search icon
என் மலர்tooltip icon

    சென்னை

    • எல்.ஐ.சி. இணையதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி.
    • தொழில்நுட்ப கோளாறால் ஆங்கில மொழியை தேர்வு செய்யும் இடத்தில் கூட இந்தியில் உள்ளதாக எல்.ஐ.சி. தரப்பு விளக்கம் அளித்துள்ளது.


    எல்.ஐ.சி. இணையதள முகப்பு பக்கம் முழுவதுமாக இந்தி மொழியில் மாறியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்ததும் மட்டுமில்லாமல் மொழி தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

    எல்.ஐ.சி. இணையதள பக்கத்தில் ஆங்கிலம் மொழியை தேர்வு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

    அதனை தொடர்ந்து சிறிது நேரத்திற்குப் பின்னர் எல்.ஐ.சி.யின் முகப்பு பக்கம் ஆங்கிலத்தில் மாறியது.

    இந்தி, ஆங்கிலம் என மாறிக்கொண்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் பக்கம் அவ்வாறு தோன்றியது என எல்.ஐ.சி. விளக்கம் அளித்துள்ளது.

    • நெடுஞ்சாலைத்துறையில் ரூ.680 கோடி ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.
    • அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    அறப்போர் இயக்கத்தின் மீது தொடரப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்கு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.

    கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த போது நெடுஞ்சாலைத்துறையில் ரூ.680 கோடி ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.

    இதனை தொடர்ந்து தன்னைப்பற்றிய அவதூறு பேச்சுக்கு தடை கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற உள்ள வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி உள்ளார். 




    • இதுவரை பெய்த மழைப் பொழிவின் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை குறைவாகவே பதிவாகி உள்ளது.
    • சென்னையை பொறுத்தவரை 55 செ.மீ. மழை பெய்துள்ளது. சராசரி மழையை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய மழை மூலம் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி விவசாயத்திற்கு பயன் அளிக்கும். இது தவிர சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளும் இதனை நம்பிதான் உள்ளன.

    அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் வரை பருவமழை காலம் என்றாலும் சில ஆண்டுகளில் ஜனவரி முதல் வாரம் வரை கூட மழை பெய்வது உண்டு.

    இந்த வருடம் கடந்த மாதம் 15-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் பருவமழை தொடங்கியதால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    அதனை தொடர்ந்து மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த வாரம் உருவாகி மண்டலமாக வலுபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்தது. இதனால் வட மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட மழை பொய்த்து போனது.

    ஆனாலும் வங்க கடலில் தொடர்ந்து உருவாகி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், உள் மாவட்டங்கள் இயல்பை விட குறைந்த அளவில்தான் மழை பெய்து உள்ளது.

    ஏரி-குளம் எதுவும் நிரம்பவில்லை. பருவமழை காலம் மத்திய பகுதிக்கு வந்து விட்ட நிலையில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்தடுத்து உருவாகாமல் தாமதம் ஆவதால் எதிர்பார்த்த மழை பொழிவு இல்லை.

    இதுவரை பெய்த மழைப் பொழிவின் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை குறைவாகவே பதிவாகி உள்ளது.

    18 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. அங்கு 51 சதவீதம் மழை பற்றாக்குறையாக உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 41 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. காஞ்சிபுரத்தில் 35 சதவீதமும், நாகப்பட்டினம் 32 சதவீதமும் இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.

    சென்னையை ஒட்டிய திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் இயல்பை விட தற்போது வரை மழை குறைவாக பெய்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை 55 செ.மீ. மழை பெய்துள்ளது. சராசரி மழையை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 30 செ.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை சராசரியாக 48 செ.மீ. பெய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி 3 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.

    இந்த வாரத்தில் சென்னை அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை குறைவாகவும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் இறுதியில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • 2 நாட்களில் சவரனுக்கு 1040 ரூபாய் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அந்த மாதம் 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் கடந்த அக்டோபர் மாதம் தங்கம் இருந்த நிலையில், கடந்த மாதம் 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தையும் தாண்டியது. அடுத்த 3 நாட்களில் ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற உச்சத்தையும் தொட்டது.

    அதன் பிறகும் விலை குறைந்தபாடில்லை. மேலும் அதிகரித்தே காணப்பட்டு, கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டியது.

    இப்படியே நீடித்தால் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தையும் கடந்துவிடும் என்றே சொல்லப்பட்டது. விலை உயர்வு பலருக்கும் அதிர்ச்சியையே கொடுத்தது. எப்போதுதான் விலை குறையும்? என்ற எதிர்பார்ப்பையும் கொடுத்தது.

    இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2-ந்தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது. எந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததோ, அந்த அளவுக்கு குறைந்து வந்தது. இதனையடுத்து மீண்டும் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியது.

    கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1040 ரூபாய் உயர்ந்துள்ளது.

    சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரன் ரூ.55 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    17-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

    16-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

    15-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,560

    14-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    17-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    16-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    15-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    14-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    • உதயநிதி ஸ்டாலின் நஞ்சை கக்கி இருக்கிறார்.
    • உதயநிதிக்கு நாவடக்கம் தேவை.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியத் திட்டங்களை செயல்படுத்த நிதி இல்லை என்று கூறிவிட்டு, கருணாநிதியை தமிழகத்தின் நவீன கால சிற்பி போன்று உருவகப்படுத்துவதற்காக பன்னாட்டு அரங்கம், கடலில் பேனா சிலை போன்ற மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு மக்களுக்கு பயன் அளிக்காத திட்டங்களுக்கு செலவிடப்படுவதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.


    மேலும் தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, அரசு ஊழியர்களுக்கு துரோகம் செய்து வருகிறது என்றும் தெரிவித்தார். இது சரிதானே...

    42 மாத தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான புதிய திட்டங்கள் ஏதுமில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சாதனைகளை பொதுவெளியில் விவாதம் செய்யத் தயார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று கேட்டதற்கு, இதுவரை வாய் திறக்காத மு.க.ஸ்டாலின், தன் மகன் உதயநிதியை உசுப்பிவிட்டு வாய் நீளம் காட்டியிருக்கிறார்.


    ஊரில் தங்களைப் பாராட்ட யாருமில்லை என்ற காரணத்தால் தந்தை மகனை புகழ்வதும், மகன் அப்பாவை சீராட்டுவதும் என்று மேடைக்கு மேடை இவர்கள் நடத்தி வரும் நாடகத்தை எடப்பாடி பழனிசாமி எடுத்து வைத்ததால் கோபம் கொப்பளிக்கிறதோ? உதயநிதி ஸ்டாலின் நஞ்சை கக்கி இருக்கிறார்.

    அரசியலில் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க.வை தற்போது முன்னின்று நடத்துபவர்போல் ஒட்டுண்ணிகள் அல்ல நாங்கள். தனக்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நப்பாசையில் உதயநிதி ஸ்டாலின் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறக்கூடாது. அவருக்கு நாவடக்கம் தேவை.

    57 ஆண்டு திராவிட ஆட்சிக்கால வரலாற்றில், தமிழக மக்கள் நலனுக்குரிய திட்டங்களை அதிக அளவில் நிறைவேற்றியது அ.தி.மு.க. ஆட்சியா? அல்லது தி.மு.க.வின் ஊழல் ஆட்சியா? என்பது குறித்து பொது மேடையில் விவாதிக்க, உதயநிதி தயாரா? அவரோடு விவாதிக்க நான் தயார். இடம், நாள், நேரத்தை அவரே தீர்மானிக்கட்டும்.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    • மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
    • இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    சென்னை:

    கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). கூடைப்பந்து வீராங்கனையான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரெயிலில் மத்திய பிரதேசம் சென்றார். பின்னர் போட்டியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார். ரெயில் பயணத்தின்போது சாப்பிடுவதற்காக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சிக்கன் ரைஸ் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரெயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். அவர், ரெயில் சென்னை வந்ததும் எலினாவை அண்ணாநகர் 4-வது அவென்யூவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சைக்கு பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் எலினாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    விளையாட சென்ற மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினர் மத்தியிலும் சக மாணவ-மாணவிகள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பிடிபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்
    • கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஓட்டல்கள் மற்றும் டீ கடைகளில் பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர், சில்வர் பேப்பர்களை பயன்படுத்த உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.

    பிளாஸ்டிக் பேப்பர், கவர்கள், சில்வர் பாயில் கவர் போன்றவற்றில் உணவுகளை கட்டிக் கொடுத்தால், முதல் முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தடையை மீறினால் உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வரிப்பகிர்வுக் கொள்கை வளர்ச்சியடைந்த மாநிலங்களை சுரண்டுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது.
    • கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விட்டது.

    சென்னை:

    தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வரிப் பகிர்வுக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள 16-ம் நிதி ஆணையத்தின் தலைவர் முனைவர் அர்விந்த் பனகாரியாவுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

    இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மாநிலங்களில் இருந்து கிடைக்கும் மத்திய அரசின் வரிவருவாயை மத்திய - மாநில அரசுகள் எந்த விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசுடன் விவாதிப்பதற்காக தங்களின் தலைமையிலான 16-ம் நிதி ஆணையத்தின் குழு 4 நாள் பயணமாக சென்னைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. வரிப்பகிர்வில் தமிழ்நாட்டிற்கு உரிய பொருளாதார நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே, மாநில நிதி உரிமைகள் மற்றும் தன்னாட்சிக்காக குரல் கொடுத்துவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் இக்கடிதத்தை எழுதுகிறேன்

    இந்தியா விடுதலையடைந்து, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் 1952-ம் ஆண்டு முதல் நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு, அவை அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி வருவாயில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே மத்திய அரசின் வரிப் பகிர்வில் தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது தான் எவரும் மறுக்க முடியாத உண்மை ஆகும். இந்த நிலை என்றாவது ஒரு நாள் மாற வேண்டும். ஆனால், 15 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு, 73 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி போக்கப்படவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் வளர்ச்சியடையாத மாநில மாநிலங்களுக்கு வளர்ச்சியடைந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டு தான் நிதி வழங்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

    ஆனால், வரிப்பகிர்வுக் கொள்கை வளர்ச்சியடைந்த மாநிலங்களை சுரண்டுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு என்பது கிட்டத்தட்ட 10 விழுக்காடு ஆகும். ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் 41 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் தமிழ்நாட்டிற்கு வெறும் 4.079 சதவீதம் மட்டும் தான் கிடைக்கிறது. அதாவது தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெறப்படும் ஒரு ரூபாயில் 29 காசுகள் மட்டும் தான் வரிப்பகிர்வின் பங்காக திரும்ப அளிக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவு ஆகும். இது எந்த வகையிலும் நியாயம் அல்ல.

    1952-ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதலாம் நிதி ஆணையத்தின் அறிக்கைப்படி, இன்றைய தமிழ்நாட்டை உள்ளடக்கியுள்ள அன்றைய சென்னை மாகாணத்திற்கு 15.25 சதவீதம் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் இப்போது வரை தமிழகத்திற்கான பங்கு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தாராளமயமாக்கள் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்திற்கான வரிப்பகிர்வு பங்கின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது. 1957-ஆம் ஆண்டில், இரண்டாவது நிதி ஆணையத்தின் அறிக்கைப்படி 8.40% ஒதுக்கப்பட்டது. அதன்பின் முறையே 8.13 சதவீதம், 8.34 சதவீதம், 8.18 சதவீதம், 7.94 சதவீதம், 8.05 சதவீதம், 7.56 சதவீதம், 7.93சதவீதம், 6.63 சதவீதம், 5.38 சதவீதம், 5.31 சதவீதம், 4.96 சதவீதம், 4.02 சதவீதம் எனக் குறைந்து பதினைந்தாம் நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி 4.09 சதவீதம் ஆகக் குறைந்து விட்டது.

    ஒன்பதாம் நிதி ஆணையத்தின் காலத்தில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரி வருவாயில் 7.931சதவீதம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விட்டது. இந்த வகையில் மட்டும் தமிழ்நாட்டிற்கு கடந்த 30 ஆண்டுகளில் ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என்பது மத்திய அரசு வரையறுத்துள்ள சில அளவீடுகளின் அடிப்படையிலானது தானே தவிர, உண்மையாக தமிழ்நாடு வளர்ச்சியடையவில்லை.

    2024-25-ம் ஆண்டில் பள்ளிக்கல்விக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய தொகை வெறும் ரூ.44,042 கோடி மட்டும் தான். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 1.39 சதவீதம் மட்டும் தான். அதேபோல், சுகாதாரத்துறைக்கு நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.20,198 கோடி மட்டுமே.

    தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 0.64 சதவீதம் தான். ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கான ஒதுக்கீடு 6 விழுக்காடாகவும், சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு 3 சதவீதம் ஆகவும் இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு கூட நிதி ஒதுக்க முடியாத நிலையில் இருக்கும் தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறிக் கொண்டு, அதன் நிதியை பிற மாநிலங்களுக்கு ஒதுக்குவதை ஏற்க முடியாது.

    தமிழ்நாட்டில் கல்வி, சுகாதாரம், விவசாயம், வீட்டுவசதி, சாலைகள், பிற கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றுக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அதற்கான முதன்மைக் காரணம் தமிழக அரசிடம் நிதி இல்லாதது தான். 2017-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மது, எரிபொருள் தவிர்த்து மீதமுள்ள பொருட்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.

    அதனால், மாநிலங்களின் வருவாய் ஆதாரம் குறைந்து விட்ட நிலையில், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கையும் குறைப்பது பெரும் தண்டனையாகி விடும். மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50 சதவீதம் ஆக அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் 50 விழுக்காட்டை அந்த மாநிலத்திற்கு வழங்கும் வகையில் வரிப்பகிர்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதேபோல், செஸ் மற்றும் கூடுதல் தீர்வைகளை வசூலிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அது தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசும், நிதி ஆணையமும் கருதினால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் பகிர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு ஆசிரியர்களுக்கு மறுநியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
    • 2025ம் ஆண்டு மே 31ம் தேதி வரை மறுநியமனத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார்.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசியர்கள் மறுநியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு ஆசிரியர்களுக்கு மறுநியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    2025ம் ஆண்டு மே 31ம் தேதி வரை மறுநியமனத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும் பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஓய்வு பெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது.

    முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதிற்கொண்டு, நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர் / மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் / கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நிதிக்குழுவுக்கு தமிழக அரசு முக்கிய பரிந்துரைகளை வெளியிட்டது.
    • உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் மானியம், குறைந்தபட்சம் 5 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

    சென்னையில் இன்று 16வது நிதி ஆணைய குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில், நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா, நிதிக்குழு உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, அன்னி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது நிதிக்குழுவுக்கு தமிழக அரசு முக்கிய பரிந்துரைகளை வெளியிட்டது.

    மாநில பேரிடர் மேலாண்மை நிதியை 2026-27ம் ஆண்டு காலகட்டத்தில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று நிதி ஆணைய குழுவுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

    பரிந்துரை காலத்தில் செயல்படுத்த நிதி அளவுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற அளவிலிருந்து 10 சதவீத என்ற அளவில் உயர்த்தப்பட வேண்டும்.

    நகர்ப்புற வெள்ளம், வறட்சி நிவாரணம், கடலோர மேலாண்மை மேற்கொள்ள குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் மானியம், குறைந்தபட்சம் 5 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

    கடற்கரையின் நீளம், நகரமயமாக்கல் போன்ற வரையறை உள்ளிட்ட புதிய குறியீடுகளுடன் பேரிடர் குறியீடுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50:50 என்ற விகிதத்தின் அடிப்படையில் மானியம் ஒதுக்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையேயான பகிர்வானது மாநிலங்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

    • தனக்கு மசாஜ் செய்ய வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி ஆலிசாவுக்கு ஆபாசமாக பேசி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
    • முதலில் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென ஆவேசமாக பேசியுள்ளார்.

    பாஜகவின் திறன் மற்றும் விளையாட்டு பிரிவு செயலாளராக இருப்பவர் ஆலிசா அப்துல்லா.

    இவர், தனக்கு தொடர்ந்து ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த நபரை அவர் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று அழைத்து வந்து போலீசிடம் ஒப்படைத்து அதிரடி காட்டியுள்ளார்.

    சென்னை நீலாங்கரையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதையில் இருந்த அந்த நபர், அலிசாவிடம் தன்னுடன் படுக்கவும், தனக்கு மசாஜ் செய்ய வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி ஆபாசமாக பேசி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆலிசா, அந்த நபர் தங்கியிருந்த ஓட்டலுக்கே சென்று, கையும் களவுமாக பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

    இதற்கிடையே, இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் ஆலீசா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முதலில் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென ஆவேசமாக பேசியுள்ளார்.

    மேலும், பெரிய கட்சியில் பதவியில் உள்ள தன்னை போன்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களுக்கு என்ன நிலைமை எனவும் ஆலிசா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சிந்தாதிரிப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கஸ்தூரியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
    • நடிகை கஸ்தூரி பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு ஏ1 வகுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

    வன்கொடுமை தடுப்பு சட்டம் போல் பிராமணர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசுகையில், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதேவேளையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

    அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவானார்.

    பின்னர் கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து நடிகை கஸ்தூரியிடம் விசாரணை நடத்த எழும்பூர் போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.

    இதனையடுத்து தலைமறைவான கஸ்தூரியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில், தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருப்பதாக எழும்பூர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் ஐதராபாத் சென்று நடிகை கஸ்தூரியை கைது செய்தனர். கைது செய்ய சென்றபோது நடிகை கஸ்தூரி போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். 'எனது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறேன். நான் பேசியதற்கு ஏற்கனவே மன்னிப்பும் கேட்டு விட்டேன். அப்படி இருக்கும்போது கைது செய்வதற்கு ஏன் இப்படி அவசரம் காட்டுகிறீர்கள்' என்றார்.

    அதற்கு போலீசார் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உடனே கைது செய்ய வேண்டிய நிலை உள்ளது என்று அவருக்கு விளக்கினார்கள். அதன் பிறகு அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    சிந்தாதிரிப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுமார் 1½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் பேசிய வீடியோ ஆதாரங்களை காட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர், 'எதிர்பாராத விதமாக உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசிவிட்டேன். நான் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டேன். தெலுங்கு பேசும் பெண்களை நான் மதிப்பவள்' என்று தெரிவித்தார்.

    விசாரணை முடிந்ததும் நடிகை கஸ்தூரியை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் சாப்பாடு வேண்டாம், ஜூஸ், சாண்ட்விச் போதும் என்றார். இதையடுத்து அவற்றை போலீசார் வாங்கி கொடுத்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது கஸ்தூரி, தனக்கு 12 வயதில் மாற்றுத்திறனாளி மகன் இருப்பதாகவும், அவனை நான் தான் கவனிக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு மாஜிஸ்திரேட்டு, 'மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால் நாங்கள் உடனடியாக ஜாமீன் வழங்க முடியாது.

    எனவே உங்கள் மகனை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' என்றார். இதையடுத்து நடிகை கஸ்தூரி தனது மகனை உறவினர்களிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்கு அவர் புழல் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    ஒவ்வொரு நாளும் ஜெயிலுக்கு அழைத்து வரப்படும் கைதிகள் முதல் நாளில் அங்குள்ள ஹாலில் மொத்தமாக வைக்கப்படுவது வழக்கம். நேற்று சுமார் 15 பெண் கைதிகள் வந்திருந்தனர். அவர்களுடன் ஹாலில் நடிகை கஸ்தூரி வைக்கப்பட்டு இருந்தார்.

    கஸ்தூரி சினிமா நடிகை என்பதால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அதனால் அவர் நேற்று இரவு ஜெயிலில் தூக்கமின்றி அவதிப்பட்டார். நேற்று பிற்பகலில் ஜெயிலுக்கு சென்றபோது சக கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

    நேற்று மதியம் அவர் ஜெயிலில் சாப்பிடவில்லை. நேற்று இரவு கலவை சாதம் வழங்கப்பட்டது. அதை குறைந்த அளவிலேயே அவர் சாப்பிட்டார். இன்று காலையில் பொங்கல், கிச்சடி வழங்கப்பட்டது. அதையும் அவர் விரும்பாததால் குறைவாகவே சாப்பிட்டார்.

    சக கைதிகளுடன் அடைப்பு ஜெயிலில் முக்கிய பிரமுகர்களுக்கு ஏ1 வகுப்பு வழங்கப்படுவது வழக்கம். நடிகை கஸ்தூரி பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு ஏ1 வகுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர் முறைப்படி கோர்ட்டை அணுகி அனுமதி பெற வேண்டும். அதுவரை அவர் சக பெண் கைதிகளுடனேயே அடைக்கப்படுவார்.

    அதன்படி நேற்று ஜெயிலில் உள்ள ஹாலில் சக பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டு இருந்த கஸ்தூரி இன்று வேறு அறைக்கு மாற்றப்பட்டு சக பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டார்.

    ×