search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நெல்லை தொகுதி பிரசாரத்துக்கு அனிதா ராதாகிருஷ்ணனை அனுப்பிய மு.க.ஸ்டாலின்
    X

    நெல்லை தொகுதி பிரசாரத்துக்கு அனிதா ராதாகிருஷ்ணனை அனுப்பிய மு.க.ஸ்டாலின்

    • தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என கண்டித்தார்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டு அவர் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    இந்த தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் மிகவும் எதிர்பார்த்த நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசும் தி.மு.க.வினருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்து வருவதாகவும், இதனால் தேர்தல் வேலைகளில் சுணக்கம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. அதே நேரத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் நெல்லை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவர் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றியடைய செய்வதற்காக பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.

    அதேநேரத்தில் வேட்பாளரான ராபர்ட் புரூஸ், சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்திக்காமல் இருந்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து ராபர்ட் புரூஸ் அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்தில் புகார் கூறியுள்ளார். உடனடியாக மேலிடத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நெல்லை தொகுதியின் நிலவரத்தை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோஷ்டி பூசல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என கண்டித்தார். மேலும் தேர்தல் பணிகளில் எவ்வித சுணக்கமும் இல்லாமல் இருக்கும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை நெல்லை பாராளுமன்ற தொகுதி கூடுதல் பொறுப்பாளராக அறிவித்துள்ளார்.

    இதையடுத்து கடந்த 2 நாட்களாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு ராதாபுரம் தொகுதி கடற்கரை கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தொடர்ந்து இன்று ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அம்பை சட்டமன்ற தொகுதிகளில் முகாமிட்டு தி.மு.க.வினரை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட முடுக்கி விடும் பணியில் களம் இறங்கி உள்ளார்.

    தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளம், கூடுதாழை, கூட்டப்பனை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இன்று மாலை சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×