search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் வாலிபரை கொடூரமாக கொன்ற நண்பர்கள் 3 பேர் கைது- போலீசார் விசாரணையில் தகவல்
    X

    கொலை செய்யப்பட்ட அஜித்குமார்.

    திருப்பூரில் வாலிபரை கொடூரமாக கொன்ற நண்பர்கள் 3 பேர் கைது- போலீசார் விசாரணையில் தகவல்

    • சிறையில் கஞ்சா பயன்படுத்தியதை காட்டி கொடுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தனர்.
    • கத்தியால் சரமாரி குத்தியதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் உள்ளே அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(வயது 23) என்பதும் இவர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் விசாரணையின் போது கொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது போக்சோ வழக்கு இருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் உள்ள 2 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் அஜித்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    இதனிடையே சிறையில் தன்னுடன் தங்கி இருந்த நண்பர்கள் திருப்பூர் வந்திருப்பதாகவும், அவர்களை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் அஜித்குமார் கூறி சென்றுள்ளார். எனவே சிறையில் இருந்து வெளியே வந்த அஜித்குமாரின் நண்பர்கள் யார் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக அஜித்குமாரை பார்க்க வந்துள்ளனர் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அஜித்குமாருடன் சிறையில் தங்கியிருந்த கோவை துடியலூரை சேர்ந்த வல்லரசு (26), திருப்பூரை சேர்ந்த கணேசன் (26), ஷாஜகான் (28) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரும் சேர்ந்துதான் அஜித்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அஜித்குமார் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. போக்சோ வழக்கில் கைதான அஜித்குமாரை போலீசார் கோவை சிறையில் அடைத்தனர். அப்போது அங்கு வல்லரசு, கணேசன், ஷாஜகான் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நண்பர்களாகினர். இந்தநிலையில் சிறை அறையில் வல்லரசு உள்பட 3 பேரும் கஞ்சா பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து அஜித்குமார் சிறைக்காவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறைக்காவலர்கள் 3பேரையும் எச்சரித்துள்ளனர். இதனால் அஜித்குமார் மீது 3பேருக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

    இதனிடையே 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கடந்த 1-ந்தேதி புத்தாண்டு அன்று மது அருந்த வருமாறு அஜித்குமாரை 3 பேரும் அழைத்துள்ளனர். ஆனால் அவர் அன்று செல்ல மறுத்துவிட்டார். மற்றொரு நாள் வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 3-ந்தேதி திருப்பூர் கல்லம்பாளையம் பகுதிக்கு 3பேரும் அழைத்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த அஜித்குமார் , வீட்டில் உள்ளவர்களிடம் நண்பர்கள் அழைப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    அங்கு சென்றதும் 4 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது 3 பேரும், அஜித்குமாரிடம் சிறையில் கஞ்சா பயன்படுத்தியதை எப்படி காவலர்களிடம் காட்டி கொடுக்கலாம் என்று கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கத்தியால் சரமாரி குத்தி உள்ளனர். இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தற்போது தனிப்படை போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    Next Story
    ×