search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் மின்சார ரெயில்கள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும்
    X

    சென்னையில் மின்சார ரெயில்கள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும்

    • கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும்.
    • இன்று பிற்பகல் 12 வரை அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து.

    சென்னை:

    சென்னை தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது ரெயில் முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்ட பிறகு தாம்பரம் சென்னையின் பிரதான ரெயில் முனையமாக மாறியுள்ளது.

    தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தினமும் 1.5 லட்சம் முதல் 3 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரெயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இங்கிருந்து நாகர்கோவில், செங்கோட்டை, புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் தற்போது 8 பிளாட்பாரங்கள் உள்ளன. முதல் இரு பிளாட்பாரங்கள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரெயில்களை இயக்கவும், 3, 4-வது பிளாட்பாரங்கள் செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

    மீதமுள்ள பிளாட்பாரங்கள் விரைவு மற்றும் சரக்கு ரெயில்களை இயக்க பயன்படுத்தப்படுகின்றன. இனிவரும் காலங்களின் தேவையை கருத்தில் கொண்டு, தாம்பரம் ரெயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரங்கள் மற்றும் இணைப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் தாம்பரம் ரெயில் நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை தாம்பரம்-பல்லாவரம் இடையே பல மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் நாளை முதல் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தாம்பரம் ரெயில்வே பணிமனை மற்றும் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தாம்பரம் வழியாக செல்லும் விரைவு ரெயில்கள் 10 முதல் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 35 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கப்படும்.

    இதுதவிர கூடுதலாக ஒரு பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தாம்பரத்தில் இருந்து சிறப்பு மற்றும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

    ரெயில் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 2 வாரங்களாக மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த 15-ந்தேதி முதல் இன்று வரை மின்சார ரெயில்கள் மட்டுமின்றி விரைவு ரெயில்களும், தாம்பரத்தில் நிற்கவில்லை.

    இந்த நிலையில், தாம்பரம் ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதால் நாளை (19-ந்தேதி) முதல் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்கு இடையே நேற்று வரை 45 நிமிடத்துக்கு ஒரு ரெயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இயக்கப்பட்டது. மற்ற ரெயில்கள் பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்பட்டன.

    ஆனால் இன்று காலையில் தாம்பரம்-பல்லாவரம் இடையே அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும் விரைவு ரெயில்களும் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டன.

    இதனால் இன்று காலையில் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    வெளியூர்களில் இருந்து தாம்பரத்தில் வந்த பயணிகளும் தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படாததால் அவதி அடைந்தனர்.

    இதையடுத்து இன்று காலை முதல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு கூடுதலாக மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் அதில் ஏறி பயணிகள் பயணம் செய்தனர். பஸ் ஏற வந்த பயணிகளுக்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் வழிகாட்டி உதவி செய்தனர்.

    இன்று பிற்பகல் 12 வரை அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படும் என்றும், அதன்பிறகு தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு சில மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×