search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு: பேருந்து நிலைய பணியாளரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்
    X

    கரூர் பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு: பேருந்து நிலைய பணியாளரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்

    • ஐந்துக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் அவரை சரமாரியாக கைகளால் தாக்கி சட்டையை கிழித்ததோடு அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டனர்.
    • ரோந்து போலீசார் அங்கு வருவதைக் கண்ட வடமாநில இளைஞர்கள் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    கரூர்:

    தமிழகத்தின் தொழில் நகரமாக திகழும் கரூர் மாவட்டத்தில் பஸ் பாடி கட்டுதல், கொசுவலை தயாரித்தல், ஆயத்த ஆடைகள் உற்பத்தி என அனைத்து தொழில் நிறுவனங்களிலும் வடமாநில இளைஞர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

    இதற்கிடையே கரூர் அருகேயுள்ள புலியூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் பல்வேறு வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறித்த தகவல் தெரிவிக்கும் டைம் கேன்வாசராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவில் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக திருச்சி செல்லும் பேருந்தின் இருக்கையில் இடம் பிடித்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த வட மாநில இளைஞர்கள் நீங்கள் இடம் பிடித்த இடத்தில் நாங்கள்தான் அமருவோம் என்று கூறி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றியதால் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய செல்வராஜ் கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளார்.

    அப்போது ஐந்துக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் அவரை சரமாரியாக கைகளால் தாக்கி சட்டையை கிழித்ததோடு அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டனர். இதைப்பார்த்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை துரத்தி பிடித்தனர்.

    அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வடமாநில இளைஞர்களை அடித்துள்ளனர். அப்போது ரோந்து போலீசார் அங்கு வருவதைக் கண்ட வடமாநில இளைஞர்கள் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    தாக்குதலில் காயம் அடைந்த செல்வராஜ் கூறுகையில், தனது பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்ற வட மாநிலத்தவர்கள், தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தையும் கழட்ட முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    கரூர் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நடந்த அந்த நிகழ்வு குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Next Story
    ×