search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீண்டும் சாலையோரத்தில் குவிந்துள்ள கேட்பாரற்ற வாகனங்கள்- அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

    • பள்ளி, கல்லூரிகள் பஸ்கள் தனியார் பஸ்கள், வேன்கள் சாலையோர இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நிறுத்தப்படுகின்றன.
    • நூற்றுக்கும் மேற்பட்ட பழுது அடைந்த வாகனங்கள் துருபிடித்த நிலையில் கேட்பாரற்று கிடக்கின்றன.

    சென்னையில் மாநகர சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தேவையற்ற வகையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் காலை, மாலை என எப்போதும் முக்கிய சாலைபகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதற்கு சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமல்ல சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒரு காரணம் ஆகும்.

    சென்னையில் ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 2000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

    சென்னையில் சுமார் 50 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில் பெரும் பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக் களிலும் நிறுத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் பஸ்கள் தனியார் பஸ்கள், வேன்கள் சாலையோர இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நிறுத்தப்படுகின்றன. கால் டாக்சிகள், ஆட்டோக்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இட நெருக்கடியால் வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாமல் போய்விட்டன.

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசல், சாலையோர,தெருவோர ஆக்கிரமிப்புகள் தற்போது பெருகி வருகின்றன.எழும்பூர், ஓட்டேரி, புளியந் தோப்பு, பெரம்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றன. இந்தபகுதியில் உள்ள சாலையோரங்களில் பழுதடைந்த உபயோகமற்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கிடக்கின்றன.

    சென்னை மாநகரம் முழு வதும் நூற்றுக்கணக்கான பழுதடைந்த கார், ஆட்டோக்கள்,மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரங்களில் பழுதான, கேட்பாராற்று கிடந்த வாகனங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னை மாநகரம் முழுவதும் கேட்பாரற்ற பழுதான வாகனங்கள் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கிடக்கின்றன. சரி செய்ய முடியாத பழுதடைந்த வாகனங்களை பொதுமக்கள் ரோட்டோர பகுதிகளில் விட்டு சென்று உள்ளனர்.

    இந்த வாகனங்களால் பொதுமக்கள், மற்றும் வாகன போக்குவரத்திற்கு இடை யூறு ஏற்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த மாநகரம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில், மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, வேப்பேரி, கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர், வடபழனி, விருகம்பாக்கம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் என அனைத்து இடங்களிலும் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்கள் குறித்து அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு சம்பந்தப்பட்ட வாகனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பொது மக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களின் பதிவு எண்களை வைத்து அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடந்தது.

    மேலும் உரிமை கோராத, முறையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் இல்லாத கார், வேன், ஆட்டோ வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தற்போது எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், ஓட்டேரி, அயனாவரம், புளியந்தோப்பு, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அசோக்நகர், வடபழனி, கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, மூலக்கடை, பெரம்பூர், செம்பியம், வியாசர்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சாலையோரங்களில் கார் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பழுது அடைந்த வாகனங்கள் துருபிடித்த நிலையில் கேட்பாரற்று கிடக்கின்றன.

    மயிலாப்பூர் பகுதியில் கேட்பாரற்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலையில் வாகனங்களை விட்டுச் சென்றால் ரூ.1,000 அபராதம் விதிக்க வேண்டும். "மோட்டார் வாகன ஒர்க் ஷாப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் 'ரெய்டு' செய்ய வேண்டும். இதில் பல ஒர்க் ஷாப் கடைகளில் இடவசதி இல்லை.இதனால் வாகனங்கள் ரோட்டோரத்திலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை அகற்ற மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×