search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை போன ரூ. 1 கோடி மீட்பு:  கரும்பு தோட்டத்திற்குள் மறைத்து வைத்து விட்டு நாடகமாடிய விவசாயி கைது
    X

    கொள்ளை போன ரூ. 1 கோடி மீட்பு: கரும்பு தோட்டத்திற்குள் மறைத்து வைத்து விட்டு நாடகமாடிய விவசாயி கைது

    • கைரேகை நிபுணர்களை கொண்டு லோகநாதன் வீட்டில் கைரேகை பதிவாகியுள்ளதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.
    • எழுத்துப்பூர்வமாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முன்வராமல் இருந்ததால் போலீசருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சார்வாய் புதூர் சாமியார் கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது45) விவசாயி. இவர் கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றதாகவும் அப்போது வீட்டின் பின்புறம் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் பீரோவில் வைத்திருந்த ஒரு கோடி ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாகவும் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார்.

    ஆத்தூர் மணிவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன், அவரது மகன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேக்குகளில் 2 கோடி பணத்தை லோகநாதன் வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

    இந்த பணத்தை பத்திரமாக வைக்குமாறு கூறினார்கள். இந்த நிலையில் ரூ.1 கோடி இருந்த பேக்கை முகமூடி கொள்ளையர்கள் எடுத்து சென்றுவிட்டதாகவும் பணத்தை கொள்ளையார்கள் தனது வீட்டின் அருகில் உள்ள கரும்பு தோட்டம் வழியாக தப்பி சென்றதாக லோகநாதன் போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து லோகநாதன் கூறியபடி கரும்பு தோட்டத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு டிராவல்ஸ் பேக் ஒன்று கிடந்தது. அதனை எடுத்து பார்த்தபோது அதில் கட்டுகட்டாக ரூ.1 கோடி பணம் இருந்தது.

    உடனே போலீசார் அதனை கைப்பற்றினார். கணேசன் வீட்டில் கொள்ளை போன பணம் என்பதையும் உறுதி செய்தனர். ஒரு கோடி ரூபாய் கொள்ளை போனதாக கூறியதால் கைரேகை நிபுணர்களை கொண்டு லோகநாதன் வீட்டில் கைரேகை பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் சந்தேகத்துக்கு இடமாக எந்த தடயங்களும் சிக்கவில்லை. கொள்ளை நடைபெற்றதற்கான சாத்திய கூறுகள் இல்லாததால் லோகநாதன் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

    மேலும் அவர் எழுத்துப்பூர்வமாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முன்வராமல் இருந்ததால் போலீசருக்கு அவர் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

    போலீசார் அவரிடம் கிடிக்கு பிடி விசாரணை நடத்தினார். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    ரியல் எஸ்டேட் அதிபரான கணேசன் கொடுத்து வைத்த பணத்தை அபகரிக்கும் நோக்கத்தில் லோகநாதன் கரும்பு தோட்டத்திற்குள் மறைத்து வைத்துவிட்டு முகமூடி கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.

    போலீசாரின் கவனத்தை திசை திருப்பி கணேசன் பணத்தை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த சம்பவத்தை லோகநாதன் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து லோகநாதன் போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தலைவாசல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×