search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய தகவல்கள்:  தீர்த்துக்கட்ட 6 மாதமாக நடத்தப்பட்ட `ரெக்கி ஆபரேஷன்
    X

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய தகவல்கள்: தீர்த்துக்கட்ட 6 மாதமாக நடத்தப்பட்ட `ரெக்கி' ஆபரேஷன்

    • 4 முக்கியமான முன் விரோதங்களே காரணம்.
    • 63 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5- ந்தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    பட்டினப்பாக்கத்தில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் வடசென்னை தாதா நாகேந்திரன் உள்பட 28 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் சுமார் 5 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த குற்றப்பத்திரி கையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய 6 மாதமாக தீட்டப்பட்ட சதி திட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஒரு வரை கொலை செய்வதற்கு தொடர்ச்சியாக கண் காணித்து திட்டமிட்டு 'ரெக்கி' ஆபரேஷன் என்று அழைக்கிறார்கள். இது தொடர்பான தகவல்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

    இது தவிர குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள புதிய தகவல்கள் பற்றியும் பரபரப்பான விவரங்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை 4 ஆயிரத்து 892 பக்கங்களை கொண்டதாக உள்ளது. 300 சாட்சியங்களை சேர்த்துள்ளனர்.

    அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும், ஆட்கள் பலத்தோடு வளர்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கின் அசுர வளர்ச்சியை தடுக்கவே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு 4 முக்கியமான முன் விரோதங்களே காரணம் என குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன் நில விவகாரம் தொடர்பாகவும், ரவுடி சம்பவ செந்திலுடன் ஏற்பட்ட விரோதம் தொடர்பாகவும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    ஆற்காடு சுரேஷ் கொலை மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை ஆகியவையும் இதனுடன் சேர்ந்துள்ளன.

    இதன் பின்னணியிலேயே கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

    முதல் குற்றவாளியான நாகேந்திரன் கொலையாளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளார். இரண்டாவது குற்றவாளியான சம்பவ செந்தில் பண உதவியில் முக்கிய உதவி பங்காற்றியுள்ளார்.

    3-வது குற்றவாளியான அஸ்வத்தாமன் நாகேந்திரன் திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தியுள்ளார். வேலூர் சிறையில் இருந்து நாகேந்திரன் சிகிச்சைக்கு வரும்போது ஒன்று கூடி கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளாது.

    ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரூ. 10 லட்சத்தை கொலையாளிகள் செலவிட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷ் மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு விரைந்து செயல்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியான விசாரணை நடத்தப்பட்டு கண்ணுக்குத் தெரியாத மற்ற குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம்.

    இதுபோன்ற தொடர் விசாரணை காரணாமாகவே நாகேந்திரன், அஸ்வத்தாமன் ஆகியோர் சிக்கியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் 63 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1½ கோடி பணமும் ரொக்கமாக ரூ. 80 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×