search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலி மர்ம ஆசாரிகள் பறித்து சென்றுள்ளனர்
    • மோட்டார் சைக்கிளில் வந்து பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர்-துறையூர் சாலையில் கல்யாண் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி விஜயா (வயது 65). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை 10 மணி அளவில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஆண் நபர் ஒருவர் விஜயா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்தார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயா திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். ஆனால் அந்த நபர் தாலி சங்கிலியுடன் அருகே தயார் நிலையில் நின்று கொண்டிருந்த மற்றொரு ஆண் நபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி பெரம்பலூர் நோக்கி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.இந்த சம்பவம் குறித்து விஜயா பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதையடுத்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்
    • 124 பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியனூர் ஆற்றங்கரை அருகே அதே ஊரை சேர்ந்த நடராஜன் மனைவி பிரீத்தி(வயது 24) என்பவர் சாராயம் விற்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 124 பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    • குன்னம் அருகே நல்லறிக்கை கிராம பெண்கள் மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர்
    • 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடும்பாவி அமைத்து ஒப்பாரி வைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே நல்லறிக்கை கிராம பெண்கள் மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் கிராம பெண்கள் ஒன்றுகூடி கொடும்பாவி அமைத்து மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர். இதேபோல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடும்பாவி அமைத்து ஒப்பாரி வைத்து வேண்டுதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரம்பலூர் போலீசார் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதுமதி (டவுன்), சுப்பையன் (நெடுஞ்சாலை) தலைமையிலான போலீசார் வெவ்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவை அணிவதால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும் என்றும், சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்கினால் விபத்துகளை தவிர்த்து விடலாம், என்றனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமம் பெற்ற தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • வேப்பந்தட்டை விவசாயி தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போய் உள்ளது
    • சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பெருமாள்(வயது 60). விவசாயியான இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது 7 பவுன் நகையை அடமானம் வைத்து, ரூ.2 லட்சம் பெற்றார். பின்னர் வங்கியில் இருந்து வெளியே வந்த அவர், அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்துள்ளார்.இதையடுத்து வங்கியின் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய அவர், தனது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடைக்கு கையுறை வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த கடையில் கையுறை இல்லாததால், மீண்டும் தனது ேமாட்டார் சைக்கிளில் வேப்பந்தட்டை- ஆத்தூர் சாலையில் உள்ள மற்றொரு எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்று கையுறை வாங்கியுள்ளார்.அந்த கையுறையை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைப்பதற்காக, பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து அரும்பாவூர் போலீசில் பெருமாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி மற்றும் கடைவீதியில் உள்ள பல்வேறு கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

    • பெரம்பலூர் மாவட்டத்தில்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
    • கடைசி நாள் வரும் அக்டோப்ர் 16-ந்தேதி மற்றும் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 15-ந்தேதி கடைசி நாளாகும்.

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் போன்ற பயிர்கள் எதிர்பாராத இயற்கை இடர்படுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் வரும் அக்டோப்ர் 16-ந்தேதி மற்றும் நெல் சம்பா பயிருக்கு நவம்பர் 15-ந்தேதி கடைசி நாளாகும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் மேற்கூறிய பயிர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில்பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
    • கட்டிடத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    அகரம்சீகூர்,  

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பெரம்பலூர் நடுநிலைப் பள்ளியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறை கட்டிடம், வ.கீரனூர் நடுநிலைப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் ஆகிய புதிய வகுப்பறைக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கற்பகம் கீழப்பெரம்பலூர் மற்றும் வ.கீரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் குத்துவிளக்கு ஏற்றி பள்ளிக் கட்டிடத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்லலிதா, ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார்,செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
    • ராமேஸ்வரத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஆட்டோ பயணம்

    பெரம்பலூர்,   

    தமிழ்நாடு டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நலச்சங்க மாநில தலைவரும், சமூக ஆர்வலருமான சாகுல் ஹமீது என்பவர் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை ரத்ததானம் குறித்தான விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

    கடந்த ஆகஸ்ட் 21ம்தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஆட்டோ பயணம்

    விழிப்புணர்வு பயணம் சிவகங்கை, மதுரை , திண்டுக்கல், கோவை , ஈரோடு, வேலூர், காஞ்சிபுரம் வழியாக செப்டம்பர் 21-ந்தேதி சென்னையை சென்றடைந்தது. பின்னர் விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக பெரம்பலூர் வந்தடைந்தது.

    பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் சார்பில் பெரம்பலூர் டிராபிக் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையில் எஸ்ஐ வரதராஜன் முன்னிலையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பெரம்பலூர் நான்கு ரோட்டில் இருந்து இவரது ரத்த விழிப்புணர்வு ஆட்டோ பயணம் புது பஸ்ஸ்டாண்ட், பாலக்கரை, சங்கு பேட்டை, காமராஜர் வளைவு , ஆத்தூர் சாலை, பெரம்பலூர் காந்தி சிலை வரை மேற்கொள்ளப்பட்டன. அப்போது ரத்த தான அவசியம் குறித்து துண்டு பிரசுரம் மற்றும் துணி பை வழங்கப்பட்டது. பெரம்பலூரில் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளை கவுரவ செயலாளர் ஜெயராமன் வழி அனுப்பி வைத்தார்.

    பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர் மகேஸ்குமரன், சபரி துரைராஜ், செங்குணம் குமார் அய்யாவு, பெரம்பலூர் ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
    • ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அம்மையத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் அருகே செங்குணம் கைகாட்டி எதிர்புறத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் வரும் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதில் வெள்ளாடு வளர்ப்பு - இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் பதிவுசெய்து இலவசமாக பயிற்சி பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை பள்ளிகளில் கண்காணிக்க 95 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்
    • ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் தங்களின் ஆய்வுப்பணி குறித்த விரிவான அறிக்கையினை கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்

    பெரம்பலூர்,

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 263 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 16 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அடுத்த மாதத்திற்கு (அக்டோபர்) தேவையான உணவு பொருட்கள் கடந்த 22-ந்தேதி அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது, மாணவ-மாணவிகளுக்கு உரிய நேரத்தில் தரமான சுகாதாரமான சுவையான உணவு வழங்கப்படுகிறதா? உள்ளிட்டவற்றை கண்காணிக்க அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து 95 பொறுப்பு அலுவலர்கள், மாவட்ட கலெக்டரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பொறுப்பு அலுவலருக்கும் 2 முதல் 4 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த பொறுப்பு அலுவலர்கள், உணவு பொருட்கள் அடுத்த மாதத்தில் பள்ளி வேலை நாட்களுக்கு போதுமான அளவு உள்ளதா? என்பதனையும் ஆய்வு செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் செலவினங்களுக்காக மைய பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் தங்களின் ஆய்வுப்பணி குறித்த விரிவான அறிக்கையினை கலெக்டருக்கு சமர்ப்பிக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.

    • பாடாலூரில் உள்ள மக்கள் பட்டா கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்
    • கலெக்டர் கற்பகத்திடம் மனு அளித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பாடாலூரில் உள்ள குலாலர் சமூகத்தை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாடாலூர்-தெரணி சாலையில் வடபகுதியில் மண்பாண்ட தொழில் செய்யும் குலாலர் சமூகத்தை சேர்ந்த 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அந்தப்பகுதியில் உள்ள எங்கள் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட காலிமனையில் கடந்த 2002-ம் ஆண்டில் அரசு மூலம் பொது கழிவறைகள் கட்டப்பட்டன. அந்த கழிவறைகள் தற்போது 7 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதால் விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறியுள்ளன. இந்த நிலையில் தற்போது வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த கழிவறைகளை திறக்க வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் துர்நாற்றம் ஏற்படும். எனவே அந்த கழிவறைகளை முற்றியிலும் இடித்து, நாங்கள் சுகாதாரமாக வாழவும், எங்களின் குல தொழிலான மண்பாண்ட தொழிலை செய்வதற்கு அந்த இடத்திற்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    • ஓய்வு பெற்ற பெண் பொறியாளரிடம் 11 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்
    • கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார், மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    தூத்துக்குடி ராமசாமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி முனீஸ்வரி (வயது 64). ஓய்வு பெற்ற இளமின் பொறியாளரான இவர் பெரம்பலூர் கோல்டன் சிட்டி 8-வது தெருவில் வாடகை வீட்டில் உள்ள தனது மகன் விஷ்ணு சக்கரவர்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். விஷ்ணு சக்கரவர்த்தி வேப்பூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் குமாஸ்தாவாகவும், அவரது மனைவி சத்யபிரியா அரியலூரில் உள்ள வங்கி ஒன்றில் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.இதனால் இவர்களின் 3½ வயது ஆண் குழந்தையை முனீஸ்வரி கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் முனீஸ்வரி பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள கடை ஒன்றில் காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முனீஸ்வரியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக முனீஸ்வரி பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்

    ×