search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் நள்ளிரவில் ஜவுளி வியாபாரின் வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
    X

    ஈரோட்டில் நள்ளிரவில் ஜவுளி வியாபாரின் வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

    • போலீசார் வீட்டை சோதனை செய்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    • கொள்ளை சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாடார் மேடு, அண்ணாதுரை வீதியை சேர்ந்தவர் பர்கத்பாவா (28). இவர் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜனதுல்.

    இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பர்கத்பாவா தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு சென்று விட்டார். நேற்று நள்ளிரவு குடும்பத்துடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் ரொக்க பணம், 3 பவுன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வீட்டை சோதனை செய்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×