search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா கடத்தி வந்த 7 பேர் கும்பல் கைது
    X

    குட்கா கடத்தி வந்த 7 பேர் கும்பல் கைது

    • 230 மூட்டைகளில் 1658 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • குட்கா கடத்தல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா பெருமாநல்லூர் அருகே வளசப்பாளையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 கார்கள் விபத்துக்குள்ளானது. கார்களை ஓட்டி வந்த டிரைவர் உள்பட கார்களில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்த போது 2 காருக்குள்ளும் 158 மூட்டைகளில் 1,024 கிலோ குட்கா இருந்தது. பெங்களுருவில் இருந்து கோவைக்கு 2 காரில் அந்த கும்பல் குட்காவை கடத்தி வந்ததும், விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்தது.

    குட்கா மற்றும் கார்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை கார் எண்கள் மூலம் விசாரணை நடத்தி தேடி வந்தனர். மேலும் அந்த கும்பலை பிடிக்க பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா, போலீஸ்காரர்கள் கார்த்திக்கேயன், சதீஷ், மயில்சாமி, பாலகுமாரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பெருமாநல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது குஜராத் பதிவெண் கொண்ட கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது காரில் 230 மூட்டைகளில் 1658 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த ராஜஸ்தானை சேர்ந்த ஓபராம் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்திய போது ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்குமார்(21), மற்றொரு தினேஷ்குமார் (21), கேவல்ராம் (26) ஆகிய 3பேர் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கோவை, அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்ததும், கடந்த 2 நாட்களுக்கு முன் குட்கா பொருட்களை ஏற்றி வந்து விபத்துக்குள்ளான கார்கள் அவர்களுடையதும் தெரிய வந்தது.

    பெங்களூரில் புகையிலை பொருட்களுக்கு தடை இல்லாததால் அவர்கள் அங்கிருந்து திருப்பூர், கோவைக்கு புகையிலை பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். போலீசில் பிடிபடாமல் இருக்க சொகுசு கார்களில் அனுப்பி வந்துள்ளனர். திருப்பூர், கோவைக்கு அனுப்பி வைக்கப்படும் புகையிலை பொருட்களை மதாராம்(26), துதாராம்(24), கோபரம்(35) ஆகிய 3பேரும் திருப்பூரில் தங்கியிருந்து விற்பனை செய்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே பெங்களூருக்கு விரைந்த தனிப்படையினர் தினேஷ்குமார், மற்றொரு தினேஷ்குமார் , கேவல்ராம் ஆகிய 3பேரை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குட்கா கடத்தல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×