search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சுந்தரமூர்த்தி கோவில் அர்ச்சகர், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
    • சசிகலா, ஊரில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே க.அலம்பலம் கிராமத்வதை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 70). கோவில் அர்ச்சகர், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுந்தரமூர்த்தி, அவரது மனைவி சசிகலா ஆகியோர் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கடந்த 17-ந் தேதி சென்றனர். அங்கு சுந்தரமூர்த்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்த டாக்டர்கள், சுந்தரமூர்த்தியின் ஆதார் கார்டு மற்றும் காப்பீட்டு உதவி திட்ட அடையாள அட்டையை 20-ந்தேதி கேட்டுள்ளனர். இதையடுத்து சசிகலா, ஊரில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்தார். வீட்டின் சாவி மற்றும் ஆதார் கார்டு உள்ள இடத்தை கூறினார்.


    அதனை எடுத்து உள்ளே சென்று ஆதார் கார்டு மற்றும் காப்பீட்டு அட்டையை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் போடுமாறு கூறினார். இதனைத் தொடர்ந்து சசிகலாவின் உறவினர் வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றார். வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து உடனடியாக சசிகலாவிடம் கூறினார். உடனடியாக சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த சசிகலா, பீரோவில் இருந்த 7 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி, ரூ.20 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கச்சிராயபாளையம் போலீசாரிடம் நேற்று (21-ந் தேதி) புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கச்சிராயபாளையம் போலீசார், கோவில் அர்ச்சகர் வீட்டில் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • பூபதிக்கு அடிக்கடி தீராத வயிறு வலி பிரசினை இருந்துள்ளது.
    • பூபதியை சிகிச்சைக்காக சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வீர பயங்கரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி (வயது 60) விவசாயி. இவரது மகன் சக்தி. பூபதிக்கு அடிக்கடி தீராத வயிறு வலி பிரசினை இருந்துள்ளது. இதனால் மது குடிக்கும்பழக்கத்திற்கு ஆளானார். இதனையடுத்து கடந்த 12-ம் தேதி சக்தி வேலைக்குச் சென்று விடடார். பின்னர் வீட்டிலிருந்த பூபதி வயிறு வலி அதிகமானதால் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மாலை சக்தி வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து தந்தை பூபதியை சிகிச்சைக்காக சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பூபதி நேற்று இறந்தார். இதுகுறித்து சக்தி கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோகினி சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
    • வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, விவசாயி. இவருக்கு ரோகிணி (வயது 19) என்ற மகள் உள்ளனர். ரோகினி சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் காலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி ரோகிணி கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ரோகிணியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எங்கேயும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரோகிணியின் சகோதரர் ராஜகுரு சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் மாணவி ரோகிணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மணிகண்டன் மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
    • மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே சுத்தமலையை சேர்ந்த முனுசாமி மகன் மணிகண்டன் (வயது 24) மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மது பழக்கத்தை நிறுத்துமாறு அவரது பெற்றோர் கூறியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 1 மாதத்திற்குள்ளாக அறுவடை செய்வதற்கு ஆலைநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப் பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், ஆலை வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட ப்பட்ட இணை மின் நிலைய பணிகளை தொடங்கி, விரைந்து முடித்திட வேண்டும். ஆலை இயங்கும்போது வெளியேறும் கரிதுகள்கள் பரவுவதை தடுப்பது, வெட்டு க்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும், விவசாயிகள் பயிர் செய்த கரும்புகளை 1 மாதத்திற்குள்ளாக அறுவடை செய்வதற்கு ஆலைநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் முதல் தேதியில் அரவை பணியை தொடங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தனது மனைவி சின்னப்பொண்ணுவுடன் மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(60) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவி சின்னப்பொண்ணுவுடன்(55), இருசக்கர வாகனத்தில் புதுப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த சின்ன பொண்ணு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது.
    • முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்த கமலா, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி (வயது 70). இவரது மனைவி கமலா (60).

    இவர்கள் தள்ளுவண்டி மூலம் வளையல் வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 4 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சாரங்கபாணி, கமலா ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூட ஆள் இல்லாமல் அவதியுற்று வந்தனர்.

    இதனால் மனமுடைந்த இருவரும் கடந்த 19-ந்தேதி அதிகாலை விஷம் குடித்தனர். முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சாரங்கபாணி உயிரிழந்தார். அவரது மனைவி கமலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்த கமலா, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். 6 குழந்தைகள் பெற்றும் பராமரிக்க யாரும் இல்லாததால் வயது முதிர்ந்த கணவன், மனைவி விஷம் குடித்து இறந்து போனது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை யூனியன் குழு தலைவருமான ராஜவேல் உற்சாக வரவேற்பு அளித்தார்.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் கும்பம் எடுத்து வந்து வரவேற்பு அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் இளைஞர்கள் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு தொகுதி எல்லை யான எலவனாசூர் கோட்டையில் உளுந்தூர் பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், உளுந்தூர்பேட்டை யூனியன் குழு தலைவருமான ராஜவேல் உற்சாக வரவேற்பு அளித்தார்.

    அதனைத் தொடர்ந்து 100 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றினார்.

    நிகழ்ச்சியில் உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன், சங்கராபுரம் எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செய லாளருமான உதயசூரியன், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாள ருமான வசந்தம் கார்த்தி கேயன், உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான வைத்தியநாதன், உளுந்தூ ர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் ஜி.ஆர். வசந்தவேல், கே.வி.முருகன், சந்திரசேகரன், நகர தி.மு.க. செயலாளர் டேனியல் ராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆசிர்வாதம், செல்லையா, தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், விடாகம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர் ஷம்சாத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண் ராஜ், துணைச் சேர்மன்கள் இளங்கோவன் ராமலிங்கம், நகர மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி சரவணன், இளைஞர் அணி குரு ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் கும்பம் எடுத்து வந்து வரவேற்பு அளித்தனர்.

    திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சந்திரசேகரன் தலைமையில் ஒன்றிய அவைத்தலைவர் கலியவரதன், ஒன்றிய பொருளாளர் மைக்கேல், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வீராசாமி, பிரபாவதி தாமோதரன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேஷ் கண்ணா, தில்லை இளவழுதி, புத்தர், ஒன்றிய துணைச் செயலாளர் சின்னப்பராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட தொண்டர் படை அமைப்பாளர் ரவி பிரபாகரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் மைக்கேல், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் சக்திவேல், காசிராஜன் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரேம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் பாரதி ஜெயபால் உள்பட திருவண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் ஆயிரம் பேர் கலந்து ெகாண்டு அைமச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனர்.

    • உலகங்காத்தான் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • ரூ.111 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுப் பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தரேஸ் அகமது, எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

    மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வருவாய்த்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை,சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 19 துறைகளை சேர்ந்த 15 ஆயிரத்து 495 பயனாளிகளுக்கு ரூ. 110 கோடியே 93 லட்சத்து 83 ஆயிரத்து 916 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் நடைபெறுகின்ற அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நான் பலமுறை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக வந்திருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கி றேன். ஆனால் இன்று உங்களை சந்தித்து நிகழ்ச்சி யில் பங்கேற்றது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாள். ஏனென்றால் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வந்திருப்பது இதுதான் முதல் முறை.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் மகளிர், மாணவச் செல்வங்கள், வேளாண் பெருங்குடி மக்கள், திருநங்கைகள் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு ரூ.111 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம். தி.மு.க.அரசு 2021 -ம் ஆண்டு அமைந்த பிறகு மக்களுக்கு என்ன திட்டங்கள் வழங்க முடியும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படி எல்லாம் உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் ஒவ்வொரு நாளும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதனால்தான் ஒட்டு மொத்த தமிழ்நாடும் நமது முதல்-அமைச்சரை தங்களது குடும்பத்தில் ஒருவராக கருதிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசு என்பது என்னு டைய அரசு அல்ல. அது மக்களின் அரசு என முதல்- அமைச்சர் அடிக்கடி கூறுவார். ஏனென்றால் இந்த அரசை மக்களாகிய நீங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உங்களுடைய அரசாங்கமாக நினைத்து எண்ணற்ற ஆலோசனைகளை கோரிக்கைகளை முன் வைக்கிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு குடும்பம் கூட அரசு நலத்திட்ட உதவிகளை பெறாமல் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் முதலமைச்சர் திட்டங்களை தீட்டி வருகிறார்.

    கடந்த 2 ஆண்டுகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, என்னும் எழுத்தும் என ஏராளமான திட்டங்களை முதல்- அமைச்சர் செயல்படுத்தி யுள்ளார். சொன்ன வாக்குறுதி களை எல்லாம் அரசு திட்டங்களாக மாற்றியதால் தான் என்னால் இன்று தைரியமாக உங்கள் முன்பு நின்று பேச முடிகிறது. விரைவில் அனைத்து மகளிரும் எதிர்பார்க்கும் சிறப்பான திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்னும் மகத்தான திட்டம் வருகின்ற செப்டம்பர் 15- ந் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று நமது முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதில் தேவையுள்ள ஒரு மகளிர் கூட விடுபடக் கூடாது என்ற அடிப்படையில் தான் கூலி வேலைக்குச் செல்லும் பெண், கட்டிடப் பணிக்கு செல்லும் மகளிர், மீன் விற்க்கும் பெண்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் மகளிர், சிறு வியாபாரம் செய்யும் மகளிர், விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருக்கும் பெண்களுக்கும் இந்த திட்டம் மிகப்பெரிய பயனளிக்கும்.

    சிலர் திட்டமிட்டு இந்த திட்டத்திற்கு எதிராக வதந்திகளை பரப்புகிறார்கள். அதை நம்பாதீர்கள். இந்த திட்டம் உங்களுக்கான திட்டம். மகளிர் வாழ்வில் ஒளியேற்ற வந்துள்ள திட்டம். கடந்த 26 மாதங்களில் முதல்-அமைச்சர் 260- க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இதேபோல் 2 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகளை செய்துள்ளார்.

    அரசின் நலத்திட்டங்கள் இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எந்த அளவிற்கு வந்துள்ளது என ஒரு சில எடுத்துக்காட்டுகளை கூற விரும்புகிறேன். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து மூலம் 3 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரம் மகளிர் பயனடைந்துள்ளனர். இதில் 26 ஆயிரம் திருநங்கைகள், 3 லட்சத்து 50 ஆயிரம் மாற்று திறனாளிகள் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர். மேலும் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன் ரத்து திட்டத்தின் கீழ் 21ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.95 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 89 ஆயிரம் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் விபத்தில் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து400 பேர் பயன் அடைந்துள்ளனர். ரூ 40 கோடி செலவில் புதிய மின் இணைப்புகள் வழங்கப் பட்டு 6 ஆயிரத்து 500 விவ சாயிகள் பயனடைந்துள்ளனர். ஆதரவற்ற மாற்றுத்திறனாளி ஓய்வூதியமாக 264 பேருக்கு ரூ.63 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மகளிர் திட்டம் சார்பாக 9 ஆயிரத்து 799 மகளிர் சுய உதவி குழுக் களில் உள்ள 16,508 நபர்களுக்கு ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

    இன்றைய நிகழ்ச்சியின் மூலம் 54 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலும், 140 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ், 41 அருந்ததியினர் சமுதாய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, 10 திருநங்கைகள் உள்ளிட்ட 611 பேருக்கு 2 கோடி மதிப்பீட்டில் வீட்டு மனை பட்டா, ஊரக கடன் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 470 பேருக்கு 31 கோடி கடனுதவி, கள்ளக் குறிச்சி மாவட்டத்திற்கு மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.15 கோடி மதிப்பில் அமைய உள்ளது. வானாபுரத்தை தலைமையிட மாக கொண்டு ரூ 7.5 கோடி செலவில் புதிய வட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இவ்வாறு எல்லா தரப்பையும் உள்ளடக்கி வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் நம்முடைய முதலமைச்சர் பார்த்து பார்த்து திட்டங்களை கொடுத்து வருகிறார். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் அரசின் திட்டங்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். மேலும் அரசின் திட்டங்களில் நீங்கள் வெறும் பயனாளிகள் மட்டுமல்ல, பங்கேற்பாளர் நீங்கள் தான் எனவே அரசின் திட்டங்களை தூதுவர்களாக செயல்பட்டு உங்கள் நண் பர்கள் மற்றும் குடும்பத்தி னருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக வருவாய்த்த துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத்துறை, கூட்டுற வுத்துறை உள்ளிட்ட 6 துறைகளில் ரூ.19 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 57 கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை காணொளி காட்சியில் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், திட்ட இயக்குனர் செல்வராணி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தங்கம், நகர செயலாளர் சுப்ராயலு, துணைத் தலைவர் ஷமீம்பானு அப்துல்ரசாக், ஒன்றிய குழு தலைவர்கள் அலமேலு ஆறுமுகம், சத்தியமூர்த்தி, தாமோதரன், ராஜவேல், மாவட்டத் துணைச் செயலா ளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் அருள், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் விமலா முருகன், நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்ற தலை வர்கள் ரோஜா ரமணி, பன்னீர்செல்வம், துரை தாகபிள்ளை, வீராசாமி, மாவட்ட பிரதிநிதி மடம் பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • புல்லூர் காப்புகாடு பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • வனவிலங்குகளை வேட்டை ஆடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திருந்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை இடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகண்யா, தலைமை போலீஸ் ஏட்டு சத்தியராஜ் மற்றும் போலீசார் இடைக்கல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட புல்லூர் காப்புகாடு பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக 5 பேர் நாட்டுதுப்பாக்கியுடன் வந்தனர். அவர்களை பார்த்த போலீசார் உடனே அவர்கள் 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் அவர்கள் எறையூர் பகுதியை சேர்ந்த சூசை (வயது 45), தென்போஸ்கோ (23), அந்துவான் கிருஸ்துராஸ் (25), அந்துவான் சான்பீட்டர் (19), மற்றும் மே.மாலூர் பகுதியை சேர்ந்த ஜான் எடிசன் (22) ஆகியோர் என்பதும் இவர்கள் காப்பு காட்டு பகுதியில் வனவிலங்குகளை வேட்டை ஆடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திருந்ததாக தெரிகிறது. மேலும் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து நாட்டுதுப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

    • மாணவ மாணவிகளுக்கு சரியான உணவுகள் வழங்குவதில்லை என தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்துள்ளது.
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் சரியான நேரத்திற்கு ஆசிரியர்கள் வருவதில்லை. பள்ளி மாணவ மாணவிகளுக்கு சரியான உணவுகள் வழங்குவதில்லை என தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்த நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்தார்.

    கல்வராயன்மலை சேராப்பட்டு அருகே உள்ள கி ளாக்காடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் சேராப்பட்டு அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, இன்னாடு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு செய்து ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்து செல்கிறார்களா? மாணவ மாணவிகளுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு அதற்கான பதில்களையும் கேட்டு கொண்டார். அப்போது கல்வராயன் மலை ஒன்றிய குழு தலைவர் சந்திரன் உடன் இருந்தார்.

    • அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
    • மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே சேந்தநாடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதனையடுத்து இன்று காலை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் உடலை பார்த்து இதுகுறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×