search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெருக்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சிரமத்துக்குள்ளாகும் குடியிருப்பு வாசிகள்
    X

    தெருக்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சிரமத்துக்குள்ளாகும் குடியிருப்பு வாசிகள்

    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான அண்ணா நகர் டவர் பார்க். சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
    • வீடுகளில் வசிப்போருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

    சென்னையில் மக்கள் தொகை பெருகி வருவது போல் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.

    இதற்கேற்றார் போல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான அரசு அலுவலகங்கள், வணிக தலங்கள், பூங்காக்கள் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதிகள் இல்லாததால் அருகில் உள்ள தெருக்களில், வீடுகளின் முன்பு வண்டிகளை நிறுத்தி செல்கின்றனர்.

    இதனால் வீடுகளில் வசிப்போருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

    சென்னை நகரின் அழகான பகுதி அண்ணாநகர். இங்கு வசிப்போர் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் ஆவார்கள். பெரும்பலான வீடுகளில் கார்கள் பயன்பாடு அதிகம். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாநகரில் வணிக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், பொழுது போக்கு பூங்காக்கள் அதிகம் உள்ளன.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான அண்ணா நகர் டவர் பார்க். சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் வரும் வாகனங்கள் பூங்காவின் முன்பு நிறுத்தப்பட்டு அங்கு இடமில்லாமல் அருகில் உள்ள தெருக்களின் வீடுகள் முன்பு நிறுத்தப்படுகின்றன. இதனால் வீடுகளில் வசிப்போர் பெரும் சிரமம் அடைகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    ஒய் பிளாக்கில் அதிக வாகனங்கள் வீடுகளின் முன்பு நிறுத்தப்படுவதால் ஏற்படும் சங்கடங்கள் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பல ஏக்கர் பரப்பளவுள்ள டவர் பூங்காவில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த பகுதி மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளிலும் இருந்தும் இங்கு வந்து செல்கின்றனர். அதிலும் பெரும்பாலானோர் கார்களில் வருவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக ஏற்பட்டு எங்கு இடம் கிடைக்குமோ அங்கு நிறுத்த வேண்டிய சூழலில் நிறுத்தி செல்கின்றனர்.

    நாங்கள் அவசரத்துக்கு எங்கும் செல்ல முடியவில்லை. பல ஏக்கர் பரப்பளவுள்ள டவர் பூங்காவில் கட்டண முறையில் வாகன நிறுத்தத்தை ஏற்படுத்தி தந்தால் அவர்களுக்கும் வசதி. எங்களுக்கும் வசதி என்கின்றனர்.

    சென்னையின் மிகப் பெரிய வணிக ஸ்தலம் தியாகராய நகர். கோடிகள் புரளும் இந்த பகுதியில் பொதுமக்கள் வரத்து எப்போதும் அதிகமாகவே காணப்படும். இரு சக்கர வாகனங்கள் முதல் 4 சக்கர வாகனங்கள் என எந்நேரமும் சாலைகள் பரபரப்புடன் காணப்படும்.

    வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று போதிய இடம் இல்லாததால் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் ஆகிய இடங்களில் உள்ள தெருக்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. சில தெருக்களில் நோபார்க்கிங் என்ற அறிவிப்பு போர்டையும் மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

    பாண்டி பஜாரில் பிரமாண்ட பன்னடுக்கு பார்க் கிங் கட்டப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனால் அதன் அருகில் உள்ள மாசிலாமணி தெருவிலேயே இரு சக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன.

    வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தப்படுவதால் பொது மக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    அரசு இந்த பிரச்சினைக்கு மல்டி லெவல் பார்க்கிங் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டு வந்தாலும் தெருக்களில் நிறுத்தப்படும் வாகனப் பிரச்சினைக்கு தீர்வு என்பது எப்போது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    Next Story
    ×