search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷசாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு நிதி வழங்குவது ஏற்புடையது அல்ல-திருமாவளவன்
    X

    விஷசாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு நிதி வழங்குவது ஏற்புடையது அல்ல-திருமாவளவன்

    • மது கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் தேவையில்லை.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட விஷ சாராயத்தை குடித்துவிட்டு கடந்த வருடம் மே மாதம் 5-ந் தேதி எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தை 10 பேர் மற்றும் மரக்காணம் சம்புவெளி செல்லம் தெரு மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுபோல் 52 பேர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    விஷசாரயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் அழைத்து அவர்களது குடும்பத்தின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மதுவால் அவர்களது குடும்பம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    மது கடைகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு திருமாவளவன் எம்.பி. நிதி உதவியும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுக்கடைகளை மூடுவதற்குரிய செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பாக சில அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாடு முதல்-அமைச்சர் செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை தோழமையோடு முன்வைக்கிறோம். விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு நிதி வழங்குவது ஏற்புடையது அல்ல.

    மரக்காணத்தில் மீன் மார்க்கெட் மற்றும் மீன்பிடி துறைமுகம், தூண்டில் முள் வளைவு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும்.

    மேலும் மீன் மார்க்கெட் கட்டுவதற்கு மரக்காணம் பேரூராட்சி சார்பில் இடம் வழங்கப்பட்டால் விழுப்புரம் எம்.பி. நிதியில் இருந்து மீன் மார்க்கெட் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    விடுதலை சிறுத்தைகள் சார்பாக நடத்தக்கூடிய மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் தேவையில்லை. நாங்கள் இதை அரசியலோடு அணுகவில்லை. 100 விழுக்காடு அரசியல் கடந்து ஒரு சமூக பண்பாட்டு பிரச்சினையாக இதை பார்க்கிறோம்.

    இதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இது நாட்டு நலனோடு மக்கள் நலனோடு தொடர்புடைய ஒரு பிரச்சனை.

    இதில் கூட்டணி கணக்குகளை போட வேண்டாம். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

    தி.மு.க.வும் மதுவிலக்கில் உடன்பாடு உள்ள கட்சி தான். அ.தி.மு.க.வும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிற கட்சிதான். இடதுசாரிகளுக்கும் இதிலே 100 விழுக்காடு உடன்பாடு உண்டு.

    பா.ம.க.வும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று தான் சொல்கிறது. ஆகவே விடுதலை சிறுத்தைகள் மட்டும் அல்ல எல்லோருக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு இருக்கிற போது நாம் ஏன் அனைவரும் ஒருங்கிணைந்து அரசியல் அடையாளங்களை கடந்து கட்சி அடையாளங்களை கடந்து பேசக்கூடாது. குரல் கொடுக்கக் கூடாது என்ற கேள்வியை விடுதலை சிறுத்தைகள் முன்வைக்கிறோம் .

    கள்ளச்சாராயத்தை விற்பவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×