பிக்கையை குலைப்பதற்கும், நமது உண்மையான அடையாளத்தை சிதைப்பதற்கும் நமது வரலாற்றை மறைத்துதிரித்தனர் என்று ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.
பாடபுத்தகத்தில் இருந்து உண்மையான இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர்களின் வரலாற்றை நீக்கி, அவர்களின் தியாகங்களை மறைத்தது மட்டுமின்றி, அடக்குமுறை நிறைந்த ஆங்கிலேய காலனிய ஆட்சியைப் பற்றி புகழ்ந்து, திராவிட இயக்கத்தைச் சுற்றியுள்ள கதைகள் எழுதப்படுவது நன்றி கெட்ட செயல் என்றும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
- துரைப்பாக்கம், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.
- நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டிய நிலையில், இன்று 2வது நாளாக மழை நீடிக்கிறது.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, பெருங்குடி, வேளச்சேரி, துரைப்பாக்கம், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.
நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டிய நிலையில், இன்று 2வது நாளாக மழை நீடிக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்