search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன் என்பவரின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (வயது 59). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டிரைவரான இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த பாலசுப்பிரமணியன், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த சையத்அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.

    இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

    ஆனால் திடீரென்று அங்கு வந்த முதல் மனைவி சாந்தி தரப்பினர், பாலசுப்பிரமணியனின் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்ட பேரையூரில் இந்து முறைப்படி தான் அடக்கம் செய்ய போவதாகவும் உடலை தங்களிடம் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் இரு தரப்பினரும் சென்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து இருத்தரப்பினரிடமும் வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சையத்அலி பாத்திமா தரப்பினர் கூறுகையில், ஏற்கனவே சாந்தியை விவகாரத்து செய்து விட்டார். இதனால் நாங்கள் தான் அடக்கம் செய்வோம் என்று கூறினார்.

    ஆனால் சாந்தி தரப்பினர் கூறுகையில், விவகாரத்து உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் எங்களிடம் தான் உடலை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். இப்பிரச்சனையில் காவல் துறையினர் முடிவெடுக்க முடியாமல், உடலை கைப்பற்றி காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர்.

    கணவர் உடலை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு மனைவிகளும் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்று உடலை பெற்று கொள்ளுமாறு கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். உயிருடன் இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனைகளை விட பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன், இறந்த பின்னர் சந்தித்த பிரச்சனைகள் தான் அதிகம் என்று இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் முணுமுணுத்தப்படி சென்றனர்.

    • கழக மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஏற்பாட்டில் கட்சிக்காக உழைத்த உங்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
    • நீங்கள் இல்லாமல் கலைஞர் இல்லை, கலைஞர் இல்லாமல் நீங்கள் இல்லை.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் ஏற்பாட்டில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொற்கிழி, பதக்கங்களையும் வழங்கி பேசியதாவது:-

    மக்கள் அனைவரும் என்னை இளையவர் என்றும், சின்னவர் என்றும், அமைச்சர் என்றும் அழைக்கின்றார்கள். ஆனால் உங்கள் மத்தியில் நான் வயதிலும் சரி, அனுபவத்திலும் சரி சின்னவன் தான். நான் அமைச்சராக பதவியேற்று முதன் முதலில் வருகை புரிந்ததும் இந்த சிவகங்கை மண்ணிற்கு தான். இன்று கழக மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஏற்பாட்டில் கட்சிக்காக உழைத்த உங்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    நான் பெரியாரையோ, அண்ணாவையோ நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவர்களோடு சேர்ந்து கட்சிக்கு பாடுபட்ட உங்களை இன்று நேரில் பார்க்கும் நான் அவர்கள் ரூபத்தில் உங்களைப் பார்க்கிறேன். நான் ஒவ்வொரு மாவட்ட கழக நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்கு முன்பாக அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். நான் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதலாவதாக கட்சிக்காக உழைத்த கழக முன்னோடிகளை கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் வைப்பேன்.



    அந்த அடிப்படையில் நான் அமைச்சர் பதவியேற்ற ஒரு வருட காலத்தில் கலந்து கொண்ட எந்த ஒரு கழக நிகழ்ச்சியிலும் கழக முன்னோடிகளான உங்களை குறித்து நான் பேசுவதுண்டு. நீங்கள் இல்லாமல் கலைஞர் இல்லை, கலைஞர் இல்லாமல் நீங்கள் இல்லை. அந்த அளவுக்கு உங்களை பார்க்கும் போது பெருமையாகவும், பொறாமையாகவும் கருதுகிறேன். எனவே இளைஞர்களாகிய எங்களை வழிநடத்தும் ஆற்றல் மிகும் சக்தியாக நீங்கள் தான் கழகத்தில் இருக்கிறீர்கள்.

    வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் அதே உத்வேகத்தோடு பாடுபட்டு வெற்றியடைய செய்யுங்கள் என்று உங்களை இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கழக நிர்வாகிகளான மணி முத்து, சேங்கை மாறன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர கழக, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

    • ஐகோர்ட்டு உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
    • தேரை வடம் பிடித்து இழுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் ராமாயண கால புராண வரலாறு கொண்ட சிறிகிழிநாதர் என்ற சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    அரசர் காலத்தில் இருந்து தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி போன்ற நான்கு நாட்டைச் சேர்ந்த சுமார் 170 கிராமங்களை சேர்ந்த வர்களுக்கு தலைமைக் கோவிலாக இந்த கோவில் விளங்கியது. இக்கோவில் தேரோட்டம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த நிலையில் தேர்வடம் பிடித்து இழுப்பதில் கருத்து 1998-ம் ஆண்டு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக 1998-ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006-ம் ஆண்டு வரை தேரோட்டம் நடை பெற்றது.

    கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், தேர் பழுதானதாகக் கூறி, தேரோட்டத்தை நடத்த வில்லை. இதையடுத்து பல லட்சம் செலவில் புதிய தேர் தயார் செய்யப்பட்டது.

    ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடத்தப் படவில்லை, ஒவ்வொரு முறையும் வெள்ளோட்டம் நடக்க முற்படும் பொழுது ஒவ்வொரு காரணங்களால் தடைபட்டது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி தேர் வெள்ளோட்டத்தை நடத்த உத்தரவிட்டார்.

    பல்வேறு தடைகளை தாண்டி ஐகோர்ட்டு உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக நேற்று மாலை கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. நேற்று சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் புதிய தேர் மற்றும் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

     இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சிறப்பு யாக வேள்விகளும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடை பெற்றது. தொடர்ந்து காலை 6.10 மணிக்கு கோவில் வாசலில் அலங்கரிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நடந்தது. தேரை அறநிலை துறை பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் வடம் பிடித்து இழுத்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து அறநிலை பணியாளர்கள் வர வழைக் கப்பட்டு இருந்தனர். தேரை வடம் பிடித்து இழுக்க பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    தேர் நகன்றதும் அங்கு கூடியிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கண்ணீர் மல்க சொர்ணமுர்த்தீஸ்வரா ... என பக்தி கோஷம் எழுப்பினர். தேர் முன்பும், வழித்தடத் திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    17 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கண்டதேவி தேர் வெள்ளோட்டத்தை காண சுற்றி உள்ள கிராமங்களி லிருந்து ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். அவர் கள் தீவிர சோதனைக்கு பின் தேர் வெள்ளோட்டத்தை காண அனுமதிக்கப்பட்னர்.

    தேர் வெள்ளோட்டத்தை காண வந்த பக்தர்கள் இந்த வெள்ளோட்டத்தை போல தேரோட்டமும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.


    • இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
    • இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் பழனிச்சாமி (வயது 23). இவர் படித்து முடித்த பின்னர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் தனது பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது உறவினர் தம்பி பட்டியை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சக்தி (16). இவர் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து விட்டு பின்னர் கல்வியை தொடரவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு பழனிச்சாமி, இவரை அழைத்துக் கொண்டு, ஊர்குளத்தான் பட்டியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி நோக்கி தபால்துறைக்கு சொந்தமான அஞ்சலக வாகனம் சென்றது.

    அந்த வாகனம் மணமேல்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக இருவரையும் நெடுஞ்சாலைதுறை ரோந்து வாகனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    • கண்மாயில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெற்று வந்தன.
    • சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டி கிராமத்தில் மட்டி கண்மாய் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது பெரிய கண்மாய் ஆகும்.

    இந்த கண்மாயில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த 3 ஆண்டுகளாக நல்லமழை பொழிந்ததால் கண்மாயில் நீர் வற்றாமல் போதிய நீர் இருந்து அதனை விவசாயிகள் நெல் வயலுக்கு பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்த ஆண்டு சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தண்ணீர் வேகமாக குறையத் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து மட்டிக்கண்மாயில் வேகமாக தண்ணீர் வற்றியதால் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி மழைவரம் வேண்டியும் மீண்டும் விவசாயம் செழிக்கவும் இலவசமாக மீன்களை பிடித்து செல்ல சுற்று வட்டார கிராம மக்களுக்கு வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

    அதனை தொடர்ந்து பிரான்மலை குமரத்த குடிப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, வேங்கைபட்டி, அணைக்கரைப்பட்டி, காளாப்பூர் , சிங்கம்புணரி, மருதிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே இருசக்கர வாகனங்களில் சாரை சாரையாக கண்மாயை சுற்றி அனைத்து சமுதாய மக்கள் ஒன்று கூடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காத்திருந்தனர்.

    இவர்கள் ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் மீன்களை பிடிக்க கொக்கு காத்திருப்பது போல் காத்திருந்தனர். அங்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் பாரம்பரிய மீன்பிடி திருவிழாவை வாணவெடி போட்டு வெள்ளை வீசி துவக்கி வைத்தனர்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மீன்பிடி திருவிழா என்பதால் எதிர்பார்ப்புடன் காத்திருந்த கிராம மக்கள் வெடி வெடித்து வெள்ளை வீசிய உடனே கண்மாயை சுற்றி காத்திருந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஆர்ப்பரித்து மீன்களை அள்ள துள்ளி குதித்து கண்மாய்க்குள் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்த மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை சல்லடை போட்டு தேடியதில் விரால், ஜிலேபி, கெண்டை, கட்லா, ரோகு, சிசி, மசரைகெழுத்தி உள்ளிட்ட அதிக ருசியான நாட்டுவகை மீன்கள் கிலோ கணக்கில் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    சிங்கம்புணரி பகுதியில் வடகிழக்கு பருவமழை முடிந்த ஒரே மாதத்தில் நடக்கும் முதல் மீன்பிடி திருவிழா இதுவே என்பதால் குடும்பம் குடும்பமாக சாரை சாரையாக ஆயிரக்கணக்கானோர் மீன்பிடிக்க குவிந்ததால் இந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.
    • உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 34-வது பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடந்தது. பல்கலை துணைவேந்தர் ரவி வரவேற்றார்.

    விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை இந்திய தொழில் நுட்ப கழக இயக்குனர் வீ.காமகோடி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

    இதில் 116 பேர் முனைவர் பட்டமும், பல்கலையின் பல்வேறு துறைகளில் பயின்ற 1863 மாணவர்கள், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 12,839 மாணவர்களும், இணைவுக் கல்லூரியில் பயின்ற 4181 மாணவர்களும், தொலை நிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பயின்ற 21,443 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர். இதில் 348 மாணவ, மாணவர்கள் நேரடியாக பட்டங்களை பெற்றனர்.


    அதில் 164 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 184 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்கள் ஆவார்கள். இதற்கான ஏற்பாடுகளை பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    இணைவேந்தரும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்தார். இதேபோல் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

    • அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் உள்பட 20 பேர் பாத யாத்திரை சென்றனர்.
    • படுகாயமடைந்த 5 பேரையும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தேவகோட்டை:

    தைப்பூச விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் கோவில்களுக்கு அந்தந்த பகுதி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகிறார்கள். தைப்பூச விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு கூட்ட நெரிசலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் பெரும்பாலான பக்தர்கள் முன்கூட்டியை தரிசனத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பி வருகின்றனர்.

    அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள அழகன்குளம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் தைப்பூச விழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சென்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் உள்பட 20 பேர் பாத யாத்திரை சென்றனர். அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு டாடா ஏஸ் வேனில் ஊருக்கு புறப்பட்டனர். அந்த வேனை ராமநாதபுரத்தை சேர்ந்த டிரைவர் முகம்மது என்பவர் ஓட்டி வந்தார். பின்னால் அமர்ந்து வந்தவர்கள் பாத யாத்திரை சென்ற களைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் பயணம் செய்த வேன் இன்று அதிகால சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தளக்கா வயல் என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஏர்வாடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

    இந்த விபத்தில் டாட்டா ஏஸ் வாகன ஓட்டுனர் முகம்மது, பின்னால் அமர்ந்து பயணம் செய்த தம்பதியினரான நம்புராஜன், காளியம்மாள் ஆகிய 3 பேரும் வேனுக்கு உள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் அதில் பயணம் செய்த 5 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த தேவகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயமடைந்த 5 பேரையும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாதயாத்திரை சென்று திரும்பும்போது கணவன், மனைவி உள்பட 3 பேர் விபத்தில் பலியானது அப்ப குதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமான மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    முன்னதாக, பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து, இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கூடியிருந்தனர்.

    இந்த நிலையில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காளை முட்டியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் மஞ்சு விரட்டில் 75 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வலையபட்டியை சேர்ந்த 12 வயது சிறுவன் மற்றும் அடையாளம் தெரியாத வாலிபர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு நடைபெறும் திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், தொடர்ந்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் வந்தனர். அங்கு கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.


    போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், 8 மருத்துவ குழுவினர் மற்றும் காவல் துறையைச் சார்ந்தோர் 1,000 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.

    • வாக்குப்பதிவு எந்திரத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
    • இந்தி தெரியாதவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அதை மொழிபெயர்க்க வேண்டும்.

    மானாமதுரை:

    மானாமதுரையில் காங்கிரஸ் தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநில காங்கிரஸ் தலைவர் என்பது நியமன பதவி. எப்போது கார்கே நினைக்கிறாரோ, அப்போது நியமனம் செய்வார். வாக்குப்பதிவு எந்திரத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தற்போது பரிசோதனை முறையில் 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் விவிபேட் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதை அதிகப்படுத்த வேண்டும்.

    மேலும் ஒரே ஒரு தேர்தலிலாவது அனைத்து வாக்குச் வாவடிகளின் விவிபேட் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் எண்ணிக் காட்டினாலே வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகங்கள் போய்விடும். இந்தி தேசிய மொழி அல்ல. இந்தி தெரியாதவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அதை மொழிபெயர்க்க வேண்டும்.

    இந்தியா கூட்டணி ஆலோசனைக்கூட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பேரிடர் நடக்கும் இடங்களில் முதல்வர் நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய தொழில் நுட்பத்தில் முதல்வர் எங்கிருந்து வேண்டுமானாலும் பேரிடர் மீட்புப் பணிகளைக் கண்காணிக்கலாம். முதல்வரை அதனால் விமர்சனம் செய்யாமல், நிர்மலா சீதாராமன் பொறுப்போடு அரசியல் செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன. தொகுதிப் பங்கீட்டில் இந்த முறை காங்கிரசுக்கு மனவருத்தம் கண்டிப்பாக இருக்காது. புதிய கட்சிகள் வந்தால் எங்களுக்குத் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இதில் வருத்தப்பட முடயாது. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட காங்கிரஸ் தலை வர் சஞ்சய் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • சிங்கம்புணரி அருகே 2 இடங்களில் மலைப்பாம்புகள் பிடிபட்டன.
    • மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் வெப்பமான பகுதிகளை தேடி பாம்புகள் இடம் பெயர்ந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மகங கன்டான் கோவில்பட்டி குடியிருப்பு பகுதி அருகில் முட்புதரில் மலைப்பாம்பு பதுங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் நிலைய அதிகாரி பிரகாஷ் தலைமை யிலான வீரர்கள் விரைந்து வந்தனர். முட்புதரில் பதுங்கியிருந்த 5 அடி நீள முள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து சாக்கு பையில் போட்டனர்.

    அதே போன்று சிங்கம்பு ணரி- சுக்காம்பட்டி சாலை யில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். ஒரே நாளில் இரண்டு இடங்களில் பாம்புகள் பிடிபட்ட தால் பொதுமக்கள் பீதி அடைந் துள்ளனர். பின்னர் அந்த பாம்புகளை தீயணைப்புத்து றையினர், வனத்துறையின ரிடம் ஒப்படைத்தனர்.

    மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் வெப்பமான பகுதிகளை தேடி பாம்புகள் இடம் பெயர்ந்து வருவதால் வீடுக ளுக்குள் புகும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர்.

    • காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • பல்வேறு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி வளாகத்தில் ஸ்டீல் ஸ்ட்ரைப்ஸ் வீல்ஸ் லிமி டெட் நிறுவனம் சார்பில் நேர்முக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த வளாக நேர்முக தேர்வில் கல்லூரியின் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட் ரானிக்ஸ் கம்யூனி கேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என பல் வேறு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 35 மாணவர்கள் தேர்வு பெற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் பார்த்த சாரதி நேர்முக தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கு வேலைவாய்ப்புக் கான பணி நியமன ஆணை களை வழங்கினார். மாண–வர்களை கல்லூரி தலை வர் அய்யப்பன் வாழ்த்தி னார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண் டனர்.

    ×