search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியாறு அணை குறித்து வதந்தி: தமிழக விவசாயிகள் நாளை முற்றுகை போராட்டம்
    X

    பெரியாறு அணை குறித்து வதந்தி: தமிழக விவசாயிகள் நாளை முற்றுகை போராட்டம்

    • தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களாகவே முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல் வாதிகள் மற்றும் தன்னார்வலர்கள் என்ற பெயரில் உலாவும் நபர்கள் வதந்தி கிளப்பி வருகின்றனர்.

    கேரளாவில் அமைந்திருந்தாலும் அணை தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பலகோடி செலவில் தமிழக அரசு அணையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்த பணி முடிந்தபின்னர் 152 அடி வரை உயர்த்த முயற்சி செய்தனர். ஆனால் கேரளா அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுக்கள் தொடர்ந்து அணைப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2006-ம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை தேக்கிக்கொள்ளலாம் என இவர்கள் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    ஆனால் இதனை அமல்படுத்தாமல் கேரள அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது. இதனால் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் தேனி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.

    கடந்த 2024ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையை பலப்படுத்திய பின்னர் 152 அடியாக உயர்த்தலாம் என தெரிவித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து அணைப்பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு பருவமழையின்போது அணைப்பகுதியை ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்.

    சமீபத்தில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முல்லை ப்பெரியாறு அணை விவகாகரத்தை நிலச்சரிவுடன் ஒப்பிட்டு கேரள அரசியல் வாதிகள், தன்னார்வலர்கள் வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தொடர்ந்து வதந்தி பரப்பி வரும் கேரளாவை கண்டித்து தமிழக-கேரள எல்லையான குமுளியில் முற்றுகை போராட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

    கடந்த 2006 மற்றும் 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கேரளா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் எம்.பி. முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்.

    எங்கு இயற்கை பேரழிவு நடந்தாலும் அதனை பெரியாறு அணையுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். எனவே இதனை கண்டித்து நாளை குமுளியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×