search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
    X

    புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

    • சாலையானது தினமும் 20 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் பயணிக்கும் சாலை ஆகும்.
    • புதர் மண்டிய காடு பராமரிப்பு இல்லாமல் பல சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் கருப்ப கவுண்டன்பாளையம் கே.எம்.ஜி. நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தி.மு.க. கவுன்சிலர் கவிதா நேதாஜி கண்ணன், கம்யூனிஸ்ட் கவுன்சிலர் அருணாச்சலம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் கிரிஷ் சரவணன் ஆகியோர் தலைமையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் .அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் பல்லடம் சாலையில் இருந்து கருப்ப கவுண்டன்பாளையம் செல்லும் பிரதான சாலையில் பாருடன் கூடிய மதுபானக்கடை வருவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேற்படி சாலையானது தினமும் 20 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் பயணிக்கும் சாலை ஆகும். குறிப்பாக வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பெண்கள் பயணிக்ககூடிய சாலையில் பாருடன் கூடிய மதுபானக்கடை வருவதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறோம்.

    ஏற்கனவே இதன் அருகில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள புதர் மண்டிய காடு பராமரிப்பு இல்லாமல் பல சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் மதுபானக்கடையும் வந்து விட்டால் பொதுமக்கள் உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் ஆபத்தாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஓடை பகுதி இருப்பதால் சுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தாங்கள் அந்த இடத்தில் வர உள்ள மதுபானக்கடை அனுமதியை ரத்து செய்து பொது மக்களின் பாதுகாப்பான அன்றாட போக்குவரத்துக்கு ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×