search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரன் அடிகள் மறைவு- மு.க.ஸ்டாலின், ராமதாஸ் இரங்கல்
    X

    ஊரன் அடிகள் மறைவு- மு.க.ஸ்டாலின், ராமதாஸ் இரங்கல்

    • ஊரன் அடிகள் எண்பதுக்கும் மேற்பட்ட சமய ஆராய்ச்சி நூல்களை எழுதியும் பதிப்பித்தும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார்.
    • ஊரன் அடிகளாரின் மறைவு தமிழ் சமயம் மற்றும் சன்மார்க்க ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    வள்ளலார் பெருந்தொண்டர் தவத்திரு ஊரன் அடிகள் உடல்நலக் குறைவால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மறைவுற்றார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

    22 வயதிலேயே சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவியதுடன் எண்பதுக்கும் மேற்பட்ட சமய ஆராய்ச்சி நூல்களை எழுதியும் பதிப்பித்தும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். நூலாசிரியராக மட்டுமின்றி உரையாசிரியராகவும் சொற்பொழிவாளராகவும் நிலைத்த புகழை ஈட்டியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும், என் மீதும் மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார் ஊரன் அடிகள்.

    அன்னாரது மறைவு சமயப் பற்றுடையோர்க்கு மட்டுமன்றி, சமய நல்லிணக்கத்தில் ஈடுபாடு கொண்ட அனைவருக்குமே ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    வள்ளலாரின் புகழைப் பரப்புவதிலும், தமிழ்ச் சமயங்கள் குறித்து ஆராய்ச்சி செல்வதிலும் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தவத்திரு ஊரன் அடிகளார் வடலூரில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

    வள்ளலார் குறித்து 14 நூல்கள் உட்பட 16 நூல்களை எழுதிய அவர், 12 நூல்களை பதிப்பித்தார், சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்தார். எனக்கு நன்கு அறிமுகமானவர்.

    ஊரன் அடிகளாரின் மறைவு தமிழ் சமயம் மற்றும் சன்மார்க்க ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×