search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருப்பூரில் புதிய கமிஷனர் அலுவலகம்: காணொளி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
    X

    திருப்பூரில் புதிய கமிஷனர் அலுவலகம்: காணொளி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

    • 5 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • காவல் நிலையம் திறக்கப்பட்டு இன்றுமுதல் பயன்பாட்டிற்கு வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர காவல் ஆணையரகம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல்துறைக்கு கீழ் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட 17 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    திருப்பூர் மாநகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுபூலுவப்பட்டியில் உள்ள வாடகை கட்டிடத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இயங்கி வந்தது.

    இந்தநிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் அமைக்க பல இடங்களில் இடம் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் அவிநாசி ரோடு, குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்தது.


    இதையடுத்து தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில் 2.24 ஏக்கர் பரப்பில், 5 மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    கமிஷனர், துணை கமிஷனர்கள் அறை, உதவி கமிஷனர் கட்டுப்பாட்டு அறை, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளது. பணிகள் முடிந்து, 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்தநிலையில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் இன்று காலை திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா , அரசு துறை அலுவலர்கள் , காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையம் மற்றும் தெற்கு மகளிர் காவல் நிலையம் பலவஞ்சிபாளையம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

    பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக புகார் அளிக்கவும், நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறவும் ஏராளமானோர் தினந்தோறும் காவல் நிலையம் வந்து சென்றனர். போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இட நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

    இதன் காரணமாக ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் பலவஞ்சிபாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் புதிய காவல் நிலையம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு 7000 சதுர அடி பரப்பளவில் 2 மாடி கட்டிடமாக கட்டுமான பணி நடைபெற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இன்று வீரபாண்டி காவல் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

    Next Story
    ×