search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கிவிட்டால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது.
    • சீட்டுக்கும் நோட்டுக்கும் அலைவதை விட்டு விட்டு நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள்.

    தருமபுரி:

    தருமபுரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா பொன்னி வளவனை ஆதரித்து இன்று தருமபுரி 4 ரோடு சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:

    திராவிட கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது. பீகாரில் மாநில அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் அது நடக்கவில்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தி.மு.க. அரசு நடத்தாது.

    தி.மு.க.விற்கு நீங்கள் தொடர்ந்து வாக்களித்து இருந்தால் உங்கள் உரிமையை நீங்கள் இழக்கப்படுவீர்கள். நோயாளிகள் உருவாகாத ஒரு சமூக சமுதாயத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் கொடுக்க முடியாது என்று கூறிய காங்கிரசுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர் மு.க.ஸ்டாலின். காவிரிநதி நீரை கொடுக்கவில்லை என்றால் தமிழகத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் தோற்கடிக்கபடுவீர்கள் என்ற நிலை உருவாக வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளாக பேசாத பாஜக தற்போது கச்சத்தீவை பற்றி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    பா.ஜ.க. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் அரசியல் ஆகும்.

    6 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நாடாளுமன்றம் என்பதை மாற்றி 3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்றம் என மாற்றப்பட வேண்டும். ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கிவிட்டால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது.

    ஒரு வேட்பாளர் ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டால் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். சீட்டுக்கும் நோட்டுக்கும் அலைவதை விட்டு விட்டு நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பாட்டு பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு சீமான் வாக்கு சேகரித்தார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார்.
    • பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள்.

    தருமபுரி:

    இந்தியா கூட்டணி கட்சி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆ.மணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:

    தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து லட்சகணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும். உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுக்களை போட்டு.. மோடிக்கு வைக்க வேண்டும்.

    தருமபுரி தொகுதியில் அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டையில் 11 கோடி ரூபாய் மதிப்பிட்டில் சாலை அமைக்கப்பட்டது உள்ளி்ட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

    தற்போது புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளேன். இதில் தொப்பூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள், தருமபுரி-மொரப்பூர் ரெயில்வே திட்டம், ஒகே னக்கல்லில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் காவிரி உபரிநீர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பு காவிரி உபரிநீர் திட்டம், விவசாயிகளுக்கான நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படு்ம். தேர்தலுக்கு தேர்தல் தான் மோடி வந்து செல்வார். இந்தியாவிேலயே முதன் முறையாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இந்த திட்டத்தை வெளி மாநிலத தவரும், வெளிநாட்டவரும் பின்பற்றக்கூடிய திட்டமாக இருக்கிறது. இது திராவிட மாடல் அரசு.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் வழங்கப்படும்,.பெட்ரோல் 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயுக்கு வழங்கப்படும். இந்தியா முழுக்க உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி, சமூகநீதிக்காக எதிராக உள்ள பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் இதனை மறுத்தும் வரும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருக்கிறார்.

    டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த ராமதாஸ் பா.ஜ.க.வி்ன் ஆட்சிக்கு பூஜ்ஜியத்திற்கு கீழே ஏதாவது மதிப்பெண் இருந்தால் தான் கொடுக்கலாம் என்றார். ஆனால் ராமதாஸ், தற்போது பா.ம.க அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    தேர்தல் நேரத்தில் வந்து செல்வார் பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி செல்வதாக செங்கல்லை நட்டு அடிக்கல் நாட்டி சென்றார், அந்த ஒற்றை கல்லயும் நான் எடுத்து வந்துவிட்டேன்.

    மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன், 29 பைசா, அதாவது செல்லாக்காசு, அப்படியே நீங்களும் அப்படியே அழைக்கலாம். மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக ஜி .எஸ்.டி. திருப்பி தருகிறீர்கள், ஆனால் தமிழகத்திறகு 29 பைசா தான் ஒன்றிய அரசு திருப்பி தருகிறார்கள்.

    மாநில உரிமைகளை அடகு வைத்தது அ.தி.மு.க.தான். உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று அ.தி.மு.க. கூற முடியுமா?, சசிகலாவின் காலை பிடித்து ஆட்சிக்கு வந்தவர், கடைசியில் அவர்கள் காலை வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவுக்கு மட்டும் இல்லை. ஒட்டு மொத்த தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த 2 கூட்டணி கட்சிகளையும் விரட்டியடிக்க வேண்டும்.

    கடந்த 10 வருடத்தில் பா.ஜ.க. அரசு செய்த அனைத்து ஊழல்களும் சி.ஏ.ஜி அறிக்கையில் கிடையாது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு செய்திருக்க கூடிய செலவுகளில் 7½ லட்சம் கோடி ரூபாய் பணத்தை காணவில்லை. ஆயுஷ்மான்பவன் திட்டத்தின் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு ஒரே செல்போனிலிருந்து பணம் அனுப்பி இருக்கின்றனர். பி.எம்.கேர் பண்டில் பெறபட்ட 34 ஆயிரம் கோடி பணம் குறித்து தகவல் அறிக்கையில் கேள்வி கேட்டால் பதில் தர மறுக்கிறார்கள். இது தான் மோடி அரசு.

    எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே பிரதமர். இந்தியா கூட்டணியில் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள தி.மு.க. வேட்பாளரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும், மோடியை விரட்டியடிக்க வேண்டும், இந்தியாவிக்கே ஒரு விடியல் ஆட்சியை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி:

    தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பாலசுப்ரமணியம் தெருவில் வசித்து வந்தவர் விஜய் (வயது 36) இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், கவின், காரண்யா என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். விஜய் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபாடு கொண்ட அவர் கடந்த 3 மாதத்திற்க்கு முன் பெரும் தொகையை சூதாட்டத்தில் இழந்தார். இதனால் விரக்தியில் இருந்து வந்தவர். கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர்.
    • விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடத்தூர்:

    கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 67). அ.தி.மு.க.வின் முன்னாள் அவை தலைவரான இவரும் கடத்தூரைச் சேர்ந்த விநாயகர் சரவணன் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் சிலரும் தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் என்பவர் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டம் முடிந்து விடு திரும்பினர்.

    அப்போது மணியம்பாடி அருகே சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்பொழுது அவ் வழியாக வந்த தனியார் பஸ் காரின் மீது மோதியதில் காரின் அருகில் நின்றிருந்த ராமன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.
    • அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர்.

    தருமபுரி:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று (4-ந் தேதி) தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.

    அதன்படி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தபால் ஓட்டுப் பெறத் தகுதியான 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்கள் வாக்காளர்களிடம் அளிக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிரிவில் 1897 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 1228 வாக்காளர்களும் என மொத்தம் 3125 வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். இவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவர், உதவி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர், நுண் பார்வையாளர் ஒருவர், போலீசார் அலுவலர் ஒருவர் மற்றும் வீடியோகிராபர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு வாக்காளர்களின் வசிப்பிடத்திற்குச் சென்று தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த வாக்காளரின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வாக்குகளை பெற்று கொண்டனர்.

    முதியவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி பகுதியில் காலை 7 மணி முதல் தபால் வாக்கு வழங்குதல் மற்றும் பெறும் பணியை மேற்கொண்டனர். அப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் தபால் மூலம் தங்களது விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்குகள் செலுத்தினர்.

    அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும், ரகசிய வாக்குமுறை கடைபிடிப்பதை மீறாமல் காணொளி பதிவாக பதிவு செய்யப்பட்டது.

    தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகாரி ரமணசரன் தலைமையில் தேர்தல் நடத்தும் குழுவினர் அன்னசாகரம், கொல்ல அள்ளி, எரகாட்டு கொட்டாய், மதிகோன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 33 தபால் வாக்குகளை சேகரித்தனர். இதேபோன்று பென்னாகரம் வாணியர் தெருவில் இன்று முதற்கட்டமாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தேர்தல் நடத்தும் குழுவினர் தபால் வாக்குகளை செலுத்தினர்.

    தபால் ஓட்டு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிப்பதை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் நேரில் பார்வையிடலாம். இப்பணிக்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியில் மொத்தம் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    • ஒற்றை யானைகளும் அவ்வப்போது வனச்சாலையில் ரோந்து வருவதும் வழக்கம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி நெருப்பூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்த கொளந்தையப்ப கவுண்டர் மகன் மாதையன் (வயது 60). விவசாய கூலித்தொழிலாளி.

    இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்பொழுது ஒகேனக்கல் வனப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

    அதேபோல் ஒற்றை யானைகளும் அவ்வப்போது வனச்சாலையில் ரோந்து வருவதும் வழக்கம்.

    இந்த நிலையில் மாதையன் ஒகேனக்கல் பெரிய பள்ளம் என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்த ஒற்றை யானை திடீரென அவரை தாக்கி உள்ளது. இதனால் மாதையன் சம்பவ இடத்திலேயே உடல் முழுவதும் அடிபட்டு அங்கேயே பலியாகினார்.

    இதை வனப்பகுதியில் இருந்த சிலர் பார்த்து ஒகேனக்கல் வனத்துறைக்கும், போலீசாருக்கும் நேற்று 4 மணி அளவில் தகவல் கொடுத்துள்ளனர். நேற்று மாலை வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு மாதையன் சடலத்தை மீட்க போராடியும் யானை மிகுந்த பகுதியாக உள்ளதால், முடியவில்லை.

    எனவே இன்று காலை மீண்டும் ஒகேனக்கல் வனத்துறை மற்றும் போலீசார் உதவியுடன் மாதையன் உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்னர்.

    இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிரசார பொதுகூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.
    • முன்னாள் அமைச்சரும் தருமபுரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், தலைமை வகிக்கிறார்.

    தருமபுரி:

    தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து அ.தி.மு.க. சார்பில் பிரசார பொதுக்கூட்டம் வள்ளலார் திடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த பிரசார பொதுகூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

    இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தருமபுரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்கிறார்.

    முன்னதாக தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி. அன்பழகன் இந்த பிரசார பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று நேரில் வந்து பார்வையிட்டார்.

    • பறிமுதல் செய்து அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
    • மோகன் மாவட்ட அளவிலான குழுவில் மேல் முறையீடு செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க ஆணை பெற்றார்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் சோதனை சாவடியில், கடந்த 21-ந் தேதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பாக்கியம் தலைமையிலான குழுவினர் சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த காரை சோதனை செய்தனர்.

    அப்போது பறையப்பட்டி புதூரைச் சேர்ந்த மோகன் வந்த காரில், 96, 500 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. இதை பறிமுதல் செய்து அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    பின், மோகன் மாவட்ட அளவிலான குழுவில் மேல் முறையீடு செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க ஆணை பெற்றார்.

    இதைத்தொடர்ந்து உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் பெருமாள் தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம் ஆகியோர் மோகனிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.96,500-யை திரும்ப ஒப்படைத்தனர்.

    • மெயின் அருவி, சின்பால்ஸ் ஆகிய அருவிகளில் சீரான அளவில் தண்ணீர் கொட்டியது.
    • ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 28-ந் தேதி நீர்வரத்து விநாடிக்கு 200 கனஅடியாக பதிவானது. 29-ந் தேதி நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 150 கனஅடியாகக் குறைந்தது.

    இந்த நிலையில் நேற்று காலை அதே அளவுடன் நீர்வரத்து நீடித்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்தது.

    கர்நாடகா மாநில குடிநீர் தேவைக்காக அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை நீர்வரத்து சற்று சரிந்து மீண்டும் 400 கனஅடியாக குறைந்து வந்தது. இதன்காரணமாக மெயின் அருவி, சின்பால்ஸ் ஆகிய அருவிகளில் சீரான அளவில் தண்ணீர் கொட்டியது.

    இன்று விடுமுறை நாள் என்பதாலும், கோடை வெயில் அதிகரித்து உள்ளதாலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் அருவிகளிலும், காவிரி ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர்.

    • அணையில் இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ எடுக்க கூறியுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு கல்லூரி பிற்படுத்தபட்டோர் மாணவர் விடுதி உள்ளது . இங்கு 100 மாணவர்கள் தங்கிபடித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக நாகராஜ், சமையலராக மெணசியை சேர்ந்த சிலம்பரசன், வாட்சமேனாக தங்கவேல் ஆகிய 3 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று முதல் 3 நாட்கள் கல்லூரி விடுமுறை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    சுமார் 20 மாணவர்கள் மட்டுமே விடுதியில் இருந்தனர்.

    இதில் 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இளங்குன்னி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரேம்குமார், (19) முதலாம் ஆண்டு இயற்பியல் படிக்கும் பூபதி, (17) ஆகிய 2 பேரும் நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு, வாணியாறு அணையை சுற்றி பார்க்க சென்றனர்.

    அப்போது அணையில் இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ எடுக்க கூறியுள்ளார். அப்போது அணையில் சேற்றில் சிக்கி பிரேம்குமார் உயிருக்கு போராடியுள்ளார். அவரை பூபதி காப்பாற்ற முயற்சி செய்தும் முடியாமல் போகவே, கூச்சலிட்டு உள்ளார். சிறிது நேரத்தில் மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலின் பேரில் வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர், போலீசாரும் அணையில் இருந்து சடலமாக பிரேம்கு மாரை மீட்டனர். புகாரின் படி போலீசார் விசாரிக்கின்றனர்.

    • அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர மறுத்து வருகின்றனர்.
    • நடவடிக்கை எடுத்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு பகுதியை சேர்ந்த அலமேலுபுரத்திற்கு உட்பட்ட கோட்டமேடு, அசோக்நகர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

    தேவையான குடிநீர் பைப், சாக்கடை கால்வாய் பராமரிப்பு, ரோடு வசதி, தெருவிளக்கு ஆகியவை அமைத்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். மேலும், அவர்கள் நடவடிக்கை எடுத்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர்.

    இதுகுறித்து 3-வது வார்டு கவுன்சிலர், பேரூராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர மறுத்து வருகின்றனர்.

    முறையான நடவடிக்கை எடுக்கும் வரை வீடுகளில் கருப்பு கொடியேற்றி வைப்போம் என்றும், வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு என்றார்.
    • வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராடியது தி.மு.க. என்றார் முதல்வர் ஸ்டாலின்.

    தர்மபுரி:

    தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டுமென்றால் பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி பா.ஜ.க. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு.

    சமூக நீதி பேசும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. சமூக நீதி பேசும் ராமதாஸ் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எப்படி?

    பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை பா.ம.க.வினரே ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். பா.ம.க.வின் கொள்கைக்கு முற்றிலும் நேர்மறையான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க. மனமில்லாமல் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி ஏன் அமைத்தது என்பது அக்கட்சியினருக்கே தெரியும்.

    மாநில அரசுக்கு சர்வேதான் எடுக்க முடியுமே தவிர, சென்சஸ் எடுக்கமுடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராமதாசுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உறுதி கொடுத்தாரா?.

    அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் மாறி மாறி வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக குற்றம் சொல்கின்றனர். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராடியது தி.மு.க.

    ஒருமுறையாவது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை சந்திக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார்.

    தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த பணத்தை தரமுடியாது என பாஜக கூறிவிட்டதா? மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது தெரிந்து நிர்மலா சீதாராமன் தப்பித்துவிட்டார் என தெரிவித்தார்.

    ×