search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை
    X

    போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

    • ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மீதும் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
    • ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மீதும் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 88 ஆயிரத்திற்கும் கூடுதலான தொழிலாளர்களுக்கு 2015-ம் ஆண்டில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு இன்று வரை வழங்கப்படவில்லை. இதில் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.

    அரசு-பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் மீது ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

    ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மீதும் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி உயர்வு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

    போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஓய்வூதியர்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளன. நீதிமன்றத் தீர்ப்புகள் செயல்படுத்தப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டிருக்கிறது.

    ஆனால், அந்த ஆணையை செயல்படுத்தாத தமிழக அரசு, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. அதன் மூலம் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு கிடைக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு மேலும் காலநீட்டம் ஆகும் நிலை உருவாகியுள்ளது.

    அகவிலைப்படி உயர்த்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், நெருக்கடிகளும் காலவரையின்றி தொடர்வதை போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×