search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அவதூறாக பேசிய அ.ம.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்- எடப்பாடி பழனிசாமி மீது 7 பிரிவுகளில் வழக்கு
    X

    அவதூறாக பேசிய அ.ம.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்- எடப்பாடி பழனிசாமி மீது 7 பிரிவுகளில் வழக்கு

    • அ.தி.மு.க.வினர் சூழ்ந்து கொண்டு அ.ம.மு.க. பிரமுகர் ராஜேஸ்வரனை தாக்கி செல்போனை பறித்து வைத்துக்கொண்டனர்.
    • சட்டத்தை கையில் எடுத்து தாக்குதலில் ஈடுபட்டது தவறு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்கு சென்றார்.

    விமான நிலையத்தில் இருந்து பயணிகளை வெளியில் அழைத்துச்செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்சில் நின்றபடியே சக பயணிகளுடன் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் திடீரென எடப்பாடி பழனிசாமியை வீடியோ எடுத்தபடியே பேசினார். 'எதிர்க்கட்சி தலைவர் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.

    சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர்... துரோகத்தின் அடையாளம்... 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தென்நாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என்று சத்தமாக பேசியபடியே அவர் இருந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர் வீடியோ எடுக்கப்பட்ட செல்போனை தட்டி பறித்தார். இதுதொடர்பான வீடியோ உடனடியாக சமூக வலைதளங்களில் பரவியது.

    எடப்பாடி பழனிசாமியின் நேருக்கு நேராக அவரை பற்றி அவதூறாக பேசிய நபர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பதும், இவர் அ.ம.மு.க. பிரமுகர் என்பதும் தெரிய வந்தது.

    இதன் பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி எடப்பாடி பழனிசாமி வெளியில் வந்தார். அப்போது ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் ராஜேஸ்வரன் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவருக்கு சரமாரியாக அடி-உதை விழுந்தது.

    இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக அ.ம.மு.க. பிரமுகர் ராஜேந்திரன் மீது அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ராஜேஸ்வரனும் தனியாக புகார் அளித்தார். அதில், 'எடப்பாடி பழனிசாமியுடன் வந்திருந்த அ.தி.மு.க.வினர் தன்னை தாக்கி செல்போனை பறித்துக்கொண்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 393 ஐ.பி.சி. (செல்போனை பறித்தல்), 506-2 (கொலை மிரட்டல்), 328 (தாக்குதல்) , 294.பி (அவதூறாக பேசுதல்) என்பது உள்பட 7 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வினர் 4 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ராஜேஸ்வரன் மீது 2 பிரிவில் வழக்கு போட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி திட்டியதாக அ.தி.மு.க.வினர் அளித்த புகார் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். அ.தி.மு.க.வினர் சூழ்ந்துகொண்டு அ.ம.மு.க. பிரமுகர் ராஜேஸ்வரனை தாக்கி செல்போனை பறித்து வைத்துக்கொண்டனர்.

    அந்த செல்போனை நீண்ட நேரமாக கொடுக்காமல் அவர்கள் இழுத்தடித்தனர் என்றும் நீண்ட போராட்டத்துக்கு பிறகே செல்போனை கொடுத்தனர்' என்றும் தெரிவித்தார்.

    ராஜேஸ்வரன் அவதூறாக பேசியது தொடர்பாக அ.தி.மு.க.வினர் புகார் மட்டும் அளித்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்போம். சட்டத்தை கையில் எடுத்து தாக்குதலில் ஈடுபட்டது தவறு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×