search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • பல்வேறு புதிய திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தண்ணீர் தேங்காமல் இருக்க மெட்ரோ நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை தரமணியில் ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'ஸ்டார்ட் அப் சென்னை (STARTUP CHENNAI) - செய்க புதுமை' திட்டம் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர்,

    மழைக்காலங்களில் மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க மெட்ரோ நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. யாரை அரசியல் எதிரியாக பார்க்கிறது? என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதாக தெரிவித்தார்.

    • வெட்டிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை திருவொற்றியூரில் மாமூல் தர மறுத்ததால் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற கணவருக்கும் சராமரி வெட்டு விழுந்துள்ளது.

    வெட்டிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    போதையில் மாமூல் கேட்டு மிரட்டிய நிலையில், தர மறுத்ததால் வெட்டியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம்.
    • கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்.

    திருக்கோயில் அர்ச்சகர், ஓதுவார் மற்றும் தவில், நாதஸ்வர பயிற்சிகளை முடித்த 11 பெண்கள் உள்பட 115 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ்கள் வழங்கினார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம். கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம். கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள். நுழைவோம் என்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம்; பயிற்சிப் பள்ளிகள் துவங்கினோம். பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருக்கிறார்கள். திராவிடம் மகிழ்கிறது.

    இவர்களைத் தடுக்க ஏற்படுத்தப்படும் அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும், கோரிக்கையை நிறைவேற்றுவதும் திமுகதான் என்பதை அவர்களே அறிவார்கள்.
    • மொட்டை காகித அறிக்கை என்றால் அது அதிமுகதான் என்பது உலக வரலாறு

    ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை ஒடுக்கிய எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார். அரசு ஊழியர்கள் திமுக பக்கம்தான் நிற்பார்கள் என்பதை தேர்தல் வரலாறு சொல்லும் என்று நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை 'மொட்டை'த் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இருக்கிறது. 'சசிகலா காலில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க முடியும்' என அரசியலில் புதிய Thesis படைத்து Ph.D. பட்டம் பெற்ற பழனிசாமி 'கபட வேடதாரி' என்றெல்லாம் பேசலாமா?

    அரசு ஊழியர் தொடர்பாகத் தி.மு.க. வெளியிட்ட விளக்க அறிக்கையை 'மொட்டைக் காகித அறிக்கை' எனச் சொல்லியிருக்கிறார் திரு. பழனிசாமி. மொட்டைக் காகித அறிக்கை என்றால், அதனை எப்படிப் பத்திரிகைகள் பிரசுரித்திருக்கும்? டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டிருக்கும்? என்ற அடிப்படைகூட தெரியாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பாரா?

    'மொட்டைக் காகித அறிக்கை' என்றால் அது அ.தி.மு.க. என்பதுதானே உலக வரலாறு! ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளுக்கும் சேர்த்து 'மொட்டையாக' வேட்பாளர் பட்டியல் வெளியானது; 2007-இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 'எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் வாக்களிக்கப் போனார்கள்' என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டது; டான்சி வழக்கில், 'ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை' என ஜெயலலிதா சொன்னது எல்லாம் அ.தி.மு.க அடித்த மொட்டைதானே!

    அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான் ஒரு அரசின் கடமை. அரசு ஊழியர்கள்கூட குடிமக்கள்தான். ஆனால், அவர்களை அ.தி.மு.க. என்றைக்குமே மதித்ததில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும் அரசு ஊழியர்களைக் கனிவாகவே தி.மு.க. நடத்தும். ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி என யார் ஆட்சியில் இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. உரிமைக்காகப் போராடியவர்கள் மீது வழக்குகளும் துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்பதுதான் கடந்தகால வரலாறு.

    2001-இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 24-7- 2001 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் பேசும்போது ''அரசின் வரி வருவாயில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது" என்று சொல்லி அரசு ஊழியர்கள் மீதான வெறுப்பை வெளிக்காட்டினார். அதோடு அரசு ஊழியர்கள் அனுபவித்து வந்த பல சலுகைகளை அதிரடியாகப் பறித்தார்.

    அதனை எதிர்த்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்கள் 2003 ஜூலை 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அடக்குமுறையைப் பிரயோகித்து ஒடுக்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை விசாரணை நடத்தாமல் டிஸ்மிஸ் செய்யும் எஸ்மா சட்டத்தை 04-07-2003-இல் பிறப்பித்தார் ஜெயலலிதா. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை எல்லாம் நள்ளிரவில் வீடு தேடிப் போய்க் கைது செய்து சிறையில் அடைத்தனர். 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர். ஒன்றரை இலட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்தனர். 'ஸ்டிரைக் செய்ய மாட்டோம்' என்ற உறுதிமொழியுடன் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிப் பலரை மீண்டும் வேலைக்குச் சேர்த்தார்கள். ''கடமையைச் செய்யக் காத்திருக்கிறோம் அரசு ஊழியர்களுக்கு மறுவாழ்வு தாருங்கள்'' என முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் பாண்டுரங்கன் விடுத்த கோரிக்கையை எல்லாம் ஜெயலலிதா புறந்தள்ளினார்.

    ஜெயலலிதாவுக்குக் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல பழனிசாமி. ஜெயலலிதாவின் வழித்தோன்றலான பழனிசாமிதான் முதலமைச்சராக இருந்தபோது தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தைக் குறிப்பிட்டு ''இவ்வளவு சம்பளமா?'' என இழிவுபடுத்தினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய அரசு ஊழியர்களையும் , ஆசிரியர்களையும் பார்த்து ''அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?'' என தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.

    பழனிசாமி ஆட்சியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ 2019 ஜனவரியில் போராட்டத்தை நடத்தியது. அன்றைக்கு பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கமான கேலி கிண்டல் பத்திரிகையாளர் சந்திப்பைப் போலவே அந்தப் போராட்டத்தையும் டீல் செய்தார். ''கோரிக்கையை ஏற்க முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்'' என்றெல்லாம் மிரட்டல் விடுத்தார். ''அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர, மக்களிடம் கூடுதல் வரி விதிக்க வேண்டி வரும்'' எனக் காட்டமாகச் சொன்னார்.

    அரசு ஊழியர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது 2019 ஜனவரி 27-ஆம் தேதி அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. `பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர்' எனச் சொல்லி அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தையும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு அரசு ஊழியர்களை அவமானப்படுத்தியது யார்? 'தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு எதற்குப் போராட்டம்?' என அந்த விளம்பரத்தில் கேள்வி எழுப்பியது எல்லாம் பச்சைப் பொய் பழனிசாமிக்கு மறந்துவிட்டதா? இந்த விளம்பரத்தை அனைத்து நாளிதழ்களிலும் அனைத்துப் பதிப்புகளிலும் அந்த விளம்பரத்தை வெளியிடுவதற்காக 50 லட்சம் ரூபாயைச் செலவழித்தனர்.

    இதேபோலதான் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் ஒடுக்கியது பழனிசாமி அரசு. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தைப் போலவே பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஊதிய உயர்வு விவரங்களைத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்காக அன்றைக்கு 46,54,361 ரூபாய் செலவிட்டனர்.

    பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது செப்டம்பர் 7,2017-ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, 7-வது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் 9 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் போராட்டத்தையும் கோரிக்கைகளையும் சிறிதும் மதிக்காமல் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த அரசுதான் அ.தி.மு.க. அரசு. இப்போராட்டங்களுக்குப் பிறகுதான் அன்றைய அ.தி.மு.க. அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது. இன்று அதனைத் தனது சாதனையாக குறிப்பிடும் பழனிசாமி அவர்களின் உள்ளத்தில் உண்மை இருந்தால் அதைச் சொல்வதற்குக் கூசியிருக்க வேண்டும்.

    அனைத்திற்கும் மேலாக 2016, 2017, 2019 ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மீது குற்றக் குறிப்பாணைகள் (17B), இடமாற்றம், பணியிடைநீக்கம், வழக்கு போன்ற ஒடுக்கு முறைகளை ஏவிய பழனிசாமி "எங்களது ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்த முடியும்" எனக் கூறுவது பச்சைப் பொய்யாகும். "கெட்டிக் காரன் புளுகு எட்டு நாளைக்கு" என்பார்கள் ஆனால் பழனிசாமி அடித்து விடுகின்ற பொய்கள் எட்டு நிமிடத்திற்குக் கூட தாங்காது.

    ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை ஒடுக்கிய பழனிசாமி இன்றைக்கு அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார். ''பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்' எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. ஆட்சியில் இருந்தபோது Sadist Government போல ஆட்சி நடத்தி அரசு ஊழியர்களை ஒடுக்கியவர்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாரால், எப்போது திரும்பப் பெறப்பட்டது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் இல்லை. 2021-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் 13.10.2021 அன்று வெளியிட்ட அரசாணையில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.

    அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளை நீக்கிய அரசு திராவிட மாடல் அரசு. மேலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் செயல்படும் இந்த அரசு அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் கடமையை என்றும் கைவிட்டதில்லை. அரசு ஊழியர்களுக்கும் தி.மு.க.விற்கும் இடையிலான உறவு மிகவும் வலிமையானதாகும். அதில் பிளவு ஏற்படுத்தலாம் என பகற்கனவு காணும் பழனிசாமியின் மீது அனுதாபம் கொள்ளலாமே தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

    தொடர்ந்து அரசு வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டும் அரசாக விளங்கும் இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாத்தும் அவர்கள் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. அதற்குச் சாட்சியமாய் விளங்குவதுதான் தொடர்ந்து தேர்தல்களில் மக்கள் தி.மு.க.விற்கு அளித்து வரும் வெற்றிகள்.

    'கபட வேடதாரி' பழனிசாமியையும் அ.தி.மு.க.வையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள். அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தி.மு.க.தான் என்பதை அரசு ஊழியர்கள் அறிவார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வெறுப்பு அ.தி.மு.க.வின் உதிரத்திலேயே ஊறியிருக்கிறது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பழனிசாமி இன்று வடிக்கும் முதலைக்கண்ணீரைப் பார்த்தால் முதலையே தோற்றுவிடும் போலிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • முதல் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
    • 2வது பரிசாக LED TV-ம் 3வது பரிசாக குளிர்சாதன பெட்டியும் வழங்கப்படும்.

    நவம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலமாக பேருந்து முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறைப்படி நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்குத் தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அதன்படி முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற 10 வெற்றியாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

    இந்நிலையில் சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஓ.டி.ஆர்.எஸ் (OTRS) இன் கீழ் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச்சிறப்பு குலுக்கல் முறைக்குத் தகுதி பெறும். இந்த சிறப்பு குலுக்கல் பரிசுகள், 2025ஆம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும்.

    அந்த வகையில் முதல் பரிசு இரண்டு சக்கர வாகனம் ஆகும், இரண்டாவது பரிசு எல்.இ.டி (LED) ஸ்மார்ட் தொலைக்காட்சிப் பெட்டி மூன்றாவது பரிசு குளிர்சாதனப் பெட்டி ஆகும். எனவே பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களைத் தவிர்த்து எளிதாகப் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
    • வடகிழக்கு பருவமழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என்றார்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

    இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

    மழைப்பொழிவை பொருத்தவரை இதே நிலை நீடிக்கும். விட்டு விட்டு கனமழை பெய்யும்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

    நாளை சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு விஷயத்தில கிளாரிட்டி கொடுங்க..
    • உங்களுக்கு உண்மை பேசும் யோக்கியதையே கிடையாது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். இந்த புகார் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென வழக்கை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி பெங்களூரு சென்றுவிட்டார். இருப்பினும் அவ்வப்போது சீமானை கடுமையாக விமர்சித்து விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

    அந்த வகையில், நேற்று நடிகை விஜயலட்சுமி 'வந்தாச்சு மீண்டும் மிஸ்டர் சீமான்' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜயலட்சுமி கூறியிருப்பதாவது:-

    வந்தாச்சு மீண்டும் மிஸ்டர் சீமான்... ரொம்ப உத்தமர் மாதிரி தமிழ் தேசியம் பற்றி கதைகளைப் பேசிவிட்டு, நான் ரொம்ப நல்ல தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்தவன் என்று கூறி இருக்கிறார் சீமான். அப்போ நான் என்ன இந்தி அப்பா அம்மாவுக்கு பிறந்தவளா? நானும் தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்தவள்தான். ஒண்ணும் இல்ல மிஸ்டர் சீமான்...

    அடுத்து என்னை முதலமைச்சர் ஆக்குங்க என்று சொன்னீங்களே.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு விஷயத்தில கிளாரிட்டி கொடுங்க.. அதன்பிறகு உங்களை முதலமைச்சர் ஆக்கலாமா... வேண்டாமா... என்று அவர்கள் முடிவு செய்வார்கள். போன வருஷம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என் வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் போட்டுவிட்டு, இது கயல்விழிக்கு தெரியக்கூடாது, நாம் தமிழர் கட்சியினருக்கு தெரியக்கூடாது, மீடியாவுக்கு தெரியக்கூடாது, தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் தெரியக்கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, இரவும் பகலுமாக என்னிடம் வீடியோ வாங்க டார்ச்சர் செய்தீர்களே.. அதையெல்லாம் தாங்க முடியாமல் தானே நான் வழக்கு கொடுத்தேன். அதையெல்லாம் மறைத்துவிட்டு, என் பெயரைக் கெடுக்க திமுக விஜயலட்சுமியை கூட்டி வந்திருக்கிறது என பச்சைப் பொய் சொன்னீர்களே.. அவ்வளவுதானா உங்க யோக்கியதை? வெறும் 50,00 ரூபாய்க்கு உங்களிடம் வீட்டு வேலைக்கு வந்த மதுரை செல்வம் எனக்கு ரூ. 1 கோடி கொடுத்திருக்கிறாராம். அதை என்னவென்று கேட்காமல்.. ஏதோ வாபஸ் கொடுத்துவிட்டு போய்விட்டா என்று நினைத்து, உங்க மனைவி முன் நின்று, 'பழக்கத்திற்கு இவள் தான் கிடைத்தாளா என எனது மனைவி கேட்டாள்' என்று சிரிப்பது தானா உங்கள் யோக்கியதை?.

    இதையெல்லாம் பார்த்த பிறகு தமிழ்நாட்டு மக்கள் உங்களை முதலமைச்சர் ஆக்கப்போகிறார்களா? உங்களுக்கு உண்மை பேசும் யோக்கியதையே கிடையாது. உங்களைப் போன்ற துரோகிகள் கையில் தமிழ்நாடு எப்போதும் சிக்காது. அப்படி சிக்கிறதுக்கு தமிழ் உணர்வாளர்கள் யாரும் விடவும் மாட்டார்கள். ஓகேவா, எனவே, உங்கள் முதலமைச்சர் கனவை இத்தோடு விட்டுவிடுங்கள். என் கண்ணீர் உங்களை சும்மா விடாது.. அதைபோல என்னோட அக்கா கண்ணீர் உங்களை என்னைக்கும் சும்மா விடாது.

    இவ்வாறு வீடியோவில் நடிகை விஜயலட்சுமி பேசியுள்ளார்.



    • திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி திறக்கப்பட்டது.
    • இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது.

    சென்னை:

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    இதையடுத்து, தமிழக அரசு சார்பில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்படும்.

    சுனாமி பேரலையின் போதும் கம்பீரமாக உயர்ந்து நின்றார் திருவள்ளுவர். இதுதொடர்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


    • எழும்பூர் நோக்கி வந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலில் சிக்கியது.
    • மழையால் பாதுகாப்பு கருதி ரெயில்கள் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை உள்பட வட மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் நீண்ட தூர செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னைக்கு தாமதமாக வந்தன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, திருவனந்தபுரம், மதுரை, திருச்செந்தூர், செங்கோட்டை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிகாலையில் விழுப்புரத்தை நெருங்கின.

    அங்கிருந்து சென்னை வரும் வழி முழுவதும் பலத்த மழை பெய்ததால் ரெயில்கள் குறித்த வேகத்தில் இயக்க முடியவில்லை. ஒருசில இடஙக்ளில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரெயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன.

    எழும்பூர் நோக்கி வந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலில் சிக்கியது. விழுப்புரம் அருகே அந்த ரெயில் நின்றதால் அதனை தொடர்ந்து வந்த எல்லா ரெயில்களும் ஒவ்வொரு ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    இதனால் அதிகாலை 3 மணிக்கு எழும்பூர் வந்து சேர வேண்டிய கொல்லம் எக்ஸ்பிரஸ் ஒருமணி நேரம் தாமதமாக வந்தது. அதனை தொடர்ந்து சேலம் எக்ஸ்பிரஸ், பாண்டியன், பொதிகை, ராமேசுவரம், சோழன், நெல்லை உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்து சேர்ந்தன. மழையால் பாதுகாப்பு கருதி ரெயில்கள் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மூன்று மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
    • மதியத்திற்கு பிறகு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, மதியம் 14.30 மணி அளவில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இன்று காலை 8.30 மணிஅளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    13.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    14.11.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    15.11,2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    16.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    17.11.2024 மற்றும் 18.11.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

    அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான பலத்த மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கன மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தமிழக கடலோரப்பகுதிகள்: 12.11.2024 மற்றும் 13.11.2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    வங்கக்கடல் பகுதிகள்: 12.11.2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    13.11.2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • கலைஞரின் 40 ஆண்டுகால நண்பரான எம்.ஜி.ஆர். அவர்களின் தாயார்தான் அன்னை சத்யா.
    • திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும்.

    திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

    "மாதம் மும்மாரி பொழிந்ததா?" என்று அரண்மனை உப்பரிகையில் நின்று வேடிக்கை பார்த்தபடி மந்திரிமார்களிடம் நிலவரம் கேட்கும் ஆட்சியல்ல இது. அன்றாடம் மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுத்து, அவை முறையாகச் செயல்படுகிறதா என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, பணிகளை நிறைவேற்றிடும் ஜனநாயக மாண்புமிக்கது நம் திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத வகையில், ஆட்சியின் தன்மையை மக்களின் முகமலர்ச்சியே பதிலாகச் சொல்லிவிடுகிறது. அந்த முகமலர்ச்சியானது அவர்களின் உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சியின் மொழிபெயர்ப்பு.

    கோவையில் நவம்பர் 5, 6 தேதிகளில் நடைபெற்ற அரசுப் பணிகள் கள ஆய்வு, கழகப் பணிகள் கலந்தாய்வு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மக்களின் வரவேற்பு, உடன்பிறப்புகளுடனான சந்திப்பு எனச் சென்ற இடமெல்லாம் மகிழ்ச்சியும் எழுச்சியும் நிறைந்திருந்ததுபோலவே, நவம்பர் 9, 10 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொண்ட பயணமும் முழுமையான வெற்றியாக அமைந்ததை உடன்பிறப்புகளாம் உங்களிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    தென்மாவட்ட மண்ணுக்கேயுரிய பாச உணர்வுடன் மக்களின் பேரன்பை விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேரில் கண்டேன். கழகத்தின் மருதிருவர் என்று நான் அடிக்கடி குறிப்பிடும் விருதுநகரின் இரண்டு மாவட்டச் செயலாளர்களான அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஒரு முறை தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்ற போது, அங்குத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களையும் அங்குப் பணியாற்றும் தொழிலாளர்களையும் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றியது நம் திராவிட மாடல் அரசு. அதுபோல, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலைகள் நிறைந்திருப்பதால், 9-ஆம் தேதியன்று ஒரு தொழிற்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை நேரில் கேட்டறிந்தேன்.

    தீபாவளிப் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு பட்டாசு விற்பனை நன்றாக இருந்ததாகவும், மக்களிடம் வாங்கும் சக்தி பெருகியிருப்பதாகவும் பட்டாசு ஆலையின் உரிமையாளர் தெரிவித்தார். அங்கே பணியாற்றிய தொழிலாளர்களின் தேவை குறித்து கேட்டேன். எதிர்பாராத வகையில் விபத்தில் இறந்துபோகும் தொழிலாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி கற்பதற்கான செலவுகளை அரசே ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்தனர். அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் வகையில், மாவட்ட நிர்வாக அளவிலேயே ஒரு நிதியம் உருவாக்கவும், அந்த நிதியத்திற்கு முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அறிவிப்பு வெளியிட்டேன். பட்டாசுத் தொழிலாளர்களின் அகத்திலும் முகத்திலும் மத்தாப்பாக ஒளிர்ந்தது அந்த அறிவிப்பு. உங்களில் ஒருவனான எனக்கோ, ஒரு விளக்கை ஏற்றி வைத்த உணர்வு.

    கள ஆய்வுப் பணிகளின்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலனுக்கான திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையையும், பயனாளிகளிடம் அவை முறையாகச் சென்று சேர்வதையும் உறுதிப்படுத்திக் கொண்டு, கூடுதல் விண்ணப்பங்கள் மற்றும் மக்களின் பிற தேவைகளைக் கவனித்து, தகுதியுடையவற்றை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினேன். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற பிரசவங்களில் ஒரு குழந்தைகூட இறக்காத வகையில் மகப்பேறு துறை சார்ந்தவர்கள் பொறுப்புடனும் சிறப்புடனும் செயல்பட்டிருக்கும் விவரத்தை அறிந்தேன். அதுபோலவே, பட்டாசு ஆலைகளுக்குச் செல்லும் சிறுவர் - சிறுமியர் நிறைந்த மாவட்டத்தில் அவர்களின் பள்ளிப்படிப்பும் உயர்கல்வியும் இடைநின்று போகாதபடி அதிகாரிகளும் ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று தொடர் முயற்சிகளை மேற்கொண்டு, +2 முடித்தவர்களைக் கல்லூரியில் சேர்ப்பதில் உறுதியாக இருந்து வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். இந்தச் சாதனைகளுக்கு காரணமான அதிகாரிகளை நேரில் அழைத்து அமைச்சர்கள் முன்னிலையிலும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தையும் பாராட்டினேன்.

    ஆய்வுப் பணிகளை முடித்து உரிய ஆலோசனைகளை வழங்கியபிறகு, அன்னை சத்யா அரசு காப்பகத்தில் உள்ளவர்களைச் சந்திக்கப் புறப்பட்டேன். அங்குள்ள குழந்தைகளுக்கு என்ன வாங்கலாம் என யோசித்து, ஒரு இனிப்பகத்திற்குச் சென்று, நானே ஒவ்வென்றையும் பார்த்து, அங்குள்ள தின்பண்டங்களின் தரம், சுவை குறித்து கேட்டறிந்து, நானே ஒவ்வொன்றையும் தேர்வு செய்து வாங்கினேன். அதுபோல நல்ல பழங்களையும் வாங்கிக் கொண்டேன்.

    காப்பகத்திற்குச் சென்றபோது மாலை நேர யோகா வகுப்பு நடந்துகொண்டிருந்தது. குழந்தைகள் தங்கள் பயிற்சியை முடிக்கட்டும் என விடுதிக் காப்பாளரிடம் சொல்லிவிட்டு காத்திருந்தேன். யோகா பயிற்சி முடிந்ததும், அங்கிருந்த குழந்தைகளைச் சந்தித்தேன். காப்பாளர் என்னை அவர்களிடம் காட்டி, "இவர் யார் தெரிகிறதா?" என்று கேட்டபோது, "அப்பா…" என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்தேன். கண்ணீர் துளிர்த்தது. அங்கிருந்த குழந்தைகளில் ஒருவர் நன்றாகப் பேசுவார் என்று சொன்னதையடுத்து, அவர் பேசத் தொடங்கினார். நான் வாங்கிச் சென்ற இனிப்புகளையும் பழங்களையும்விட நன்றி கலந்த அன்புடன் வெளிப்பட்ட அந்தக் குழந்தையின் பேச்சு அத்தனை சுவையாக இருந்தது. அங்கிருந்த குழந்தைகள் அனைவருமே என்னைத் தங்களின் தந்தையாகவே பார்த்து அன்பை வெளிப்படுத்தினர். வாழ்வின் பெரும்பயனை அனுபவித்த உணர்வைப் பெற்றேன்.

    எளிய மக்கள், தொழிலாளர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் நம் அரசின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பதையும், அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற வகையில் திராவிட மாடல் அரசு நடைபெறுவதையும் உறுதி செய்துகொண்டு, இப்படியொரு நல்லாட்சி அமையவேண்டும் என்பதற்காக அயராது உழைத்த உடன்பிறப்புகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக கழகத்தின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை முன்கூட்டியே விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று சிறப்பான முறையில் நிகழ்ச்சியை அமைத்திருந்தார்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு சாதராண உழைப்பு போதாது, சதிகளை முறியடிக்கக்கூடிய சளைக்காத உழைப்பு தேவை என்பதை விருதுநகர் உடன்பிறப்புகளிடம் எடுத்துரைத்தேன். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகத்தின் மினிட் புத்தகங்களை ஆய்வு செய்தேன். விருதுநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜோ. ஞானராஜ் அவர்கள் அதிகபட்சமாக 37 நிகழ்ச்சிகளையும், ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் சௌ. தங்கபாண்டியன் அவர்கள் 30 நிகழ்ச்சிகளையும் நடத்தியிருப்பதை மினிட் புத்தகத்தைப் பார்த்து, தெரிந்துகொண்டு அவர்களைப் பாராட்டினேன். விருதுநகர் மாவட்டத்தில் கழகம் தொடர்ந்து வெற்றி பெறும் தொகுதிகளான விருதுநகர், திருச்சுழி மற்றும் ராஜபாளையம் தொகுதிகளுக்குட்பட்ட நிர்வாகிகளையும் பாராட்டி, அந்த இரு தொகுதிகளின் வெற்றியைத் தக்க வைத்துக்கெள்வதுடன், மாவட்டத்தின் மற்ற தொகுதிகளிலும் 2026-இல் நிச்சய வெற்றி என்பதை உறுதி செய்யும் வகையில் உழைக்க வேண்டியதை உங்களில் ஒருவனாக வலியுறுத்தினேன்.

    நவம்பர் 10 அன்று காலையில் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சந்தித்து திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்துப் பேசினர். விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பத்தாண்டுகாலம் கிடப்பில் போட்டுவிட்டதையும், நம்முடைய அரசு வந்தபிறகு அந்தத் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு 40% அளவுக்குப் பணிகள் நிறைவேறியிருப்பதையும் கூறித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து விருதுநகரில் மாபெரும் மக்கள் நலத்திட்ட விழாவுக்குச் சென்றேன். ஏறத்தாழ 40 ஆயிரம் பேருக்குப் பட்டா வழங்கும் விழா என்பதால், பயனாளிகள் அனைவருக்கும் பட்டா கிடைத்ததை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட அமைச்சர்களிடம் தெரிவித்தேன். நலத்திட்ட விழா நிறைவடைந்தபோது, அத்தனை பேருக்கும் பட்டா உள்ளிட்ட பயன் தரும் உதவிகள் முறையாகப் போய்ச் சேர்ந்திருப்பதை உறுதி செய்தனர். நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர்கூட விடுபடுதல் கூடாது என்ற அக்கறை முதலமைச்சரான எனக்கு மட்டுமல்ல, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை இருப்பதால் மக்களின் தேவையறிந்து நிறைவேற்ற முடிகிறது.

    இதனைப் பொறுக்க முடியாமல்தான் அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கலைஞர் பெயரை வைப்பதா என அநாவசியமாகப் பொங்குகிறார்.

    95 ஆண்டுகால வாழ்வில் 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வை தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் அர்ப்பணித்த மகத்தான தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பியான அவரது புகழ் போற்றும் வகையில் அவரது நூற்றாண்டின் நினைவாக சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் மாபெரும் நூலகம், ஏறுதழுவுதல் அரங்கம் போன்றவற்றை அமைத்தோம். தலைவர் கலைஞரைப் போலவே மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் போற்றவும் இந்த அரசு தவறியதில்லை.

    தந்தை பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், அரசியல் சட்டம் வகுத்து தந்த டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும், அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளைத் தனிப்பெருங்கருணை நாளாகவும் கடைப்பிடிக்கிறது திராவிட மாடல் அரசு. அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என அரும்பெரும் தலைவர்கள் பெயரில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சிதான்.

    விருதுநகரில் நான் சென்று பார்வையிட்ட அரசு காப்பகத்திற்கு அன்னை சத்யா காப்பகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தலைவர் கலைஞரின் 40 ஆண்டுகால நண்பரான எம்.ஜி.ஆர். அவர்களின் தாயார்தான் அன்னை சத்யா. அவர் பெயரில்தான் அரசு காப்பகம் இன்னமும் இயங்கி வருகிறது. இந்த அடிப்படை கூட எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படிப் புரியாமல் போனதோ, பண்பாடே இல்லாமல் அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களைப் போல எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பேசுவதையும், இப்படிப்பட்டவருடன் ஜனநாயக மாண்புமிக்க சட்டமன்றத்திலும் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதையும் எண்ணி வேதனைப்படுகிறேன். வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

    மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான் மாற்று முகாம் கலக்கத்தில் என்னன்னவோ பேசுகிறது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கிறது. பிரிட்டனிலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற ஆங்கில ஏடான Financial Times எழுதியுள்ள கட்டுரையில், "கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் உற்பத்தி பெருகிக்கொண்டே வருகிறது. உலகளாவிய நிறுவனங்களான ஜாகுவார் லேண்ட் ரோவர், நைக், சிஸ்கோ, ஃபாக்ஸ்கான், ஃபோர்டு, கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நம்பிக்கையுடன் முதலீடு செய்துள்ளன. தமிழ்நாட்டில் கல்வித்தரம் மிகவும் உயர்ந்துள்ளது. திறமைமிக்க தொழிலாளர்கள் உள்ளார்கள். இந்தியப் பெண் தொழிலாளர்களில் 40% பெண்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். முதலீட்டிற்கும் வணிகத்திற்கும் ஏற்ற மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுகளைச் செய்கின்றன. முதலீட்டாளர்களுக்கு அரசியல்ரீதியாக எந்தச் சிக்கலும் நெருக்கடியும் வராதபடி தமிழ்நாடு அரசின் தொழிற்கொள்கை அமைந்துள்ளது. இந்தியா தன்னுடைய உற்பத்தியை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியில் உலக அரங்கில் உயர வேண்டுமென்றால் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களும் பிரதிபலிக்க வேண்டும்" என்று திராவிட மாடல் அரசின் தொழிற்கொள்கையையும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும் பற்றி வெளியிட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட ஆய்வுப் பயணத்திலும் அந்த மாவட்டத்தின் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே நல்ல வேலையைப் பெறுகிற வகையில் தொழிற்பேட்டைகளை உருவாக்கி வருகிறோம். கோவை, விருதுநகர் மாவட்டங்களைத் தொடர்ந்து நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளவிருக்கிறேன். தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையை அங்கே தொடங்க இருப்பதால் இரு மாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.

    திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். கழக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • 2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம்.
    • பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 42 மாதகால நிர்வாகத் திறனற்ற தி.மு.க. ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் அவதியுறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைப்பதுபோல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட அனைவரும், அவர்களது கோரிக்கைகள் எதுவும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத காரணத்தால் வெகுண்டெழுந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

    இதுகுறித்து, 10.11.2024 அன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பிய போது, 42 மாதகால தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரியம், போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை போன்ற வாரியப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் உணர்வுகள்தான் வெளிப்பட்டுள்ளன என்று பதில் அளித்தேன்.

    என்னுடைய இந்த கருத்தில் உள்ள உண்மைகள் சுட்டதால், 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை இந்த ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது. யாருடைய பெயரும் இல்லாமல், கையெழுத்தும் இல்லாமல், ஊடகங்களுக்கு முக்கிய குடும்பத்தின் மருமகன் தலைமையில் இயங்கும் பி.இ.என். என்ற நிறுவனம் இந்த அறிக்கையை அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.

    "மொட்டைத் தாத்தன் குட்டையில் வீழ்ந்தது" போல் மனம் போன போக்கில் உண்மைகளை மறைத்து என்மீது காழ்ப்புணர்ச்சியோடு முதுகெலும்பில்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி, பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், நான் கபட நாடகம் ஆடுவதாக ஓலமிடுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் நாடகமோ, கபட நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.

    2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, இன்றைக்கு அவர்களுக்கு பட்டை நாமம் போட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களின் ஆற்றாமையை அரசு ஊழியர்கள்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    சுமார் 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துவிட்டு, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லி வரும் இந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். அம்மாவின் ஆட்சியிலோ, எனது தலைமையிலான அம்மாவின் அரசிலோ நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை என்பது மக்களுக்கே தெரியும்.

    தெரிந்தோ, தெரியாமலோ கடந்த 42 மாதகால தி.மு.க. ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

    18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கருணாநிதி அதைச் செய்தார்; இதைச் செய்தார் என்ற புலம்பல்கள்தான் அந்த அறிக்கையில் அதிகமாக இருக்கிறதே தவிர, மு.க.ஸ்டாலின் அரசு என்ன செய்தது என்று எதுவும் இல்லை.

    பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏற்றுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை திருத்திக்கொள்வார்கள். நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்த இந்த தி.மு.க.விடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. இனியும் உண்மை நிலைகளை உணராமல், இதய சுத்தியோடு செயல்படும் எங்கள் மீது "வெந்ததைத் தின்று வாய்க்கு வந்தபடி உளறித் திரிபவர்களைப்போல்" பாய்ந்து பிராண்டினால், மக்கள் தக்க பதிலடி தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×